Thursday 16 May 2013

அய்யா! …. நீங்க! நல்லவரா? கெட்டவரா?



ஒரு கால கட்டத்தில், தமிழ் திரைப்பட உலகில் திரும்பத் திரும்ப பார்த்த முகங்களையே கதாநாயகர்களாக ரசிக்க வேண்டி இருந்தது..   எழுபது தொடங்கிய போது கமல்ஹாசன், ரஜினிகாந்த்த், விஜயகுமார் போன்ற துடிப்புள்ள இளம் கதாநாயகர்கள் வந்தனர். திரைப்பட உலகமே தலைகீழாகிப் போனது. இளம் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு தொடங்கியது


கமல்ஹாசன்:

இதில் நடிகர் கமல் பிறவி கலைஞர். இவர் நடித்த, களத்தூர் கண்ணம்மா
படத்தை சின்ன வயதில் பார்த்தது. “அம்மாவும் நீயே! அப்பாவும் நீயேஎன்ற பாடலில் அவர் வந்த காட்சி இன்றும் ஒலிக்கிறது. எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களோடு, பாலச்சந்தர் டைரக்‌ஷனில் உருவான இவரது படங்களை விரும்பி பார்ப்போம். எழுபது தொடங்கி இன்றுவரை அவர் தனது படங்கள் ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். அதில் நாயகன் படத்தில் ( 1987 இல் வந்த படம் ). கமல், பம்பாயில் தாதாவாக வாழ்ந்த ஒருவராகவே மாறி,  நடித்து இருக்கிறார். படத்தை தத்ரூபமாக இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இசை இளையராஜா.


நாயகனில் எனக்குப் பிடித்த காட்சி:


நாயகன் திரைப்படம். கிளைமாக்ஸ் காட்சி. தாதாவான, வேலு நாயக்கரை
( கமல்ஹாசன்) கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவருக்கு ஆதரவாக கோர்ட்டு வாசலில் ஆதரவாளர்கள் கோஷம் செய்கிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு. அவர்களைக் கடந்து கோர்ட் நுழைவு வாயில் வருகின்றனர். அங்கே வேலுநாயக்கரின் மகள் ( கார்த்திகா ) தனது மகனுடன் நின்று கொண்டு இருக்கிறார். நாயக்கர் அப்போதுதான் தனது பேரனை முதன்முதலாக பார்க்கிறார். அவன் அம்மா அனுப்ப பேரன் தாத்தாவைப் பார்க்கிறான். தாத்தாவிடம் கேட்கும் கேள்விகள் ... ...

“உன்னை ஏன் ஜெயில்ல வச்சிருக்காங்க?
“நீங்க ஏதாவது தப்பு பண்ணீனிங்களா?
“நீங்க நல்லவரா? கெட்டவரா?
“சொல்லுங்க!
“நீங்க நல்லவரா? கெட்டவரா?


அப்போது வேலுநாயக்கரின் பதில் “ தெரியலியேப்பா... .. தெரியலே! அடுத்தவர்களுக்கு ஏதேனும் கொடுத்தே பழக்கப்பட்ட வேலுநாயக்கர், தனது பேரனுக்கு கொடுப்பதற்காக மேல் சட்டைப் பாக்கெட்டில் துழாவுகிறார். ஒன்றுமே இல்லை. கை விரலில் அணியும் மோதிரமும் இல்லை. யோசித்துவிட்டு தனது கழுத்தில் இருந்த ருத்திராட்சக் கொட்டை மாலையை பேரனுக்கு தருகிறார்.

அடுத்து நாயக்கர் உள்ளே கொண்டு செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு நெருக்கமான செல்வம் என்ற தொண்டர் ஒருவர் (ஜனகராஜ்) வேகமாக வருகிறார் “நாயக்கரே! நாங்க இருக்கோம் நாயக்கரே! நாங்க இருக்கோம்! உனக்கு ஒன்னும் ஆகாது.. போயிட்டு...  வா என்று கத்துகிறார். அவரை போலீசார் அப்புறப் படுத்துகிறார்கள்.

கோர்ட்டில்  சாட்சியங்கள் சரியில்லை என்று, வேலு நாயக்கரை  விடுதலை செய்கிறார்கள். நாயக்கர் கோர்ட்டுக்கு வெளியே வருகிறார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கோஷமிடுகிறார்கள். அப்போது நாயக்கரால் கொல்லப்பட்ட், போலீஸ் அதிகாரியின் மகன் (மனநிலை பாதிக்கப்பட்டவன்), தனது தந்தை போட்டு இருந்த போலீஸ் யூனிபார்மில் அங்கு வருகிறான். துப்பாக்கியால் வேலு நாயக்கரை சுடுகிறான். நாயக்கர் மரணம் செய்தியாகிறது. திரைப்படம் முடிவடைகிறது..


