டிசம்பர், 17. இந்திய ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் பென்ஷன் என்பது ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட நல்ல அம்சங்களில் ஒன்று. 1982 - ஆம் ஆண்டு டிசம்பர் 17 - ஆம் நாள், இந்திய உச்சநீதி மன்றம் ஓய்வூதியம் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு தீர்ப்பினை D S நகாரா என்பவரது வழக்கில் ( NAKARA CASE ) வழங்கியது. அதில் “ Pension is neither a gift nor a reward or bounty. Pension is the right of a retired Government Servant who had served nation for a long time" என்று குறிப்பிட்டது. ஒரு காலத்தில் ஓய்வூதியர் என்றால் அவர்கள் வயதானவர்கள் என்ற நிலை இருந்தது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விருப்ப ஓய்வு முறை வந்த பிறகு நடுத்தர வயதுள்ளவர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களாக உள்ளனர். அவர்களும் சில மாதங்களில் வயதானவர் களாக வந்து விடுவார்கள். சில நிறுவனங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. கருணைத் தொகை என்ற பெயரில் கடமையே என்று தருகிறார்கள். இப்போது விற்கும் விலைவாசியில் அந்த கருணைத் தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது தான்.
முன்பெல்லாம் ஓய்வூதியம் பற்றிய அதிக தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அலுவலக மூத்த ஊழியர்களையோ அல்லது தம்மைப் போல ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த ஓய்வூதியர்களையோ தேடிப் போய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் விவரங்களும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கணிணியுகத்தில் இண்டர்நெட் மூலம் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. மத்திய மாநில அரசுகள் தங்கள் இணையத் தளங்கள் ( www.pensionersportal.gov.in ) மூலம் ஓய்வூதியர்களுக் கான, ஓய்வுக்கால பயன்கள், ஓய்வூதிய விதி முறைகள், அறிக்கைகள் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கின்றன. மாநில அரசு இணைய தளங்கள் அந்தந்த மொழியிலேயே வெளியிடுகின்றன. நமது தமிழ் நாடு அரசும் (www.tn.gov.in ) ஓய்வூதியம் பற்றிய செய்திகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி களில் வெளியிட்டு வருகிறது.
இப்போது அனைத்து ஓய்வூதியங்களும் வங்கிகளின் மூலமே வழங்கப் படுகின்றன. எனவே ஓய்வூதியகாரர்களுக்கு வங்கிகளில் அவர்களது ஓய்வூதியத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பலர் சரியான திட்டமிடுதல் இல்லாத படியினால் காலம் முழுக்க கடனாளியாகவே இருந்து இறந்து போகின்றனர். இன்னும் சிலர் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, கடன் வாங்கிய ஆசாமி கட்டாதபோது இவர்கள் நோட்டீஸ், வழக்கு , வக்கீல் என்று நிம்மதியை இழக்கிறார்கள். எனவே ஓய்வூதியர்கள் கவனமாக இருத்தல் அவசியம். வங்கிகளில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் என்று சில சமயம் அழைப்பார்கள். சென்ற கூட்டத்தில் சொன்ன அதே குறைகளை சில ஓய்வூதியர்கள் இந்த கூட்டத்திலும் சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நோட் புத்தகத்தில் அன்றைய தினம் மட்டும் ஓய்வூதியர்கள் சொல்வதை குறித்துக் கொள்வதோடு சரி. உண்மையாகவே ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டியன செய்பவர்களும் உண்டு. இன்னும் சில வங்கிகளில் எதற்கு வம்பு என்று இதுபோன்று ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமே கூட்டுவதில்லை. வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு கிடைக்கும் கடன் வசதிகள் தபால் அலுவலகம் மூலம் பெறுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
பல ஓய்வூதியர்கள் தங்களது சேமிப்புகளை வங்கிகளிலேயே வைத்துள்ளனர். அதில் பெரிதாக ஏதும் வட்டி வந்து விடப் போவதில்லை. அதிலும் TDS என்ற பெயரில் வருமான வரியை பிடித்து விடுகின்றனர். இதனால் சில ஓய்வூதியர்கள் அதிக வட்டிக்காக மோசடி நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போய் தவிக்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் ஓய்வூதியர்களின் சேமிப்பிற்கு சலுகை காட்டினால் நல்லது. கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வந்த பிறகு ஓய்வூதியர்கள் எந்த சந்தேகம் கேட்டாலும் சென்னை போன்ற இடங்களில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தினை கை காட்டுகிறார்கள்.அங்கிருந்து விவரம் பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அந்தந்த கிளைகளிலேயே இவற்றை நிவர்த்தி செய்தால் நல்லது.
ஓய்வூதியர் தினத்தில் அதற்கான
ReplyDeleteதகவலகள் அடங்கிய பதிவினை
ப்ல புதிய தகவல்களோடு
வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்
வணக்கம்!
ReplyDelete//Ramani said... ஓய்வூதியர் தினத்தில் அதற்கான
தகவலகள் அடங்கிய பதிவின பல புதிய தகவல்
களோடு வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும், ஓட்டு போட்டமைக்கும் நன்றி.
எனக்குத் தெரியாதே! பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்!
ReplyDelete//சென்னை பித்தன் said...//
எனக்கும் தெரியாது. நான் பென்ஷன் வாங்கும் வங்கியிலிருந்து முதல் நாள், ஓய்வூதியர் தின கூட்டத்திற்கு அழைத்தார்கள்.அப்போதுதான் தெரியும். அய்யா சென்னை பித்தன் அவர்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.