Monday, 8 September 2014

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே …பகலில் மனைவி அலுவலகத்திற்கு சென்று விடுவார். பையன் கல்லூரி சென்று விடுவார். அப்போது வீட்டில் நான் மட்டும்தான்  அப்போது மட்டும் டீவியை பார்ப்பதுண்டு. அதிலும் அதிக நேரம் பார்க்க முடிவதில்லை.. ஏனெனில் வீட்டு வேலையோ அல்லது வெளிவேலையோ ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். மதியவேளை உணவு உண்ணும்போது மட்டும் பழைய பாடல்களை, திரைப்படங்களை பார்ப்பதுண்டு. அன்றும் அப்படித்தான்.... 

வழக்கம் போல மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு டீவியை ஆன் செய்தேன். ஒரு பெரிய மாளிகையின் ஹாலில் ஒரு காட்சி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது மகன் மாஸ்டர் சேகரை படார் படார் என்று அடிக்கிறார். ஒரு கட்டத்தில் பையனும் பொறுமையை இழந்து அப்பாஎன்று கையை ஓங்கி விடுகிறான். ஆனாலும் அடிக்காது வெளியேறுகிறான். அங்கிருப்பவர்கள் திகைத்து நிற்கிறார்கள். (கதைப்படி சிவாஜி கணேசன் மாளிகையில் வசிக்கும் பணக்காரர்) 
திடீரென்று பின்னணியில் பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே . .... என்று உச்ச ஸ்தாயியில் ஒரு பாடல் ஒலிக்கிறது. (படம்: நல்லதொரு குடும்பம்.)   படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடி வாணிஸ்ரீ. நடிகர் சிவாஜி வசந்த மாளிகை ஸ்டைலில் மேலே ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு பாட்டையும் மிஞ்சும் வண்ணம் இங்கும் அங்கும் உணர்ச்சிப் பிழம்பாக நடை போடுகிறார். இங்கு வசந்த மாளிகைபடத்தில் சிவாஜி யாருக்காக இது யாருக்காக “ என்று பாடும் காட்சி நினைவுக்கு வருகிறது. இரண்டு படத்திலும் வாணிஸ்ரீ, சால்வை போர்த்திய சிவாஜி. அங்கு சிவாஜியே பாடுவதாக காட்சியமைப்பு. இங்கு பின்னணிக்கு ஏற்ப உடல் பாவம்.

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாட்டு சிறியதே என்றாலும் அதில் வரும் தத்துவ வரிகள் மற்றும் உச்ச ஸ்தாயியில் ஒலித்த T.M.சௌந்தரராஜன் குரல் என்னை மிகவும் கவர்ந்தன. பாட்டில் பட்டினத்தாரே பட்டினத்தாரே என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் பட்டினத்தார் வாழ்க்கைக்கும் இந்த பாடலுக்கும் எந்த ஒப்புவமையும் இருப்பதாகத் தெரிய்வில்லை. தத்துவம், குடும்பத்தின் மீது வெறுப்பு என்றால் பட்டினத்தார் என்று கவிஞர் முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. உண்மையில் பட்டினத்தார் தனது குடும்பத்தை குறிப்பாக மனைவி சிவகலையை ரொம்பவும் நேசித்தவர். தனது (வளர்ப்பு) மகன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து இருந்தவர். அவன் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே''  என்று மாயமாய் மறைந்து போனதால் மனம் வெதும்பி துறவியானவர். தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் பட்டினத்தார் பற்றி கவிஞர் கண்ணதாசன் “ஞானம் பிறந்த கதைஎன்ற தலைப்பில் சொல்லி இருக்கிறார்.

இந்த பாடலை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)


பாடலைக் கேட்டு கேட்டு பாடலின் வரிகளை இங்கு டைப் செய்து தந்துள்ளேன். வரிகளில் ஏதேனும் மாற்றம் இருந்து தெரிவித்தால் திருத்தி விடுகிறேன்.

பாடல் முதல் வரி: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
படம்: நல்லதொரு குடும்பம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசை: இளையராஜா
நடிகர்கள்: சிவாஜி கணேசன், மாஸ்டர் சேகர், வாணிஸ்ரீ

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே!
உன் ஆணவம் எங்கே? வீரம் போனது எங்கே?
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே?