படம் முடிந்து வெளியே வரும்போது எல்லோருடைய மனதிலும் கேட்கப்படும் கேள்வி “நீங்க நல்லவரா? கெட்டவரா?. உதடுகள் முணுமுணுத்த பாடல் ... “ தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே! ‘.


கதையின் முடிவு:

வேலுநாயக்கர் போன்றவர்கள் இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில், எங்காவது ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். திரைப்படத்தில் அவர்களை என்னதான் வள்ளல்களாக, நல்லவர்களாக,பெரிய மனுஷன்களாக சித்தரித்தாலும் கதையின் முடிவை மாற்றி எழுத யாருக்கும் மனது ஏனோ வருவதில்லை.. அவர்கள் எடுத்த வன்முறை என்ற ஆயுதத்தாலேயே அவர்களது வாழ்வும் முடிவடைகிறது. “கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான் . என்பது முதுமொழி.  அவரைப் போன்றவர்களிடம், நாம் அய்யா! நீங்க! நல்லவரா? கெட்டவரா? என்று நாம் கேட்க முடியாது. அப்படி கேட்டால் அவரைச் சுற்றி உள்ள அடிப்பொடிகளின் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல் முடியாது. அவரை  கேட்பதைவிட நமக்கு நாமே நீங்க! நல்லவரா? கெட்டவரா? கேட்டுக் கொள்வதும் ஒருவிதத்தில் நமக்கும் நல்லதுதான்.

தென்பாண்டி சீமையிலே!
தேரோடும் வீதியிலே!
மான் போல வந்தவனை
யார் அடித்தாரோ!
யார் அடித்தாரோ!

வளரும் பிறையே தேயாதே!
இனியும் அலுத்து தேம்பாதே!
அழுதா மனசு தாங்காதே!
அழுதா மனசு தாங்காதே!



தென்பாண்டி சீமையிலே!
தேரோடும் வீதியிலே!
மான் போல வந்தவனை
யார் அடித்தாரோ!
யார் அடித்தாரோ!


           - இசையமைத்து பாடியவர்: இளையராஜா





( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

36 comments:

  1. அவரை கேட்பதைவிட நமக்கு நாமே ” நீங்க! நல்லவரா? கெட்டவரா?” கேட்டுக் கொள்வதும் ஒருவிதத்தில் நமக்கும் நல்லதுதான்.

    சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. // “கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான்” . என்பது முதுமொழி. அவரைப் போன்றவர்களிடம், நாம் ” அய்யா! நீங்க! நல்லவரா? கெட்டவரா?” என்று நாம் கேட்க முடியாது. அப்படி கேட்டால் அவரைச் சுற்றி உள்ள அடிப்பொடிகளின் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல் முடியாது. அவரை கேட்பதைவிட நமக்கு நாமே ” நீங்க! நல்லவரா? கெட்டவரா?” கேட்டுக் கொள்வதும் ஒருவிதத்தில் நமக்கும் நல்லதுதான்.//

    பாடல்கள், காட்சிகள், கதை, முடிவு, தெரிந்து கொள்ள வேண்டிய நீதி என் எல்லாவற்றையும் அருமையாக அலசியுள்ளீர்கள் இந்தப்பதிவினில். பாராட்டுக்கள், ஐயா.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. மிகவும் பிடித்த படம்... நடித்ததாக சொல்லமுடியாதபடி அந்தப் பாத்திரமாகவே மாறியிருப்பார்...

    நம்மை நாமே ஆராய்வது என்றும் நல்லது தான்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  4. எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது. . பதில்- பாடையிலே போகும் போது விழிநீரா, உமிழ்நீரா.?பொறுத்திருந்தாலும் என்னால் பார்க்க முடியாதே.!

    ReplyDelete
  5. ஒவ்வொருவரும் தன்னையே கேட்கவேண்டிய கேள்விதான்.

    ReplyDelete
  6. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
    // சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள். //
    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    // பாடல்கள், காட்சிகள், கதை, முடிவு, தெரிந்து கொள்ள வேண்டிய நீதி என் எல்லாவற்றையும் அருமையாக அலசியுள்ளீர்கள் இந்தப்பதிவினில். பாராட்டுக்கள், ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பாராட்டிற்கு நன்றி! இனிமேல் அடிக்கடி பதிவுலகம் பக்கம் என்னால் வரமுடியும் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  8. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // மிகவும் பிடித்த படம்... நடித்ததாக சொல்லமுடியாதபடி அந்தப் பாத்திரமாகவே மாறியிருப்பார்.. //

    எனக்கும் கமலஹாசன் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம்தான். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி> G.M Balasubramaniam said...

    // எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது. . பதில்- பாடையிலே போகும் போது விழிநீரா, உமிழ்நீரா.?பொறுத்திருந்தாலும் என்னால் பார்க்க முடியாதே.! //

    உங்களுக்கு தோன்றியது போன்றே ஒரு டைரக்டருக்கும் இந்த சிந்தனை வந்து இருக்கிறது. இந்த கருத்தை மையமாகக் கொண்டு நடிகர் வினு சக்கரவர்த்தி ஒரு படத்தில் நகைசுவைக் காட்சி ஒன்றில் நடித்து இருக்கிறார்..

    GMB அவர்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி> பழனி. கந்தசாமி said...

    //ஒவ்வொருவரும் தன்னையே கேட்கவேண்டிய கேள்விதான்.//

    தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. தலைப்பும் இரண்டு விஷயங்களையும்
    இணைத்து யோசிக்கவைத்ததும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. முடித்த விதம் அருமை. நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  13. மறுமொழி> Ramani S said... ( 1, 2 )

    // தலைப்பும் இரண்டு விஷயங்களையும்
    இணைத்து யோசிக்கவைத்ததும் அருமை
    தொடர வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணியின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  14. //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பாராட்டிற்கு நன்றி! //

    வணக்கம் ஐயா, சந்தோஷம் ஐயா.

    //இனிமேல் அடிக்கடி பதிவுலகம் பக்கம் என்னால் வரமுடியும் என்று நினைக்கிறேன்!//

    மிக்க மகிழ்ச்சி ஐயா. புதுப்பதிவுகள் வெளியிட்டால் தயவுசெய்து மெயில் மூலம் இணைப்புக் கொடுத்துத் தெரிவியுங்கள், ஐயா.

    ReplyDelete
  15. வெயிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்த்த ஞாபகம் இப்போது வந்து போகின்றது.

    ReplyDelete
  16. நாயகன் திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நேரில் பார்ப்பது போன்று இருந்தது தங்கள் பதிவை படித்தபோது. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. உண்மைக் கதை தான் சினிமாவாக படம் பிடிக்கிறார்களோ ? மிகவும் பிடித்த படம் நல்ல பாடல் வரிகளும்..உண்மை தான் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி தான்.

    ReplyDelete
  18. மறுமொழி> மாதேவி said...
    // முடித்த விதம் அருமை. //
    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    VGK அவர்களின் அன்பான இரண்டாம் வருகைக்கு நன்றி!

    // மிக்க மகிழ்ச்சி ஐயா. புதுப்பதிவுகள் வெளியிட்டால் தயவுசெய்து மெயில் மூலம் இணைப்புக் கொடுத்துத் தெரிவியுங்கள், ஐயா. //

    நிச்சயம் தெரிவிக்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

    தங்களின் அன்பான மலரும் நினைவுகளுக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி> . வே.நடனசபாபதி said...
    உங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி> . Sasi Kala said...

    //உண்மைக் கதை தான் சினிமாவாக படம் பிடிக்கிறார்களோ ? //

    நாட்டு நடப்புகளைப் பார்க்கையில், அப்படித்தான் தோன்றுகிறது. சகோதரியின் வருகைக்கு நன்றி! ( சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் அனுப்பிய கவிதை நூலை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் )

    ReplyDelete
  23. மறுமொழி> . கவியாழி கண்ணதாசன் said...

    // இதென்ன கேள்வி? //

    சாதாரண கேள்விதான்! கவிஞருக்கு தெரியாதது இல்லை!

    ReplyDelete
  24. ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி அய்யா.

    ReplyDelete
  25. கமல் பிறவி நடிகர்! ஐயமில்லை!

    ReplyDelete
  26. நல்ல கேள்வி .... நடிகர் என்றால் அது கமல் தான்

    ReplyDelete
  27. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

    // ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி அய்யா. //

    ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...

    // கமல் பிறவி நடிகர்! ஐயமில்லை! //

    நடிகர் கமல் பற்றிய புலவரின் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி> indrayavanam.blogspot.com said..
    .
    தங்களின் அன்பான வருகைக்கு நன்றி1

    ReplyDelete
  30. எல்லோருள்ளும் ஒரு கெட்டவனும் இருக்கிறான்... அவனை வளரவிடாமல் தடுப்பது அவரவர் கையில்...

    ReplyDelete
  31. மறுமொழி> ezhil said...

    // எல்லோருள்ளும் ஒரு கெட்டவனும் இருக்கிறான் //

    எனக்குள் ஒருவன் யார்? – சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  32. ஒவ்வொருவரும் அவரவர்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான். மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா! எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பது மிகக் கடினமே!
    //இனிமேல் அடிக்கடி பதிவுலகம் பக்கம் என்னால் வரமுடியும் என்று நினைக்கிறேன்!//
    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தங்கள் அனுபவங்களை பதிவுசெய்யுங்கள் ஐயா!

    ReplyDelete
  33. மறுமொழி> T.N.MURALIDHARAN said...

    சகோதரர் மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், அன்பான நலன் விசாரிப்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி> Aasai said...

    கடலூர் சகோதரரின் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete