Monday 30 September 2013

ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”



சிலநாட்களுக்கு முன் வீட்டுத் திண்ணையிலிருந்து நாங்கள் வளர்த்த ஜாக்கி( JACKIE ) (வயது 10) விழுந்து விட்டது. அதற்கு காய்ச்சல் ஏற்பட மருந்து கொடுக்க சரியானது. (சின்ன குட்டி நாயாக இருந்தபோது எனது மகன் அதனை எடுத்து வந்தான்.) அதற்கு அடுத்து சிலதினம் சென்று, வீட்டு படிக்கட்டில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டேன்.முதுகில் அடிபட்டதால் வலி வந்து இப்போது குறைந்து விட்டது. அப்போதிலிருந்து  மனது சரியில்லை. மேலும் சின்னச் சின்ன பிரச்சினைகளால் குழப்பம். இந்தச் சூழ்நிலையில் ஜாக்கிக்கு மறுபடியும் உடம்பு நலமில்லை. திடமான உணவை ஜாக்கியினால். சாப்பிட இயலவில்லை. சென்ற வாரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். சரியாக சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் பால், தண்ணீர்  தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை.

மனது சரியில்லாததால் படிப்பது, எழுதுவது, வலைப் பதிவுகள் பக்கம் செல்வது என்று இருந்தேன். வெள்ளிக் கிழமை (27.09.2013) காலை வலையில் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்  (http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_26.html) என்ற ஜோதிஜியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க “ என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை வீடியோ இணைப்பாகக் கொடுத்து இருந்தார்.அந்த பாடலைக்  கேட்ட போது மனதில் இனம் புரியாத விளக்கம். இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தது. (பின்னர் எங்கு என்பதற்கு விடை கிடைத்தது )அப்போது அவர் பதிவில் கருத்துரைப் பெட்டியில் நான் எழுதியது

// தாங்கள் இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!  //
  
அடுத்தநாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை  காலை முதல் இனம் புரியாத உணர்வு. ஏதோ ஒன்று நடக்கப் போவதாய் உள்ளுணர்வு. இன்னதென்று சொல்ல இயலவில்லை ஷேக்ஸ்பியர் நாடகத்தில், போரில் வெற்றி பெற்ற மாக்பெத்(MACBETH) தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம். மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் நிறைந்த இது போன்ற ஒருநாளை இதுவரை நான்  கண்டதில்லை.

So foul and fair a day I have not seen. (MACBETH -  1.3.38)


மாக்பெத் மன நிலைமையில் நான் இருந்தேன். மனதில் ஆறுதல் தேடி மீண்டும் ஜோதிஜியின் கட்டுரையிலுள்ள  இணைப்பை சென்று பார்க்கச் சென்ற போது, எனக்கான மறுமொழியில் அவர் 

//  இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது // 

என்று எழுதியிருந்தார். இருந்தாலும் நேற்று முன்தினம்  இரவு (சனிக் கிழமை) அந்த பாடலைக் கேட்டேன். மேலும் GOOGLE இல் தமிழில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து அதில் வந்த கட்டுரைகளைப் படித்தேன். படுக்க இரவு மணி 12 ஆகிவிட்டது.

அன்று இரவு 1.30 மணி அளவில் வீட்டினுள்ளே வராண்டாவில் இருந்த ஜாக்கி வெளியே விடச் சொல்லி முனகியது. வெளியே சென்ற ஜாக்கி தண்ணீர் குடித்துவிட்டு மாடிப்படிகளின் மேல் சென்று படுத்துக் கொண்டது. (வீட்டின் நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்) நான் கதவைப் பூட்டிவிட்டு  வீட்டினுள் படுத்து விட்டேன். நேற்று (29.09.2013) ஞாயிறு காலை 6.30 மணி அளவில் ஜாக்கி ஜாக்கி “ என்று அழைத்தேன். வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கிரில் கேட்டைத் திறந்து வெளியில் பார்த்தபோது வீட்டு வாசலில் இறந்து கிடந்தது (மாடிப்படிகளில் இருந்து கீழே ஓடிவந்து இருக்கிறது). வீட்டினுள் நான், எனது மனைவி மற்றும் எனது மகன் (கல்லூரி மாணவர்) என மூவர் மட்டுமே. எல்லோரும் அழுதோம். விஷயம் கேள்விப் பட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தனர். அடுத்த வீட்டிலும் விசாரித்தனர்.