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே! சக்தி வந்தாளே!
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது
நல்ல சொந்தம் கொஞ்சம்
விலகி நின்றால் உறவிருக்காது
இரண்டும் கெட்ட நிலையினிலே
அன்பிருக்காது
அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை
ஒழுங்கு பெறாது  ..... ஒழுங்கு பெறாது .....

உன் ஆணவம் எங்கே? வீரம் போனது எங்கே?
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே?
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

அடிக்க ஒன்று அணைக்க ஒன்று
இல்லறத்திலே
இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான்
இந்த நிலையிலே
குடித்தனத்தில் தவறு வந்தால்
திருத்திக் கொள்ளலாம்
ந்ம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால்
கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது
அந்த புத்தி கெட்ட பிறகுதானே
அந்த ரத்தம் பேசுது
சத்தியோடு சிவனைச்
சேர்த்த சைவ தத்துவம்
நல்ல தம்பதிகள் வாழ்வதற்கோர்
தர்ம தத்துவம் .... தர்ம தத்துவம் ....

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே! சக்தி வந்தாளே!
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!43 comments:

 1. படித்தேன் ஐயா, காலம் கடந்த விமர்சனமாக தோன்றுகிறது வீடியோ நெட் ப்ராபலம் காண முடியவில்லை பிறகு காண்கிறேன். பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா.

  இரசிக்கவைக்கும்பாடல் பகிர்வு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. வணக்கம் தமிழ் இளங்கோ ஸார்,
  உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:

  http://wp.me/p244Wx-HR

  நன்றி,
  அன்புடன்,
  ரஞ்சனி

  ReplyDelete
 4. அந்தக் காலத்து தத்துவப் பாடல்களில் அர்த்தம் இருந்தது...இப்பெல்லாம் அனர்த்தம் தான் அதிகம்....பதிவிற்கு நன்றி

  ReplyDelete
 5. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  // படித்தேன் ஐயா, காலம் கடந்த விமர்சனமாக தோன்றுகிறது வீடியோ நெட் ப்ராபலம் காண முடியவில்லை பிறகு காண்கிறேன். பதிவுக்கு நன்றி. //

  டீவி சானல்களில் இதுபோன்ற பழைய பாடல்கள் இப்போது எப்போதும் ஒளிபரப்பாகின்றன. எனவேதான் எனது கருத்தினைச் சொன்னேன். தேவகோட்டையாருக்கு நன்றி! மீண்டும் வருக!

  ReplyDelete
 6. மறுமொழி > ரூபன் said...

  // வணக்கம் ஐயா. இரசிக்கவைக்கும்பாடல் பகிர்வு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா நன்றி- அன்புடன்-//

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.

  ReplyDelete
 7. மறுமொழி > Ranjani Narayanan said...

  // வணக்கம் தமிழ் இளங்கோ ஸார், உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:
  http://wp.me/p244Wx-HR //

  சகோதரி அவர்களுக்கு வணக்கம!
  நன்றி! நன்றி! தாங்கள் அன்புடன் எனக்களித்த “ THE VERSATILE BLOGGER AWARD “- ஐ மூன்றாம் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். ஏற்கனவே சகோதரி கவிஞர் சசிகலா (தென்றல்) நாள் 21.02.12 ) மற்றும் சகோதரி யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள்) 10.06.12 ) இருவரும் இதே விருதினைத் தந்துள்ளார்கள். (உங்கள் பெயரினையும் (08.09.14) சேர்த்துள்ளேன். எனது பதிவின் வலது பக்கம் பார்க்கவும். -> -> )


  ReplyDelete
 8. நல்லதொரு குடும்பம் பற்றியும் அதில் வரும் கவிஞர் கண்ணதாசன் பாடல் பற்றியும் TMS குரல் பற்றியும் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 9. மன்னிக்க, ஐயா நான் தவறான கண்ணோடத்தில சொல்லவில்லை,,, சகோதரி எழில் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்,,,, தாங்கள் நம்புவீர்களோ ? என்னவோ ? தெரியவில்லை நான் இப்பொழுதும் கேட்கும் பாடல்கள் எல்லாம் எம். கே. தியாகராஜபாகவதர், டி.ஆர். மஹாலிங்கம், சிம்மக்குரலோன் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், நடிப்பிசை புலவர் கே. ஆர். ராமசாமி, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள், பாடல்கள்தான் கேட்கிறேன் என்னைப் பொருத்தவரை டி.எம் சௌந்தரராஜன் கூட கடைசிதான். தயவுசெய்து அதிகப் பிரசங்கித்தனமாக எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம், நன்றி எனது புதிய பதிவு.

