Tuesday, 15 July 2014

தானியம் மற்றும் பழ உணவுகள் – கவனம் தேவை!எனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அருகில் அவரது நண்பர். இருவருமே என்னைவிட மூத்தவர்கள். மேஜையில் ஒரு பாத்திரத்தில் ஏதோ தின்பதற்கான உணவுப் பொருள். இருவருமே அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் போனதும் என்னையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். பாத்திரத்தில் அவித்த பச்சைப் பயறு. எனக்கு பிடிக்காத சமாச்சாரம். ரொம்பவும் நாசுக்காக இப்போதுதான் சார் மதியச் சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். எனவே வேண்டாம் “ என்றேன். அவரோ “ என்ன இளங்கோ பச்சைப்பயறு போன்ற தானியங்கள் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?என்று சொல்லி விட்டு அவற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்த நண்பர் எனது பகுதிக்கு அருகே வசிப்பவர். அவரும் எங்கள் பகுதியில் புதிதாகத் திறந்துள்ள தானிய உணவு ஓட்டலைப் பற்றியும் அங்கே புதிதாகக் கிடைக்கும் கேழ்வரகு ரொட்டி, கம்பு ரொட்டி, கம்பங் கூழ், சோளப்புட்டு போன்றவற்றையும் சொன்னார். நான் ஏதும் சொல்லாமல் அவர்களுக்காக அந்த அவித்த பச்சைப் பயற்றில் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். பச்சைப் பயறு அதிகம் சாப்பிட்டால் உடம்பில் வாயுத் தொல்லைதான்.

உணவும் மனித உடம்பும்:

சிலருக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய  உணவு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. காரணம் ஒவ்வோரு மனிதரின் உடம்பும் ஒருவகைத் தன்மையது. அதனை வாத உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு (வாதம், பித்தம், சிலேத்துமம்) என்று சொல்லுவார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு வைத்தியர் காய்கறி வாங்கச் செல்கிறார். சென்ற இடத்தில் இது பித்தம், இது உஷ்ணம், இது வாய்வு என்று எல்லா காய்கறிகளையும் ஒதுக்கி விட்டு ஒன்றுமே வாங்காமல் வந்து சேருவார். இதுபோல் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் இருக்கும் குணங்களை விளக்கும் மருத்துவ நூல்கள் தமிழில் உள்ளன. நாம் அந்த வைத்தியர் போல் இருக்க வேண்டாம். இருந்தாலும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள பொதுக் குணத்தோடு நமக்கு ஒத்துப் போகாத குணத்தையும் தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

உணவின் குணம்:


பொதுவாகவே மக்கள் மத்தியில், பழங்கள் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது., உணவு தானியங்களை சாப்பிட்டால் உடம்புக்கு வலிமை என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் நடை முறையில் அவ்வாறு இல்லை. திராட்சைப் பழம் நல்லதுதான். இரத்த விருத்தி தரும் என்பார்கள். ஆனால் சிலருக்கு மூச்சுத் திணறலை உண்டு பண்ணும். அதே போல சிலர் கீரையை நிறைய சாப்பிடுங்கள் என்பார்கள், ஆனால் சிலபேருக்கு சில கீரை வகைகள் ஒத்துக் கொள்ளாது. இதே போல அவித்த சோளக் கதிர் சாப்பிட சுவையாக இருக்கும். ஆனால் சிலருக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும். சிறு குழந்தைகள் பலாப்பழம் சாப்பிட்டால் மாந்தம் ஏற்படும் என்பார்கள். (மாந்தம் என்பது குழந்தைகளுக்கு வருவது. குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு வீக்கமாக இருக்கும். குழந்தை சோர்ந்து விடும்) எனவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பொதுக் குணம் இருப்பது போலவே ஒவ்வாமை (ALERGY) உண்டு பண்ணும் குணமும் உண்டு.

இதனால்தான் அந்த காலத்தில் ஒரு பொருளைச் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள். உதாரணமாக வறுத்த கடலையை சாப்பிட்டால் அது சீக்கிரம் செரிமானம் ஆக ஒரு சின்ன வெல்லக் கட்டியைச் சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு  வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எனப்படும் தாம்பூலம் எடுத்துக் கொண்டார்கள். கரும்பை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் வெந்து விடும்.

