Tuesday 21 July 2015

தமிழ் எழுத்துக்களில் வருணபேதம்




அண்மையில் தோழர் ஆசிரியர் இரா. எட்வின் அவர்கள் நோக்குமிடமெல்லாம்என்ற தனது வலைத்தளத்தில், அய்யம்என்ற தலைப்பினில்,

நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.

என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே

எனில், இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது தாஎன்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது கொடுஎன்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.

எனில்,இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. எனில், சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது. அது அப்படித்தான் எனில் சொல்கிறோம், “ குற்றம் குற்றமேஅல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.

என்று எழுதி இருந்தார்.( www.eraaedwin.com/2015/05/blog-post_17.html ) தோழர் இரா.எட்வின் அவர்களதுஅய்யம் பற்றி வெளிப்படையாக சொல்வதானால்நீங்கள் சொல்வது சரியே; குற்றம்தான். தொல்காப்பியர் காலத்தில் ஜாதிகளில் ஏற்ற தாழ்வு கடைபிடிக்கப்பட்டதுஎன்பதுதான். இதில் ஒளிவு மறைவோ, சப்பைக் கட்டோ இல்லை. 
  
ஜாதியும் தமிழர்களும்:

பண்டைத் தமிழர் வரலாற்றைப் பற்றி எழுதும்போது , “கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி  (புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.35) என்று சொல்வார்கள். அந்த மூத்த குடியில் இப்போது உள்ளதுபோல் பிறப்பால் உண்டான ஜாதி பாகுபாடு இல்லை என்றும் அது தொழில் சார்ந்த பாகுபாடு என்றும் சொல்வார்கள். உண்மையில் சங்ககாலத்தில் தமிழர்களிடையே இருந்த ஜாதி பாகுபாடானது அவரவர் தொழில் முறையால் உண்டானதா அல்லது பிறப்பால் உண்டாக்கப்பட்டதா  என்று அறுதியிட்டு சொல்ல முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் வரும்இழிசினன், இழி பிறப்பாளன், உயர்ந்தோன், தாழ்ந்தோன், மேற்குடி, கீழ்குடி, புலையன் போன்ற சொற்கள் அக்காலத்தில் சாதியில் பாகுபாடு இருந்ததை உணர்த்துவன.

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே   - புறம்.183

என்பது புறநானூற்றின் அப்பட்டமான வரிகள்.

தமிழர், தமிழ் என்று நமக்குள் இருக்கும் தமிழ் பற்றின் காரணமாக தமிழர்களை உயர்த்திக் காட்ட வேண்டி, சில உண்மைகளை மறைக்கப் பார்க்கிறோம். தமிழர்கள் டீ அல்லது காபி அல்லது டாஸ்மாக் அல்லது அன்ன ஆகாரம் இன்றி கூட இருந்து விடுவார்கள். ஆனால் ஜாதி இல்லாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். ஜாதியைக் கட்டிக் காப்பதில் கெட்டியானவர்கள். திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டே ஜாதி அரசியல் செய்யும் வகையறாக்களை தமிழ்நாட்டில் இப்போது பார்க்கலாம்.     

வச்சணந்தி மாலை:

வச்சணந்தி மாலை என்பது 12 -  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இலக்கண நூல். வெண்பா பாட்டியல் என்று இன்னொரு பெயரும் உண்டு. தமிழ் இலக்கிய இடைக்கால வரலாற்றில் வரும் நூல்.  இதனை எழுதியவர் குணவீர பண்டிதர். தனது ஆசிரியருக்கு கௌரவம் செய்ய வேண்டி வச்சணந்தி  (வஜ்ரநந்தி) என்ற தனது ஆசிரியரின் பெயரால் இதனை இயற்றினார்.  

பாட்டியல் என்றால் சிற்றிலக்கியங்களில் பிரபந்தங்கள் போன்ற நூல்களுக்கு இலக்கணம் ஆகும். பொதுவாகவே நான்கு வருணத்தை (அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகியோரை) மையமாக வைத்து பாட்டுடைத் தலைவனது வருணத்திற்கு தகுந்தவாறு பா புனைய வேண்டும் என்பது இந்த ‘பாட்டியல் நூல்களின் மையக் கருத்தாகும். அடிமையிலும் அடிமையான  பஞ்சமர் எனப்படும் ஐந்தாவது வருணத்தினருக்கு அந்த காலத்தில் சமூக அந்தஸ்து இல்லை, என்பதால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் பாட்டியல் நூல்களில் இல்லை.

( இந்த பாட்டியல் நூல்களைத்தான் பல ஆண்டுகளாக புலவர் வகுப்புகளில், கல்லூரிகளில் பாட நூல்களாக போற்றி வருகிறார்கள் ) இது தமிழின் குற்றமன்று; தமிழில் எழுதியவர்களின் மற்றும் ஆதரித்தவர்களின் குற்றமாகும்.

வச்சணந்தி மாலையில்

ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.

பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.

என்ற பாடல்களில் இன்னின்ன வருணத்திற்கு இன்னின்னின எழுத்துக்கள் வைத்து பாட வேண்டும் என்று சொல்லுகின்றன..

, ,, , , , , , , , , ஒள, , , , , – என்ற பதினெட்டு எழுத்துக்களும்  அந்தணர்களுக்கானவை.

, , , , , என்ற ஆறு எழுத்துக்களும் அரசர்களுக்கானவை.

, , , ன – என்ற நான்கு எழுத்துக்களும் வைசியர்களுக்கானவை.

. என்ற இரண்டு எழுத்துக்கள் சூத்திரர்களுக்கு (அதாவது வேளாளர்களுக்கு) ஆனவை.

மேலும் இந்நூலின் (வச்சணந்தி மாலை) சில பாடல்களில், பிராமணர்களுக்குரியது வெண்பா; அரசனுக்குரியது ஆசிரியப்பா. வைசியருக்குரியது  கலிப்பா மற்றும் சூத்திரர்களுக்குரியது  வஞ்சிப்பா என்றும்  வரையறை செய்கின்றது. மேலும்
அந்தணர் இயல்பு, மன்னர் இயல்பு, பூவைசியர் இயல்பு, தனவைசியர் இயல்பு, சூத்திரர் இயல்பு – என்று நான்கு வகையான வருணத்தினருக்கும் இன்னின்ன இயல்புகள் என்றும் கூறுகிறது.

பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.

என்ற பாடலில் அந்தணர்,அரசர், வைசியர் சொன்ன பணிகளைச் செய்தல் சூத்திரர்கள் கடமை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில்:


தொல்காப்பியத்தில், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகள் மற்றும் ,தொழில்கள் பற்றிய சூத்திரங்களைக் காணலாம். எனவே தமிழகத்தில், தொல்காப்பியர் காலத்தில்  நான்குவகை வருணபேதம் இருந்தது என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு இருக்கும் இழிந்தோன், ஒப்போன், உயர்ந்தோன் என்ற சொற்களை வைத்துப் பார்க்கும்போது, தொல்காப்பியர் காலத்திலேயே உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற  படிநிலையும் இருந்தது என்றே எண்ண வேண்டி உள்ளது.

அப்போது தொடங்கிய இனக்குழுக்களின் வளர்ச்சி பின்னாளில் ஜாதீய படிநிலையாகப் பெருகியதையே  வச்சணந்தி மாலை கூறுகிறது எனலாம். எனவே தோழர் ஆசிரியர் இரா. எட்வின் சொன்ன கருத்தினை அப்படியே வழி மொழிகின்றேன்

” சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைக்கிறது. இது  குற்றமே.”



53 comments:

  1. தொல்காப்பியர் காலத்தில் ஜாதிகளில் ஏற்ற தாழ்வு கடைபிடிக்கப்பட்டது”என்பதுதான் உண்மை இதில் ஒளிவு மறைவோ, சப்பைக் கட்டோ இல்லை. என்று சொல்லி தொல்காப்பியம் சொல்லும் சாதிக்கொருமுறை குற்றம் குற்றமே என சொல்லியிருப்பது ‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.’ என நக்கீரர் சொன்னதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உணர்வு பூர்வமான சற்று சிக்கலாஅன, எனது பதிவினுக்கு வெளிப்படையாக கருத்திட்ட அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி. மனுவும் சரி, தொல்காப்பியரும் சரி இருவரும் ஜாதியை உண்டாக்கவில்லை. இருவரும் தம் காலத்து நிலவிய ஜாதீய சூழலை சுட்டிக் காட்டினர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

      Delete
  2. Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  4. பிச்சை எடுப்பதற்கு "ஈ" எனவும், பகிர்ந்து கொள்ளுதல் “தா” எனவும், ஈதலைக் கொடுத்தல் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பதிலும் சாதி இருப்பதாக எனக்குப் பிடிபடவில்லை.

    சாதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த மூன்று வார்த்தைகளும் பொருந்தும் என்றே நான் நினைக்கிறேன்.

    தங்களின் கருத்துப்படி நீ, நீங்கள் என்பதும் சாதியைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.

    தாங்கள் கூறியபடி இது தமிழின் குற்றமன்று; தமிழில் எழுதியவர்களின் மற்றும் ஆதரித்தவர்களின் குற்றமாகும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் N. பக்கிரிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான், நீ, நீங்கள் என்பன மரியாதை நிமித்தம் வேறுபடும் சொற்கள். இந்த சொற்கள் எந்த ஜாதிக்குள்ளும் பயன்படுவன. நான் சொல்ல வந்தது, தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வரும் சில சொற்கள் (மேலே சொல்லி இருக்கிறேன்) அன்றைய சூழ்நிலையில் ஜாதி பாகுபாடு இருந்தது என்பதைக் காட்டும் சொற்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் மேலே குறிப்பிட்ட புறநானூற்று வரிகளில் வரும் ” வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால்” என்பதற்கு என்ன பொருள் கொள்வது?

      Delete
  5. மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். சங்கக் காலத்தில் இனக்குழுக்கள் இருந்தனவே சாதிகள் இருக்கவில்லை, ஒவ்வொரு நிலப் பகுதியில் வாழ்ந்த இனக்குழுவும் மற்றொன்றதை விட தாழவும் இல்லை, உயரவும் இல்லை. தொல்காப்பியம் சொல்லுகின்ற இந்த தாழ்ந்தோன், ஒப்போன், உயர்ந்தோன் என்ற சொற்பதங்கள் ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. இது ஒவ்வொரு தனிமனிதரது தகுதிக்கு அமைய குறிக்கப்படும் சொல்லாகும்.

    எடுத்துக்காட்டுக்கு - உங்களை விட வயதில் மூத்த பெற்றோர், உறவினர், மற்றவர்களிடம், செல்வாக்குடையோரிடம், செல்வம் மிகுந்தோரிடம், உயரதிகாரிகளிடம், அமைச்சர்களிடம், பிரபலமான நபர்களிடம் பேசுகின்ற போது நாம் மிகுந்த மரியாதையோடும், பன்மையோடும் தான் பேசுவோம். அவரிடம் பேசும் போது அதை தா எனக் கேட்க மாட்டோம், அதைத் தருவீர்களா? எனத் தான் கேட்போம். தமிழ் மட்டுமில்லை உலகின் பல மொழிகளின் நிலையும் இதுவே. ஆங்கிலத்தில் கூட Sir, Madam, Please என்ற சொற்கள் பயன்படுகின்றன.

    அதே சமயம், சக வயதினரிடம், சக பணியாளரிடம், நண்பர்களிடம், தம்மை ஒத்தோரிடம் பேசும் போது மிகுந்த மரியாதையும் இல்லாமல், இழிவாகவும் இல்லாமல் இடைநிலைத் தன்மையோடு பேசுவோம். அதே போல தம்மை விட வயது குறைந்தோரிடம், தம்மை விட அந்தஸ்தில் குறைந்தோரிடம், பிச்சைக்காரர்கள் போன்றோரிடம் பேசும் போது ஒருமையில் "நீ" என்று தான் பேசுவோம்.

    தொல்காப்பியச் சூத்திரம் இதைத் தான் கூறுகின்றதே ஒழிய, அது ஜாதியைப் பற்றிக் கூறவில்லை. அக்கால வாழ்வியல் சூழலை இக்காலக் கண்ணாடி போட்டுப் பார்பதனால் ஏற்படும் காமாலையே இதுவாகும்.

    தொல்காப்பியத்தில் ஜாதியச் சூத்திரமாக வருகின்ற நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர். இவற்றை மேலோட்டமாக கூறி ஒருமுடிவுக்கு வராமல் மேலும் தொல்காப்பியத்தின் காலம், அக்காலக் கல்வெட்டுக்கள், அக்காலத்தின் பிற சான்றுகள் ஊடாக தெளிவாக்குவது தமிழரது கடமை.

    இதுகுறித்து ஏற்கனவே ராஜம் அவர்கள் " சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை, இன்ன பிற " என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதில் சங்கக் காலத்தில் ஜாதியங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதையும் தெளிவாக்கியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. மறுமொழி > PART.1

      எழுத்தாளர் நீலன் அவர்களுக்கு வணக்கம். சமீப காலமாக தமிழ்மணத்தில் வரும் தங்களது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

      // மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். சங்கக் காலத்தில் இனக்குழுக்கள் இருந்தனவே சாதிகள் இருக்கவில்லை, ஒவ்வொரு நிலப் பகுதியில் வாழ்ந்த இனக்குழுவும் மற்றொன்றதை விட தாழவும் இல்லை, உயரவும் இல்லை. //

      கடவுள் உண்டா? இல்லையா? என்பது போன்று , சங்ககாலத்தில் ஜாதிகள் இருந்தனவா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. இன்னும் முடிந்த பாடில்லை. காரணம் இருவேறு கண்ணோட்டம் தான்.

      Delete
    2. மறுமொழி > PART.2

      // தொல்காப்பியம் சொல்லுகின்ற இந்த தாழ்ந்தோன், ஒப்போன், உயர்ந்தோன் என்ற சொற்பதங்கள் ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. இது ஒவ்வொரு தனிமனிதரது தகுதிக்கு அமைய குறிக்கப்படும் சொல்லாகும். எடுத்துக்காட்டுக்கு - உங்களை விட வயதில் மூத்த பெற்றோர், உறவினர், மற்றவர்களிடம், செல்வாக்குடையோரிடம், செல்வம் மிகுந்தோரிடம், உயரதிகாரிகளிடம், அமைச்சர்களிடம், பிரபலமான நபர்களிடம் பேசுகின்ற போது நாம் மிகுந்த மரியாதையோடும், பன்மையோடும் தான் பேசுவோம். அவரிடம் பேசும் போது அதை தா எனக் கேட்க மாட்டோம், அதைத் தருவீர்களா? எனத் தான் கேட்போம். தமிழ் மட்டுமில்லை உலகின் பல மொழிகளின் நிலையும் இதுவே. ஆங்கிலத்தில் கூட Sir, Madam, Please என்ற சொற்கள் பயன்படுகின்றன. அதே சமயம், சக வயதினரிடம், சக பணியாளரிடம், நண்பர்களிடம், தம்மை ஒத்தோரிடம் பேசும் போது மிகுந்த மரியாதையும் இல்லாமல், இழிவாகவும் இல்லாமல் இடைநிலைத் தன்மையோடு பேசுவோம். அதே போல தம்மை விட வயது குறைந்தோரிடம், தம்மை விட அந்தஸ்தில் குறைந்தோரிடம், பிச்சைக்காரர்கள் போன்றோரிடம் பேசும் போது ஒருமையில் "நீ" என்று தான் பேசுவோம். //

      நீங்கள் கூறும் எடுத்துக் காட்டுகள் யாவும் மனிதர்களிடையே சாதாரணமாக எல்லா மக்களும் அந்த காலத்திலிருந்து பயன்படுத்தி வரும் சொற்கள். தோழர் இரா.எட்வின் அவர்களும் இந்த சொற்களைப் பயன்படுத்தியே தன் அய்யத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் குறிப்பிடாத சங்க இலக்கியத்தில் வரும் – இழிசினன், இழி பிறப்பாளன், உயர்ந்தோன், தாழ்ந்தோன், மேற்குடி, கீழ்குடி, புலையன் போன்ற சொற்களுக்கு என்னவென்று பொருள் கொள்வது.?

      வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
      கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
      மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

      என்ற கருத்தமைந்த புறநானூற்றுப் (புறம் – 183) பாடலைப் பாடியவனும் சாதாரண ஆள் இல்லை. ஒரு மன்னன். அதிலும் ஆரியப்படை கடந்தவன் என்ற புகழ் உடையவன். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

      "வடவாரிய படை கடந்து
      தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
      புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
      அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
      நெடுஞ்செழியன்"

      என்று சிலப்பதிகாரம் அவன் புகழ் பாடும். அந்த மன்னன் சொன்ன நாற்பால், கீழ்ப்பால், மேற்பால் என்பதற்கு என்னவென்று பொருள் கொள்வது?

      Delete
    3. மறுமொழி > PART.3

      // தொல்காப்பியச் சூத்திரம் இதைத் தான் கூறுகின்றதே ஒழிய, அது ஜாதியைப் பற்றிக் கூறவில்லை. அக்கால வாழ்வியல் சூழலை இக்காலக் கண்ணாடி போட்டுப் பார்பதனால் ஏற்படும் காமாலையே இதுவாகும். //

      வரலாற்றைப் பற்ரிப் பேசும்போது அக்காலத்தில் என்ன நடந்ததோ, அதனை அப்படியே உரைப்பதுதான் மரபு. உங்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வு போன்றே எனக்கும் இருக்கிறது. அதற்காக கண்மூடித்தனமாக, சங்ககாலத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருந்தார்கள்; ஜாதி சமயமற்ற சமரச பூமியாக தமிழகம் விளங்கியது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. காலம் முழுதும் சேர, சோழ, பாண்டியன் மற்றும் குறுநில மன்னர்கள் என்று ரத்தக் களரியில்தான் இருந்தார்கள். ( http://tthamizhelango.blogspot.com/2013/06/blog-post_9.html “ பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:” என்ற எனது கட்டுரையில் இதுபற்ரி நிறையவே சொல்லி இருக்கிறேன்)

      // தொல்காப்பியத்தில் ஜாதியச் சூத்திரமாக வருகின்ற நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர். இவற்றை மேலோட்டமாக கூறி ஒருமுடிவுக்கு வராமல் மேலும் தொல்காப்பியத்தின் காலம், அக்காலக் கல்வெட்டுக்கள், அக்காலத்தின் பிற சான்றுகள் ஊடாக தெளிவாக்குவது தமிழரது கடமை. //

      பெரும்பாலும் நமது பல தமிழ் ஆர்வலர்கள், தமது கருத்துக்கு ஒத்து வரவில்லை எனும்போது, பொத்தாம் பொதுவாக இவை இடைச் செருகல்கள் என்று முடித்து விடுவது வழக்கமாக இருக்கிறது. நிச்சயம் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் இடைச் செருகலாக இருக்க வாய்ப்பில்லை.

      // இதுகுறித்து ஏற்கனவே ராஜம் அவர்கள் " சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை, இன்ன பிற " என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதில் சங்கக் காலத்தில் ஜாதியங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதையும் தெளிவாக்கியுள்ளார்.//

      இந்த நூல் குறித்து இண்டர்நெட்டில் படித்ததுதான். வாங்கி படித்துப் பார்க்கிறேன். நூல் பற்றிய தகவலுக்கும், தங்களது அன்பான நீண்ட கருத்துரைக்கும் மீண்டும் நன்றி.

      Delete
    4. ஐயா, நான் சொல்ல வருவது சங்கக் காலத்தில் ஏற்றத் தாழ்வுகளோ, பேதங்களோ இல்லை என்பதல்ல. சங்கக் காலத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன, பேதங்கள் இருந்தன அந்த ஏற்றத் தாழ்வுகள் ஜாதிகளின் அடிப்படையில் அல்ல, மாறாக ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பேதங்களின் அடிப்படையில், நாகரிகமானோர், நாகரிகமற்றோர் அதாவது civilised and uncivilised என்பதாக, கல்வி கற்றோர், கல்வியறிவற்றோர் என்பதாக, தொழில் செய்வோர் இழிதொழில் செய்வோர் என்ற தொழிலின் அடிப்படையில், இவை யாவும் ஜாதிகளின் அடிப்படையில் அல்ல, இந்த சமூக பேதங்கள் சங்கக் காலத்தில் மட்டுமல்ல பண்பாடு செழித்த ரோம், சீனம், எகிப்து, சுமேரியா என அனைத்து நாடுகளிலும் மக்களில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற நிலை இருந்தது. அதாவது அரசர்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள் போன்றோர் உயர்வாகவும், உழைப்பாளிகள் போன்றோர் இடைநிலையிலும், திருட்டு, களவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் தொழில், மதுவருந்தி சூதாடுவோர், வேலைக்குப் போகாதோர்கள் தாழ்ந்தோராகவும் கருதப்பட்டது. இதுவே சாதியாக பரிணமித்தும் உள்வாங்கப்பட்டும் இருக்கலாம் ஆனால் அவை ஜாதிகள் கிடையாது. நெடுநல்வாடையில் மதுவருந்திப் போவோரை மாக்கள் எனப் புலவர் கூறுகின்றார், இவ்வாறான ஒழுக்கமற்றோரையும், நாகரிகமற்றோரையும் தான் இழிமக்கள், இழிசனம் என சங்கப் புலவர்கள் பாடுகின்றார்கள். புலையன் என்பது இன்று தான் ஜாதிப் பெயராக இருக்கின்றதே ஒழிய பண்டு அது வெறும் மாமிசம் தின்போரைக் குறிக்கும் சொல்லாகும்.

      ஆக, சங்கக் காலத்தில் மக்கள் இருவகையாக இருந்துள்ளனர் ஒரு சாரார் civilized, educated அதாவது பண்பட்ட, கல்வியறிவுடைய, செல்வங்களுடைய மக்களாக இருந்துள்ளனர், மற்றவர்கள் uncivilized, uneducated என்பதாக இருந்துள்ளனர். இவை தான் ஜாதிகளா என்பதிலிருந்து தான் நாம் ஆராய வேண்டுமே ஒழிய, இவை ஜாதிகள் தான் என ஆதாரமின்றி வலியுறுத்துதல் ஆகாது. பண்டையக் காலத்தை நோக்கும் போது பிராமண, பௌத்த, சமண மற்றும் தமிழ் சமயங்களைச் சேர்ந்த அனைத்து குல மக்களும் பாடல்கள் இயற்றியுள்ளதை அறிய முடிகின்றது. அதனால் அப்போது கல்வி என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கின்றது. அதே போல ஐந்து நிலங்களில் நான்கு நிலங்களைச் சேர்ந்த மக்களும் மற்ற நிலங்களைச் சேர்ந்தவர்களை காதலித்து மணந்துள்ளனர் என்பதும் தெரிகின்றது. இது ஜாதியக் கோட்பாடான அகமண முறை, கல்வி ஒதுக்குதல், தீண்டாமைக்கு பொருந்தவில்லை என்பதை அறிய நேருகின்றது.

      சங்கக் காலம் என்பது வாழ்விடம், அந்த வாழ்விடம் சார்ந்த இயற்கை வளங்கள், அந்த இயற்கை வளங்களுக்கு ஏற்ற உணவு, உடைத் தேடல், அந்த தேடலுக்குத் தக்கவாறான தொழில்கள், இதனடிப்படையில் தோன்றியவை. கடற்கரையில் வாழ்ந்தவன் மீன் பிடிப்பதும், புல்வெளிகளில் வாழ்ந்தவன் ஆநிரை மேய்ப்பதும், ஆற்றோரங்களில் வாழ்ந்தவன் விவசாயம் செய்ததும், இயற்கை அடிப்படையிலானவை, இதன் படியான ஒரு இனக்குழுக்கள் தான் தோன்றியிருந்தன. இந்த இனக்குழுக்கள் தான் உயர்வு, அது தான் தாழ்வு என்பதாகச் சொல்லப்படவில்லை. ஒவ்வொரு இனக்குழுவின் வாழ்விடங்களும் நாடுகளாகவும், அதற்கு அரசர்களும் மக்களும் இருந்துள்ளனர். இவ்வாறான நிலை இடைக்காலங்கள் வரை இருந்துள்ளன. மீன்பிடிக்கும் முக்குவர், கரையாளர்கள் படைவீரர்களாகவும், போர்பயிற்சியாளர்களாவும் இருந்துள்ளனர்.

      தமிழகத்தில் நால் வருணம் என்பது என்றுமே இருந்ததில்லை, ஏனெனில் தமிழகத்தில் வைசியரும் சூத்திரத் தொழில் செய்துள்ளனர், சூத்திரரும் வைசியத் தொழில் செய்துள்ளனர், சத்திரியரும் சூத்திரத் தொழில் செய்துள்ளனர், சூத்திரரும் சத்திரியத் தொழில் செய்துள்ளனர். அதாவது பிராமணர்களைத் தவிர மற்ற மக்களை இரண்டாக மட்டுமே பிடிக்க முடியும் ஒன்று நிலமுடைய வேளாண்மைத் தொழிலை முதன்மையாகவும், இன்னபிற தொழில்களை கூடுதல்களாகவும் செய்தவர்கள், மற்றொருவர் நிலமற்ற மக்கள் அவர்களும் அனைத்து தொழிலையும் செய்துள்ளனர். வாராணாசியில் இருந்து பிராமணர்களை சோழர்கள் கொண்டு வர முன்னர், இங்கு வாழ்ந்த அந்தணர்கள் என்போர் கூட பல தொழில்களைச் செய்த பூசாரிகளே. இன்றளவு கூட கிராமக் கோவில்களில் பூசாரிகள் பல ஜாதியினராக இருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.

      பண்டித அயோத்தி தாசர் sc பிரிவில் தோன்றினாலும் அவர்களின் குடும்பத்தார் வழிவழியாக சித்த வைத்தியம் செய்துள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களையே ஜாதிகள் செய்து வந்துள்ளன. இதனால் தான் ராஜ ராஜன் தமிழர்களை நான்கு வருணங்களாக பிரிக்க முடியாமல் வலங்கை இடங்கையாக பிரித்தான். அவ்வாறிருக்க எப்படி நால் வருணம் கூறும் பாடல்கள் சங்கப் பாடல்களில் எழ முடியும் என்பதே பெரிய கேள்விக் குறி? ஒன்று இந்த பாடல்களுக்கு பொருள் கூறியவர்கள் வடக்கில் இருந்த நான்கு வருணங்களில் பரிச்சயப்பட்டு அவ்வாறான நோக்கில் இங்கு பொருள் கூறியிருக்கலாம்.

      Delete
    5. அதே போல பகவத் கீதை பற்றி சிலர் வினவியிருந்தனர், தற்போதைய வரலாற்றாய்வின் படியும், மரபணு ஆய்வின் படியும் கிபி 100-கள் வரை இந்திய மக்களிடைய கலப்பு மணம் புரிந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன, அதாவது பௌத்தம், சமணம் சரியத் தொடங்கியது வரையில் அகமண முறைகள் இல்லாமல் இருந்திருக்கின்றன. கிமு 100-யில் தான் மனுஷ்மிருதி மற்றும் புராணங்கள் படைக்கப்பட்டு பரப்பப்பட்டு இருக்கின்றன. வடக்கில் தோன்றிய சுங்க, குப்த ஆட்சிகளில் பிராமணர்களது ஆட்சியாக இருந்தன. அக் காலக் கட்டங்களில் தான் மகாபாரதம், ராமாயணம் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. கிமு 100-களில் இந்தியாவை தாக்கிய ஹூனர்கள் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் வருவதில் இருந்தே இந்த நூல்கள் அதன் பின் எழுதப்பட்டன என்பதை அறியலாம். பகவத் கீதையானது கிபி 5-ம் நூற்றாண்டின் மொழியமைப்பில் இருப்பதால் இது பிற்காலச் சேர்க்கை என்பதையும் நாம் அறியலாம்.

      கிமு 100-களில் தோன்றிய மனுஸ்மிருதிக் கொள்கையானது சதாவாகனர்களால் தான் தென்னிந்தியாவிற்கு வந்தன, ஆக கிபி 3-ம் நூற்றாண்டின் பின் தான் ஜாதிய கொள்கைகள் தென்னிந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். இந்தக் காலக் கட்டமானது சங்கம் மருவிய காப்பியக் காலம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். காப்பியங்களில் ஜாதியக் குறிப்புக்கள் கிடைப்பதும் இதனால் தான்.

      ஆனால், முழுமையான ஜாதிய சமூகமாக தமிழகம் கிபி 8-ம் நூற்றாண்டின் பின் தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் பக்தி இலக்கியங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பலரும் பங்கெடுத்துள்ளனர், இவர்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிகின்றது. தற்போது தமிழகத்தில் இருக்கின்ற சாதிகள் அனைத்தும் ராஜராஜனின் வலங்கை, இடங்கைப் பிரிவுகளின் பின்னரே தோன்றியவை. இவை சங்ககாலம் தொட்டே இருந்து வந்த ஐந்து நிலங்களில் வாழ்ந்த வெவ்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கி உண்டாக்கப்பட்டு இருக்கின்றது.

      சங்கக் காலத்தில் ஜாதியமைப்புக்கள் எவ்வாறானவை என்பதை வெறும் சங்கப் பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு நம்மால் முடிவுக்கு வந்துவிட முடியாது என்பதையும் நான் ஆமோதிக்கின்றேன். ஏனெனில் எந்தவொரு கல்வெட்டுக் குறிப்புக்களில் ஜாதிகள் இடம்பெறவில்லை, கிபி 11-ம் நூற்றாண்டின் பின்னரே கல்வெட்டுகளில் ஜாதிகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறான பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தே ராஜம் அம்மையார் தமது நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலை முழுமையாக வாசித்த பின்னர் நாம் நேர் எதிர் விவாதங்களில் ஈடுபடுவதே சிறப்பானது எனத் தோன்றுகின்றது. சங்கக் காலத்தில் ஜாதிகள் இருந்தனவா என்பதை சங்கப்பாடல்களுக்கு வெளியே கல்வெட்டுக்கள், அகழ்வாய்வுகள், புவியியல் ஆய்வுகள், அதேக் காலக் கட்டத்தில் இங்கு வந்து சென்றவர் தந்த பன்னாட்டுக் குறிப்புக்கள், மரபணு ஆய்வுகள் எனப் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே உண்மை நிலவரங்களை வெளிக்கொணர முடியும். அதுவரை ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே அவரவர் விருப்பத்திற்கு எழுதியும் பேசியும் வருவார்கள்.

      Delete

    6. அன்புள்ள எழுத்தாளர் நீலன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!! இதற்கான மறுமொழியை, விவாதத் தொடர் விட்டு போகாமல் இருக்க , (எது முந்தையது, பிந்தியது என்ற வரிசைக்கிரமம் கருதி தனியே கீழே தந்துள்ளேன்.

      Delete
  6. ஆழமான அருமையான
    நேர்மையான அலசல்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Replies
    1. எனது மாற்றுச் சிந்தனை கட்டுரைக்கு பாராட்டுரை தந்த கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. வணக்கம் அய்யா,
    நானும் அந்த பதிவினைப் படித்து அங்கேயே அது அவ்வாறு இல்லை என்று சொல்லிவந்தேன், இங்கே திரு நீலன் அவர்களின் கூற்றினை ஒட்டியே என் கருத்தியையும் பதிவு செய்ய விழைசிறேன்,
    இச் சொற்கள் சுட்டுவது பொருள் நிலைக்குறித்தே,
    தன்னை விட பொளாதார நிலையில் உயர்ந்தவன்,
    தன்னில் சமமானவன்,
    தன்னைவிட தாழ்ந்தவன்,
    சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது எனும் கூற்றினை ஏற்க இயலவில்லை,
    தொல்காப்பியர்
    உயர்திணைக்கும் அஃறிணைக்கும் விளக்கம் சொல்லும் போது,
    மக்கள் மக்கள் அல்லார்,
    ஆனால் பின்னால் வந்தவர்கள் தெய்வம் நரகம் என்றெல்லாம் சொல்லவில்லையா?
    பின்னர் வந்தவர்கள் தங்கள் கருத்துகளைத் தினித்ததாகத்தான் தோன்றுகிறது,
    இன்னும் தேடுவோமே,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுடைய கருத்துரையைப் படித்தவுடன், தங்களுக்கு தமிழ் இலக்கியத்தில் இருக்கும் வாசிப்பு ஆர்வத்தினையும் அதில் உள்ள பயிற்சியையும் தெரிந்து கொண்டேன். மேலே எழுத்தாளர் நீலன் அவர்களுக்கு தந்த பதிலிலேயே உங்களுக்குண்டான மறுமொழியும் இருக்கிறது. எனவே தயவுகூர்ந்து அந்த பதில்மொழியைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  9. தொல்காப்பியக் காலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு முந்தையதா பிந்தையதா.?பகவானே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பிரித்ததே அவர் என்கிறாரே. ஆனால் சாதீயம் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது என்பது மறுக்க முடியாதது.

    ReplyDelete
    Replies
    1. வடமொழி காப்பியங்கள் பகவத் கீதை, காலஙகள் தொல்காப்பியகாலத்துக்கு வெகுமுன்பேயென்று என் கருத்து. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஒரு நூற்றாண்டு என்று சிலரும் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று இரா பி சேதுப்பிள்ளைபோன்றோரும் முதல்சங்க காலமென்கிறார்கள். இவ்விரு காலங்களில் எதுவாக இருந்தாலும் வடமொழி காப்பியங்கள் முன்பு வந்தவைமட்டுமல்ல; அதன் விரிவு அதன் வாழ்க்கைக் கருத்துக்கள் தமிழ்மண்ணிற்கு கொண்டுவரப்பட்டு நிலைகொண்ட காலத்தைத்தான் தொல்காப்பியர் விவரிக்கின்றார். அவருக்கு முன்பே தமிழ் மொழி இலக்கண வளர்ச்சியும் தமிழர் நிலையான நாகரிக வாழ்க்கை, வாழ்க்கைக்கொள்கைகள், தெய்வ வழிபாடுகள் கொண்டவர் என்பது அவர் தான் ஏற்கனவே இருந்த தமிழையும் தமிழர் வாழ்க்கையையும் பற்றித்தான் பேசுகிறேன் என்பது போல நிறைய எழுதுகிறார்.