  ReplyDelete
 10. அருமையான பாடல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேட்கிறேன்......

  பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. இப்பொழுதெல்லாம் சினிமாப் படங்களே பார்ப்பதில்லை. அவ்வப்போது இனிமையான பாடல் ஒலித்தால் சற்றுஇருந்துகவனிப்பேன். ஆனால் பதிவுலகில் சினிமா பற்றிய செய்திகளுக்கு ஒரு தனி மவுசு இருக்கிறது. வாசகர்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒரு காலத்தில் நிறையப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது ஏனோ மனம் லயிப்பதில்லை. முரசு சானலில் பழைய பாட்டுக்கள் நிறையவே ஒலி/ஒளி பரப்பாகிறதாமே....!

  ReplyDelete
 12. அருமையான பாடல்காட்சி பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. நான் இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லை ஐயா.

  கேட்டுப் பார்க்கிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 14. ஐயா, தாங்கள் திருச்சியா. தங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. அருமையான பாடல் பற்றிய சிறப்பான பதிவு
  நன்றி ஐயா
  பாடலைக் கேட்டேன் ரசித்தேன்

  ReplyDelete
 16. பதிவு பழமை நினைவுகளை கொண்டு வந்தது! நன்றி! இளங்கோ!

  ReplyDelete
 17. சரியான திறனாய்வு. பாடலை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 18. அருமையான பாடல் அதுவும் தாங்கள் விவரித்துள்ளது போல் இந்த ப் பாடலும், யாருக்காக பாடலும் கிட்டத்தட்ட ஒரே போன்ற காட்சி அமைப்பு......

  நல்லதொரு பகிர்வு....ஐயா!

  ReplyDelete
 19. மறுமொழி > ezhil said...

  சகோதரிக்கு நன்றி!

  // அந்தக் காலத்து தத்துவப் பாடல்களில் அர்த்தம் இருந்தது...இப்பெல்லாம் அனர்த்தம் தான் அதிகம்....பதிவிற்கு நன்றி //

  காரணம் அந்த காலத்து திரைப்படங்களில் கதையும் நடிப்பும் இருந்தன. மக்களிடம் நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இன்று - காசு மணி துட்டு பணம் ... பணம்

  ReplyDelete
 20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 21. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  தேவகோட்டையாரின் இரண்டாம் வருகைக்கு நன்றி!

  // மன்னிக்க, ஐயா நான் தவறான கண்ணோடத்தில சொல்லவில்லை,,, //

  நானும் அவ்வாறு நினைக்கவில்லை சகோதரரே!

  // சகோதரி எழில் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்,,,, தாங்கள் நம்புவீர்களோ ? என்னவோ ? தெரியவில்லை நான் இப்பொழுதும் கேட்கும் பாடல்கள் எல்லாம் எம். கே. தியாகராஜபாகவதர், டி.ஆர். மஹாலிங்கம், சிம்மக்குரலோன் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், நடிப்பிசை புலவர் கே. ஆர். ராமசாமி, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள், பாடல்கள்தான் கேட்கிறேன் என்னைப் பொருத்தவரை டி.எம் சௌந்தரராஜன் கூட கடைசிதான். தயவுசெய்து அதிகப் பிரசங்கித்தனமாக எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம், நன்றி எனது புதிய பதிவு. //

  இதில் தப்பு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்! நானும் நீங்கள் கூறும் பாடகர்களின் பாடல்களை அவ்வப்போது ரசிப்பவன்தான்! M.K.T பாகவதரின் சொப்பன வாழ்வை மறந்து மறக்க முடியுமா? என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை1


  ReplyDelete
 22. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 23. மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

  // இப்பொழுதெல்லாம் சினிமாப் படங்களே பார்ப்பதில்லை. அவ்வப்போது இனிமையான பாடல் ஒலித்தால் சற்று இருந்து கவனிப்பேன். //

  தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு எனக்கும் பொறுமை இல்லை அய்யா! நானும் தியேட்டரில் படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

  //ஆனால் பதிவுலகில் சினிமா பற்றிய செய்திகளுக்கு ஒரு தனி மவுசு இருக்கிறது. வாசகர்களின் எண்ணிக்கை கூடுகிறது. //

  ஆமாம் அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். ஆரம்பத்தில் இலக்கிய கட்டுரைகள் மட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் வலைப்பதிவில் எழுத நுழைந்தவன் நான்.

  // ஒரு காலத்தில் நிறையப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது ஏனோ மனம் லயிப்பதில்லை. முரசு சானலில் பழைய பாட்டுக்கள் நிறையவே ஒலி/ஒளி பரப்பாகிறதாமே....! //

  நான் மதிய வேளையில் மட்டுமே டீவி பார்க்கிறேன். இந்த நேரத்தில், முரசு மட்டுமல்லாது பெரும்பாலும் எல்லா சானல்களிலும் பழைய பாடல்கள்தான்.

  ReplyDelete
 24. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 25. மறுமொழி > அருணா செல்வம் said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  // நான் இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லை ஐயா. கேட்டுப் பார்க்கிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா. //

  பழம்பாடல்களை பதிவுகளில் வெளியிட்டு வரும் நீங்கள் இந்த பாடலையும் கேட்கவும்..

  ReplyDelete
 26. மறுமொழி > kadaisibench said...

  தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!

  // ஐயா, தாங்கள் திருச்சியா. தங்களை அறிந்ததில் மிக்க
  மகிழ்ச்சி. //

  ஆம் அய்யா நான் திருச்சி என்று சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்! ஒருமுறை புதுக்கோட்டை பற்றிய தேடலின்போது கூகிளில் உங்கள் கட்டுரைகளை படித்தது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 27. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

  சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யாவுக்கு நன்றி!

  ReplyDelete
 29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யாவின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 30. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 31. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  // மலரும் நினைவுகள்! //

  நீங்காத நினைவுகள் !அய்யா அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 32. ஆகா
  ஒரு பாட்டை கேட்டு ஒரு பதிவா? வாவ் ...
  கலக்குறேள்

  ReplyDelete

 33. சிறந்த ஆய்வுப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 34. நான் இப்பாடலைக் கேட்கவில்லை.
  ஆயினும் நன்கு அலசியுள்ளீர்கள் நன்றாக உள்ளது. நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 35. நல்லதொரு ஆய்வில் எங்களுக்கு பாடல் விருந்து. தனிமையில் பாடல் கேட்பது என்பதோடு நான் இருந்துவிடுவேன். இந்த ஆய்வு சிறப்பு.

  ReplyDelete
 36. அன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது
  http://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more

  ReplyDelete
 37. மறுமொழி > Mathu S said...

  // ஆகா ஒரு பாட்டை கேட்டு ஒரு பதிவா? வாவ் ...
  கலக்குறேள் //

  சகோதரர் எஸ் மது அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

  ReplyDelete
 38. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

  சகோதரர் யாழ் பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

  ReplyDelete
 39. மறுமொழி > kovaikkavi said...
  // நான் இப்பாடலைக் கேட்கவில்லை. ஆயினும் நன்கு அலசியுள்ளீர்கள் நன்றாக உள்ளது. நன்றி.//

  இந்த பாடலை அவசியம் கேளுங்கள். கவிஞர் சகோதரி வேதா. இலங்காதிலகம் அவர்களின் மதிப்புரைக்கு நன்றி!

  ReplyDelete
 40. மறுமொழி > Sasi Kala said...

  சகோதரி தென்றல் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 41. மறுமொழி > Mathu S said...

  // அன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது
  http://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more //

  எனக்கு விருது தந்த தங்கள் அன்பின் வெளிப்பாட்டிற்கு நன்றி!

  ReplyDelete