ஏற்கனவே கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளாத குறையாக, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பென்ஷனர் ஐடி, PAN கார்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் ஐடி, ஏ.டி.எம் கார்டு, லைப்ரரி ஐடி என்று நிறையவே அடையாள அட்டைகள். பெரும்பாலும் எல்லா அட்டைகளும் பர்ஸில் இருக்கும். பத்தாதற்கு வீட்டில் ரேஷன் கார்டு, ஆர்.சி புத்தகம் என்று டாகுமெண்ட் ஐடிகள்.
காங்கிரசும் பிஜேபியும்
மேலே சொன்ன அடையாளங்கள் எல்லாம் போதாது என்று, அப்போது ஆட்சியில்
இருந்த, ஐக்கிய முன்னணி (காங்கிரஸ்) அரசு, எல்லோருக்கும் ஆதார் எண் என்ற திட்டத்தை
கொண்டு வந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன. இதில் கட்டாயம்
ஏதும் இல்லை என்பதால், அலைச்சலுக்கு பயந்து கொண்டு நான் ஆதார் பக்கம் போகவில்லை.
மத்தியில் பி.ஜே.பி ஆளும் கட்சியாக வந்தவுடன், காங்கிரஸ் கொண்டு
வந்த ஆதார் எண் திட்டத்தை, அப்போது கடுமையாக எதிர்த்த இந்த ஆதாரையே இப்போது எதற்கெடுத்தாலும்
கட்டாயப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
// ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள்
யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள
அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக
ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது //
என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தபோதும் அதனை, இந்த மோடி
அரசாங்கம் ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை.
இன்றும் ( 12.05.2017 வெள்ளி ) உச்ச
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல
என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி
உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு
விளக்க வேண்டும்" என்று கேட்டுள்ளனர்.
ஆதாருக்கு அலைச்சல்:
நாங்கள் குடியிருப்பது புறநகர் பகுதி என்பதால், ஆதார் எண்ணுக்காக
டவுனுக்கு அடிக்கடி அலைய வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் இப்போது இருப்பது போல் ஆதார்
எண் பெறுவது சுலபமாக இருக்கவில்லை. சட்டசபை தொகுதி வாரியாக, நகரின் மத்தியில் உள்ள,
ஒரு கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு வந்து பதியச் சொன்னார்கள். நானும் அங்கு
சென்றேன். ஒரு பெரிய விண்ணப்ப பாரத்தைக் கொடுத்து அடுத்தநாள் குடும்ப உறுப்பினர்களையும்
அழைத்து வரச் சொன்னார்கள். எனது மனைவி அலுவலகத்திற்கும் மகன் கல்லூரிக்கும், சென்று
விட்ட படியினால் நான் மட்டும் சென்றேன். சரியான கும்பல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
சரியான திட்டமிடல் இல்லை. வரிசையில் ரொம்பநேரம் நின்று விட்டு திரும்பி விட்டேன்.
திடீரென்று ஒருநாள் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போட்ட பள்ளியில்
ஆதார் எண் பதிவதாக பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். நானும் பரவாயில்லையே வீட்டிற்கு
அருகில் என்று ஆவலாய்ச் சென்று வரிசையில் நின்றேன். ஒரு பத்து பேர்தான்., எனக்கு முன்னே
பர்தா அணிந்த பெண்கள் நான்கு பேர். நான் போன நேரம், அவர்களில் ஒருவர் போன் செய்ய ஒரு
வேனில் வந்த, அவரது உறவினர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அவருக்குப் பின் நின்று கொண்டார்கள்.,
இது கதைக்கு ஆகாது என்று திரும்பி விட்டேன்.
கிடைத்தது ஆதார்:
ஒரு கட்டத்தில், இனிமேல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் பதியப்படும் என்றார்கள். நானும் கொஞ்சநாள் ஆகட்டும் என்று இருந்தேன். எனது மனைவி அந்த அலுவலகத்திற்கு பதியச் சென்றபோது, கும்பலே இல்லை என்று சொன்னவுடன், அப்புறம் நானும் பொறுமையாக
சென்று ஆதார் எண்ணை பதிந்து வந்தேன். என்னைத் தொடர்ந்து எனது மகனும் பதிந்தார். அப்புறம்
தபாலில் ஆதார் அட்டைகள் வீடு தேடி வந்தன.
வங்கிக் கணக்குகள்:
நான் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் என்பதால், எனது எல்லா
கணக்குகளும் அந்த வங்கியில்தான். எனவே முதல் வேலையாக எனது பெயரில் உள்ள எல்லா கணக்குகளுக்கும்
( கூட்டுக் கணக்குகள் உட்பட) ஒரே ஐடி எண் (CIF) இருக்கும்படி, கடிதம் கொடுத்து மாற்றிக்
கொண்டேன். பின்னர் அந்த ஐடியோடு எனது ஆதார் எண்ணை இணைத்தேன்.
ரேஷன் கார்டு:
எங்களது குடும்ப கார்டு வெள்ளை நிறம்; சர்க்கரை மட்டும்தான். முன்பு
இந்த கார்டுதான் எங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, வாகனம்
வாங்க, பாஸ்போர்ட் எடுக்க என்று எல்லாவற்றிற்கும் அடையாளமாக பயன்பட்டது. இந்த ரேசன்
கார்டிலும், குடும்ப உறுப்பினர்களது அனைவரது ஆதார் எண்களையும் இணைக்க வேண்டும் என்றார்கள்..
ஒரு வழியாக இதிலும் இணைத்தாகி விட்டது. இப்போது இந்த ரேசன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட்
கார்டு தரப்படும் என்று இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகக் கூடி அலைச்சலும்,
கியூ வரிசையில் நிற்பதும் என்று நிறையவே நேரம் வீணாக போகின்றது.

