Sunday, 20 October 2013

நினைவில் நின்ற சினிமா பாடல்கள் சிலதெரிந்தோ தெரியாமலோ  திரைப்பட பாடல்கள் விரும்பியும் விரும்பாமலும் நமது வாழ்வில் நுழைந்து விட்டது.  தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பின் தொடக்க காலத்தில் ஒரு படத்தில் உட்கார்ந்தால், நின்றால், படுத்தால்,  தும்மினால் பாட்டு என்று படம் எடுத்தனர். அவற்றில் பல பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப் பெற்றன.  அதிலும் என்னைப் போல பழைய பட பாடல்கள் ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எனவே
மறக்க முடியாத இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு ! http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_06.html என்று ஒரு பதிவே எழுதினேன். சில பழைய பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனக்கு சில நிகழ்வுகள் ஞாபகம் வரும்.

கிராமத்து திருமண வீடு:

அப்போதெல்லாம் கிராமங்களில் திருமணம் அவரவர் வீட்டிலேயே
நடைபெறும். இப்போது இருப்பதைப் போல அப்போது கல்யாண மண்டபம் சமாச்சாரம் அவ்வளவாக கிடையாது. மின்சாரம் எல்லா ஊர்களுக்கும் அப்போது வரவில்லை. எனவே திருமண வீட்டுத் திண்ணையில் ரேடியோ செட்டுக்காரர் கிராம போன், மைக் செட் , பாட்டரி சகிதம் ஒரு பையனை உட்கார வைத்துவிட்டு சைக்கிளில் சென்று விடுவார். அந்த இடம் ஒரு குட்டி வானொலி நிலையமாக மாறிவிடும். அடிக்கடி மைக் டெஸ்ட் செய்து ஒன் டூ த்ரீ சொல்லுவார்கள். இவ்வாறு சொல்லுவது உள்ளூர்ப் பையன்கள். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் கிராமபோன் பக்கம் மட்டும் யாரையும் விடமாட்டார்கள். திருமண வீட்டில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வரும்போது வைக்கும் பாடல்

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே
காணும் திருநாளைக் காண வாராயோ?

( படம்: பாசமலர் பாடல்:கண்ணதாசன் பாடியவர்கள்: எல்.ஆர்.ஈஸ்வரி )

மணமகன் மணமகளுக்கு தாலி கட்டியதும் ஒலிபரப்பப்படும் பாடல்:
  
மணமகளே மருமகளே வா வா –  
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா

(படம்: சாரதா பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் )

கால்பந்து விளையாட்டு போட்டி:

திருச்சியில் வருடா வருடம் அகில இந்திய கால்பந்து விளையாட்டு போட்டி  நடைபெறும். இந்த போட்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகில் இருக்கும் பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் மூங்கில் கழிகளால் கட்டப்பட்ட உயரமான காலரிகள் நடுவே நடைபெறும் போட்டி தொடங்குவதற்கு முன்னும் இடைவேளையின் போதும் அறிவிப்புகள் செய்து கொண்டும் திரைப்படப் பாடல்களை  ஒலி பரப்புவார்கள். கால்பந்து போட்டி முடிந்ததும் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக வைக்கப்படும் பாடல்:

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

( படம்: பாலும் பழமும் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் )

இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே வெளியேறும் பல ரசிகர்கள் மெயின்கார்டுகேட்டில் உள்ள பத்மா காபி ஹோட்டலுக்கு காபி சாப்பிட செல்லுவார்கள். அவர்கள் கால்பந்து ரசிகர்கள் வரும் நேரத்திற்கு சரியாக காபி, டவரா செட்டுகள், டோக்கன்கள் எல்லாம் ரெடியாக வைத்து இருப்பார்கள்

.
A panaromic view of the Federation Cup football in Tiruchi, with the Rockfort as a backdrop when top three Calcutta contested in 1984. File Photo   PHOTO THANKS TO  “THE HINDU”  

முன்பு சொன்ன பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் இடம் கிடைக்காத்போது அருகிலுள்ள செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. (மேலே உள்ள படம்: செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானம்)
         