இறந்து போன் ஜாக்கியை வீட்டின் கொல்லைப் பக்கம் புதைக்கலாம் என்றால், அந்த இடத்தைப் பார்க்கும் எனது மகன் எப்போதும் அழுது கொண்டே இருப்பான். மேலும் அதன் நினைவுகள் அடிக்கடி எல்லோரது மனதிலும் வந்து மனதை அலைகழிக்கும். எனவே வெளியில் எங்காவது புதைக்க முடிவாயிற்று. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கார்ப்பரேசன் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஒரு சில ஊழியர்கள் புதைக்க மாட்டோம். சாக்கில் கட்டி வெளியே தொலைவிற்கு சென்று காட்டில் வீசி விடுவோம்என்றார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து எனது டிவிஎஸ் 50 XL ஐ எடுத்துக் கொண்டு அலைந்தேன். கடைசியாக 11.30 அளவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் இடுகாடுகளில் சவக்குழி தோண்டும் கான் என்ற முஸ்லிம் சகோதரரைச் சொன்னார்கள். அவரும் முன்வந்தார். இவர் ஒரு தட்டு ரிக்‌ஷாக்காரர். அவரது தட்டு ரிக்‌ஷாவிலேயே  ஜாக்கியை ஒரு சாக்குப் பையில் நானும் எனது மகனும் எடுத்துச் சென்று, இடுகாட்டின் ஒரு மூலையில் காம்பவுண்டு சுவர் அருகே அடக்கம் செய்தோம்.


எங்கள் ஜாக்கியைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு பதிவாக எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. நாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்


(மண்ணில் தோன்றிய எல்லா உயிரினமும்  இறைவன் படைப்புதான். சுயநலம் காரணமாக சில உயிர்களை நேசிக்கிறோம்; சில உயிர்களை வெறுக்கிறோம்.. கவிஞர் வைரமுத்து மனித உயிரின் பயணத்திற்காக மட்டும் இந்த கவிதையை எழுதியதாக நான் நினைக்கவில்லை. மண்ணுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்குமாகவே எழுதியதாக நினைக்கிறேன் )
  
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! கவிதை இங்கே.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

-                     கவிஞர் வைரமுத்து



இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள்.

VIDEO THANKS TO GOOGLE  ( YOUTUBE )

ஒரு சிறிய குறிப்பு :
 ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில்  கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன்  வயது 65 ஆகிறது (நன்றி: www.pedigree.com )  
தி தமிழ் இளங்கோ 06.10.2013

43 comments:

  1. நன்றி சொல்ல வார்த்தையில்லை
    நாயினோட அன்புத்தொல்லை

    ReplyDelete
  2. //ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
    சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
    நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
    நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!//

    அருமையான வரிகள்......

    ஜாக்கி - உங்கள் மனதை விட்டு என்றும் மறையப் போவதில்லை.....

    ReplyDelete
  3. ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  4. நன்கு பழகிய ஜாக்கி இல்லாமல் போனது எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என்பது தெரிந்ததே வைரமுத்து வரிகளால் அமைதி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  5. ஜாக்கியின் மறைவு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எவ்வளவு துயரத்தைக் கொடுத்திருக்கும் என்பது என்னால் உணரமுடிகிறது. அதை மறக்க அல்லது மறக்காதிருக்க இன்னொரு ஜாக்கியை வளர்ப்பதே சிறந்தது.

    கவிப்பேரரசுவின் கவிதை ‘வாழ்க்கை என்றும் நிரந்தரமல்ல என்பதை திரும்பவும் நினைவூட்டியது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  6. ஜாக்கியின் ஆண்மா சாந்தி அடையப் பிராரத்திக்கிறேன்.

    ReplyDelete
  7. நாயானாலும் வளர்த்த பாசம் விடாது இளங்கோ!

    ReplyDelete
  8. விரைவில் மறையட்டும் விசனம்!

    ReplyDelete
  9. படித்ததும் மனதில் ஓர் வருத்தம் என்னையும் தொற்றிக்கொண்டது, ஐயா. ;(

    தாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  10. தாங்கள் நேசித்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்

    ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

    ReplyDelete

  11. வீட்டில் ஒரு உறுப்பினர் மாதிரி வளர்க்கும் செல்லப் பிராணி இறந்தால்.......! அந்த வேதனை அனுபவித்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. எனது மனவியையும் மகளையும் இந்தியாவிற்கு செல்ல விமான நிலையத்திற்கு என்று அவர்களை அனுப்பிவிட்டு விட்டிற்கு வந்த நான் எங்கள் வீட்டில் வளர்த்து வரும் மீன் களுக்கு உணவு இட்டுவிட்டு படுக்க சென்றேன். காலையில் எழுந்த பின் பார்த்தால் முன்றில் ஒன்று இறந்து கிடந்தது. அப்போது மனம் சஞ்சலம் அடைந்தது சகுனம் பார்ப்பது என் வழக்கம் இல்லை என்றாலும் நமது கலாச்சாரம் முலம் நமது மனதில் ஊடுருவி இருக்கும் இந்த சகுனப்பலன்கள் மனதில் தோன்றின. அதைப்பற்றி வேலை பார்க்கும் நண்பர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்னார்கள் உன் குடும்பத்தினருக்கு ஒன்று ஆகி இருக்காது அவர்களுக்கு ஏற்பட விருந்த தீங்குகளை தான் ஏற்றுக் கொண்டுதான் இந்த மீன் இறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிந்தான் மனம் சிறிது அமைதியடைந்தது.


    அது போலதான் நீங்கள் கால் வழுக்கி விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டியதை உங்கள் நாய் ஏற்றுக் கொண்டு இறந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது, அதன் இழப்பு உங்கள் குடும்பத்தினருக்கு மிக மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்


    இப்போது எங்கள் வீட்டில் நாய்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து கொண்டு இருக்கிறோம் அதை நாயாக நாங்கள் கருதவில்லை எங்கள் வீட்டிற்கு வந்த பையானகத்தான் கருதுகிறோம் அது தூங்குவது என்னோடதான் எனது படுக்கை அறையில்தான் அது வந்த பின் என் வாழ்க்கை முறையில் மிக மாற்றம் வந்துவிட்டது. என நான் கருதுகிறேன்

    உங்களுக்காககவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திகிறேன்

    ReplyDelete
  13. என் அனுபவத்தில், மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம், பிராணிகள் குழந்தையாகவே பிறந்து குழந்தையாகவே இறக்கின்றன. எங்கள் ஊரில் ஒருவர் நாய் வைத்திருந்தார். அவருடன் நாய் இருக்கும்பொழுது, யாரும் அவரிடம் சத்தமாகப் பேசக்கூடாது என்பது எழுதாத சட்டம். அதிகம் சிரமப்படாமல் ஆன்மா சென்றுவிட்டதென்று திருப்திபடுங்கள். தங்களது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்.

    ReplyDelete
  14. ஐயா தங்களின் வேதனையினை உணர முடிகின்றது. யாருடைய வார்த்தைகளாலும், தங்களின் மனம் வேதனையில் இருந்து மீளாது என்பது புரிகிறது. இதுதான் வாழ்க்கை. வாழ்ந்து பார்க்கத்தான் வேண்டும்.தங்களுக்கும் ,தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லியிருப்பதுபோல நானும் திரு ஜோதிஜி அவர்களின் தளத்தில்தான் இந்தப் பாடலை முதன்முறை கேட்டேன். உலுக்கி விட்டுவிட்டது.
    உங்களுக்கு பாடலைக் கேட்டவுடனேயே வீட்டிலும் ஒரு மரணம் நிகழ, பாடலின் வரிகள் உங்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைத்திருக்கும் என்று உணர முடிகிறது.
    உற்ற துணைவனாய் இருந்த ஜாக்கியின் மறைவு தரும் சோகத்திலிருந்து மீண்டு வர இறைவன் உங்களுக்கு வல்லமை கொடுக்கட்டும்.

    ReplyDelete
  16. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    // நன்றி சொல்ல வார்த்தையில்லை
    நாயினோட அன்புத்தொல்லை //

    கவிஞர் கவியாழியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...
    // ஜாக்கி - உங்கள் மனதை விட்டு என்றும் மறையப் போவதில்லை..... //

    உண்மைதான். இன்னும் அது வீட்டில் இருப்பது போன்றே எங்கள் அனைவருக்கும் உணர்வு. நீங்காத நினைவுகள். சகோதரர் வெங்கட் நாகராஜின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > Sasi Kala said...
    // நன்கு பழகிய ஜாக்கி இல்லாமல் போனது எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என்பது தெரிந்ததே வைரமுத்து வரிகளால் அமைதி கிடைக்கட்டும். //

    சகோதரி சொல்வது போல் வைரமுத்துவின் கவிதை வரிகளை அடிக்கடி படித்து அமைதி கொள்கிறேன். சகோதரியின் ஆறுதலான வார்த்தைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    //ஜாக்கியின் மறைவு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எவ்வளவு துயரத்தைக் கொடுத்திருக்கும் என்பது என்னால் உணரமுடிகிறது. அதை மறக்க அல்லது மறக்காதிருக்க இன்னொரு ஜாக்கியை வளர்ப்பதே சிறந்தது. //

    ஆமாம் அய்யா! இன்னும் எங்களால் ஜாக்கியின் பிரிவுத் துயரை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. இன்னொரு ஜாக்கி ... இன்னொரு பிரிவுத் துயரம் ... வேண்டாம் என்ரு சொல்லி விட்டேன்.

    // கவிப்பேரரசுவின் கவிதை ‘வாழ்க்கை என்றும் நிரந்தரமல்ல என்பதை திரும்பவும் நினைவூட்டியது. பகிர்ந்தமைக்கு நன்றி!//

    இந்த பாடலை முதன் முதல் ஒரு இறுதிச்சடங்கின் போது திருச்சி மின்தகன மயானத்தில் கேட்டது. அப்போது யார் எழுதியது என்று தெரியாது. இப்போது ஒரு பதிவில் ஜோதிஜி திருப்பூர் (தேவியர் இல்லம்) அவர்கள் ப்கிர்ந்து இருந்தார். அதனைப் படித்த பிறகுதான் இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் வைரமுத்து என்று தெரியும்.

    தங்களின் அன்புக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி >rajalakshmi paramasivam said...
    // ஜாக்கியின் ஆண்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். //

    சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // நாயானாலும் வளர்த்த பாசம் விடாது இளங்கோ! //
    ஆமாம்! புல்வர் அய்யா! எங்களால் அதன் பாச நினைவுகளை எப்போதும் மறக்க இயலாது. புலவர் அய்யாவின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    // விரைவில் மறையட்டும் விசனம்! //

    எழுத்தாளர் கே பி ஜனாவின் ஆறுதலுக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    // படித்ததும் மனதில் ஓர் வருத்தம் என்னையும் தொற்றிக்கொண்டது, ஐயா. ;( தாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும். //

    அன்புள்ள VGK அவர்களுக்கு! எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // தாங்கள் நேசித்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்
    ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க //
    சகோதரியி இராஜராஜேஸ்வரி அவர்களது பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > G.M Balasubramaniam said...
    // வீட்டில் ஒரு உறுப்பினர் மாதிரி வளர்க்கும் செல்லப் பிராணி இறந்தால்.......! அந்த வேதனை அனுபவித்திருக்கிறேன். //

    செல்லப் பிராணியின் பிரிவு! எப்படி எப்படி எல்லாம் வாட்டும் என்பதனை இப்போது எங்கள் வீட்டிலுள்ளவர்கள் உணர்கிறோம்.
    GMB அவர்களின் ஆறுதலுக்கு நன்றி!

    ReplyDelete
  27. பள்ளிக்கூட காலம் வரைக்கும் இது போன்ற விலங்கினங்கள் மேல் அதிக பிரியங்கள் இருந்தது. ஆனால் ஒரு பதிவு தொடர்பாக உங்களின் மனோ ஓட்டமும் நடந்த நிகழ்வும் வருத்தமாக உள்ளது. இங்கு ஒருவர் தன் செல்ல நாய் இறந்த அடுத்த நாள் இறந்த கதையெல்லாம் பார்த்ததுண்டு.

    ReplyDelete
  28. மறுமொழி > Avargal Unmaigal said...

    // சகுனம் பார்ப்பது என் வழக்கம் இல்லை என்றாலும் நமது கலாச்சாரம் முலம் நமது மனதில் ஊடுருவி இருக்கும் இந்த சகுனப்பலன்கள் மனதில் தோன்றின. அதைப்பற்றி வேலை பார்க்கும் நண்பர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்னார்கள் உன் குடும்பத்தினருக்கு ஒன்று ஆகி இருக்காது அவர்களுக்கு ஏற்பட விருந்த தீங்குகளை தான் ஏற்றுக் கொண்டுதான் இந்த மீன் இறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிந்தான் மனம் சிறிது அமைதியடைந்தது. //

    சகோதரருக்கு! உங்கள் கருத்துரையைப் படித்ததும் எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.


    // அது போலதான் நீங்கள் கால் வழுக்கி விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டியதை உங்கள் நாய் ஏற்றுக் கொண்டு இறந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது, அதன் இழப்பு உங்கள் குடும்பத்தினருக்கு மிக மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் //

    // உங்களுக்காககவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திகிறேன் //

    எனக்காக அது தியாகம் செய்தது என்றுதான் நினக்க வேண்டி இருக்கிறது. சகோதரர் மதுரைத் தமிழன் (அவர்கள் உண்மைகள் ) அவர்களின் விரிவான ஆறுதலான கருத்துரைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி




    ReplyDelete
  29. மறுமொழி > Packirisamy N said...
    // அதிகம் சிரமப்படாமல் ஆன்மா சென்றுவிட்டதென்று திருப்திபடுங்கள். தங்களது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். //

    ஜாக்கியைப் பொறுத்தவரை அதன் கடைசி நாட்கள் விறுவிறு என்று முடிந்து விட்டன. அது இருக்கும் வரை யாருக்கும் அதிகம் தொந்தரவு தந்ததில்லை. சகோதரர் N பக்கிரிசாமி. அவர்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // ஐயா தங்களின் வேதனையினை உணர முடிகின்றது. யாருடைய வார்த்தைகளாலும், தங்களின் மனம் வேதனையில் இருந்து மீளாது என்பது புரிகிறது. இதுதான் வாழ்க்கை. வாழ்ந்து பார்க்கத்தான் வேண்டும்.தங்களுக்கும் ,தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா //

    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாரின் ஆறுதல் மொழிகளுக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > Ranjani Narayanan said...
    // நீங்கள் சொல்லியிருப்பதுபோல நானும் திரு ஜோதிஜி அவர்களின் தளத்தில்தான் இந்தப் பாடலை முதன்முறை கேட்டேன். உலுக்கி விட்டுவிட்டது. உங்களுக்கு பாடலைக் கேட்டவுடனேயே வீட்டிலும் ஒரு மரணம் நிகழ, பாடலின் வரிகள் உங்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைத்திருக்கும் என்று உணர முடிகிறது. உற்ற துணைவனாய் இருந்த ஜாக்கியின் மறைவு தரும் சோகத்திலிருந்து மீண்டு வர இறைவன் உங்களுக்கு வல்லமை கொடுக்கட்டும். //
    கவிஞர் வைரமுத்துவின் கவிதையை நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே , இறைவன் ஜோதிஜியின் மனதில் இந்த பாடலை பகிரச் சொல்லி உணர்த்தியது போன்றே எனது
    நிகழ்வுகள் தோன்றுகின்றன. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கும் ஆறுதலுக்கும் நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // பள்ளிக்கூட காலம் வரைக்கும் இது போன்ற விலங்கினங்கள் மேல் அதிக பிரியங்கள் இருந்தது. ஆனால் ஒரு பதிவு தொடர்பாக உங்களின் மனோ ஓட்டமும் நடந்த நிகழ்வும் வருத்தமாக உள்ளது. இங்கு ஒருவர் தன் செல்ல நாய் இறந்த அடுத்த நாள் இறந்த கதையெல்லாம் பார்த்ததுண்டு. //

    ஜோதிஜி அவர்களுக்கு நன்றி! சில நாட்களாகவே எனக்கு சில குழப்பங்கள். கூடவே ஜாக்கியின் உடல்நிலை. ஒரு மன ஆறுதல் இன்றி தவித்த நேரத்தில் நீங்கள் பகிர்ந்த பாடல் ஒரு ஆறுதல். ஜாக்கி நன்கு ஆரோக்கியமாகவே இருந்தபடியினால் அதன் முதுமையை பற்றி நினைக்க மறந்து விட்டோம். (ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது 83 வயது )
    மேலே சகோதரி ரஞ்சனி அவர்களுக்கு எழுதிய மறுமொழியில்

    // கவிஞர் வைரமுத்துவின் கவிதையை நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே , இறைவன் ஜோதிஜியின் மனதில் இந்த பாடலை பகிரச் சொல்லி உணர்த்தியது போன்றே எனது நிகழ்வுகள் தோன்றுகின்றன.//

    என்று எழுதினேன். எனது பதிவில் கருத்துரை தந்தமைக்கு நன்றி!



    ReplyDelete
  33. ஐயா!, தங்கள் பதிவை படித்துவிட்டுத் தான் ஜோதிஜி அவர்கள் பதிவுக்கு சென்றேன். பின்னர் வந்து விரிவாக கருத்திடலாம் என்று நினைத்தேன
    செல்லப் பிராணிகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல பதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நம்மிடம் உணவைத் தவிர வேறு எதுவும் ஏதிர்பார்ப்பதில்லை.ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு தந்திருக்கிறது. ஓராண்டே எங்களுடன் வாழ்ந்த செல்ல நாய் ஜுனோவின் இழப்பு எங்களை வெகுவாக பாதித்தது என்றால் நீண்ட நாட்கள் உங்களுடன் இருந்த ஜாக்கியின் இழப்பு அளவில்லாத வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணர முடிகிறது. ஜூனோவுக்கு இரங்கற் பா நான் எழுதினேன்.ஜாக்கிக்கோவைரமுத்துவின் மனதைப் பிசையும் பாடல் இரங்கர்பாடலாக அமைந்துள்ளது. ஜாக்கியின் கம்பீரமான முகம் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருப்பதை எளிதில் மறக்க முடியுமா என்ன ?
    //பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
    இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
    நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
    மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.//
    என்ற வரிகள் மருந்தாக அமைந்து ஆறுதலைத் தரட்டும்.

    ReplyDelete

  34. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    // செல்லப் பிராணிகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல பதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நம்மிடம் உணவைத் தவிர வேறு எதுவும் ஏதிர்பார்ப்பதில்லை.ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு தந்திருக்கிறது. ஓராண்டே எங்களுடன் வாழ்ந்த செல்ல நாய் ஜுனோவின் இழப்பு எங்களை வெகுவாக பாதித்தது என்றால் நீண்ட நாட்கள் உங்களுடன் இருந்த ஜாக்கியின் இழப்பு அளவில்லாத வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணர முடிகிறது. //

    சகோதரர் T N முரளிதரன் அவர்களின் ஆறுதல் மொழிகளுக்கு நன்றி! உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை இன்னும் என்னால் பழைய சூழலுக்கு திரும்ப முடியவில்லை.

    ReplyDelete
  35. தி.தமிழ் இளங்கோ said... ( ஒரு சிறிய திருத்தம் )
    மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // (ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது 83 வயது ) //

    எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன் வயது 65 ஆகிறது ( நன்றி: www.pedigree.com )

    ReplyDelete
  36. ஜாக்கியின் மனம் சாந்தியடையட்டும்... வைரமுத்துவின் கவிதை நல்ல பொருள் உள்ள கவிதை...

    ReplyDelete
  37. மறுமொழி > வெற்றிவேல் said...
    // ஜாக்கியின் மனம் சாந்தியடையட்டும்... வைரமுத்துவின் கவிதை நல்ல பொருள் உள்ள கவிதை... //

    எனது வேண்டுகோளுக்கு இணங்க, இரவு நேரத்திலும் கருத்துரையும் ஆறுதலும் சொன்ன தம்பி இரவின் புன்னகை வெற்றிவேலுக்கு நன்றி!

    ReplyDelete
  38. உங்களுக்கு ஒரு ஜாக்கி, எங்களுக்கு ஒரு பிளாக்கி. பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  39. மறுமொழி > N.H.பிரசாத் said...

    // உங்களுக்கு ஒரு ஜாக்கி, எங்களுக்கு ஒரு பிளாக்கி. பகிர்ந்தமைக்கு நன்றி சார். //

    ஒரு ஆறுதலான கருத்துரை தந்த சகோதரர் N.H.பிரசாத் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா
    ஜாக்கியின் இறப்பு பற்றி அறிந்தேன். படிக்கும் போதே கண்கள் குளமாகுவதைத் தடுக்க முடியவில்லை. செல்லமாய் வளர்த்து அதன் குறும்புகளில் நனைந்த நீங்கள் அதை இழக்கும் போது ஏற்பட்ட வலியை நன்றாக உணர முடிகிறது ஐயா. காலங்கள் கடந்தாலும் அதன் நினைவுகள் இன்னும் உங்களை விட்டு நீங்கவில்லை என்பதில் அதன் மீது நீங்கள் வைத்த அன்பு புரிகிறது. என்ன செய்ய எல்லாம் காலத்தின் கட்டாயம். பகிர்ந்த பாடல் என்னவொரு அனுபவம். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. இதுவும் கடந்து போகும். மீண்டும் மீண்டும் புதிதாய் பிறப்போம். நன்றீங்க ஐயா.

    ReplyDelete
  41. மறுமொழி > அ. பாண்டியன் said...

    வணக்கம்! எங்கள் ஜாக்கியின் நீங்காத நினைவுகள் இந்த மண்ணை விட்டு நாங்கள் நீங்கும் மட்டும் போகாது.

    சகோதரர் ஆசிரியர் மணவை அ.பாண்டியன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  42. எனது மனநிலையை அப்படியே எடுத்துச் சொல்கிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மறுமொழி அப்புறம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டதில் மறந்தே போய் விட்டது. மன்னிக்கவும்.

      Delete