Thursday, 29 September 2016

யாராத்தாள் செத்தாலும்இப்போது தமிழ்நாட்டில் யாராவது ஒருத்தர் போயிட்டார்னு அடிக்கடி வதந்திகள் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். செந்தில் செத்துட்டார், கவுண்டமணி அவுட், கே ஆர் விஜயா மரணம் என்று அடிக்கடி பொய்யான வதந்திகள். இதில் சீரியசான செந்தில், புகார் கொடுக்க போலீஸ் வரை சென்று விட்டார் என்று சொன்னார்கள். அதே போல அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லியும்,  போயிட்டாங்க என்று கடைகளை அடைக்கச் சொல்லி பதற்றத்தை உண்டாக்குவார்கள். ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை கிளப்பி விட்டு, நண்பர்கள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு, அழுது கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி செய்து, தமாஷ் செய்தார் என்று அவரே சொல்லி இருக்கிறார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்.

இந்த வதந்தியை கிளப்புபவர்கள் பெரும்பாலும் அந்தந்த ஏரியா சமூக விரோதிகளே. இதைச் சாக்கிட்டு ஊரில் கலவரம் மூண்டால், கடைகளை மூடச் சொல்வது, வன்முறையைத் தூண்டி கொள்ளையடிப்பது இவர்களது தொழில். நாம்தான், முக்கியமாக வணிகர்கள் இதுமாதிரியான சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒருநாள் போகக் கூடியவர்களே. இந்த கூத்துக்களையெல்லாம் பார்க்கின்றபோது, எனக்கு ஒரு பழைய பழமொழியும் அதுசார்ந்த கதையும் நினைவுக்கு வருகிறது.

அந்தக் கதை இதுதான்

ரொம்ப, ரொம்ப வருஷத்துக்கு முந்தி நடந்த கதை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஊரில் ஒரு புருஷன் அவனுக்கு ஒரு பெஞ்சாதி. அந்த ஊருக்கு அடுத்த ஊரில்தான் இருவரது ஆத்தாள்களும் அவரவரது மற்ற மகன்களோடு இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லை. இந்தக் காலத்தில் உள்ளது போல் போக்குவரத்து, போன் வசதி, இல்லாத காலம் அது. மேலும் ரேடியோ, ஸ்பீக்கர் என்று இரைச்சல் இல்லாத காலம். எனவே, அந்த ஊர் திருவிழாவில் இரவு வேட்டு போட்டாலும், அல்லது யாராவது இறந்தால் ஊர் கூடி ஒப்பாரி வைத்தாலும் இந்த ஊரில் கேட்கும். அவ்வாறே இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கும்.                                                                                                                                                                                       
இவர்களுக்கு அவர்களோடு பேச்சு வார்த்தைகள் இல்லாவிடினும் அந்த ஊரிலிருந்து வந்து போகும் உறவுக்காரர்களிடம் அந்த ஊர் பற்றியும், அவரவர் தாய்களைப் பற்றியும் விசாரித்துக் கொள்வார்கள். ஒருநாள் அந்த ஊரிலிருந்து வந்த ஒருவன், ” இரண்டு கிழவிகளுக்குமே முடியவில்லை. யார் முந்துவார்கள் என்று தெரியவில்லை. இப்பவோ அப்பவோ என்று இருக்கிறது “ என்று சொல்லி விட்டுப் போனான்.

ஒருநாள் இரவு, அடுத்த ஊரிலிருந்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து அழும் குரல் ‘ஓ’வென்று கேட்டது. போய் வரலாம் என்றால் நடு இரவு. இந்த புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் இறந்தது யார் என்று தெரியவில்லை. எழவு சொல்லி வரும் ஆள் அடுத்தநாள் காலையில்தான் வருவான். எனவே அந்த பெண்ணுக்கு ‘செத்தது நம்ம ஆத்தாவா, அல்லது புருஷனோட ஆத்தாவா” என்று மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவளோட புருஷன் மனதிலும் இதே எண்ண ரேகைகள்தான். இருந்தாலும் பெஞ்சாதிக்காரி, தனது சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்டும் விடுகிறாள். அதற்கு அந்த புருஷன்காரன் சொன்ன பதில் இதுதான். “யாராத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்” 

பழமொழியும் இதுதான்

இந்தக் கதையை எனக்கு சொல்லியவர் யாரென்று தெரியவில்லை. அல்லது ஏதேனும் ஒரு கதைப் புத்தகத்தில் படித்தேனா என்றும் தெரியவில்லை. இந்த கதையின் வடிவத்தை வேறு மாதிரியும் சிலர் கேட்டு இருக்கலாம். யாராத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும் - என்பது பழமொழி.

’இரவும் பகலும்’ என்று நடிகர் ஜெய்சங்கர் நடித்த ஒரு படம்.  அதில் நடிகர் அசோகன் ”எறந்தவன சுமந்தவனும் எறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்” என்று தனது சொந்தக் குரலில் பாடி நடித்து இருக்கிறார்.  பாடல்: ஆலங்குடி சோமு. அந்த பாடலை கண்டு கேட்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியைச் சொடுக்கவும். (நன்றி M/s Columbia Video Films ) 
 https://www.youtube.com/watch?v=BGgdLLH4mXA

19 comments:

 1. அது தான்.. அதே கதை தான்!..

  >>> எறந்தவன சுமந்தவனும் எறந்திட்டான் - அதை
  இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்..<<<

  எண்ணிப் பார்த்திருந்தால் தான் மனித குலம் உருப்பட்டிருக்குமே!..

  ReplyDelete
 2. கதை பொருத்தமாக நன்றாகத்தான் இருக்கின்றது நண்பரே

  ReplyDelete
 3. சிலருக்கு வதந்திகளைப் பரப்புவதில் ஒரு மகிழ்ச்சி
  சிலருக்கு பதற்றம் உண்டாக்கி கிடைத்ததை அள்ளிச் செல்லலாம் என்னும் எண்ணம்
  மனிதம் மறைந்து கொண்டே இருக்கிறது ஐயா

  ReplyDelete
 4. அன்றாட நிகழ்வுகளின்
  தொடர் சிந்தனையின் விளைவாய்
  விளைந்த கதையும்
  அதன் தொடர்ச்சியாய் தந்த
  அற்புதமான பாடலையும் மிகவும் இரசித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஒரு சிலருக்கு வதந்தி பரப்புவதில் என்ன மகிழ்ச்சியோ! ஒரு வேளை சாடிஸ்ட் உணர்வோ? ஏதுவாக இருந்தாலும் சம்பந்தப்பவருக்கு எவ்வளவு வேதனை அளிக்கும்....சில சமயம் புலி வருது கதையாகியும் போகலாம் இல்லையா...

  கதை இதுவரை கேட்டதில்லை....பதிவும், கதையும், பாடலும் ர்சித்தோம்..ஐயா...

  ReplyDelete
 6. ஒரு சிலருக்கு வதந்தி பரப்புவதில் என்ன மகிழ்ச்சியோ! ஒரு வேளை சாடிஸ்ட் உணர்வோ? ஏதுவாக இருந்தாலும் சம்பந்தப்பவருக்கு எவ்வளவு வேதனை அளிக்கும்....சில சமயம் புலி வருது கதையாகியும் போகலாம் இல்லையா...

  கதை இதுவரை கேட்டதில்லை....பதிவும், கதையும், பாடலும் ர்சித்தோம்..ஐயா...

  ReplyDelete
 7. தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். வழக்கம்போல தங்கள் பாணியில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். ரஸித்தேன். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. நல்ல கதைதான்.எது நடந்தாலும் தெரியத் தான் போகிறது.

  ReplyDelete
 9. நல்ல கதைதான்.எது நடந்தாலும் தெரியத் தான் போகிறது.

  ReplyDelete
 10. அருமை
  சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

  ReplyDelete
 11. முக்கியமான ஒரு விஷயத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 12. உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று சொல்வதுண்டு.அதற்காகவேனும் சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்கள், நலம் விரும்பிகள். தொண்டர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பவதுண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இப்போதும் அதுதான் நடக்கிறதோ?
  ‘கத்தரிக்காய் விளைந்தால் கடைத்தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும்.’ என்ற பழமொழியும் இப்போது நினைவுக்கு வருகிறது

  ReplyDelete
 13. ஆனால் யாராவது பதிவர் மறைந்தால் தெரிய பல நாட்களாகின்றதே உ-ம் திருமதி ராஜ ராஜேஸ்வரி

  ReplyDelete
 14. தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்கணும் ,இல்லாவிட்டால் பாடைக் கட்டி விடுவார்கள் போலிருக்கே :)

  ReplyDelete
 15. வதந்தி பரப்புவதற்கே சிலர் இருக்கிறார்கள்.....

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 16. மேலே கருத்துரைகள் தந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொருக்கும் தனித்தனியே மறுமொழி எழுதாமைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 17. apart from anti social elements EDUCATED PERVERTS also spread such news...
  during chennai floods i came across well educated people also indulged in SPREADING BASELESS NEWS...JI

  ReplyDelete