      ஆக, சங்ககாலத்தில் வருணக்கொள்கை இருந்ததா, தீண்ட்ததகாத பஞ்சமர்கள் வாழ்ந்தனரா என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லாமே வேரூன்றிய பின்னர், இருந்தனவா என்ற கேள்வி எப்படி எழும்? இழிசினர், இழிபிற்ப்பாளர் என்பது பஞ்சமர்தான் எனப்தை அறியலாம். திரு இளங்கோ கொடுத்த உபாயத்தின்படி - இடைச்செருகல்கள் என்று சொல்லி தமிழர்கள் வரலாற்றைப் பூசி மெழுகலாம்.

      Delete
    2. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! தொல்காப்பியம், பகவத்கீதை – இந்த இரண்டு நூல்களின் கால ஆராய்ச்சியில் எது முந்தியது, எது பிந்தியது என்று எனக்கு தெரியாது. இதில் வடவர், தமிழர் என்று சொல்லி அவரவர் கருத்தை மிகைப்படுத்த காணலாம். ஜாதீயம் இந்தியாவை பிடித்த புற்றுநோய்.

      Delete
    3. சகோதரர் பால சுந்தரம் விநாயகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தொல்காப்பியம், பகவத்கீதை – இந்த இரண்டு நூல்களின் எது முந்தியது, எது பிந்தியது என்ற கால ஆராய்ச்சி பற்றி இதுவரை படித்ததில்லை. சங்க இலக்கிய பாடல்களில் கால ஆராய்ச்சி செய்த வையாபுரிப் பிள்ளை அன்று பட்ட பாட்டை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இன்று அவரை எல்லோரும் மறந்து விட்டனர்.

      Delete
  10. ஐயா வணக்கம்.

    இன்று காலை தங்களின் இந்தப் பதிவினைப் பார்த்தபோது நீண்டுவிடக் கூடிய பின்னூட்டத்திற்கு நேரமின்மையால் மாலை படித்துக் கருத்திடலாம் எனக் கருதிப் பணிக்குப் புறப்பட்டேன்.

    மாலை சற்று என் பணிகளை முடித்தபின் தங்களின் தளத்திற்கு வந்த போது நான் நினைத்திருந்த கருத்துகளுள் பலவற்றை மதிப்பிற்குரிய நீலன் அவர்கள் சொல்லியிருந்தார்.

    இங்கு நான் சொல்வன எனது கருத்துகள்தான்.

    முதலில் இந்த ஈ, தா, கொடு, என்பன, பொருளாதார அடிப்படையில் அமைவன.
    இல்லாதோன் இருப்போனிடத்தில் கேட்பதையும்,
    அதிகாரத்தில் இருப்போன் இல்லாதோனிடம் கேட்பதையும்,
    ஒத்தவன் மற்றவனிடம் கேட்பதையும் குறித்தமைவன.

    இழிவினை உடையோன் இழிந்தோன் என ஈண்டு பொருள்கொள்ளல் சரியாமே தவிர,
    சாதீயப் பாகுபாடுகளால் இழிந்தவன் எனக்குறிப்பிடுவது அத்துணைப் பொருத்தமுடையதாக எனக்குத் தோன்றவில்லை.

    “ ஈயென இரத்த லிழிந்தன்று, அதனெதிர்
    ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று,
    கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று, அதனெதிர்
    கொள்ளே னென்றல் அதனினு முயர்ந்தன்று “

    என்னும் புறப்பாடல் ஈயென இரத்தலின் இழிதகைமையையும் கொள்ளெனக் கொடுத்தலின் மாட்சியையும் இலக்கியத்தில் வலியுறுத்தி அமைகிறது. இவண் ஈ எனக்கேட்பவன் யாராயிருப்பினும் அவன் இழிந்தோன் எனப்படுவான்.

    இன்னும் சான்றிற்கு ஒரு பாடலைக் காட்ட முடியும்.

    “ தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
    வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
    கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
    உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
    பிறவு மெல்லா மோரொக் கும்மே
    செல்வத்துப் பயனே யீதல்
    துய்ப்பே மெனினே தப்புந பலவே. “

    இது புறநானூற்றில் அமைந்த மதுரைக் கணக்காயனார் நக்கீரரின் பாட்டு.
    இங்கு ‘பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே‘ என்பதைக் கவனிக்க வேண்டும். நாடாளும் மன்னனையும், காட்டில் அலையும் வேடனையும் ஒரே தராசில் நிறுக்கிறார் புலவர்.
    ஒருவேளை சமூகப் படிநிலையில் வேட்டுவர் காட்டுமிராண்டிகளாக, இழிசனராகக் கருதப்பட்டிருந்தால் ஒரு மன்னனுக்கு அவனை ஒப்பிட முடியுமா?

    அந்தச் சமுதாயம் அதனை அனுமதித்திருக்குமா?

    சங்கம் ஏறினதாகச் சொல்லப்படும் இப்பாடல்களை அன்றைய நடைமுறை வழக்கிற்கு மாறாகச் சங்கப்புலவர் குழாம் ஏற்றிருக்குமா
    ....................................................................................................தொடர்கிறேன்.

    ReplyDelete
  11. சங்ககாலம், தம் வரம்புகள் கடந்த இனக்குழுக்களின் ஊடாட்டம் நிகழ்ந்த காலம் என்பதை இனவரைவியல் (Ethnography) ஆய்வாளர்கள் ஒப்புகின்றனர்.

    அது குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமென நிலப்பாகுபாட்டில் பிரிந்திருந்த மக்கள் தம் எல்லைகளை விட்டுப் பிற நிலங்களுக்கு வரத்தலைபட்ட காலம்.

    கொள்வதும் கொடுப்பதுமாய் வணிகம் தொடங்கிய காலம்.

    அக்காலத்தில், பொருளாதார வளர்ச்சி என்பது மற்ற பகுதிகளைவிட மருதநிலத்திலும், நெய்தலின் துறைமுகப் பட்டினங்களிலும் மேம்பட்டிருத்தல் இயல்பானதாகும். இன்று நாம் ஒரு மாநிலத்தவரை இன்னொருவர் இழிவு செய்து தம் குடியை உயர்வாக எண்ணிக் கொள்வதைப் போல் இந்நில மக்கள் தம்முள் தாமே உயர்வென்றும் பிறர் தாழ்வென்றும் எண்ணும் இம்மனப்பாங்கு இருந்திருக்கிறது.

    வேட்டுவர்கள் தாங்களே உயர்வானவர்கள் என்றும், மருதநிலத்தவர் நாகரிகம் தம்மிடமே உள்ளது என்றும் இப்படி ஒவ்வொருவரும் தம்குடிதான் உயர்ந்தது என்று நினைக்கத்தலைபட்ட காலம்.

    “ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து ” என்னும் புறப்பொருள் வெண்பா மாலையின் பாடல் கூட, போர்ச்செருக்கில் ஒரு இனம் தன்னை உயர்வாகவும், இன்னொரு இனத்தை ‘இவனெல்லாம் எங்களுடன் வந்து மோதுவதா? நேற்றுப் பிறந்த பயல்’ எனத் தருக்குற்றும் அறைகூவும் பெருமிதப்பாடல்தான்.

    இன்று இங்குப் புலமிக்கவர்களால் பலவாறாக இப்பாடலுக்குப் பொருள் விதந்துரைக்கப்பட்டாலும், மோதும் இருகுடியும் தமிழக்குடியே என்பது அந்நூல்பார்க்கப் புலனாவது. இப்பாடலை மேற்கோள் காட்டும் பலரும் வசதியாக இதனை மறந்துவிடுகின்றனர்.

    நீங்கள் காட்டிய ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனின் பாட்டு இரண்டு விதங்களில் முக்கியமானது.

    முதலில் சொல்பவன் நீங்களே குறிப்பிடுவதைப் போல ஒரு அரசன்.

    வேற்றுமை தெரிந்த நாற்பால் என்பது உண்மைதான்.

    அது அச்சமுதாயத்தின் இயக்கம் சார்ந்த தொழில் மரபு.

    ‘நாற்பால்’ என்பதற்கு என்னைப் பொருள் சொல்லச் சொன்னால், அது ஏன் குறிஞ்சி, முல்லை மருத நெய்தல் மக்களாக இருக்கக் கூடாது என்று கூடச் சொல்வேன். ( நல்லவேளை யாரும் சொல்லவில்லை. )

    அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகாட்டும்.

    அரசன் சொல்கிறான்.

    என் நாட்டில்,

    அவன் பெரியவனா இவன் பெரியவானா அல்லது அந்தக்குடி பெரியதா இந்தக்குடி பெரியதா எனக் கேட்டால்,

    எந்தக் குடியிலிருந்து வந்தவனா இருந்தா என்ன? எனக்கு எவன் படிக்கிறானோ, எவன் கல்வி அறிவுள்ளவனாக இருக்கிறானோ அவன்தானடா பெரிவன்.

    மத்தவனெல்லாம் அவனுக்குக் கீழ்த்தான்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எவ்வளவு தெளிவான ஓர் அரசனின் அரசின் பிரகடனம் இது.

    தன்குடி மேற்பால் என்றும் பிறர்குடி கீழ்ப்பால் என்றும் நினைத்தவர்களின் செவிட்டில் நெடுஞ்செழியன் அறைந்த அறையிது.

    இப்பாடல் இன்னொன்றையும் நமக்குச் சுட்டுகிறது.

    இன்னின்ன சாதிதான் படிக்க வேண்டும். இவர் இழிசனர் படிக்கக் கூடாது. கல்வி கற்க அனுமதியில்லை என்ற நிலை சங்க காலத்தில் இல்லை என்பதையும் இது காட்டுகிறது.

    உயர்வுக்கான வழி இது.

    உயர விரும்புபவர்கள் வருக என அரசன் அழைக்கிறான்.

    .......................................................................................................தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சங்க இலக்கியப் புலவர்களிலேயே நீங்கள் பல தொழில் செய்பவர்களைக் காணலாம்.

      எனவே தொழில் சார்ந்தும் மண்சார்ந்தும் அவர்களிடையே பிரிவினைகள் இருந்தாலும் சாதி என்னும் வித்து வேரூன்றி தன் நச்சுக் கனிகளைப் பரப்பத்தொடங்காத காலமாகவே சங்க காலம் இருந்திருக்க வேண்டும் என எனக்குப் படுகிறது.

      சாதிக்கான வித்துச் சங்ககாலத்திலும் தொல்காப்பியத்திலும் இல்லையா என்று கேட்டீர்கள் என்றால் இருக்கிறது அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நினைப்பதுபோல் அது அதீதமில்லை. மிகக் குறைந்த அளவு. புரையோடிப்போன புண்ணாய் அது அக்கால கட்டத்தில் இல்லை என்பதை நம்மிடம் இருக்கின்ற இலக்கண இலக்கியங்களின் வழி நம்மால் உறுதியாய்க் கூற முடியும்.
      வேட்டுவ குடியிலிருந்து பெண்ணெடுக்க விழைந்த அரசரையும், தன் குடிப்பெருமை கூறி மகள் மறுத்த வேட்டுவனையும் இவ்விலக்கியங்கள் காட்டுகின்றன.

      'நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
      மகட்பாடு அஞ்சிய மகட்பால் “

      என்றிதனைக் காட்டும் தொல்காப்பியம். நீங்கள் சான்று காட்டிய புறப்பொருள் வெண்பா மாலையில் பழங்குடி ஒன்று வேந்தனுக்குப் பெண்மறுத்துக் காட்டும் பெருமிதப்பாடல் உண்டு.

      சாதி வேரூன்றிய மரபில் இதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவானதே.
      தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்ற நூற்பெயரால் அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் அல்லர் என்றும் அது பல ஆசிரியர்கள் பல்வேறு காலகட்டத்தில் சேர்த்திணைத்த நூற்றொகுதி என்பதும் என் தனிப்பட்ட ஆதாரமற்ற கருத்து.

      இவ்விடுகையின் தலைப்பு நோக்க நீங்கள் பாட்டியல் நூல்கள் குறித்துச் சொல்வீர்கள் எனக் கருதினேன்.

      பதிவின் பிற்பாதி அது பற்றியதுதான்.

      நம்மொழியையும் மெல்ல மெல்ல உட்செரித்துவிடலாம் என்று வடநூல்வழித் தமிழாசிரியர்கள் கண்ட கனவுதான் இது போன்ற சாதிப்பாகுபாட்டினுள் தமிழ் எழுத்துகளை அடக்க முற்பட்டது.

      எழுத்துகளை மட்டுமல்ல வெண்பா போன்ற பாவகைகளைக் கூட அந்தணர்க்குரியபா வெண்பா என்றும், சத்திரியர்க்கு உரியது ஆசிரியப்பா என்றும் கலிப்பா வணிகர்க்குரியது என்றும் வஞ்சிப்பா வேளாளர்களுக்கு உரியது என்றும் இவர்கள் அடித்த கூத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

      காலவெள்ளம் இக்கசடுகளை அடித்துச் சென்றது.

      பேராசிரியர் நச்சினார்க்கினியர் போன்ற தமிழ்ப்பெருமக்களிடம் சிற்சில குறைகள் இருந்தாலும் அவர்கள் இதுபோன்ற வடநூல்வழித்தமிழாசிரியரின் கருத்துகளை மறுத்தொதுக்குகின்றனர்.

      இறுதியாய்த் தொல்காப்பியத்தையோ சங்க இலக்கியத்தையோ துதிபாட இவற்றைச் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவற்றிற்கு என் துதி வேண்டியதில்லை. அவற்றில் நான் விளங்கிக் கொள்ளாத ஏன் இப்படி எனக் கேட்டுக் குறித்துவைத்திருக்கின்ற , மாறுபடுகின்ற இடங்கள் உண்டு.

      வருண பேதம் காட்டும் இடமாக நீங்கள் உடன்படும், ஈ, தா, கொடு என்பதை விட நால்வருணம் பற்றி விளக்கும் மரபியலை இதற்கான நேரடிச் சான்றாகக் கொள்ளலாம் என்று எனக்குப் படுகிறது. அது மிக வெளிப்படையானது.
      அப்பகுதி இடைச்செருகலாக அமைந்தது என்னும் கருத்திருந்தாலும், நான் கண்டவரை, வருண இயல்புகள்தான் தொல்காப்பிய மரபியலில் சொல்லப்பட்டுள்ளனவே தவிர, அங்கு அது ஒருபோதும் பாகுபாட்டை ஏற்றதாழ்வைக் காட்டிச்செல்வதாக இல்லை.

      ஒரு வருணத்தார் பற்றிச் சித்தரிக்கும் இலக்கியப் பகுதியில் இருந்து அவர் சார்ந்த குடியை உய்த்துணரவே இப்பகுதியும் தரப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

      ” சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைக்கிறது. இது குற்றமே.”
      எனபதான முடிவை நீங்கள் ஈ, தா, கொடு, என்னும் சொற்களைக் கருத்திற் கொண்டு எடுப்பீர்களானால் என்னால் அதனோடு உடன்பட முடியவில்லை.

      ஈதலையும் ஏற்றலையும், கொடுத்தலையும் பெறுதலையும், கொள்ளலையும் குறித்துச் சங்க இலக்கியங்களிலேயே இதற்குச் சான்று காட்ட இன்னும் பல இடங்கள் உண்டு.

      இந்நீண்ட பின்னூட்டம் பதிவு காணத் தோன்றிய என் கருத்தேயன்றி வேறன்று.

      அதிகமாக நீண்டுவிட்ட என் பின்னூட்டத்திற்கு தங்களின் தளத்தில் அனுமதிக்கப்படுகின்றமைக்கு என் நன்றியும். தங்களின் தமிழ்ப்பணிக்கு எனது வணக்கங்களும்.

      மீண்டும்

      நன்றி.

      Delete
    2. ஐயா வணக்கம்.

      சில காரணங்களால் மீண்டும் வருகிறேன்.

      தங்கள் இடுகையை மனதிற்கொண்டு மீளப்பாராமல் தட்டச்சுச் செய்தேன் என்பதால் தாங்கள் பாக்களின் வருணம் பற்றிக் கூறிய செய்திகளைக் கவனியாமல் கூறவில்லை எனக் கருதி நாம் மீண்டும் கூறியது கூறினேன்.

      இலக்கணம் இது குறித்து என்ன சொல்கிறது. உரையாசிரியர்கள் ஏதேனும் சொல்கிறார்களா என்றும் பார்த்தேனில்லை.

      என் வாசிப்பில் இந்நூற்பா பற்றி, நான் குறித்திருக்கும் சில குறிப்புகளில் இருந்து இப்பதிவோடு தொடர்புடைய சிலவற்றை இங்குப் பகிர்ந்து போகிறேன்.

      எனக்கு இம்மீள்பார்வையால் இன்னொரு தெளிவு கிடைத்தது.
      அது நச்சினார்க்கினியர் சொல்லும் உரை ஒன்றிற்கான இலக்கிய ஆதாரம்.

      இளம்பூரணத்தின் படிச் சொல்லதிகாரத்தின் 316 ஆவது சூத்திரம்,

      “ஈ தா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
      இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே“

      என்கிறது.

      இரவின் கிளவி என்பதால், இவை மூன்றும் ஒன்றைப் பெறுவதற்காகக் கேட்கப்படும் கிளவிகள் என்கிறது தொல்காப்பியம். அதில் மாற்றுக் கருத்து உங்களிடமும் இல்லை.

      சரி, இவைதவிர ஒருவரிடம் இருந்து ஒன்றைக் கேட்டுப் பெறுவதற்குத் தமிழில் வேறு சொற்களே இல்லையா?

      இருக்கின்றன.

      அவை, ‘வழங்கு, உதவு, வீசு ’ போன்ற சொற்கள் என்கிறார் சேனாவரையர்.

      பிறகேன் இம்மூன்று சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை ஒருவரிடம் ஒன்றைப் பெறுவதற்கு எனச் சிறப்பித்துச் சொல்லவேண்டும் என்ற கேள்விக்கும் சேனாவரையர் பதில் தருகிறார்.

      ஒன்று இச்சொற்களை எப்படிப் பயன்படுத்து என்பதில்வேறுபாடு இருக்கிறது.

      மற்றொன்று, ‘இவை பிற பொருள்மேலும் வருதலும் உடைமையான்’ என்று காரணம் சொல்கிறார் அவர்.

      எப்படிப் பயன்படுத்துதல் என்பதிலிருந்து யார் பயன்படுத்துவது என்பதில்தான் இப்பதிவின் சர்ச்சை இருக்கிறது.

      அதை அடுத்துப் பார்ப்போம்.

      அதென்ன.. “இவை பிற பொருள்மேலும் வருதலும் உடைமையான்’“ எனச் சேனாவரையர் சொல்வது…?



      தா

      கொடு

      என்னும் இம்மூன்று சொற்களும் இரத்தல் என்ற பொருளன்றி,

      (மொய்க்கும்) ஈ

      தாவுதல்


      வளைவு

      என்னும் பொருளினையும் குறித்து நிற்கும் . எனவே இம்மூன்று சொற்களையும் ஆசிரியர் எடுத்தாண்டார் என்கிறார்.

      நச்சினார்க்கினியார் இம்மூன்று சொற்களும் இரத்தல் என்னும் இப்பொருண்மையில் வராமல், மேற்காட்டிய வேறு பொருளில் வருவதற்குப் பின்வரும் இலக்கியச்சான்றுகளைக் காட்டுகிறார்

      ...............................................................................தொடர்கிறேன்.

      Delete
    3. “ஈச்சிற கன்னதோர் தோல்அறினும் வேண்டுமே
      காக்கை கடிவதோர் கோல். ( நாலடி 41.)

      என்பதை ஈ என்னும் பொருளுக்கும்,

      தா இல் நல் பொன் தைஇய பாவை
      விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
      மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
      கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
      முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், ( அகநானூறு 212)


      என்பதைத் தா என்னும் பொருளுக்கும்,


      கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை ( சிலம்பு )

      என்பதைக் கொடு என்னும் பொருளுக்கும் என,

      ஈ, தா, கொடு என்னும் சொற்கள் இரத்தல் கிளவிகளாக வராமல் வேறு பொருளில் வருமிடங்களுக்கான இலக்கிய ஆதாரங்களைத் தருகிறார்.

      இச்சொற்கள் யாருக்கு உரிய என்று நச்சினார்க்கினியர் விளக்கும் இடம் சுவையானது,

      அவர் சொல்வது,

      “ இவை மூன்றும் இல்லென இரப்போர்க்கும், இடனின்றி இரப்போர்க்கும், தொலைவாகி இரப்போர்க்கும் உரிய என்றுணர்க”

      இங்கு

      இல் என இரப்போர் என்பவர் வறுமையால் இரப்போர்,

      இடனின்றி இரப்போர் என்பவர், செல்வந்தராய் இருந்து அதை எல்லாம் இழந்து வேறேதும் வழியின்றி இரப்போர்.

      தொலைவாகி இரப்போர் என்பவர்,

      இருந்த பொருளைத் தொலைத்துவிட்டு வந்து இரப்பவர்கள்.

      பின்வரும் கலித்தொகைப் பாடல் என் நினைவிற்கு வருகிறது.

      நச்சினார்க்கினியர் இங்கிருந்துதான், இக்கருத்தைப் பெற்றிருக்க வேண்டும். ( சொல்லதிகார நச்சினினார்க்கினியர் உரையில் இங்கிருந்து இப்பாடற் கருத்தைத்தான் இவர் எடுத்தாண்டார் என்ற இக்குறிப்பு இல்லை )

      “இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இளிவெனக்
      கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ


      ‘தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
      மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ


      ‘இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’என,
      கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ“

      இவை கலித்தொகையின் இரண்டாம் கலியில் வரும் வரிகள்.

      இம்மறுவாசிப்பின் பொழுது, இடம் சுட்டாமல் நச்சினார்க்கினியர் பாடலின் பொருளை மட்டும் உரையாகச் சொன்ன இப்பகுதியிலிருந்து பாடலைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி எனக்கு.


      .......................................................................தொடர்கிறேன்.

      Delete
    4. இனி ஈ எனும் சொல் இரத்தற் பொருளில் வருகின்றமைக்குச் சில சான்றுகள்,

      ஔவை அதியனிடம் வேண்டும் பாடல்,

      “சிறுகட் பெறினே எமக்கீயும் மன்னே“ ( புறம் 235 ) என்பது,

      இல்லாதோன் இருப்பவரிடம் கேட்கும் சொல்லாகவும்,
      இருப்பவன் இல்லாதவர்க்குத் தரும் செயல் குறித்தும் இச்சொல் ஆளப்படுவதாகவே உரையாசிரியர் மூவரும் கருதுகிறார்கள்.


      தா என்னும் சொல் தம்மில் ஒத்த ஒருவரிடமிருந்து ஒருவர் எதையேனும் பெறக் கேட்கும் சொல்லாகவே இளம்பூரணரும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையாரும் காண்கின்றனர்.

      நச்சர், இதில் கூடுதலாக,

      தா என்னும் இந்தச் சொல் ‘கொடு’ என்ற சொல்போல வெகுசில இடங்களில் பயன்படுத்தப் படுதல் உண்டு என்பார்.

      இரப்போன் அடைய முடியாத பொருளைக் கேட்கின்ற போதும், ( “என் நலந் தாராய்“ கலி – 128 – என் நலனை எனக்குத் தா எனக் கேட்கும் போது அதை ஒருவரால் கொடுக்க முடியாது ),

      வலிமையால் ஒருவனிடத்தில் இருந்து ஒன்றைப் பிடுங்கிக் கொள்கின்ற போதும் ( எனக்குத் தா )

      இந்தத் தா என்னும் சொல் கொடு என்னும் சொல்லின் பயன்பாட்டில் வருகிறது என்பார்.

      “ கொடு போல் வருவன கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண் செல்லாதனவற்றை இரந்தனவாம். ஒப்போன் கூற்று என்றாரேனும் சிறுபான்மை வலியாற் கொள்ளுமிடத்தும் தா என்பது வரும் எனக் கொள்க“

      என்பது நச்சர் உரை.

      மூன்றாவதாக உள்ள கொடு என்னும் சொல் ஒரு கட்டளை போன்றது.

      அது இருப்பவன் தன்னைவிடப் படிநிலையின் கீழாக உளளவனிடம் கேட்பது.


      இச்சொற்களின் இத்தன்மையிலான பயன்பாட்டிற்கு மரபுரையாசிரியர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து சான்றுகளையும் காட்டிச் செல்கின்றனர்.

      அவ்விடத்தில் எங்கும் சாதி என்னும் வருணப் பாகுபாடு ஊடாடியதாகத் தெரியவில்லை.

      ஔவைக்கு அதியன் ஈந்ததும் அவள் பெற்றதும் இருப்பவன் இல்லாதவளுக்கு ஈந்ததாகவே கொள்ள முடியும்.

      உரையாசிரியர் குறிப்பாக வருணாசிர தர்மத்திற்கு வாழ்க்கைப் பட்ட சேனாவரையர் போன்ற வைதிக உரையாசிரியர்கள், ‘‘முளிதயிர் பிசைந்த காந்தள் நல்விரல்‘‘ என்ற குறுந்தொகைப் பாடலைக் கூட இது அந்தண குடும்பத் தலைவியைச் சித்தரிக்கும் பாடல் என்று வலிந்து உரையெழுதியதாக நான் கருதும் நச்சினார்க்கினியரே கூட இவ்விடத்தில், உயர் வருணத்தார் கீழ் வருணத்தார்க்குப் பயன்படுத்தும் சொற்கள் என்பது போன்று எழுதிச் செல்லவில்லை.

      ஆக, ஈ, தா, கொடு என்ற சொற்கள் சாதி அடையாளத்தோடு பயன்படுத்தப்படுவதாய் இலக்கண நூலின் உரையாசிரியர் சொல்லவில்லை, இச்சொற்கள் சங்க இலக்கியத்தில் பயில வரும் இடங்களில் அவை சாதி பாகுபாட்டோடு வழங்கவும் பெறவில்லை.

      இலக்கண இலக்கியங்களில் இச்சொற்கள் பொருளாதார ஏற்றதாழ்வைக் காட்டுவனவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

      நம்மிடம் உள்ள இலக்கண இலக்கிய ஆதாரங்கள் யாவும் இப்படி இருக்க எதன் அடிப்படையில் இந்தச் சொற்களைச் சாதீயம் சார்ந்ததாய் அடையாளப்படுத்த முடியும்?

      நன்றி.

      Delete
    5. சிறப்பான விளக்கங்கள்! நன்றி.

      Delete
    6. மேலே சுருக்கமான கருத்துரை தந்த, வேதாந்தி (வெட்டிப்பேச்சு) அவர்களுக்கும், என்.பக்கிரிசாமி (ஊக்கமது கைவிடேல்) அவர்களுக்கும் நன்றி.

      Delete
    7. அன்புள்ள ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். தங்களுக்கான மறுமொழியை, விவாதத் தொடர் விட்டு போகாமல் இருக்க , (எது முந்தையது, பிந்தியது என்ற வரிசைக்கிரமம் கருதி கீழே தந்துள்ளேன்.

      Delete
  12. ஆச்சர்யமாக இருக்கிறது.

    அது சரி. இந்த சாதியைத் தொட்டால் குளவிகளைப்போல கும்பலாய் பறந்து வருவார்களே..!
    ஆனாலும் சளைக்காமல் பின்னூட்டத்திற்கு பதிலலித்துள்ளீர்கள்.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் கருத்துரை தந்த வேதாந்தி (வெட்டிப்பேச்சு) அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். ஆன்மீகம், ஜாதி, அரசியல் (குறிப்பாக பா.ம.க), இலங்கைத் தமிழர்கள் பற்றி எழுதினால் கும்பல் கும்பலாய் வந்து கொட்டுவார்கள். அதிலும் அனானிகள் பெயரில் அர்ச்சனை செய்வார்கள். முன்பு ஒருமுறை ஆன்மீகம் பற்றி எழுதிய போது கொட்டு வாங்கி இருக்கிறேன். நானும் திரும்ப கொட்டி இருக்கிறேன்.

      Delete
  13. நல்ல விவாதத்தைத் தெர்டங்கி ஒளிவு மறைவு இல்லாமல் விவாதித்து உறுதியாகக் கூறியுள்ள உங்களின் பாணி பாராட்டத்தக்கது. எதையும் பூசி மெழுகவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் தங்களின் முயற்சி அருமையானது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  14. மறுமொழி >அன்புடன் நீலன் 21 July 2015 ( 2 & 3 )

    அன்புள்ள எழுத்தாளர் நீலன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி! தாங்கள் சொன்ன கீழே உள்ள சில கருத்துக்கள் எனக்கு புதியவை. அவைகளை உள் வாங்கிக் கொண்டேன்.

    /// ஐயா, நான் சொல்ல வருவது சங்கக் காலத்தில் ஏற்றத் தாழ்வுகளோ, பேதங்களோ இல்லை என்பதல்ல. சங்கக் காலத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன, பேதங்கள் இருந்தன அந்த ஏற்றத் தாழ்வுகள் ஜாதிகளின் அடிப்படையில் அல்ல, மாறாக ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பேதங்களின் அடிப்படையில், நாகரிகமானோர், நாகரிகமற்றோர் அதாவது civilised and uncivilised என்பதாக, கல்வி கற்றோர், கல்வியறிவற்றோர் என்பதாக, தொழில் செய்வோர் இழிதொழில் செய்வோர் என்ற தொழிலின் அடிப்படையில், இவை யாவும் ஜாதிகளின் அடிப்படையில் அல்ல, ///

    /// ஆக, சங்கக் காலத்தில் மக்கள் இருவகையாக இருந்துள்ளனர் ஒரு சாரார் civilized, educated அதாவது பண்பட்ட, கல்வியறிவுடைய, செல்வங்களுடைய மக்களாக இருந்துள்ளனர், மற்றவர்கள் uncivilized, uneducated என்பதாக இருந்துள்ளனர். இவை தான் ஜாதிகளா என்பதிலிருந்து தான் நாம் ஆராய வேண்டுமே ஒழிய, இவை ஜாதிகள் தான் என ஆதாரமின்றி வலியுறுத்துதல் ஆகாது. ///

    /// வாராணாசியில் இருந்து பிராமணர்களை சோழர்கள் கொண்டு வர முன்னர், இங்கு வாழ்ந்த அந்தணர்கள் என்போர் கூட பல தொழில்களைச் செய்த பூசாரிகளே. இன்றளவு கூட கிராமக் கோவில்களில் பூசாரிகள் பல ஜாதியினராக இருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். ///

    /// கிமு 100-களில் தோன்றிய மனுஸ்மிருதிக் கொள்கையானது சதாவாகனர்களால் தான் தென்னிந்தியாவிற்கு வந்தன, ஆக கிபி 3-ம் நூற்றாண்டின் பின் தான் ஜாதிய கொள்கைகள் தென்னிந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். இந்தக் காலக் கட்டமானது சங்கம் மருவிய காப்பியக் காலம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். காப்பியங்களில் ஜாதியக் குறிப்புக்கள் கிடைப்பதும் இதனால் தான்.
    ///

    Xxxxxxx

    /// கிபி 11-ம் நூற்றாண்டின் பின்னரே கல்வெட்டுகளில் ஜாதிகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறான பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தே ராஜம் அம்மையார் தமது நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலை முழுமையாக வாசித்த பின்னர் நாம் நேர் எதிர் விவாதங்களில் ஈடுபடுவதே சிறப்பானது எனத் தோன்றுகின்றது. ///

    நீங்கள் மேலே குறிப்பிட்ட V.S ராஜம் அவர்களது நூலை வாங்க , கூகிளில் தேடியபோது அதனை வெளியிட்ட மணற்கேணி பதிப்பகத்தாரின் திருச்சி முகவரி கிடைத்தது. செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இன்று (22.07.15) மாலை வரச் சொல்லி இருக்கிறார்கள். அங்கே சென்று வர வேண்டும்.

    Xxxxxxxxxxxxxxxxxx

    ReplyDelete
  15. நாங்கள் வாசித்த புத்தகத்திலும் பண்டைய தமிழர் வாழ்க்கையும் வளர்ச்சியும் சொல்லப்பட்டிருப்பது அப்போது சாதி என்ற சொல்லே தமிழில் இருந்திருக்கவில்லை என்றும் பின்னர் தான் வடமொழி கலப்பின் போதுதான் ஜாதி என்பது சாதி ஆகிப் போனது என்றும் சொல்லப்பட்டிருகிறது. அது போல மேலே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள்-அத்தனை ஆழமாக இல்லா விட்டாலும் எங்களுக்குத் தெரிந்தவற்ரைச் சொல்ல நினைத்து வந்தால் திரு அன்புடன் நீலன், சகோதரர் விஜு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அதுவும் பல விளக்கங்களுடன். எங்கள் உட்கருத்தும் அதே....

    தங்களின் பதிவு நல்ல பதிவு இப்படி பல தகவல்களைப் பரிமாறித் தெரிந்து கொள்ள உதவியதற்கு. சிந்திக்க வைத்த பதிவு ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. இது ஒரு மாற்று சிந்தனைக் கட்டுரை. அதனால் முரண்பாடாகவே தெரியும்.

      Delete
  16. மறுமொழி > ஊமைக்கனவுகள். (ஜோசப் விஜூ) - PART.1

    அன்புள்ள ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வணக்கம்! தங்களது பொன்னான நேரத்தைச் செலவிட்டு, எனக்காக இந்த பதிவினுக்கு நீண்ட இலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்த கருத்துரைகளை தந்தமைக்கு நன்றி.

    /// ”சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைக்கிறது. இது குற்றமே.”
    எனபதான முடிவை நீங்கள் ஈ, தா, கொடு, என்னும் சொற்களைக் கருத்திற் கொண்டு எடுப்பீர்களானால் என்னால் அதனோடு உடன்பட முடியவில்லை. ///

    /// நம்மிடம் உள்ள இலக்கண இலக்கிய ஆதாரங்கள் யாவும் இப்படி இருக்க எதன் அடிப்படையில் இந்தச் சொற்களைச் சாதீயம் சார்ந்ததாய் அடையாளப்படுத்த முடியும்? ///

    தோழர் இரா.எட்வின் அவர்கள் இந்த சொற்களைப் பயன்படுத்தி தன் அய்யத்தை வெளிப்படுத்தியதால் நான் அவைகளை மேற்கோளாகக் குறிப்பிட வேண்டியதாயிற்று. ஆனால் அவர் குறிப்பிடாத சங்க இலக்கியத்தில் வரும் – இழிசினன், இழி பிறப்பாளன், உயர்ந்தோன், தாழ்ந்தோன், மேற்குடி, கீழ்குடி, புலையன் போன்ற சொற்களைக் குறிப்பிட்டு என்னவென்று பொருள் கொள்வது.? என்று கேட்டு இருந்தேன். இதற்கு சரியான விடை கிடைக்கவில்லை. ( மாமிசம் சாப்பிடுபவன் புலையன் என்றால் மற்றவர்கள் சுத்த சைவர்களா என்ற கேள்வி எழுகிறது.) (Contn …..)

    ReplyDelete
  17. மறுமொழி > ஊமைக்கனவுகள். (ஜோசப் விஜூ) - PART.2

    நீலன் அவர்களும் நீங்களும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண்.183) வரும்

    வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

    என்ற வரிகளில் வரும் நாற்பால், கீழ்ப்பால், மேற்பால் என்ற சொற்களுக்கு சரியான விளக்கம் தரவில்லை என்றே நினைக்கிறேன். ”நாற்பாலுள்ளும்” என்ற சொல்லில் உள்ள ’உம்மை’யில், நான்குவகை பாகுபாட்டிலும் என்று ஏற்ற தாழ்வை காண முடிகிறது.

    இந்த பாடலுக்கு விளக்கம் சொன்ன ஔவை துரைசாமிப் பிள்ளையின் விளக்கம் இது :-

    பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்ற நால்வகையினையும், “நாற்பால்”என்றான். இது வடவாரியப் பகுப்பு முறை.
    தமிழகத்தில் தமிழ் மக்களிடையே இப் பாகுபாடு இன்றும் கிடையாது;
    என்றும் இருந்ததில்லை வடவாரிய நூல்களையடிப்படையாகக்
    கொண்டெழுந்த “இந்து லா”(Hindu Law) வில் மட்டில் இருக்கிறது.
    வேளாளர் கீழ்ப்பாலாராயின், அவர்க்குரிய தொழிலான உழவு உயர்
    தொழிலாகத் திருவள்ளுவர் முதலாய சான்றோர்களால் உயர்த்துக் காட்டப்பட
    மாட்டாது. கல்வியறிவு நாற்பாலார்க்கும் பொதுவாதலின், அறிஞனை இப்
    பாற்பாகுபாடு கட்டுப்படுத்தா தென்றற்கு, “கீழ்ப்பா லொருவன் கற்பின்
    மேற்பாலொருவனும் அவன்கட் படுமே”என்றான். “கீழ்ப்பா லொருவன்
    கற்பின்”என்றாற்போல “மேற்பா லொருவன் கல்லா னாயின் அவனும்”
    என்னாது, “மேற்பா லொருவனும்”என்றும், உரைகாரர், “மேற்குலத்துள்
    ஒருவனும்”என்றும் கூறியது, மேற்பாலா னொருவன் கற்றவனாயினும்,
    கீழ்ப்பாலொருவன் கற்றுத் தலைவனாயின், அவன்பாற் சென்று
    வழிபடுதற்குரியன் என்பதை வற்புறுத்துகிறது.

    (நன்றி – தமிழ் இணையக் கல்விக் கழகம்)

    இன்றும் கல்வி அறிவு உள்ள கீழ்குலம் என்று சொல்லப்பட்ட இனத்து மக்களை ஆசிரியர்களாக ஏற்று மரியாதை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய சமூக அந்தஸ்து கொடுப்பதில்லை. இதுவே அன்றும் இருந்த நிலைமை.

    ReplyDelete
  18. ஐயா வணக்கம்.

    என் பின்னூட்ட மறுமொழிக்கு

    “““““““ மாமிசம் சாப்பிடுபவன் புலையன் என்றால் மற்றவர்கள் சுத்த சைவர்களா என்ற கேள்வி எழுகிறது.““““““““““““

    என்னும் தங்களின் கருத்தினைக் காண்கிறேன்.

    மாமிசம் சாப்பிடுபவன் புலையன் என்பது எனது கருத்தன்று.

    புலையன் எனச் சங்க இலக்கியத்தில் வருமிடங்களில் எல்லாம், அவன்,

    “மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
    பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர் “- நற் 77/1,2

    “அழி துளி தலைஇய பொழுதில் புலையன்
    பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன“ - நற் 347/5,6

    “பிரியா கவி கை புலையன் தன் யாழின் “- கலி 95/10

    எனத் துடி முழக்குபவனாக இசைக்கருவிகளை மீட்டுபவனாகப் பாணன் என்னும் பொருளிலேயே காட்டப்படுகிறான்.

    பிற்காலத்தில் பாணரைக் குறித்த புலையன் என்னும் சொல் பொருளலவில் மாற்றம் பெருகிறது.

    மொழிவரலாற்றில் இது நடைபெறக் கூடியதே.

    சேரி என்ற சொல் முன்பு அனைவரின் வாழிடத்தையும் குறிப்பதாய்ப் பயன்பட்டு பின்பு சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வசிப்பிடத்தைக் குறிக்கப்பயன்பட்டாற் போலவே, இந்தப் புலையன் என்னும் சொல்லும் பாணரைக் குறிப்பிட்டுப் பின்னர் இழிவுப் பொருட்பேறு பெற்றது எனக் கொள்ளல் தகும்.

    சரி, புலையன் எனப்படும் பாணன் ஏன் இழிசினன் ஆகிறான்?

    அவனது வாழ்க்கை, பிறரை எப்போதும் சார்ந்து வாழும் வாழ்க்கை.

    “வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை“ என்று இதை எண்ணியே கலங்குகிறாள் ஔவை.

    சங்க இலக்கிய மரபின்படி அவள் ஒரு புலைத்தி. பாடிணி.

    இது இங்கு இழிசொல் அல்ல.

    ..................................................................................................................தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தருவோரும் பெறுவோருமாய் இருந்தோரையும்
      இடுவோரும் ஏற்போருமாய் இருந்தோரையும்
      சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

      முன்னது கொடை.

      பின்னது ஈகை.

      கொடைக்கும் ஈகைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு.

      தகுதி அறிந்து தக்கார்க்குக் கொடுப்பது கொடை.

      இல்லாதோர்க்கு அளிப்பது ஈகை.

      பின் இச்சொற்கள் தம்முள் மயங்குவனவாயின. இதுவும் மொழிபுணர் இயல்புதான்.

      எனவேதான் தம் தகுதியறியாமல் கொடுத்துவிடும் பொருளை ஏற்காது சினந்த பெருஞ்சித்திரனாரின் சீற்றத்தைப் புறநானூற்றில் இப்படிக் காண்கிறோம்.

      “எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ
      பருகு வன்ன வேட்கை யில்வழி
      அருகிற் கண்டு மறியார் போல
      அகனக வாரா முகனழி பரிசில்
      தாளி லாளர் வேளா ரல்லர்
      வருகெனல் வேண்டும் வரிசை யோர்க்கே
      பெரிதே யுலகம் பேணுநர் பலரே
      மீளி முன்பி னாளி போல” ( 207 – புறம் )

      என்னை மதிப்பவன் ஆயிரம் பேர். என் தகுதி அறியாமல் நீ கொடுத்த இப்பரிசில் எனக்குத் தேவையில்லை என்று இகழந்தொதுக்கச் செய்கிறது அவன் நெஞ்சுரமும் மொழித்திறனும்.

      “ கொடைமடம் பட்டுப் படைமடம் படாதோராகப்” பண்டைய தமிழ் மன்னர்கள் இருக்க விழைந்திருக்கின்றனர்.

      எழுத்தாளனைப் புலமையைக் கலையைப் பேணும், ஆதரிக்கும், வரிசையறியும் சமூகமாக அன்றைய சமுதாயம் இருந்திருக்கிறது.

      இருப்போர் இல்லோர் என்ற பாகுபாடுதான், இங்கு முதன்மையாய் இருந்திருக்கிறது.

      அதனால்தான்,

      உலகத்திலேயே மிக மிக இழிந்தது என்ன என்று தெரியுமா?
      அது ஒருவனிடம் சென்று எனக்கு ஈ ( ஏதேனும் இருந்தால் கொடுங்கள் ) என்று கேட்பது.
      அதை விட இழிவானது வேறு ஏதும் இல்லையா?
      இருக்கிறது.
      அது,
      அப்படி தன் மானத்தை இழந்து கேட்பவனுக்கு, தன்னிடம் கொடுப்பதற்கு இருக்கும் போதும் இல்லை என்று சொல்வது .

      உலகத்திலேயே உயர்வானது என்ன தெரியுமா?
      உதவி தேவைப்படும் ஒருவனுக்கு அவன் கேட்காதபோதே அவனது நிலைமை அறிந்து “ இந்தா இதை வைத்துக் கொள் ” என்று கொடுப்பது.
      அதை விட உயர்வானது எதுவும் இல்லையா?

      இருக்கிறது.

      அப்படி அவ்வுதவி அத்தியாவசியமாய்த் தேவைப்படும் நிலையில் இருந்தபோதிலும் கூட, இன்னொருவனிடமிருந்து இரந்து பெறும் உதவி தேவை இல்லை என்று “ எனக்கு வேண்டாம் ” என்று சொல்வது.

      “ ஈயென இரத்தல் இழிந்தன்று
      ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று
      கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று
      கொள்ளே னென்றல் அதனினும் உயர்தன்று “

      எனப் புறம் உரைப்பது இதனையே.

      இழிந்ததையும் உயர்ந்ததையும், ஈதலையும் கொடுத்தலையும் ( ஈ, தா, கொடு ) நாம் இது போன்ற இலக்கியச் சான்றினூடாகக் காண வேண்டும் என்பதே என் பின்னூட்டத்தின் அடிக்கருத்து.

      நாட்பட நாட்படப் புலவர்களும் தம் செருக்கும் , தகுதியும் இழந்து போன நிலை ஏற்பட்டது.

      எழுத்தும் எழுத்தாளர்களும் நம் சமூகத்தில் மதிப்பிழக்கத் தொடங்கிய, இரவலராகப் பார்க்கப்பட்ட, அவலம்.

      Delete
    2. ...................................................................................
      நீங்கள் குறித்திருந்தபடி நான் அறிந்தவரை, இலக்கியங்களில் இலக்கணங்களில் எங்கும் குறிப்பிட்ட சாதி அமைப்புகளுக்கு ஈ, தா, கொடு என்பது உரிமையாக்கப் பட்டது என்பதற்குச் சான்றில்லை.

      ஈ, தா, கொடு, என்னும் சொற்கள் இன்னின்ன சாதிகள் வழக்கிற்கெனத் தொல்காப்பியரால் முன்மொழியப்பட்டவை என்ற தங்கள் பார்வையோடு நான் முரண் படடதன் காரணம் இதனால்தான்.

      அரசுருவாக்கப் பின்னணியில் பார்க்கும் போது, சங்காலத்தில் அடிமட்டத்தில் இருந்தவர்கள் வேடர்கள். உயர் நிலையில் இருந்தவர்கள் அரசர்கள்.
      இவர்களுக்கு இடைப்பட்ட சமுதாயம் பல்வேறு தொழிலின் அடிப்படையில் பிளவுற்றிருந்தது.

      ஆனால் நாம் இன்றைய சமுதாயத்தில் கண்ட, காணும் சாதி என்னும் பாகுபாடு வேர் கொள்ளவில்லை. அங்குக் குடிகள்தான். அவர்களுள் வேறுபாடு இருந்தது. அது இயற்கையானதும் ஒரு சமூகத்தில் இருக்கக் கூடியதுமே ஆகும்.

      எறும்பும் தன் கையால் எண்சாண் என்பதைப் போல ஒவ்வொருவரும் தம்குடிப் பெருமையைக் கொண்டாடிக் கொண்டிருந்த காலமது. இதற்கும் நம்மிலக்கியத்திலேயே சான்றுகள் உள.

      ஆனால், எல்லாவற்றையும்விட வீரம் மதிக்கப்பட்டது.

      வீரனைப் பெறுந் தாய் மதிக்கப்பட்டார்.

      வீரர் உருவாக்கும் குடி மதிக்கப்பட்டது.

      தம்மிலும் வீரர் உருவாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பினர்.
      நீங்கள் காட்டிய புலையனும் இழிசினனும் ஒரு சேர வரும் புறப்பாடல் ஒன்றுண்டு. அதுவும் இந்த வீரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

      “துடி எறியும் புலைய!
      எறி கோல் கொள்ளும் இழிசின!
      காலம் மாரியின் அம்பு தைப்பினும்,
      வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
      பொலம் புனை ஓடை அண்ணல் யானை
      இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்,
      ஓடல் செல்லாப் பீடுடையாளர் “

      இங்குக் காட்டப்படும் புலையன், போர்க்காலத்தில் முழவொலித்துச் செல்வதைத் தொழிலாகக் கொண்டவன்.

      அவனிடமும் எறிகோல் ஒன்று இருக்கிறது.

      ஆனால், அவன் இங்கு எறியும் கோல் அம்போ வேலோ குந்தமோ குத்தீட்டியோ அல்ல.

      அது சாதாரண தோல் பறையை அடிக்கின்ற சிறு குச்சி.

      அவன் முன்னால் நிற்பவர்களோ, மழைபோல அம்பு வரினும் ( இன்று நாம் பயன்படுத்தும் சரமாரி என்பதன் பொருள் இதுவே சரம்– அம்பு, மாரி – மழை ) கெண்டை மீன் போல் வேல் மேற்பாயினும், யானையின் தந்தந்தங்களால் குத்தப்படும் சூழல் அமையினும் ஓடல் இல்லாப் பீடு நடையாளர்.
      இப்பீடு நடையாளரோடு ஒப்பிடுடப்படும் போதே வீரமற்று வெறும்பறை கொட்டும் பாணன் இழிசனன் ஆகிறானே தவிர, அஃது அவன் குடியால் அவன் சார்ந்த குலப்புன்மையால் வந்ததன்று.

      எனவே புலையன் என்பது பாணன் என்னும் பொருண்மை குறித்துச் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டதென்பதும் இன்றுள்ளது போல் இழிபொருட்கிளவியாக வழங்கப்பெறவில்லை என்பதும், ஈ, தா , கொடு என்பன சாதிக்கேற்ற சொற்களாக ஆளப்படவில்லை என்பதும் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது.
      .........................................................................................தொடர்கிறேன்.

      Delete
    3. அடுத்து,

      “““““““““வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
      கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
      மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

      என்ற வரிகளில் வரும் நாற்பால், கீழ்ப்பால், மேற்பால் என்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் தரவில்லை என்றே நினைக்கிறேன். ”நாற்பாலுள்ளும்” என்ற சொல்லில் உள்ள ’உம்மை’யில், நான்குவகை பாகுபாட்டிலும் என்று ஏற்ற தாழ்வை காண முடிகிறது. “““““““““

      என்னும் தங்களின் கருத்தும் அதற்குச் சான்றாய்த் தாங்கள் காட்டிய ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் உரையும் என்னை இன்னும் குழப்புகின்றன.

      “இது வடவாரியப் பகுப்பு முறையென்றும், தமிழரிடம் இன்றும் இது கிடையாது“ என்றும்தானே அவரும் கூறுகிறார்.

      தமிழரிடம் இன்று கிடையாது என்று அவர் சொல்வதில் வேண்டுமானால் பிழையிருக்கலாம்.

      ஆனால்,

      “உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
      பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
      பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
      சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
      ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
      மூத்தோன் வருக வென்னா தவருள்
      அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
      வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
      கீழ்ப்பா லொருவன் கற்பின்
      மேற்பா லொருவனு மவன்கட் படுமே. “

      என, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாய்ப் பலர் இருந்தாலும் கல்வியிற் சிறந்த மகனையே அதிகமாய்த் தாயும் விரும்புவாள் என்றும், ஒரு இனத்தில் மக்கள் பலர் இருந்தாலும், அவர்களில் பெரியவர் யார் என்று பாராமல், அவருள் கல்வி அறிவுடையாரையே அரசும் விரும்பும் என்றும், நான் மேல், நீ கீழ் என்று வேறுபடும் நான்கு குடியினுள்ளும், ஒருவனை மேம்பாடடையச் செய்து அனைவரினும் மேலாகக் கொண்டு நிறுத்துவது கல்வியே என்றும் அன்று பாண்டி நெடுஞ்செழியன் சொன்ன பாடலின் பொருள் மெய்ப்படும் காலத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

      யாவரும் கல்வி கற்க வேண்டும் என்றும்,

      உயர்வு அதனால் வருமென்றும்,

      வீரத்தைவிட மற்றெதனையும் விடக் கல்வி சிறந்ததென்றும்,

      குடிப்பெருமையைவிட அதன் பெருமையே ஒருவனை மேற்செலுத்தும் என்றும் முழங்கிய பாண்டிய நெடுஞ்செழுயனின் இந்தப் பாடலைத் தனது மக்களை, சமூகத்தை எல்லாத் தளங்களிலும் உயர்த்த விரும்பிய அவனது கருத்தாகவே நான் காண்கிறேன்.

      வேற்றுமைகள் இருந்தது. அது இருக்கத்தான் செய்யும். ஒரு குடி பிறந்தோர் பல்லோர் ஆவதே அவ்வேற்றுமைகளால்தான். ஆனால் இன்னார்க்கு இன்னது, இவ்வாறாய் விதிக்கப்பட்டது என்னும் சாதீயக் கொடுங்கரங்களாய் அவை சங்கச்சூழலில் உருப்பெறவில்லை என்னும் என் கருத்தை இப்பாடலின் புரிதலாகக் கொள்கிறேன்.

      பொதுவாக இது போன்ற கருத்தாடல்களில் இருந்து நான் விலகியே இருக்கிறேன்.

      விவாதங்கள் வீண் மனக்கசப்பையும், சங்கடங்களையும் ஏற்படுத்துவன என்பது நான் கற்ற பாடம்.

      தங்களிடத்தில் உள்ள அன்பினாலும் மதிப்பினாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதாலும் மட்டுமே இதனைத் தொடர்கிறேன்.

      சென்ற பின்னூட்டத்தில்,

      முளிதயிர் பிசைந்த காந்தள் நல்விரல் என்றிருப்பது, காந்தள் மெல்விரல் என்று இருக்க வேண்டும்.

      நினைவினின்று எழுதியதலால் ஏற்பட்ட பிழை.

      பொறுத்திட வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
    4. அன்புள்ள ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வணக்கம்! மீண்டும் வந்து கருத்துரை தெரிவித்தமைக்கு நன்றி!

      /// மாமிசம் சாப்பிடுபவன் புலையன் என்பது எனது கருத்தன்று. //

      எனது கவனக் குறைவிற்கு (தவறுக்கு) வருந்துகிறேன். MS Word இல் வேறு ஒரு மேற்கோளுக்காக (REFERENCE) டைப் செய்து வைத்து இருந்தேன். எப்படியோ தவறுதலாக, காப்பி பேஸ்ட் முறையில் உங்களுக்கான மறுமொழியில் வந்து விட்டது. எல்லாம் நன்மைக்கே என்றபடி உங்கள் மூலம் இந்த சொல்லுக்கும் சில விளக்கங்கள் கிடைத்தன.

      ஔவை துரைசாமிப் பிள்ளை உரையை நான் ஒரு மேற்கோளாக, சொல்லக் காரணம், அவரும் நாற்பால், மேல்பால், கீழ்பால் என்று ஐயப்பாடுடன் எழுதுவது போல் தோன்றியதுதான்.

      /// பொதுவாக இது போன்ற கருத்தாடல்களில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். விவாதங்கள் வீண் மனக்கசப்பையும், சங்கடங்களையும் ஏற்படுத்துவன என்பது நான் கற்ற பாடம். தங்களிடத்தில் உள்ள அன்பினாலும் மதிப்பினாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதாலும் மட்டுமே இதனைத் தொடர்கிறேன். ///

      நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர். நல்ல விமர்சகர். சில விவாதங்கள் இப்படித்தான் இருக்கும். சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கே இப்படி வருத்தப் பட்டால் எப்படி? நேருக்கு நேர் விவாதங்களை எப்படி எதிர்நோக்குவீர்கள் என்று தெரியவில்லை. ஒரு நண்பர் என்ற முறையில் நீங்கள் எனது வலைத் தளத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். குறைகளைச் சுட்டிக் காட்டலாம். என்னை நான் திருத்திக் கொள்ள அவை உதவும்.

      Delete
  19. மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள தோழர் ஆசிரியர் இரா.எட்வின் அவர்களுக்கு வணக்கம்! சுருக்கமான தங்களது கருத்துரைக்கு நன்றி!

      Delete
  20. வணக்கம் ஐயா.
    நான் ஆய்வாளர் இல்லை என்றாலும் என் வாசிப்பிலிருந்து என் கருத்தைப் பதிகிறேன்.
    சங்க காலத்தில் தமிழகத்தில் சாதிப் பாகுபாடு இல்லை.
    புறம்.183 சொல்வது வட இந்தியாவில் இருந்த பிரிவுகளைக் குறித்து என்று படித்த நினைவு. ஆரியப்படை வென்ற மன்னனுக்கு அங்கு இருந்த பிரிவினைகள் தெரிய வாய்ப்பு இருந்திருக்கும் தானே. ஆனால் கல்வி தான் ஒருவரை உயர்த்தும் என்றே பாடியுள்ளார்..சாதி வேறுபாடுகள் இருந்திருந்தால் இப்படி பாடியிருப்பாரா?
    புலையன் என்ற வார்த்தை கொட்டு, பறை போன்ற வாத்தியங்களை வாசித்தவரைக் குறிப்பது.

    ReplyDelete
    Replies
    1. விஜூ அண்ணா, மகேஸ்வரி அவர்கள் மற்றும் நீலன் அவர்களின் பின்னூட்டங்களையும் வாசித்தேன். என் கருத்தும் அதுவே.

      Delete
    2. எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் எழுவது இயற்கை. சங்க இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் நீங்கள். கருத்துரை தந்த சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete