Saturday 13 August 2016

தருண் விஜய் – பாராட்டுவோம்



ஹரித்துவாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை எந்த அரசியல் கட்சி வைத்தால் என்ன? பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதிலும் வழக்கம் போல அரசியல். நம்மூர் தமிழ் மக்கள் வடக்கே போய் வள்ளுவர் சிலையை வைத்து விட முடியுமா? ஆனாலும் வள்ளூவர் மீதும் தமிழின் மீதும்  உள்ள மரியாதையின் காரணமாக, வட மாநில (உத்தரகாண்ட்) ராஜ்யசபா எம்.பி திரு தருண் விஜய் அவர்கள் அங்கே திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி எடுத்தார். உடனே அங்கே உள்ள சாதுக்கள் எதிர்ப்பு என்று செய்தி வருகிறது. இங்கு தமிழ்நாட்டிலும் சிலர் இதற்கு நோக்கம் கற்பித்து அரசியல் பேசுகிறார்கள்.

கர்நாடகாவில் வள்ளுவர் :

அண்டை மாநிலமான கர்நாடகாவில்,  பெங்களூரில், தமிழ்ச்சங்கம் சார்பில், அல்சூர் ஏரிக்கரை பூங்காவில், 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க முடிந்ததா? ( இத்தனைக்கும் கன்னடம் நமது திராவிட மொழிகளில் ஒன்று என்று தமிழர்களாகிய நாம் பெருமை பேசி வருகிறோம்; பெங்களூரிலும் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்..) அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பா ( காங்கிரஸ் ) மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை 18 வருடங்களுக்கும் மேலாக சாக்கால் சுற்றப்பட்டு இருந்தது. பின்னர் அப்போதைய தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களது முயற்சியால் அவரது ஆட்சிக்காலத்தில், பி.ஜே.பி முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போதுதான் ( ஆகஸ்டு 9, 2009) திறந்து வைக்கப்பட்டது. அதேபோல கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் (Sarvajna) உருவச்சிலை இங்கு சென்னையில் திறந்து ( ஆகஸ்டு 13, 2009) வைக்கப்பட்டது. கவிஞர் சர்வக்ஞர் தமிழ் சித்தர்கள் போன்று ஒரு சீர்திருத்தவாதி என்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.

வடக்கே என்ன பிரச்சினை:

பொதுவாகவே வட இந்தியர்களுக்கு, தமிழ்நாடு என்றாலே அவர்கள் இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான எண்ணம் உண்டு.(தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை; அரசியல் அதிகாரத்தின் துணையோடு இந்தி இங்கு தமிழகத்தில் கட்டாய திணிப்பு செய்வதுதான் எதிர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தி.மு.க மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பிற கட்சி தலைவர்களும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்தனர். தி.மு.க முன்னணியிலிருந்து முன்னெடுப்பு செய்தது.என்பது வரலாறு)

மேலும் திருவள்ளுவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் சிலையை அங்கே வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. திருவள்ளுவர் இன்ன ஜாதி என்றோ அல்லது இன்ன மதத்தினர் என்றோ இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. வள்ளுவரைப் பற்றியும் இன்னும் சில புலவர்களைப் பற்றியும் இங்கு சொல்லப்படும் கதைகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது. பழைய தமிழகவரலாற்றின் பெரும்பகுதி இவ்வாறே இருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் ஒரு உலகப் பொதுமறையாளர்.  

இப்பேர்பட்ட சூழ்நிலையில் திரு தருண் விஜய் அவர்கள் வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத் தக்கது ஆகும். 

தருண் விஜய் பற்றி:


யார் இந்த தருண் விஜய் என்று பார்க்கும்போது அவரைப் பற்றிய விவரத்தை இணையதளங்களில் காண முடிகிறது. டேராடூனில் (உத்தர்காண்ட்) மார்ச் 2 ஆம்தேதி 1956 இல் பிறந்த இவர், பி.ஏ. பட்டதாரி; எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். பாஞ்சசான்யா என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர். நூல்கள் சிலவும்  எழுதியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பாக, உத்தரகாண்ட் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி இந்து (தமிழ்) பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே.

தமிழ் மீது உங்களுக்குப் பாசம் உருவானது எப்படி

பெரும்பாலான வட இந்தியர்கள் இந்தி மொழி மீது உள்ள கர்வத்தினால், மற்ற மொழிகளை விமர்சிக் கிறார்கள். இதனால், நம் நாட்டின் மற்ற மொழிகளையும், ‘தமதுஎன ஏற்காத குணம் அவர்களிடம் இல்லாததை உணர்ந்தேன். இதைச் சரிசெய்ய விரும்பிய எனக்கு மற்ற தென் இந்திய மொழிகளில் தமிழின் மீதான ஆர்வம் அதிகமானது. தமிழின் பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். தமிழை மற்ற மொழி என்று கூறாமல், எனது தாயின் மொழிகளில் ஒன்று என ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

மாநிலங்களவையில் இந்தி மட்டும் இருக்கும் தேசிய மொழிப் பட்டியல்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எழுப்பிய குரலுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன?

எதிர்ப்பை விடப் பல மடங்கு ஆதரவுதான் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதி என்னைப் பாராட்டித் திருக் குறளைப் பரிசாக அளித்திருக்கிறார். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உட்படப் பலர் தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டினார்கள். அதிமுக சார்பிலும் அதன் எம்பிக்கள் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் நேரில் வந்து என்னைச் சந்தித்து நெகிழ்ந்துபோனார்கள்

எதிர்ப்புத் தெரிவித்த மிகச் சிலரிடம், தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்கள் மனதையும் மாற்றுவேன்.  

(நன்றி: தி இந்து (தமிழ்) தேதி 14.செப்டம்பர் 2014 )

பாராட்டுக்குரியவர்:

ஆனாலும் திரு. தருண் விஜய் அவர்கள் அவர் ஒரு பி.ஜே.பி அரசியல்வாதி என்பதால், அவர் தமிழுக்கு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து எதிர்ப்பவர்களும் இங்குண்டு. என்னைப் பொருத்தவரை, இவர்களது கருத்துக்களை புறந்தள்ளி விட்டு, வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவும் திரு. தருண் விஜய் அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை என்றுதான் சொல்வேன். 

                                                               xxxxxxxxxxxxxxxxxxxxxxx

( ஹரித்வாரில் தொடர்மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இம்மாத (ஆகஸ்ட் 2016) இறுதியில் திறப்புவிழா நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது – புதிய தலைமுறை செய்தி 06.08.2016 / பார்க்க https://www.youtube.com/watch?v=I1GlIm6RbGc )

                    (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

38 comments:

  1. அய்யா வணக்கம். தருண்விஜய்யைப் பாராட்டத்தான் எனக்கும் ஆசையாக இருக்கிறது - அவர் வள்ளுவர் சிலையை வடக்கே வைக்க முயற்சியெடுப்பதோடு, வள்ளுவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் கருத்தை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்தால்! ஆனால் அவர் சார்ந்த கட்சி, தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதும், அதற்கு அவர் சார்ந்த பிரதமர் எதிர்ப்பு நாடகமாடுவதும் சந்தேகத்தைத் தருகிறதா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். வள்ளுவரின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, அவருக்குச் சிலைவைப்பதும் அரசியல் தானே? வள்ளுவரை வைத்து இவர்கள் அரசியல் செய்வதால்தான் வைரமுத்து இவர்களை வைத்து -ஞானபீட விருதை நினைத்து- தருண் விஜய்யைப் பாராட்டுகிறார் என்ற அரசியல் உங்களுக்குப் புரிந்தால் நல்லது.அவர்கள் மொழியிலேயே சொன்னால், “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்று இருக்கக் கூடாதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகைக்கும் அன்பான கண்டிப்பிற்கும் நன்றி. நான் இங்கு பதிவினில் வட இந்தியாவில் திருவள்ளுவர் சிலை வைக்கும் நிகழ்ச்சியை மட்டுமே முன்னிலைப்படுத்தி இதற்கு காரணமான தருண்விஜய் அவர்களைப் பாராட்டி எழுதினேன்.

      இதனால் நான், அவர் சார்ந்த பி.ஜே.பி கட்சியின் மற்ற செயல்களையும் ஆதரிப்பதாக அர்த்தம் கிடையாது. இந்த சிலை நிறுவும் நிகழ்ச்சி வேறு; அவை வேறு. அண்மையில் பாராளுமன்றத்தில் சரக்கு சேவை வரி (goods – service tax) சட்டத்தை பி.ஜே.பி கொண்டு வந்தபோது அனைத்துக் கட்சியினரும் ஒரு பொதுவான கருத்தில் ஆதரித்தார்களே? மதவாத கட்சியான பி.ஜே.பி கொண்டுவரும் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று யாரும் சொல்ல வில்லையே? அதுபோல தருண்விஜய் முயற்சி எடுத்த ஒரு பொது விஷயத்தில் அவரைப் பாராட்டுவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

      மேலும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் வைரமுத்து , ஆடிட்டர் குருமூர்த்தி, மேகாலயா கவர்னர் சண்முகநாதன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் – என்று எல்லோருமே கட்சி வேறுபாடு இன்றி தருண்விஜய் அவர்களைப் பாராட்டி உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்காரர்கள். யாரும் அரசியல் பேசவில்லை.

      Delete
    2. மேலே உள்ள எனது மறுமொழியில் திரு.சுதர்சன நாச்சியப்பன் பெயர் இரண்டுமுறை வந்து விட்டது. மன்னிக்கவும்.

      Delete
    3. உங்களிடம் உள்நோக்கமில்லாததால்தான் பாராட்டியிருக்கிறீர்கள். நானும் உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் அவர்கள் செயலில் உள்நோக்கமில்லை என்று நினைக்காதீர்கள் என்பதே என் கருத்து.

      Delete
  2. சென்னையில் சர்வக்ஞா சிலையை வைத்ததால்தான் அல்சூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது என்ற சேதி தெரியுமா? அண்மையில் கன்னடம் முதலான தென் இந்திய மொழிகளுக்கு ( செம்மொழி) க்லாசிகல் மொழிகள் என்னும் அங்கீகாரம் அளிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டதும் படித்திருப்பீர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் வள்ளுவர் சிலை வடிக்க யார் முன் நின்றார்கள் என்பது தெரியவில்லை நம் தமிழகக் கட்சியினர் அதற்கு உரிமை கொண்டாடி வடக்கே சிலை கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தருண் விஜயைப் பாராட்டியவர்கள் அனைவரும் தமிழர்களே என்றே சொல்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பார்ந்த G.M.B அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எப்படியோ பெங்களூருவில் வள்ளுவர் சிலை விஷயத்தில், இங்கும் அங்கும் பிரச்சினை இல்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சிதான் அய்யா. மேலே ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுக்கு அளித்த எனது மறுமொழியில், தருண்விஜய் அவர்களைப் பாராட்டிய தமிழ்நாட்டுக்காரர்கள் பட்டியலை சொல்லி இருக்கிறேன் அய்யா.

      Delete
    2. அதைத்தான் நானும் சொல்கிறேன் வள்ளுவர் சிலை நிறுவியதை தமிழர்கள் மட்டுமே பாராட்டி இருக்கிறார்கள்வடக்கத்தியர் யாராவது புகழ்ந்திருக்கிறார்களா

      Delete
    3. அன்புள்ள G.M.B அவர்களுக்கு வணக்கம். நீங்கள் ’வடக்கத்தியர் யாராவது புகழ்ந்திருக்கிறார்களா’ என்று குறிப்பிட்டு கேட்டதைப் போல தேடினால் ,உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாயக் மட்டுமே எனக்கு தெரிகிறார். மற்றவர்கள் பெயர் என்னால் அறியக் கூடவில்லை. மன்னிக்கவும். தெரிந்தவர்கள் இங்கு சொல்லலாம்.

      Delete
  3. என்னை பொறுத்த வரை பெரிய மனிதர்களுக்கு சிலை வைத்து கொண்டாடுவது அவர்களை இழிவு படுத்துவதாகவே தோன்றுகிறது. திறந்தவெளியில் எந்த பராமரிப்பும் இன்றி காக்கை எச்சங்களுடனும் உடைந்து போய் வண்ணம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ சிலைகள் இதை பார்க்கையில் இந்த எண்ணம் தோன்றியது. அரசியல் தலைவர்களின் செயல்கள் எல்லாம் அரசியல் நோக்கம் மறைந்து இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. சிலை வைப்பதே அதற்கு தான்.
      ரொம்ப பிடிக்காத தலைவர் என்றா இரும்பு வேலிபோட்டு ஜெயிலில் அடைத்து விடுவார்கள். அவ்வளவு பாசம் தலைவர்கள் மேலே!

      Delete
    2. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அரசியல்வாதிகளுக்கு, அரசியல் என்பது அவர்களது தொழில். அவர்கள் வேலையை அவர்கள் நன்றாகவே செய்வார்கள். நல்லது செய்தால் பாராட்டுவதில் தவறில்லை.

      Delete
    3. நண்பர் நம்பள்கி அவர்களின் வருகைக்கு நன்றி.

      Delete
    4. அரசியல் தலைவர்களின் செயல்கள் எல்லாம் அரசியல் நோக்கம் மறைந்து இருக்கத்தான் செய்யும்.-தளிர்சுரேஷ்
      சரியாக சொன்னீர்கள்.
      /திறந்தவெளியில் எந்த பராமரிப்பும் இன்றி காக்கை எச்சங்களுடனும் உடைந்து போய் வண்ணம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ சிலைகள்..//
      நல்ல பராமரிப்புடன், உடையாமல், வண்ணத்துடன் அந்த சிலைகள் இருந்தாகூட அவைகளால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த பயனும் கிடையாது.

      Delete
    5. நண்பர் வேகநரி அவர்களின் வருகைக்கு நன்றி. தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளை காக்கை, குருவிகள் அசிங்கப்படுத்தியதை விட , ஜாதித் தமிழர்கள் அசிங்கப்படுத்தியதே அதிகம் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

      Delete
  4. சிலை அவசியமா இல்லையா , அதனால் என்ன பயன் , அது மட்டுமே போதுமா என்கிற சர்ச்சை வேண்டாம் . சிலை வைத்தாகி விட்டது . வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நீங்கள் சொன்னதைப் போலவே, வாழ்த்துவோம்.

      Delete
  5. பின்னணியில் அரசியல் இருந்தாலும் கூட வள்ளுவர் சிலை ஹரித்துவாரில்
    வைக்கப் படுவது ,வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் !
    பல தேசீய விருதுகள் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து ஞானபீட விருதுக்காக யாரையும் குளிப்பாட்ட வேண்டியதில்லை என்று தான் நினைக்கிறேன் !
    வள்ளுவத்தைக் கடைபிடிப்பவர்கள் மட்டும்தான் வள்ளுவர் சிலை வைக்க அருகதை உடையவர்கள் என்றால் நமக்கு வள்ளுவர் கோட்டம் கிடைத்து இருக்குமா :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. கவிஞர் வைரமுத்து மட்டும் தருண்விஜயைப் பாராட்டவில்லை. மேலே ஒரு பட்டியலே உள்ளது.

      Delete
  6. இதிலும் அரசியல் நிறையவே.....

    ReplyDelete
  7. இதில்தான் பிஜேபி யின் அரசியல் விளையாட்டு உள்ளது. தருண் விஜய்க்கு ஒன்றும் தமிழ் மேல் உள்ள பாசமோ திருவள்ளூரின்மீது உள்ள பாசமோ அல்ல நாளை ஒருநாள் கண்டிப்பாக ஓட்டுக்கு தமிழர்களிடத்தில் வந்து நிற்பார்கள் அல்லது நமது தமிழக பாஜக வினர் இதை சொல்லி ஓட்டு கேட்பார்கள் இது நிச்சயம். தமிழன் விழித்துக்கொண்டால் சரி.

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எம்.செய்யது (துபாய்) அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. பி.ஜே.பியின் அரசியலுக்கு அப்துல் கலாம், சையத் ஷாநவாஸ், எம்.ஜே.அக்பர், நஜ்மா ஹெப்துல்லா,ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்களும் துணை நின்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

      Delete
  8. Neither Thiruvalluvar nor Tamil Nadu people asked Tarun Vijay to place the statue in Haridwar. It's all done with political reason to canvass Tamil nadu people. Initially, BJP thought that by I installing Thiruvalluvar silai in Haridwar, they can install Ram rajyam in Chennai George fort. But it back fired to them because it exposed thier drama. nothing will happen by this type of drama. Although, they did some damage to Thiruvalluvar by invoking him as low caste person, they smeared more tar on thier face. Tarun Vijay is clever man. Without long term gain, he cannot do any small thing to TN. Vairamuthu is an opportunist. Forget about him.

    It's better now for TN people to be aware of these opportunists. Neither statue nor photos will serve the purpose. Only absorbing the concept of Thirukkural will help the society.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கு நன்றி. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க (ஜெயலலிதா) இருக்கும்வரை பி.ஜே.பிக்கு இங்கு வேலையில்லை என்றே நினைக்கிறேன். டெல்லியில் காரியம் சாதிக்க தி.மு.க வே கையில் இருக்கும் போது, கவிஞர் வைரமுத்து மற்றவர்களுக்கு ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் இல்லை. திருவள்ளுவர் சிலை - ஒரு பொதுவான விஷயம் என்பதால், எல்லோரும் (நான் உட்பட) எதனையும் எதிர்பாராது பாராட்டுகிறோம். அவ்வளவுதான்.

      Delete
  9. //வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவும் திரு. தருண் விஜய் அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை//

    ஆஹா .... ஓர் கடமையாக நினைத்தாவது பாராட்டிடுவோம்.

    வழக்கம்போல தங்கள் பாணியின் நல்லதொரு அலசல் கட்டுரையாக உள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அன்புள்ள V.G.K அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  10. தமிழர்களின் விருப்பமான திருவள்ளுவர் சிலையை வைக்க முயற்ச்சிக்கும் தருண் விஜய் முயற்சியும், அதை பாராட்டிய உங்க நேர்மையும் பாராட்டபட வேண்டியது. தமிழர்கள் பலர் சிலைகள் வைப்பதில் மிகவும் ஆசை கொண்டவர்களாகவும் மகிழ்ச்சியடைபவர்களாகவும் இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. தமிழகத்தில், இப்போதெல்லாம் சிலைகள் வைப்பதில் யாருக்கும் அதிகம் ஆர்வம் இல்லை என்பது கண்கூடு.

      Delete
  11. பாராட்டுவோம்..!
    த ம 3

    ReplyDelete
  12. வள்ளுவர் சிலையை வைத்தமைக்கு பாராட்டுகள் - அந்த
    வள்ளுவர் சிலை
    திருக்குறளையும் தமிழையும் நினைவூட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. நம்மவரின் பெருமையை, நம் மண்ணின் பெருமையைப் பரவ மேற்கொள்ளும் அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. அரசியலை சற்றே ஒதுக்கிவைப்போமே.

    ReplyDelete
    Replies
    1. ” அரசியலை சற்றே ஒதுக்கிவைப்போமே “ - என்ற முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. பத்திரிகை உலகில் பத்தி எழுத்தாளர்கள் (columnist) என்று சொல்வர்கள். இந்த வகையில் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி அழகாக எழுதுவது உங்களுக்குச் சிறப்பாக வருகிறது. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று பிரமாதப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    தேர்ந்த அரசியலில் 'issue basis support' என்று ஒன்று உண்டு. எல்லாவற்றையும் எதிர்ப்பது இல்லை எல்லாவற்றையும் ஆதரிப்பது என்ற நிலைக்கு மாற்றானது இது.
    இந்த ஒன்று தான் ஜனநாயக அரசியலை உருட்டிக் கொண்டு செல்கிறது.

    திருக்குறள் ஒரு உலகப் பொது மறை. அது ஒரு மேலாண்மை நூலும் கூட. தமிழ்ப் புலவனின் ஞானம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவுதல் மனித குலத்திற்குப் பெருமை. இவரே திருக்குறளின் இந்திப் பதிப்பை தாம் சந்திப்போருக்கு வழங்கினால் இன்னும் பெருமை. நாடு, மொழி எல்லாம் தாண்டி நாம் மனிதர்கள் என்பது தான் நம்மை ஒன்று சேர்த்து ஒன்றாய் செயல்பட வைக்கும் வித்தை ரகசியம்.

    வாசிப்பு ஒன்று தான் மனிதனை மிகச் சிறந்த மனிதனாக்குகிறது. மனிதரின் குறை-நிறைகளை சமன்படுத்துகிறது. அந்த விதத்தில் நல்லவை விளைந்தால் நன்மை தானே?

    செய்திகளை நேராகப் பார்க்கும் உங்கள் மதிநுட்பத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய பாராட்டுகள், வலைப்பதிவினில் இன்னும் அதிகமாக எழுத எனக்கு உற்சாகம் தருகின்றன.

      Delete
  15. இதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை...இருந்தாலும் ஒரு பக்கத்தில் சிறு அளவிலேனும் இருக்கும் நேர்மறையை மட்டும் எடுத்து வாழ்த்துவோம்...உங்கள் நேர்மறை எண்ணமும் பாராட்டிற்குரியது ஐயா..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆசிரியர் துளசிதரன் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete