Wednesday 8 May 2013

தபால் துறை: அழைப்பிதழ்கள் போய்ச் சேர்வதில்லை



முன்பெல்லாம் ஒரு தபாலை வெளியூருக்கு அனுப்பினால் ஒரு வாரத்திற்குள் சென்று சேர்ந்து விடும். உள்ளூர் தபால்களுக்கு இரண்டு நாட்கள். அடுத்த நாளே போய்ச் சேர்ந்த அதிசயமும் உண்டு. இப்போது அப்படி இல்லை.  நாம் அனுப்பும் தபால்கள் சரியாகச் சென்று சேர்வதில்லை. மற்றவர்கள் அனுப்பும் தபால்களும் சரியாக வந்து சேர்வதில்லை.

என்னோடு பணிபுரிந்த நண்பர்  ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழை எனக்கு நேரில் கொடுக்க விரும்பினார். நான் வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ள என்னை செல்போனில் அழைத்தபோது, நான் வெளியூரில் இருந்தபடியினால் அழைப்பிதழை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பச் சொன்னேன். அவர் சொல்லி பதினைந்து நாட்கள் ஆகியும் தபாலில் எதுவும் வரவில்லை. அவரிடம் போனில் விசாரித்ததற்கு அப்போதே அனுப்பி விட்டதாகச் சொன்னார். அப்புறம் அவரை நேரில் சென்று பார்த்து ஒரு அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டேன். அவரோ இதே போல் பலருக்கும் தபாலில் அனுப்பியவை சென்று சேரவில்லை என்று வருத்தப்பட்டார்.

இதே போல இன்னொரு நண்பர், தனது மகள் திருமணத்திற்கு தபாலில் பத்திரிகையை அனுப்பி வைத்தார். வரவில்லை. அவரிடம் செல்போனில் திருமண நாள், நடக்கும் இடம், நேரம் தெரிந்து கொண்டு சென்று வந்தேன். அவருக்கும் முன்னவர் போல் இதே அனுபவம். அவர் தபாலில் அனுப்பிய பல பத்திரிகைகள் சென்று சேரவில்லை. திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு அவர் அனுப்பிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அவர் சொன்ன தகவல்.  அவரது கிராமத்து கோயிலில் கும்பாபிஷேகம். கிராமத்தார் அனுப்பிய அழைப்பிதழ் நிகழ்ச்சி முடிந்து ஒருவாரம் சென்ற பிறகுதான் வந்தது.

எனக்கும் இதே அனுபவம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது மகள் திருமணம் நடந்தது.அழைப்பிதழ்களை நேரில் கொடுகக முடிந்தவர்களுக்கு நேரில் கொடுத்தேன். மற்றவர்களுக்கு, குறிப்பாக வெளியூர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தபாலில் பத்திரிகைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அனுப்பவேண்டும் என்று தபால் அலுவலகம் சென்று நேரில் கொடுத்துவிட்டு வந்தேன்.. ஆனால். நிறையபேருக்கு தபால் சென்று சேரவில்லை; சிலருக்கு திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்தது.

இதில் எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். மேலும் நாங்கள் தனியார் கூரியர் மூலம் அனுப்பிய அழைப்பிதழ்கள் சரியாக சென்று சேர்ந்து விட்டன. இதே போன்ற  அனுபவம் உங்களுக்கும் நேர்ந்து இருக்கலாம்.

பெரும்பாலும் நகர்ப்புற தபால் அலுவலகங்களில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. காரணம் கட்டு கட்டாக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே சமயத்தில் தந்து விடுகிறார்கள். அதிக தபால்களைப் பார்த்தவுடன் அவர்கள் பதற்றம் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.  நமது இந்திய தபால் துறையின் சேவை இவ்வாறு இருக்கிறது. தபால் ஊழியர்களிடம் இதுபற்றி விசாரித்தால், எங்கள் துறையில் ஆட் பற்றாக் குறையும், அதிக வேலைப் பளுவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ( மின்னஞ்சல், செல்போன் வந்தபிறகு வாழ்த்து அட்டைகள் அனுப்புதல், கடிதம் எழுதுதல், தந்தி அனுப்புதல் போன்றவைகளை மக்கள் அதிகமாக நாடுவதில்லை. இதனால் ஊழியர்களுக்கு வேலை அதிகம் இல்லை என்று தங்கநாணயம் (GOLD COIN) விற்றல் போன்ற வணிகரீதியான (COMMERCIAL) செயல்களை தபால் இலாகா மேற்கொண்டுள்ளது. இதனால் வேலைப்பளு அதிகம் ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்.) மேலும் பல இடங்களில் பல தபால்கள், டெலிவரி செய்யாமலேயே  கட்டுகட்டாக ஊருக்கு வெளியே கிடந்த் செய்திகளையும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது.  

இதுகுறித்து யாரும் புகாரும் செய்வதில்லை. காரணம் எல்லாமே சாதாரண தபாலகள். இதற்கான தீர்வை, தபால் இலாகாதான் செய்ய வேண்டும். “ஒன்றுபடுவோம்! போராடுவோம்என்று முழக்கமிடும் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் இதுகுறித்து சேவை மனப்பான்மையோடு யோசிக்க வேண்டும்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 





           

19 comments:

  1. கொரியர் வந்த பிற்கு தபால் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்த பிறகும் இம்மாதிரி பிரச்சனைகள் இங்கே இருக்கின்றன. பல சமயங்களில் விழா முடிந்த பிறகே பத்திரிகை வருவது விட்டது.

    நல்ல முன்னேற்றம் வருமா பார்க்கலாம்!

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் நமக்கு அனுப்பிய கடிதத்தில் கைபேசி எண் இருந்தால் தொடர்பு கொண்டு "நேரில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் தாமதமாகும்..." என்கிறார்கள்... என்ன செய்வது...? அந்தளவு சுறுசுறுப்பு...!

    ReplyDelete
  3. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said..
    .
    // கொரியர் வந்த பிற்கு தபால் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்த பிறகும் இம்மாதிரி பிரச்சனைகள் இங்கே இருக்கின்றன //

    நூலக அஞ்சல் ( BOOK POST ) வழியாக
    அழைப்பிதழ்களை அனுப்புவது சிக்கனம் என்பதாலும், கிராமப்புறங்களுக்கு சில இடங்களுக்கு கூரியர் சேவை இல்லை என்பதாலும் தபால்துறை சேவையை நாடவேண்டி உள்ளது.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // இப்போதெல்லாம் நமக்கு அனுப்பிய கடிதத்தில் கைபேசி எண் இருந்தால் தொடர்பு கொண்டு "நேரில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையெனில் தாமதமாகும்..." என்கிறார்கள் //

    பரவாயில்லை இது ஒருவிதத்தில் நமக்கு நல்லதுதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. இதுபோலெல்லாம் சேவைகள் இருந்தால், துறையைப்பற்றிய நம்பகத்தன்மையே போய்விடுகிற்து.

    தாங்கள் சொல்வது போல கொரியர், கைபேசி, க்ணினி, ஈ-மெயில் போன்ற தகவல் தொடர்பு சாதணங்கள் பெருகிவிட்ட நிலையில் தபால் மற்றும் த்ந்தி இலாகா வேலைகள் வெகுவாக குறைந்துதான் போயிருக்கும்.

    அப்படியிருந்தும், ஆள் பற்றாக்குறை என்ச்சொல்லி, இவ்வாறெல்லாம் செய்வது கொஞ்ச்மும் நியாயமே இல்லை.

    நல்லதொரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். இனிமேலாவது தபால் இலாகா அக்கறையாகச் செயல்பட்டால் நல்லது.

    ReplyDelete
  6. தபால் துறை நம்பிக்கையில்லாத் துறையாக மாறி பல வருடங்களாகி விட்டன. காலம் செய்யும் மாற்றம்.

    ReplyDelete
  7. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்பின் VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    ReplyDelete
  8. மறுமொழி> பழனி. கந்தசாமி said..

    அய்யாவின் வருகைக்கும் மேலான விமர்சனத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. மிகச் சரி நானும் எனது மகள் திருமண
    பத்திரிக்கை அனுப்பி வைக்கையில் இந்த
    அவதியை அனுபவித்தேன்
    இப்போதெல்லாம் எல்லாம் கூரியர்தான்
    நினைவில் கொள்ள வேண்டிய பதிவு
    [அகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. முடக்கு வாதம் போல தபால்துறை படுத்து விட்டது. போய் கேட்டால் கூட அவர்களிடம் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதாக தெரியல.

    ReplyDelete
  11. மறுமொழி> Ramani S said... ( 1, 2 )
    // மிகச் சரி நானும் எனது மகள் திருமண பத்திரிக்கை அனுப்பி வைக்கையில் இந்த அவதியை அனுபவித்தேன் //
    அவர்கள் அழைப்பிதழ்களை எங்களால் டெலிவரி செய்ய இயலாது என்று அறிவிப்பு செய்து இருந்தால் யாருக்கும் இந்த அவதி நேர்ந்திருக்காது. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...
    ” டாலர் நகரம் “ ஆசிரியர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. கூரியரின் வளர்ச்சிக்குக் காரணமே, அஞ்சல் துறையின் அலட்சிய மனோபாவம்தான்.

    ReplyDelete
  14. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said..
    .
    // கூரியரின் வளர்ச்சிக்குக் காரணமே, அஞ்சல் துறையின் அலட்சிய மனோபாவம்தான். //

    உண்மைதான். இவர்களே அந்தத் துறை தனியார் மயமாக வழி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அழைப்பிதழ்கள் அழகாக இருந்தால் தபால்துறை ஊழியர்கள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டுவிடுகிறார்கள் என்று கூடக் கேள்விப் பட்டேன்!
    இப்படி அலட்சியமாக இருப்பதால் அனைவரும் பணம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று கூரியரில் அனுப்பிவிடுகின்றனர்.

    பலரின் அனுபவத்தை/ஆதங்கத்தை நீங்கள் பதிவாகப் போட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete

  16. 1956-ல் நான் பெங்களூரில், என் தந்தை நீலகிரி வெல்லிங்டனில். இன்று கடிதம் எழுதி தபாலில் சேர்த்தால் மறுநாளே கிடைத்துவிடும். ஒரு முறை என் தந்தை தபால் இரண்டாம் நாள்தான் கிடைத்தது என்று குறைபட்டு எனக்கு எழுதிய கடிதம் இன்றும் என் கைவசம் இருக்கிறது. 1966-ல் கலைமகள் பத்திரிக்கை அறிவித்திருந்த நாவல் போட்டிக்கு நான் regd.ack. due உடன் அனுப்பிய கதையின் ack.due தாள் யார் கையெழுத்தும் இல்லாமலேயே மறுநாளே வந்துவிட்டது. போட்டியில் வெல்லும் வாய்ப்பை நான் இழந்தேன்.!

    ReplyDelete
  17. மறுமொழி> Ranjani Narayanan said...

    // பலரின் அனுபவத்தை/ஆதங்கத்தை நீங்கள் பதிவாகப் போட்டிருக்கிறீர்கள். //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி> G.M Balasubramaniam said...

    தங்கள் அனுபவத்தின்படி தபால்துறையின் சேவை, இன்றைய நாளைவிட அன்று விரைவாக இருந்தது தெரிய வருகிறது. தங்கள் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete