எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படம் பார்த்து இருக்கிறீர்களா?
மோகன் என்ற பணக்கார வாலிபன் கதை. படத்தின் முற்பகுதியில் நம்ப ராதா அவர்கள் போடும்
பணக்கார டாம்பீக ஆட்டம் அவ்வளவு இவ்வளவு இல்லை. மேனாட்டு நாகரிகத்தோடு, மேனாட்டிலிருந்து
திரும்பியவுடன் தொழிலாளர்கள் மத்தியில் உரை ஆற்றுவார். “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்”
என்று தொடங்கி அடிக்கும் லூட்டியை இன்று நினைத்தாலும் வயிறு வலிக்கும். பேசத் தொடங்கிய
சற்று நேரத்தில், சூடான காபி சாப்பிடுவார். டப்பாவுக்குள் இருக்கும் மேனாட்டு சிகரெட்
வேறு. அப்புறம் வீட்டில் அடிக்கும் கூத்தும், கல்யாணம் ஆனதும், அப்படியே. தனது மாமனாரை
’என்னா மேன்’ என்று விரட்டு விரட்டு என்று விரட்டுவார். பெயருக்கு ஒரு கல்யாணம்; காலம்
கழிப்பது காந்தா என்ற நாட்டியப் பெண்ணோடு. அப்புறம் வாழ்க்கைச் சக்கரம் தலைகீழாக மாறுகிறது.
இடைவேளைக்கு அப்புறம், மோகன் என்ற அந்த மனிதன் சீரழிந்த கதை ‘குற்றம் புரிந்தவன் வாழக்கையில்
நிம்மதி இல்லை” என்ற தத்துவத்தோடு படம் முடிவு.
இதுதான் உலகம்:
சினிமாவில் மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும், அதிகாரம் அல்லது
பணம் கையில் இருக்கிறது என்பதற்காக, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள், அதிகாரத்தை வைத்துக்
கொண்டு மிரட்டியவர்களெல்லாம் கடைசியில் ஒரு கட்டத்தில் உடம்பில் தெம்பு இல்லாத போது
அல்லது அதிகாரம் போன நிலையில் ஒடுங்கியே போகிறார்கள். முன்பு அவர்களுக்கு பயந்து கிடந்தவர்கள்
எல்லாம், இப்போது அவரை அலட்சியப் படுத்தி நடக்கிறார்கள். நான், நான் என்று அதிகார மிடுக்கோடு
அலைந்தபோது அவருக்காக உருட்டுக் கட்டைகளையும், அரிவாள்களையும் தூக்கியவர்கள் யாரும்
இப்போது அருகில் இல்லை. கைத்தாங்கலாக அழைத்துச் செல்லக் கூப்பிட்டால் கூட ஓடி ஒளிந்து
கொள்கிறார்கள். இவர் சொத்தையெல்லாம், தங்கள் பெயரில் வைத்து இருக்கும் பினாமிகள் எல்லாம்,
ஆசாமி எப்போது சாவான், எப்படி அமுக்கலாம் என்று கண்ணில் படுவதே இல்லை. இதுதான் அதிகாரம்.
இதுதான் வாழ்க்கை; இதுதான் உலகம்.
இவர்களுக்காகவே பட்டினத்தார் ஒரு பாடலை எழுதி வைத்துள்ளார். அதாவது
இவர்கள் நம்ம தொந்தி என்று ,வயிறு புடைக்க தின்று வளர்ப்பார்கள்; ஆனால் , (ஆள் இறந்து
போனால்) நாயும், நரியும், பேய்க் கழுகுகளும் தம்மதென்று அந்த தொந்தியை நினைத்துக் கொண்டு
இருக்குமாம். இதோ அந்த பாடல்.
இருப்பதுபொய்
போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும்
தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று
நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று
தாமிருக்கும் தாம்
- பட்டினத்தார்
ஔவையர் பாடியது:
இப்படி வாழ்பவர்களை ஔவையார் ஆற்றங்கரை மரம் என்கிறார். ஆற்றங்கரையில்
வளரும் மரங்களைப் பார்த்தால் தெரியும். ஆற்றங்கரை மரம் நன்றாக வளரும். யாரும் தண்ணீர்
ஊற்ற வேண்டியதில்லை. ஆற்றுத் தண்ணீரே கிடைக்கிறது. இலைகளும், கிளைகளும் அபரிதமான வளர்ச்சி.
இருந்தும் என்ன பயன்? ஒருநாள் ஆற்றில் பெரும் வெள்ளம் வருகிறது. ஆற்றங்கரை மரம் நன்கு
பலமாக இருந்தாலும், வேர்ப் பிடிப்புகளில் சரியான பிடிமானம் இல்லை. ஆற்று நீரால், மரத்தின்
அடிமண் பகுதி ஊறிப் போய் பொத பொதவென்று இருக்கிறது. மரத்தால் தாக்கு பிடிக்க இயலவில்லை.
அதுவரை கம்பீரமாக இருந்த அந்த ஆற்றங்கரை மரம், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது.
இது போலத்தான் அரசன் அறியப் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கையும் என்கிறார் ஔவையார். பாடல் இதுதான்,
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
- ஔவையார்
( நல்வழி.12 )
( பொழிப்புரை ) ஆற்றங்கரையில் உள்ள மரமும், அரசன் அறியப் பெருமையாக
வாழ்ந்த வாழ்க்கையும், ஒருநாள் அழிந்து விடும். எனவே உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே
உயர்வாகும்; அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு வகையான தொழில்கள் எல்லாம் நிரந்தரம்
இல்லை (என்றுணர்க)
இந்த பாடலில் கடைசி இரண்டு வரிகளில், அரச வாழ்க்கையை விட உழவுத்
தொழில் மேம்பட்டது என்கிறார் நாம் இந்த கட்டுரைக்கு, ஔவை சொன்ன முதல் இரண்டு அடிகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.