( இங்கே இன்னொரு விஷயம். வெறும் வயிற்றோடு அல்லது சாப்பிட்ட உடனேயே அதிக பளுவைத் தூக்குவதோ அல்லது சைக்கிள் மிதிப்பதோ அல்லது காலால் உதைத்து இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதோ கூடாது. அவ்வாறு செய்தால் எரனியா எனப்படும் குடல் இறக்கப் பிரச்சினை வரும்)

நாவல்பழம்: - இது மருத்துவ குணம் கொண்டது. அதிகம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்.
வாழைத் தண்டு: - இதற்கு சிறுநீரகத்தில் கல் இருந்தால் கரைக்கும் குணம் உண்டு. ஆனால் தொடர்ந்து அதிகம் சாப்பிட்டால் உடம்பு வலுவிழந்து விடும். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

வள்ளுவர் வாக்கு:

முன்பு தமிழில் ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்று பல சுவையான செய்திகள் இருக்கும். ஒரு வாரம் கத்தரிக்காயைப் பற்றி ஓகோ என்று எழுதி இருப்பார்கள். இன்னும் சில வாரங்கள் கழித்து அதே கத்தரிக்காய் உடம்புக்கு அரிப்பை உண்டு பண்ணும் குணம் அதிகம் என்று எழுதி இருப்பார்கள். இப்போதும் கீரைகளைச் சாப்பிடுங்கள், பழங்களைச் சாப்பிடுங்கள், தானியங்களைச் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் நமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் (செரிக்கும்) பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கும் தர வேண்டும்.

மேலே சொன்ன இந்த கருத்தினை உள்ளடக்கியே நமது வள்ளுவரும்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். திருக்குறள் ( 942 )

என்றார்.

இதன் பொருள்:
(மு.வ உரை) முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

(நாம் முன்பு சாப்பிட்ட ஒரு உணவு செரிக்கவில்லை அல்லது உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதனைத் தவிர்ப்பது நல்லது)

PICTURES THANKS TO GOOGLE

67 comments:

 1. சிறந்த உளநல வழிகாட்டல்

  ReplyDelete
 2. ரொம்பச் சரி! அவரவருக்கு எது சரிப்படுமோ அவற்றையே உண்ண வேண்டும்.

  ReplyDelete
 3. சிறந்த வழிக்காட்டல் பதிவு. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. எனக்கு வெள்ளரிக்காய் ஒத்துக் கொள்ளாது. மருத்துவர்களும் சில மாத்திரைகள் கொடுக்கும்போது பி காம்ப்லெக்ஸ் கொடுப்பார்கள். ஒருவர் உடல் பற்றி அவரவர் அறிந்திருத்தல் அவசியம்.

  ReplyDelete
 5. நன்றாகச் சொன்னீர்கள்..
  இப்போது கண்டமேனிக்கு - பலவித ஊடகங்களிலும் அதைத் தின்னுங்கள்.. இதைத் தின்னுங்கள்.. என்று ஒரே கூச்சல் தான்!..

  ஆரோக்கியக் குறிப்புகளை வெளியிடுவதாக - தினமும் நாவற்பழம் சாப்பிடுங்கள் என்று ஏகப்பட்ட அறிவுரை!..

  நாவற்பழம் எல்லாப் பருவத்திலும் கிடைக்கக் கூடிய கனியா?.. நாவற்பழம் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த நாட்களிலும் தினமும் தின்று தீர்க்க முடியுமா?..

  நாவற் பழத்தை அதிகமாகத் தின்றால் தொண்டை கட்டிக் கொள்ளும். அதற்காகத் தான் சிறிது உப்பைப் போட்டு புரட்டிக் கொள்வது. இந்த அடிப்படை எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்!..

  மேலும் - அந்த மூலிகையை அப்படி அரைக்க வேண்டும்..இந்த மூலிகையை இப்படி அரைக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவக் குறிப்புகள் வேறு!..

  உரை மருந்து கொடுத்து பிள்ளை வளர்த்ததையெல்லாம் பழித்து விட்டு - இப்போது மூலிகை மருத்துவம் பற்றி பலரும் குறிப்பு தருகின்றார்கள்..

  இவ்வாறு பலரும் மூலிகை மருத்துவக் குறிப்பு தருவதெல்லாம் சரியா.. என்று தெரியவில்லை.. நாம் தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!..

  நல்ல அறிவுரையுடன் கூடிய பதிவு!..

  ReplyDelete
 6. எல்லா பழங்களும் தானியங்களும் அனைவருக்கும் ஒத்துக்கொள்ளும் என சொல்லமுடியாது. எனவே தள்ள வேண்டியதை தள்ளி கொள்ள வேண்டியதை கொள்ளவேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தலைப்பில் சிறிது மாற்றம் தேவை. எச்சரிக்கை பயமுறுத்துகிறது!

  ReplyDelete
 7. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

  // சிறந்த உளநல வழிகாட்டல் //

  சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 8. மறுமொழி > துளசி கோபால் said...

  // ரொம்பச் சரி! அவரவருக்கு எது சரிப்படுமோ அவற்றையே உண்ண வேண்டும். //

  சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி > ராஜி said...

  இன்று திருமணநாள் கொண்டாடும் சகோதரிக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

  // சிறந்த வழிக்காட்டல் பதிவு. பகிர்வுக்கு நன்றி! //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // எனக்கு வெள்ளரிக்காய் ஒத்துக் கொள்ளாது. மருத்துவர்களும் சில மாத்திரைகள் கொடுக்கும்போது பி காம்ப்லெக்ஸ் கொடுப்பார்கள். ஒருவர் உடல் பற்றி அவரவர் அறிந்திருத்தல் அவசியம். //

  எனக்கும் எனது டாக்டர் சில மருந்துகளோடு குடலில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க பி காம்ப்லெக்ஸ் மாத்திரைகளை கொடுப்பார்.

  ReplyDelete
 11. நல்ல தகவல்களை பகிர்ந்ததற்க்கு நன்றி ஐயா, படமும் அருமையாக இருக்கிறது. எனது ''கடவுளும் கொலையாளியும்'' காணவும்.

  ReplyDelete
 12. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் நீண்ட பயனுள்ள குறிப்புகள் கொண்ட கருத்துரைக்கும் நன்றி!

  // நன்றாகச் சொன்னீர்கள்.. இப்போது கண்டமேனிக்கு - பலவித ஊடகங்களிலும் அதைத் தின்னுங்கள்.. இதைத் தின்னுங்கள்.. என்று ஒரே கூச்சல் தான்!..//

  எல்லாமே மார்க்கெட்டிங் ஆகிவிட்டது.

  // ஆரோக்கியக் குறிப்புகளை வெளியிடுவதாக - தினமும் நாவற்பழம் சாப்பிடுங்கள் என்று ஏகப்பட்ட அறிவுரை!.. நாவற்பழம் எல்லாப் பருவத்திலும் கிடைக்கக் கூடிய கனியா?.. நாவற்பழம் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த நாட்களிலும் தினமும் தின்று தீர்க்க முடியுமா?..//

  நீங்கள் சொல்வது போல எல்லா ப்ழங்களும் எல்லா நாட்களும் கிடைக்குமா என்று யாரும் யோசிப்பதில்லை. எதோ அந்த நேரத்திற்கு எதையாவது டாக்டராக இல்லாதவர்களும் சொல்லி வைக்கிறார்கள்.

  // நாவற் பழத்தை அதிகமாகத் தின்றால் தொண்டை கட்டிக் கொள்ளும். அதற்காகத் தான் சிறிது உப்பைப் போட்டு புரட்டிக் கொள்வது. இந்த அடிப்படை எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்!..//

  பள்ளி வாசலில் பாட்டி விற்ற நாவல் பழத்தை பூவரசு இலையில் வைத்தபடி, தூள் உப்பில் தோய்த்து சப்புக் கொட்டி சாப்பிட்டு இருக்கிறேன். உங்கள் பின்னூட்டம் பழைய நினைவுகளைக் கொணர்ந்தது. நன்றி!

  //மேலும் - அந்த மூலிகையை அப்படி அரைக்க வேண்டும்..இந்த மூலிகையை இப்படி அரைக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவக் குறிப்புகள் வேறு!.. //

  // உரை மருந்து கொடுத்து பிள்ளை வளர்த்ததையெல்லாம் பழித்து விட்டு - இப்போது மூலிகை மருத்துவம் பற்றி பலரும் குறிப்பு தருகின்றார்கள்.. இவ்வாறு பலரும் மூலிகை மருத்துவக் குறிப்பு தருவதெல்லாம் சரியா.. என்று தெரியவில்லை.. நாம் தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!.. நல்ல அறிவுரையுடன் கூடிய பதிவு!.. //

  அவர்கள் எல்லோரும் அப்படியே சாப்பிடுவதைப் பற்றியே சொல்கிறார்கள். பக்க விளைவுகளைப் பற்றி சொல்வதே இல்லை.

  ReplyDelete
 13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // எல்லா பழங்களும் தானியங்களும் அனைவருக்கும் ஒத்துக்கொள்ளும் என சொல்லமுடியாது. எனவே தள்ள வேண்டியதை தள்ளி கொள்ள வேண்டியதை கொள்ளவேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். //

  அய்யா வே.நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // தலைப்பில் சிறிது மாற்றம் தேவை. எச்சரிக்கை பயமுறுத்துகிறது! //

  தங்களின் ஆலோசனைக்கு நன்றி! முன்பு இருந்த ” தானியம் மற்றும் பழ உணவுகள் – எச்சரிக்கை! “ என்ற தலைப்பினை
  ” தானியம் மற்றும் பழ உணவுகள் – கவனம் தேவை! ‘ என்று மாற்றி விட்டேன்.  ReplyDelete
 14. வணக்கம்
  ஐயா
  உணவு முறைபற்றி சொல்லி அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றியும் சொல்லியுள்ளீர்கள் சிறந்த வழிகாட்டல் ஐயாபகிர்வுக்கு நன்றி
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. குறள் விளக்கத்தோடு அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

  ReplyDelete
 16. உண்மைதான் அண்ணா ..ஒவ்வொருவர் உடல் உணவை ஏற்றுகொள்ளும் தன்மை வேறுபாடும் ....


  இங்கே வெளிநாட்டு ஊடகங்களில் காய் கறிகள் பற்றி குறிப்பிடும்போது ..அனைவருக்கும் உகந்தது ஆனால் சில நோயாளிகள் தவிர்க்க //என்று குறிப்பிடுவார்கள் ..அதை விட்டு எல்லாத்தையும் கண்ணு மண்ணு தெரியாம சாப்பிடக்கூடாது ..நல்ல பகிர்வு மிக்க நன்றி

  ReplyDelete
 17. மழைக்காலத்துக்கு வெய்யில் காலத்துக்கு என்றும்
  அவரவர் உடல் ஏற்றுக்கொள்ளும் உணவையே கவனத்துடன்
  ஏற்றுக்கொள்ளவேண்டும்

  ReplyDelete
 18. பயனுடை பதிவு. அனுபவித்து வாசித்தேன்
  மிக்க நன்றி.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. நல்ல ஆலோசனைகள், நேற்றுதான் நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட்டுவிட்டு இப்போது அவதிப் பட்ட்டுக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 20. தங்களின் இப்பதிவை படித்தப்பிறகே.........
  சாப்பாடு பற்றி வள்ளுவர் சொன்னதும் அறிந்தேன்
  தகவலுக்கு நன்றி அய்யா..........

  ReplyDelete
 21. நன்றாக சொன்னீர்கள் இப்போது சிறுதானிய உணவு வகைகள்தான் பேஷன்.சாமை சாதம், சாமை இட்லி, தோசை ஒரே சத்துணவு டார்ச்சர் தாங்கவில்லை

  ReplyDelete
 22. மிக நன்றாக சொன்னீர்கள்.. ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும் உணவு மற்றவருக்கு ஒத்துக்கொள்ளும் என்று சொல்லமுடியாது.
  உடம்பு சொல்வதை கேட்க வேண்டும். அவர்அவர்கள் உடம்புக்கு எது ஒத்துக் கொள்கிறதே அதை சாப்பிட வேண்டும்.
  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. நல்ல ஆலோசனை. ஒருவருக்கு ஒத்துப் போகும் உணவு அடுத்தவருக்கு ஒத்துப் போகாது....

  வடக்கில் பொதுவாக அரிசியை விட கோதுமையை அதிகம் பயன்படுத்துவது வழக்கம் - இங்குள்ள சீதோஷ்ணம் அப்படி. ஆனால் நமது ஊரில் அரிசி தான் பயன்படுத்துகிறோம் என்று கிண்டலடிப்பார்கள்.

  இப்போதைய ஊடகங்கள் தரும் தொல்லை அதிகமே....

  ReplyDelete
 24. அளவிற்கு மிஞ்சினால் அமிதமும் விஷமே! நம் முன்னோர்கள் சொல்வது போல் அளவோடு சாப்பிட்டு நெடு நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

  ReplyDelete
 25. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்கள் பதிவின் பக்கம் அவசியம் அடிக்கடி வருவேன் அய்யா!

  ReplyDelete
 26. பயனுள்ள பதிவு. எல்லோருக்கும் எல்லாப் பழங்களும், எல்லா உணவு தானியங்களும், எல்லாக்காய்கறிகளும் எல்லா நேரங்களிலும் ஒத்து வராது என்பதே உண்மை. அவரவருக்கு ஒத்து வருவதை அவரவர்கள் எடுத்துக்கொண்டு, மற்றவற்றைத் தவிர்த்து விடுவதே மிகவும் நல்லது. ஒருவரை சாப்பிடச்சொல்லி வற்புருத்தி அன்புத்தொல்லை கொடுப்பதும் கூடாது. அழகான படங்களுடன் நல்லதொரு பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 27. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // குறள் விளக்கத்தோடு அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... //
  எல்லாவற்றிற்கும் திருக்குறளில் இடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களைப் போல வலைப்பதிவில் திருக்குறளை அதிகம் மேற்கோள் காட்டியவர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 28. மறுமொழி > Angelin said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  // உண்மைதான் அண்ணா ..ஒவ்வொருவர் உடல் உணவை ஏற்றுகொள்ளும் தன்மை வேறுபாடும் ....இங்கே வெளிநாட்டு ஊடகங்களில் காய் கறிகள் பற்றி குறிப்பிடும்போது ..அனைவருக்கும் உகந்தது ஆனால் சில நோயாளிகள் தவிர்க்க //என்று குறிப்பிடுவார்கள் ..அதை விட்டு எல்லாத்தையும் கண்ணு மண்ணு தெரியாம சாப்பிடக்கூடாது ..நல்ல பகிர்வு மிக்க நன்றி //

  மேனாட்டவர் எதைச் செய்தாலும் சரியாக மக்கள் நலனை முன்னிறுத்தியே செய்கிறார்கள். இந்தியாவில் எரிகிற கொள்ளியில் இழுத்தவரை லாபம் அடைய எண்ணுகிறார்கள்.

  ReplyDelete
 29. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 30. மறுமொழி > kovaikkavi said...

  சகோதரியின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 31. மறுமொழி > PARITHI MUTHURASAN said...

  // தங்களின் இப்பதிவை படித்தப்பிறகே......... சாப்பாடு பற்றி வள்ளுவர் சொன்னதும் அறிந்தேன் தகவலுக்கு நன்றி அய்யா.......... //

  சகோதரர் பரிதி முத்தரசன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தாங்கள் திருக்குறள் – மருந்து அதிகாரம் முழுமையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
 32. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி!

  // நன்றாக சொன்னீர்கள் இப்போது சிறுதானிய உணவு வகைகள்தான் பேஷன்.//

  அப்படியா! நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயத்தினைத் தெரிந்து கொண்டேன்.

  // சாமை சாதம், சாமை இட்லி, தோசை ஒரே சத்துணவு டார்ச்சர் தாங்கவில்லை //

  ஓ! ... ... அதுதான் இப்போது எங்கு பார்த்தாலும் சிறுதான்ய உணவினைப் பற்றிப் பேசுகிறார்கள் போலிருக்கிறது.

  ReplyDelete
 33. மறுமொழி > கோமதி அரசு said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 34. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வதைப் போல, இப்போதைய ஊடகங்களில் இதனைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்

  ReplyDelete
 35. அமுதாய் ஒருவனுக்கு இருப்பது
  அடுத்தவனுக்கும் அப்படியே
  இருக்க வேண்டிய அவசியமில்லை
  அருமையாகச் சொன்னீர்கள்
  பயனுள்ள பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  // பயனுள்ள பதிவு. எல்லோருக்கும் எல்லாப் பழங்களும், எல்லா உணவு தானியங்களும், எல்லாக்காய்கறிகளும் எல்லா நேரங்களிலும் ஒத்து வராது என்பதே உண்மை. அவரவருக்கு ஒத்து வருவதை அவரவர்கள் எடுத்துக்கொண்டு, மற்றவற்றைத் தவிர்த்து விடுவதே மிகவும் நல்லது. ஒருவரை சாப்பிடச்சொல்லி வற்புருத்தி அன்புத்தொல்லை கொடுப்பதும் கூடாது. அழகான படங்களுடன் நல்லதொரு பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள். //

  அன்புள்ள V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல அன்பினாலே உண்டாகும் தொல்லைதான் அதிகம்1


  ReplyDelete

 37. எதையும் அளவோடு சாப்பிட வேண்டும் ....
  நல்ல கருத்துள்ள பதிவு ஐயா.

  ReplyDelete
 38. தாங்கள் கூறியிருப்பது மிகவும் உண்மையானவைகள். ஒருவருக்கு நன்மையளிக்கும் உணவு, அனைவருக்கும் நன்மையளிக்கும் என்று பொதுவாக கூறிவிடமுடியாது. நாற்பது வயதுக்குள் ஒருவர் தன உடலுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறது என்று அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். இப்பொழுது இதனை ரத்தப்பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.

  ReplyDelete
 39. ///ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பொதுக் குணம் இருப்பது போலவே ