Friday, 6 April 2012

உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ!

மெயின் ரோட்டிலிருந்து நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வர ஒரு  சந்து முனையைக் கடந்து வர வேண்டும். எப்போதும் ஆட்கள்  நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒருநாள் பகல்வேளை, அந்த வழியே வரும்போது ஒரு நடுத்தர வயது ஆசாமி சுவர் மீது சிறுநீர் கழித்துக் கொண்டு இருநதார். அதுவும் நின்றபடியே. அந்த பகுதியில் மறைவிடமே கிடையாது. அந்த பக்கம் வண்டியில் வந்த நான் மனசு கேட்காமல் பெண்கள், குழந்தைகள என்று எல்லோரும் வரும் வழியில் இப்படிச் செய்யலாமா? “ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆள் கோபமாகச் சொன்ன பதில் “ யோவ்! உன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு போய்யா என்பதுதான்.
 
ஒரு சமயம் இரு சக்கர வண்டியில் நால் வழிச் சாலையில் போய்க் கொண்டு இருந்தபோது, ஒருவர்  இருசக்கர வண்டியில் எதிர் திசையில்  வந்தார். அவரிடம் ஒரு வழிப் பாதையில் இப்படி வரலாமா? என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசாமி சொன்ன பதில் “ உன்னுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போ “ என்பதுதான்.

அதேபோல ஒரு சம்பவம். அன்று ரேசனில் சர்க்கரை போட்டார்கள். எங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை மட்டும்தான். எனவே வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆள் வரிசையின் குறுக்கே உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து “ வரிசையில் வரக் கூடாதா? “ என்று கேட்டேன். அதற்கு அவன் ரொம்பவும் கோபமாகச் சொன்ன பதில் “ உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க சார் என்பதுதான்.

சிக்னலில் சிவப்பு விளக்கு. எனவே வண்டியில் வந்த நான் நின்று விட்டேன். எனக்குப் பின்னால் மனைவியோடு இரு சக்கர வண்டியில் வந்த ஒருவர் என்னை இடித்து விட்டு போக முயன்றார். “சார் சிக்னல் வருவதற்குள் இப்படி முந்தலாமா? என்று கோபமாகவே கேட்டேன். அப்போது அவர் சொன்ன அதே பதில் “ சார் உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க என்பதுதான்.

ஒரு முறை நடந்து வந்து கொண்டிருந்தேன். மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி. கணவன் பைக்கை ஓட்ட, வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்த அவருடைய மனைவி கணவனின் காதில் செல் போனை வைத்தபடி இருந்தார். செல் போனில் பேசியபடியே அவர் பைக் ஓட்டி வந்தார். நான் அவர்களை நிறுத்தி “ ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி பேசி விட்டுத்தான் போங்களேன். “ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ எல்லாம் எங்களுக்குத் தெரியும், உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் சார்! “ என்பதுதான்.

ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய வேலை என்ன என்றுதான் ஆரம்பத்தில் எனக்கும் தெரியவில்லை. இரண்டு மூன்று இடங்களில் இதுபோல சொல்லப் போய் எனது வேலைகள் கெட்டுப் போனதுதான் மிச்சம். மேலும் வீண் வாக்கு வாதங்கள், டென்ஷன் என்று ஒரே படபடப்பு இவைகள்தான் முடிவு.. பார்த்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்களும் நம்மை ஆதரித்துப் பேசுவதில்லை. இதனால்தான் ஒவ்வொருவரும் “ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ “ என்று சொல்கிறார்கள் போல இருக்கிறது.

19 comments:

  1. சமூக சிந்தனையுடன் இருக்கும் அனைவருக்குள்ளும்
    இருக்கும் ஆதங்கத்தை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாம் இந்த சமூகத்துக்குப் பாடம் சொல்லித்தரமுடியாது.
    இந்த சமூகம் நமக்குச் சொல்லித்தரும் பாடம்..

    உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ..

    நல்லதொரு சிந்தனை நண்பா..
    சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. அருமை நண்பரே த.ம 2
    நன்றி

    ReplyDelete
  4. தி.த.இளன்கோ,

    நல்ல சொன்னாங்க,நம்ம வேலை பதிவு போடுறது மட்டும்னு இருக்கணும் :-))

    நாம சொன்னா எவன் கேட்பான்,ஒருத்தன் ஒன்னுக்கு அடிச்ச நாம ரெண்டுக்கு போய் நாமளும் சமூகத்தில ஐக்கியம் ஆகிடனும் :-))

    நீங்க வேற வீட்டு வாசலில் நேரா பைக் நிறுத்துறான் தள்ளி நிறுத்துங்க சொன்னதுக்கு ரோட்டுல தானே நிறுத்துறேன் உனக்கென்னனு கேட்கிறான். கொஞ்சம் ஆள் முரட்டு தனமா மூஞ்சுல வெட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு சொன்னா தான் கேட்பானுங்க :-))

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள். இந்த வார்த்தையை நானும் சந்தித்திருக்கிறேன். ஏதாவது தவறைச் சுட்டிக் காட்டும் போது சொல்லப்படும் வார்த்தையான. ’உனக்கென்ன தகுதி இருக்கு?’ என்பதையும் இந்த வார்த்தையோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது,

    ReplyDelete
  6. உங்கள் பதிவைப்படித்ததும் மனதுக்கு வருத்தமாகவே உள்ளது. நல்லதைச்சொன்னால் யாரும் ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் ஒதிங்கித்தான் போக வேண்டியுள்ளது. என்ன செய்வது?

    நன்கு அனுபவித்து, அனுபவித்த விஷயங்களில் சிலவற்றை, மிகவும் அழகாகக் கோர்வையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. Reply to ….. // Ramani said.//

    கவிஞர் ரமணி அவர்களே ” நல்லதுக்கு காலம் இல்லை “ என்றுதான் ஒதுங்க வேண்டியுள்ளது. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. Reply to …// guna thamizh said...//

    முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! // நாம் இந்த சமூகத்துக்குப் பாடம் சொல்லித்தரமுடியாது.
    இந்த சமூகம் நமக்குச் சொல்லித்தரும் பாடம்..// என்ற தங்கள் கருத்து யாரையும் யோசிக்க வைக்கும்.

    ReplyDelete
  9. Reply to …. // சார்வாகன் said...//
    வணக்கம்! வவ்வால் பதிவில் வரும் உங்கள் விமர்சனங்களை படிப்பேன். உங்கள் பதிவுகளை திரட்டிகளில் படிப்பதோடு சரி. பின்னூட்டம் இட்டதில்லை தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
    நன்றி! .

    ReplyDelete
  10. Reply to….. // வவ்வால் said...//

    வணக்கம்! // நாம சொன்னா எவன் கேட்பான்,ஒருத்தன் ஒன்னுக்கு அடிச்ச நாம ரெண்டுக்கு போய் நாமளும் சமூகத்தில ஐக்கியம் ஆகிடனும் :-)) // - என்று நீங்கள் சொல்வது போன்ற உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒத்து வராது. எல்லாவற்றிலும் உங்களுக்கு கிண்டல்தான். கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. Reply to ….. // கணேஷ் said... //

    வணக்கம்! மின்னல் வரிகள் கணேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி! நீங்கள் குறிப்பிடுவது போன்று // ’உனக்கென்ன தகுதி இருக்கு?’ // என்பதனையும் சிலர் அழுத்தி உச்சரிக்கிறார்கள்.

    ReplyDelete
  12. Reply to …… // வை.கோபாலகிருஷ்ணன் said... //

    VGK அவர்களுக்கு வணக்கம்!
    // நல்லதைச்சொன்னால் யாரும் ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் ஒதுங்கித்தான் போக வேண்டியுள்ளது. என்ன செய்வது? //

    என்று, நீங்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! சமூகத்தில் ” நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? “ என்று ஒதுங்குவதுதான் நல்லது போல் தெரிகிறது.

    ReplyDelete
  13. யோசிக்க வைக்கிற வரிகள் ...

    ReplyDelete
  14. ஆதங்கமான பதிவு . ஆத்திரமும் கோபமும் அவரவர் கண்களை மறைக்கும்போதே ஆணவம் தலை தூக்குகிறது அதற்கு இடையே நாம் மாட்டிக்கொண்டால் இப்படிதான் வசவு என்ன செய்வது ...

    ReplyDelete
  15. Reply to…… // கே. பி. ஜனா... said...//
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. Reply to … // சசிகலா said...//
    சகோதரி கவிஞர் சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. ஐயா, வணக்கம். “ஜான்பேட்டா” பதிவுக்கு தாங்கள் கொடுத்திருந்த பின்னூட்டங்களுக்கு, பதில் அளித்துள்ளேன். இணைப்பு:
    http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=7767626229016654654&page=1&token=1333987297687

    முடிந்தால் தங்கள் மின்னஞ்சல் விலாசம் e-mail ID
    எனக்கு அனுப்பிவைக்கவும்.

    என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com

    அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  18. நல்ல சிந்தனைப் பகிர்வு.

    ReplyDelete