விவித பாரதி தேன்கிண்ணம்: 

தமிழ்நாட்டிலுள்ள வியாபார நிறுவனங்க்ள் நிறைய விளம்பரங்களை இலங்கை வானொலிக்கே அளித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் விவித்பாரதி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இதில் வாரம்தோறும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் (போஸ்ட் கார்டு தபால் ஓட்டு) முதலிடம் இரண்டாம் இடம் பாடல்களை அறிவிப்பார்கள். பெரும்பாலும் முதல் இடம் பெறும் பாடல்: ( சிவாஜி கணேசன் நடித்தது )

 

       

         

ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்

( படம்: சிவந்த மண் பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் பி சுசீலா )

இரண்டாவது இடத்தைப் பெறும் பாடல்: (எம்ஜிஆர் நடித்தது)

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

( படம்: நம்நாடு பாடல்: வாலி பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி )

திருச்சி பொருட்காட்சி:

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் திருச்சி சிந்தாமணி காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நேஷனல் பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கடைசி நாளன்று பெரும்பாலும் எல் ஆர் ஈஸ்வரி பாட்டுக் கச்சேரி நடைபெறும். அம்மன் பாடல்களோடு பல திரைப்ப்டப் பாடல்களையும் மேடையில் உட்கார்ந்தபடியே ஆடிப் பாடுவார். அப்போது அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடும் பாடல்:

எலந்தபயம்
எலந்தபயம்
எலந்தபயம்
யேன் போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்

(படம்: பணமா பாசமா பாடல்: கண்ணதாசன்  பாடியவர்: எல் ஆர் ஈஸ்வரி )

கல்லூரியில் படிக்கும்போது: 

நான் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் பிஏ படிக்கும்போது முத்தமிழ் விழாவில் கவிஞர் கண்ணதாசன் சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டார். அப்போது மேடையில் தனது பேச்சின் நடுவே பாடிய பாடல்:

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

( படம்: பாலும் பழமும் :பாடல் கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் – 
 பி சுசீலா )

பெரியார் கல்லூரியில் பிஏ இறுதிண்டின் போதும் திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்ஏ முடிக்கும் போதும் படித்த மாணவநண்பர்களிடையே பிரியா விடை பெற்றபோது வகுப்பு அறையில் ஒலிபரப்பப்பட்ட பாடல்: 

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

(படம்: ரத்தத் திலகம் பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் பி சுசீலா )

வங்கிப் பணி கிடைத்தபோது:

கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. எனவே வங்கித் தேர்வு எழுதி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இருந்த நான், குடும்பச் சூழ்நிலை கருதி கிடைத்த வங்கி வேலையில் சேர்ந்து விட்டேன். நான் முதன் முதல் வேலைக்கு சேர்ந்த ஊர் மணப்பாறை. இந்த பாடலைக் கேட்கும் போதெலலாம் அந்த ஊர் ஞாபகம் வரும்

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு

( படம்: மக்களைப் பெற்ற மகராசி பாடல்: மருதகாசி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்)

இன்னும் எவ்வளவோ பாடல்கள். அனைத்தையும் சொல்ல இங்கு இடம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நினைவுகள் தொடரும்.

(PICTURES THANKS TO " GOOGLE " )


53 comments:

 1. வணக்கம்
  ஐயா
  பழைய பாடல் என்றால் நல்ல கருத்துள்ள பாடல்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் கூட இரசிப்பார்கள் ஆனால் இப்போ வருகிற படல்களை இரசிக்கவும் முடியாது என்ன கருத்து என்றும் கூறவும் முடியாது...... பகிர்வு அருமை வாழ்த்துக்கள் ஐயா....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இன்னும் சில கிராமங்களில் தான் திருமணத்தின் போது பாடல்கள் உண்டு... அந்த இனிய நினைவுகளும் ஞாபகம் வந்தது...

  "போனால் போகட்டும் போடா" பாடல் பலவற்றிக்கும் பாடுவார்கள்...! குறிப்பிட்ட அனைத்து பாடல்களும் மனதை கவரும் பாடல்கள்...

  நீங்கள் சொல்வது போல் ஒரு பதிவில் சொல்ல முடியாது... ரசிக்க வைக்கும் இனிய நினைவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  ReplyDelete
 3. அந்த ஜோசப் கல்லூரி மைதானத்தில் நானும் 57 முதல் 61 வரை புட் பால் விளையாடி இருக்கிறேன்.

  61 லே எங்க டீம்க்கு நான் கேப்டன் வேற .

  இத நீங்க எழுதியதை நான் படித்ததுடன், என்னுடன் படித்த என்னுடன் விளையாடிய ஜான்சன் நினைவு வந்தது. அவன் எங்கே இருக்கிறானோ?

  யாருக்கு கேப்டன் என்று பி.டி. மாஸ்டர் குழப்பிக்கொண்டிருந்தபோது,
  சூரியே இருக்கட்டும் சார், நான் இருந்தாலும் சூரி இருந்தாலும் ஒன்றுதான் என்று அன்று அவன் சொன்னது இன்னமும் எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது.

  அது போன்ற மனம் இன்றைக்கு காண இயலுமா ? ஐயம் தான்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 4. உங்களுடைய பழைய பாட்டுக்கள் பற்றிய பதிவு என்னைப் பின்னோக்கி அழைத்து சென்றது.
  பசுமை நிறைந்த நினைவுகளே பாட்டு எனக்கும் என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 5. மிகவும் அருமையான பாடல்கள். இவற்றில் எல்லாமே எனக்கும் மிகவும் பிடித்தமானவைகளே! இதைத்தவிர இன்னும் ஏராளமானவைகளும் எனக்குப்பிடித்தவைகள் தான்.

  நல்ல அருமையான பழைய நினைவலைகளை மீட்டுத்தந்துள்ளீர்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 6. அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  அந்தக் காலத்து நிகழ்வுகளோடு
  சம்பத்தப்பட்ட அந்தப் பாடல்களை இப்போது
  கேட்டாலும் மனம் உடன் அந்த அந்த
  நிகழ்வுகளில் போய் அமர்ந்து கொண்டு நகர மறுத்து
  இன்றும் அடம்பிடிக்கிறது
  தங்கள் பதிவின் மூலம் மீண்டும்
  வஸந்த கால நினைவுகளை
  மலரச் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. திருமண வீட்டில் போடப்படும் இன்னொரு பாடலான ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே! சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே.’ என்ற பாட்டை விட்டுவிட்டீர்களே.

  எனக்குத்தெரிந்து ஒரு திருமண வீட்டில் பராசக்தி திரைப்படம் வந்த சமயம், அந்த படத்தின் முழு வசனங்களையும் பாடல்களையும் போட்டார்கள்.பழைய பாடல்கள் பற்றி எழுதி அந்த நாட்களை திரும்ப வர செய்துவிட்டீர்கள். நன்றி!

  ReplyDelete
 8. வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று ஒரு பதிவு எழுதீருந்தேன். இப்பதிவு அதை நினைவு படுத்தியது.

  ReplyDelete
 9. என்றைக்கும் பசுமையான பாடல்களை நினைவு கூர்ந்தது. தங்களின் பதிவு!..

  ReplyDelete
 10. ராஜா ராணியிடம் பாடல் பார்க்கும் வாய்ப்பு இன்னைக்கு உங்க மூலமா கிடைச்சது, நன்றி.
  http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

  அந்த பாடல் எடுத்த இடம் இந்தப் பாடலிலும் வருகிறது போல இருக்கு!!

  http://www.youtube.com/watch?v=ZcQoHK97EvU

  பசுமை நிறைந்த நினைவுகளே, இப்போதும் மனதை நெருடும் பாடல்............

  ReplyDelete
 11. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....
  இளமைக் கால நினைவுகளை மீண்டும் ஞாபகப் படுத்தும் பாடல்கள் ஐயா நன்றி.
  மலைகோட்டையினை பின்னனியில் கொண்டு எடுக்கப் பட்ட படம் அருமை.

  ReplyDelete
 12. மறுமொழி > 2008rupan said...

  // பழைய பாடல் என்றால் நல்ல கருத்துள்ள பாடல்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் கூட இரசிப்பார்கள் //

  கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி! பழைய தமிழ் சினிமா பாடல்களுக்கு “ பழையன கழிதல் “ என்ற விதி பொருந்தாது என்று நினைக்கிறேன்.

  // ஆனால் இப்போ வருகிற படல்களை இரசிக்கவும் முடியாது என்ன கருத்து என்றும் கூறவும் முடியாது...... பகிர்வு அருமை வாழ்த்துக்கள் ஐயா.... //

  என்னாலும் இப்போதைய பாடல்கள் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

  ReplyDelete
 13. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // இன்னும் சில கிராமங்களில் தான் திருமணத்தின் போது பாடல்கள் உண்டு... அந்த இனிய நினைவுகளும் ஞாபகம் வந்தது...//

  // நீங்கள் சொல்வது போல் ஒரு பதிவில் சொல்ல முடியாது... ரசிக்க வைக்கும் இனிய நினைவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி.//.

  சகோதரர் திண்டுக்கல் தனபாலனின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 14. மறுமொழி > கவிதை வீதி... // சௌந்தர் // said...

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்த கவிஞர் கவிதைவீதி சௌந்தருக்கு நன்றி!

  ReplyDelete
 15. மறுமொழி > sury Siva said...
  // அந்த ஜோசப் கல்லூரி மைதானத்தில் நானும் 57 முதல் 61 வரை புட் பால் விளையாடி இருக்கிறேன்.
  61 லே எங்க டீம்க்கு நான் கேப்டன் வேற . //

  சூரி என்கிற சுப்பு தாத்தாவிற்கு வணக்கமும் நன்றியும். நான் ஜோசப் கல்லூரியில் படிக்காவிட்டாலும் அந்த கல்லூரியோடு தொடர்பு உண்டு. நீங்கள் இப்போதும் கேப்டன் தான்.

  // இத நீங்க எழுதியதை நான் படித்ததுடன், என்னுடன் படித்த என்னுடன் விளையாடிய ஜான்சன் நினைவு வந்தது. அவன் எங்கே இருக்கிறானோ? //

  உங்கள் பழைய நண்பர் திருச்சி ஜான்சன் அப்போது எங்கு வசித்தார் என்பதனையும் அவருடைய தந்தையின் பெயரையும் சொன்னால் நான் அவரைப் பற்றி விசாரிக்கிறேன்.

  ReplyDelete
 16. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். பழைய பாடல்கள் என்றாலே எல்லோருக்கும் பிடித்தம்தானே.

  ReplyDelete
 18. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 19. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // திருமண வீட்டில் போடப்படும் இன்னொரு பாடலான ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே! சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே.’ என்ற பாட்டை விட்டுவிட்டீர்களே.//

  தங்களின் நினைவூட்டலுக்கு நன்றி! அடுத்தமுறை எழுதும்போது இந்தப் பாடலையும் சேர்த்துவிட வேண்டியதுதான்.

  // எனக்குத்தெரிந்து ஒரு திருமண வீட்டில் பராசக்தி திரைப்படம் வந்த சமயம், அந்த படத்தின் முழு வசனங்களையும் பாடல்களையும் போட்டார்கள்.//

  ஆம் அய்யா! முன்பெல்லாம் கதை வசனம் போடுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் இதுவும் நினைவுக்கு வந்தது. பதிவில் உள்ள தி ஹிண்டுவின் உங்கள் கல்லூரி மைதான போட்டோ பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.
  தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 20. மறுமொழி > G.M Balasubramaniam said...

  // வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று ஒரு பதிவு எழுதீருந்தேன். இப்பதிவு அதை நினைவு படுத்தியது. //

  அன்புள்ள GMB அய்யாவிற்கு வணக்கமும் நன்றியும்! வாழ்வியலில் சினிமாப் பாடல்கள். என்ற தங்களது பதிவினைப் படித்தேன்.
  // வாழ்வியலில் தமிழ் சினிமாப் பாடல்கள் நவ ரசங்களிலும் இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஏதோ அங்கும் இங்குமாகக் கோடிகாட்டியிருக்கிறேன். இதுவே மிகவும் நீ.........ளமாகிவிட்டது. ( வாழ்வியலில் சினிமாப் பாடல்கள். http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post_03.html ) //
  என்று கடைசியில் சொல்லி இருந்தீர்கள். இங்கும் உங்களுடைய அந்த கருத்து பொருந்தும்.

  ReplyDelete
 21. மறுமொழி > துரை செல்வராஜூ said.
  ..
  தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 22. Manapparai maadukatti padalai iyattriyavar Marudhakasi, kannadasan illai.
  Miga nalla pathivu.

  ReplyDelete
 23. மறுமொழி > Jayadev Das said...
  சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி!

  //ராஜா ராணியிடம் பாடல் பார்க்கும் வாய்ப்பு இன்னைக்கு உங்க மூலமா கிடைச்சது, நன்றி.
  http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

  அந்த பாடல் எடுத்த இடம் இந்தப் பாடலிலும் வருகிறது போல இருக்கு!!

  http://www.youtube.com/watch?v=ZcQoHK97EvU //

  சிவந்த மண் – படப் பாடலுக்கு யூ டியூப் இணைப்புகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி!

  // பசுமை நிறைந்த நினைவுகளே, இப்போதும் மனதை நெருடும் பாடல்............ //

  எப்போதும் மனதை நெருடும் பாடல் என்பதில் ஐயமில்லை!

  ReplyDelete
 24. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  // ரசித்தேன். //

  அய்யா அவர்கள் “தேன்” என்று சொன்னதும் ” பார்த்தேன் சிரித்தேன் “ என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  // மலைகோட்டையினை பின்னனியில் கொண்டு எடுக்கப் பட்ட படம் அருமை. //

  மலைகோட்டையுடன் கூடிய இந்த படத்திற்கான பாராட்டு தி ஹிண்டுவையே சேரும்.

  ReplyDelete
 26. பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
  பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
  பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
  பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

  பள்ளி கல்லூரிகளில் நிறைவு நாட்களில் தவறாமல் பாடும் பாடல்கள்..!

  ReplyDelete
 27. மறுமொழி > geeboomba said...

  // Manapparai maadukatti padalai iyattriyavar Marudhakasi, kannadasan illai.
  Miga nalla pathivu. //

  மணப்பாறை மாடு கட்டி – என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் மருதகாசி – கண்ணதாசன் இல்லை என்று தவற்றினை சுட்டிக் காட்டிய ஜீபூம்பா அவர்களுக்கு நன்றி! தவற்றினை திருத்திவிட்டேன். நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
  பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
  பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
  பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் //

  // பள்ளி கல்லூரிகளில் நிறைவு நாட்களில் தவறாமல் பாடும் பாடல்கள்..! //

  சகோதரி ராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 29. அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்!
  சிவாஜி, எம்ஜிஆர் பாடல்கள் ஒன்றையொன்று முந்தும். இந்த வரிசையில் ரிக் ஷாகாரன் பாடலும் வரும். (அழகிய தமிழ் மகள் இவர்)

  நாங்கள் இருந்த புரசைவாக்கம் பகுதியில் திருமணம் அல்லது வேறு எந்த விழாவாக இருந்தாலும் முதல் பாடல் 'நாலு பேருக்கு நன்றி' . அர்த்தமே புரியாமல் இந்தப் பாடலை அலற வைப்பார்கள்!

  ரொம்பவும் ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 30. அந்த காலத்து பாடல்கள் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்ப என்றே எழுதப்பட்டது போல் இருக்கும். அதுபோலவே தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களுக்கும் ஏற்றவாறு பாடல்கள் இருந்தன. திரைப்பட பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம்.

  ReplyDelete
 31. மலரும் நினைவுகளுடன் பாடல்களை பகிர்ந்த விதம் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 32. என்ன அருமையான பதிவு! அந்தக்கால இசையுலகமே தனி அழகு! எத்தனை இனிமையான அர்த்தம் பொதிந்த மனதை வருடிச் செல்கிற பாடல்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனத்தைக் கவரும்! சுண்டி இழுக்கும்!

  ReplyDelete
 33. ...கல்யாண விழாவில் ஒலிக்கும் மற்றொரு பாடல்: 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே...'

  ReplyDelete
 34. மறுமொழி > Ranjani Narayanan said...

  // அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்!
  சிவாஜி, எம்ஜிஆர் பாடல்கள் ஒன்றையொன்று முந்தும். இந்த வரிசையில் ரிக் ஷாகாரன் பாடலும் வரும். (அழகிய தமிழ் மகள் இவர்) //

  அழகிய தமிழ் மகள் இவள் – நினைவூட்டலுக்கு நன்றி!

  // நாங்கள் இருந்த புரசைவாக்கம் பகுதியில் திருமணம் அல்லது வேறு எந்த விழாவாக இருந்தாலும் முதல் பாடல் 'நாலு பேருக்கு நன்றி' . அர்த்தமே புரியாமல் இந்தப் பாடலை அலற வைப்பார்கள்! //

  அவர்கள் தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் போலிருக்கிறது.

  // ரொம்பவும் ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள்! //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 35. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
  // அந்த காலத்து பாடல்கள் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்ப என்றே எழுதப்பட்டது போல் இருக்கும். அதுபோலவே தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களுக்கும் ஏற்றவாறு பாடல்கள் இருந்தன. திரைப்பட பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம். //
  ஆமாம் அய்யா அவை நிறைய விற்பனை ஆயின. அந்த கிராமபோன், இசைத் தட்டுக்கள் முதலானவற்றை வைத்து இருந்தவர்கள் அவற்றை என்ன செய்தார்கள்?

  ReplyDelete
 36. மறுமொழி > ADHI VENKAT said...
  // மலரும் நினைவுகளுடன் பாடல்களை பகிர்ந்த விதம் அருமை. தொடருங்கள். //

  சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 37. மறுமொழி . கே. பி. ஜனா... said... ( 1, 2 )
  // என்ன அருமையான பதிவு! அந்தக்கால இசையுலகமே தனி அழகு! எத்தனை இனிமையான அர்த்தம் பொதிந்த மனதை வருடிச் செல்கிற பாடல்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனத்தைக் கவரும்! சுண்டி இழுக்கும்! //

  எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  // ...கல்யாண விழாவில் ஒலிக்கும் மற்றொரு பாடல்: 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே...' //

  இதே பாடலை மூத்த பதிவர் அய்யா வே நடனசபாபதி நினைவூட்டி இருந்தார். தங்களின் நினைவூட்டலுக்கு நன்றி!
  ReplyDelete
 38. அன்பின் தமிழ் இளங்கோ - சென்ற பதிவர் சந்திப்பின் போது தங்களுக்கு தங்கள் தந்தையார் சூட்டிய அருமையான பெயரின் அடிப்படையினை எடுத்துரைத்தது நினைவிற்கு வருகிறது.

  நினைவில் நின்ற சினிமாப் பாடல்கள் சில - பதிவு அருமை அருமை - இலங்கை வானொலி - திருமண வீடு - கால்பந்து போட்டி - விவித் பாரதியின் தேன் கிண்ணம் - பொருட்காட்சி - கல்லூரியில் படித்த காலம் - படித்து முடித்த காலம் - வங்கிப் பணியில் சேர்ந்த போது - என இவ்வளவு நிகழ்வுகளீலும் அக்கால கட்டத்தில் காதில் விழுந்த திரைப்படப் பாடல்களை இரசித்து மகிழ்ந்து - இன்று நினைவில் நிற்கும் அருமையான திரைப் படப் பாடல்களை மீண்டு மலரும் நினைவுகளாக பதிவாக்கியமை நன்று - நன்று.

  நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 39. மறுமொழி > cheena (சீனா) said...

  // அன்பின் தமிழ் இளங்கோ - சென்ற பதிவர் சந்திப்பின் போது தங்களுக்கு தங்கள் தந்தையார் சூட்டிய அருமையான பெயரின் அடிப்படையினை எடுத்துரைத்தது நினைவிற்கு வருகிறது. //

  அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! திரு VGK அவர்களுடன் தங்களை தங்கள் மனைவியோடு சந்தித்த அந்த பதிவர் சந்திப்பை என்னாலும் மறக்க இயலாது.

  // நினைவில் நின்ற சினிமாப் பாடல்கள் சில - பதிவு அருமை அருமை - இலங்கை வானொலி - திருமண வீடு - கால்பந்து போட்டி - விவித் பாரதியின் தேன் கிண்ணம் - பொருட்காட்சி - கல்லூரியில் படித்த காலம் - படித்து முடித்த காலம் - வங்கிப் பணியில் சேர்ந்த போது - என இவ்வளவு நிகழ்வுகளீலும் அக்கால கட்டத்தில் காதில் விழுந்த திரைப்படப் பாடல்களை இரசித்து மகிழ்ந்து - இன்று நினைவில் நிற்கும் அருமையான திரைப் படப் பாடல்களை மீண்டு மலரும் நினைவுகளாக பதிவாக்கியமை நன்று - நன்று. //

  இன்னும் நிறைய பாடல்களைச் சேர்க்க ஆசைதான். ஆனால் படிக்கும் வாசகருக்கு பிடிக்காமல் போய்விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

  // நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா //

  அய்யா அன்பின் சீனா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!


  ReplyDelete
 40. அவ்வளவும் சரி. ஏதாவது விழா என்றால்
  ''...ஞானப்பழத்தைப் பிழிந்து...''' கேட்ட ஞாபகம்.
  இப்படியெல்லாம் பலர் வாழ்வில் பரிச்சயமானது. பாடல்கள்.
  நல்ல பதிவு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 41. மறுமொழி > kovaikkavi said...
  // அவ்வளவும் சரி. ஏதாவது விழா என்றால்
  ''...ஞானப்பழத்தைப் பிழிந்து...''' கேட்ட ஞாபகம்.
  இப்படியெல்லாம் பலர் வாழ்வில் பரிச்சயமானது. பாடல்கள்.
  நல்ல பதிவு. இனிய வாழ்த்து.//

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். கருத்துரைக்கும் கே பி சுந்தராம்பாள் பாடலை நினவுட்டியமைக்கும் நன்றி!

  ReplyDelete
 42. ஆகா! அழகான பதிவு அய்யா. அந்த கால இசைக்கு தனி செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. பாடல்கள் பலரையும் அசை போட வைத்திருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  ReplyDelete
 43. இடங்களுடன் சம்பந்தப்பட்ட இனிமையான பாடல்கள் நினைவுகள் நன்று

  ReplyDelete
 44. மறுமொழி > அ. பாண்டியன் said...
  // ஆகா! அழகான பதிவு அய்யா. அந்த கால இசைக்கு தனி செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. பாடல்கள் பலரையும் அசை போட வைத்திருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. //

  தம்பி “அரும்புகள் மலரட்டும்” அ பாண்டியன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete

 45. மறுமொழி > சென்னை பித்தன் said...
  // இடங்களுடன் சம்பந்தப்பட்ட இனிமையான பாடல்கள் நினைவுகள் நன்று //

  மூத்த பதிவரின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 46. அழகான தொகுப்பு... எனக்கும் இதில் பல பாடல்கள் பிடித்தவையே!!!

  ReplyDelete
 47. மறுமொழி > வெற்றிவேல் said...
  // அழகான தொகுப்பு... எனக்கும் இதில் பல பாடல்கள் பிடித்தவையே!!! //

  தம்பி இரவின் புன்னகை வெற்றிவேலின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 48. மறுமொழி > chanthuru sumith said...
  // really super //

  தம்பி சந்த்ரு சுமித் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete