”சாலையிலே புளியமரம்... ஜமீன்தாரு வச்ச மரம்” என்று ஒரு பழைய பாடல் இலங்கை வானொலியில் முன்பெல்லாம் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.இப்போது அந்த பாடலை கேட்கவே முடிவதில்லை என்பதோடு சாலையில் இருந்த புளிய மரங்களையெல்லாம் நான்கு வழிச்சாலை என்ற பெயரில்
பிடுங்கி எறிந்து விட்டார்கள்.வாஜ்பாயின் கனவுத் திட்டமான “தங்க நாற்கர சாலை திட்டம்” நல்ல திட்டம். நாடு பொருளாதார மேம்பாடு அடைய சாலைகளை இணைக்கும் திட்டமாகும்.நல்ல நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இந்த சாலைகள் வந்த பிறகு மக்கள் கொத்து கொத்தாக விபத்தில் இறக்கின்றனர்.இதைப் பற்றி ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
முன்பெல்லாம் சாலைகளில் வளைவுகள் அதிகம். பயந்து பயந்தும் பார்த்து பார்த்தும் வண்டிகளை ஓட்டினார்கள்.இப்போது தொடக்கம் முதல் கடைசி வரை வேகம்...வேகம்..வேகம்தான். “U”- திருப்பம் வரை சென்று திரும்ப நிறைய பேருக்கு பொறுமை கிடையாது.அப்படியே திரும்பி ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் வருகின்றனர்.அந்த பாதையில் ஒழுங்காக வருபவர்கள் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது.செல் போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்து குறித்து நிறையபேர் பக்கம் பக்கமாக எழுதிவிட்டனர். செல்போன் அடிமைகள் யாரும் கேட்பதாக இல்லை.
நகர்ப்புறச் சாலைகளில் நின்று கொண்டு சாலை விதிகளை மீறுவோர் மீது கவனம் செலுத்தும் போலீஸார் ஏனோ நான்கு வழிச் சாலைகளில் கண்டுகொள்வது கிடையாது.விபத்துக்களை குறைக்க கடும் நடவடிக்கை தேவை என்பதோடு, மக்கள் மத்தியிலும் நான்குவழிச் சாலைகளைப் பற்றிய விழிப்புணர்வும் தேவை.
No comments:
Post a Comment