Monday 21 November 2016

நந்தவனம் சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு



உள்ளூரில் (திருச்சியில்) இருந்து கொண்டே பழகிய நண்பர்களை நேரில் பார்த்து பேசுவதிலும் சிலசமயம் மாதக் கணக்கில், அல்லது வருடக் கணக்கில் ஓடி விடுகிறது. காரணம் நகரின் ஒரு கோடியில் நாம் இருப்போம்; அவர்கள் இதே நகரின் இன்னொரு கோடியில் இருப்பார்கள். அதிலும் வலைப்பதிவு, ஃபேஸ்புக் நண்பர்களோடு, இணைய உலாவின்போது  தொடர்பு இருந்தாலும், நேரில் சந்திக்க ஆர்வம் இருந்தாலும், நாம் சந்திப்பதற்குள் நாட்கள் ஓடி விடுகின்றன. எழுத்தாளரும் மூத்த வலைப்பதிவருமான V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை, வலைப்பதிவினில் அறிமுகம் ஆன ஓராண்டு கழித்தே சந்திக்க முடிந்தது. இவ்வாறே திருச்சி வலைப்பதிவாளர்கள் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, ரிஷபன், வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட் மற்றும் கீதா சாம்பசிவம் ஆகியோரையும் சந்தித்தேன். ஃபேஸ்புக் வழியே அறிமுகம் ஆன, திருச்சி உறையூரில் இருக்கும் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களையும் சந்திக்க விரும்பினேன். 

நந்தவனம் சந்திரசேகரன்

இலங்கை வவுனியா சின்னப்புதுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள், இப்போது, தனது தாத்தாவின் (பூர்வீக) ஊரான திருச்சியில் வசித்து வருகிறார். ஒரு கெமிக்கல் கம்பெனியின் முகவராக இருந்து வரும் இவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 400க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவற்றுள் பல பிரபல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. 1997 ஆம் ஆண்டு ஜனவரியில், ‘இனிய நந்தவனம்’ என்ற மாத இதழைத் தொடங்கி சிறப்புற நடத்தி வருகிறார். இவரது இதழியல் சேவைக்கு ’சிற்றிதழ் செம்மல்’ என்ற விருதும், ’சிறந்த சிற்றிதழ்’ என்ற விருதும் கிடைத்துள்ளன. ( தகவல் உபயம்: தமிழ் விக்கிபீடியா ) 

சந்தித்தேன்:

திருச்சி நகரில் புத்தகக் கண்காட்சி எப்போது நடந்தாலும் முடிந்தவரை அங்கு சென்று வருவது வழக்கம். கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக நடந்து வரும் திருச்சி தில்லைநகரில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்ற விஷயமே எனக்கு தெரியாமல் போயிற்று. காரணம், ஐநூறு, ஆயிரம் ரூபாய்கள் மீது மோடி போட்ட அஸ்திரத்தில், கடந்த இரண்டு வாரத்தில் பலவிஷயங்கள் காதுக்கு வராமல் அல்லது கண்ணில் படாமல் போய்விட்டன. நல்ல வேளையாக இந்த புத்தகக் கண்காட்சி குறித்தும், அங்கு அவரது நூல்கள் கிடைக்கும் ஸ்டால் குறித்தும் நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் எழுதியதைப் படிக்க நேர்ந்தது. சென்றவாரம் 18.11.16 – வெள்ளிக்கிழமை மாலை இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன்.அவர் சொன்ன ‘ஸ்ரீ ஆனந்த நிலையம்’ – என்ற ஸ்டாலுக்கு சென்றபோது, இனிய அதிர்ச்சியாக அவரையும், சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர் எழுத்தாளர் கவிஞர் K மணி எழிலன் அவர்களையும் சந்தித்தேன் என்பது ஒரு இனிய நிகழ்வு ஆகும். அப்போது எனது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

( படம் - மேலே – நானும் நந்தவனம் சந்திரசேகரனும் ) 

( படம் - மேலே – நந்தவனம் சந்திர சேகரனும் அவரது நண்பர் K மணி எழிலனும் ) 
                                                                         xxxxxx


( படங்கள் : (நன்றி கூகிள்)- கீழே – ஸ்ரீ ஆனந்த நிலையம் ஸ்டாலில் நான் வாங்கிய புத்தகம் மற்றும் வார இதழ்) 


27 comments:

  1. இனிய நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை... அலைபேசியில் அவ்வப்போது தொடர்பு உண்டு...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete


  2. பதிவர்களை அதிகம் நேரில் சந்தித்த அல்லது சந்திக்கும் நபர் நீங்களாகத்தான் இருக்க முடியும் உங்கள் தளத்திற்கு வந்தால் பார்க்காதவர்களை பார்க்கும் பாக்கியம் நிச்சயம் எங்களைப் போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களையும் நான் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். ’பதிவர்களை அதிகம் நேரில் சந்தித்த அல்லது சந்திக்கும் நபர்’ - என்று எடுத்துக் கொண்டால், அந்த பெருமை, மூத்த வலைப்பதிவர் V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களையே சேரும். தான் சந்தித்த அனைத்து வலைப்பதிவர்கள் குறித்தும் ஒரு பதிவு ஒன்றினை அவர் எழுதி இருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

      Delete
  3. ‘பதிவர்களை அதிகம் நேரில் சந்தித்த அல்லது சந்திக்கும் நபர் நீங்களாகத்தான் இருக்க முடியும்.’ என்று மதுரைத் தமிழன் அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகின்றேன்.
    அதுபோல புத்தக விழா நடக்கும் இடங்களுக்கு சென்று புத்தகங்கள் வாங்கும் பதிவரும் நீங்கள் தான் என நினைக்கிறேன். திருச்சியில் இருந்துகொண்டு அனேகமாக அங்கு வசிக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையோரை சந்தித்தும் நீங்கள் தான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய V.N.S அவர்களின் கருத்தினுக்கு நன்றி. மதுரைத் தமிழனுக்கு சொன்ன மறுமொழியே இங்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். உங்களையும் சந்திக்க விரும்புகிறேன்.

      Delete
  4. சக பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்கள் சொல்வது போல் செல்லாத ஆயிரம் ,ஐநூறு ரூபாய்கள் பல விஷயங்களை மறைக்கச் செய்துவிட்டது .

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. இன்னும் எனது வங்கி வேலைகள் முடியவில்லை. மனைவி சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்தாகி விட்டது; ஆனால் பாஸ் புக் பதிவு செய்ய முடியவில்லை; அப்பாவை (வயது 92), ரெயில்வே பென்ஷன் - லைப் சர்டிபிகேட் கொடுக்க, டவுனில் உள்ள வங்கிக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டும். முன்பு சுலபமாக முடிந்த வேலைகள் யாவும் இப்போது தலைக்கு மேலே நிற்கின்றன.

      Delete
  5. Replies
    1. கவிஞர் எஸ். ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    நந்தவனம் ஐயாவுடன் சந்தித்தது மிக்க மகிழ்வு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் த.ரூபன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. அருமையான சந்திப்பு
    உறவுகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. வியாபார நோக்க உலகில் இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தும் திரு சந்திரசேகரன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ! இனிய நட்பு தொடர வாழ்த்துக்கள் :)!

    ReplyDelete
    Replies
    1. தோழர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. பதிவர்களை சந்திக்க விரும்பும் உங்களையும் சந்தித்து இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. என்னைவிட நீங்கள்தான் , வலைப்பதிவர்களை, குறிப்பாக ஏதேனும் ஒரு வெளியூர்ப் பயணம் என்றாலும், சந்திப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பது எனது கருத்து.

      Delete
  10. நண்பர்கள் கூடியது கண்டு எமக்கும் மகிழ்ச்சி
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கில்லர்ஜிக்கு வணக்கமும், நன்றியும். உங்கள் தாய்நாடு வருகையை ஆவலோடு எதிபார்க்கிறேன்.

      Delete
  11. திரு நந்தவனம் சந்திரசேகர் அவர்களை பல்லாண்டுகளுக்கு முன்னரே அறிவேன்.
    இலங்கை,சிங்கப்பூர் மலேசியப் பயணத்தன்போது, இவருடன்சேர்ந்து பயணித்துள்ளேன்,
    ஆயினும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது,
    விரைவில்இவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது
    நன்றி ஐயா
    தம =1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. நண்பர்களைத் தேடித் தேடித் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் வைகோ அவர்களுக்கு அடுத்த இடம் உங்களுக்குத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இனிய சந்திப்பு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. பதிவர் நண்பர்களை ஆர்வத்துடன் சந்திக்கும் தங்களின் பண்பை மிகவும் போற்றுகின்றோம். அழகான இனிய சந்திப்பு இல்லையா....எங்களுக்கு உங்கள் பதிவின் மூலம் புதிய அறிமுகங்களும் கிடைக்கின்றது. 500, 1000 செல்லாத காரணத்தால் சில நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது...எப்போது முழுமையாகச் சரியாகுமோ...

    ReplyDelete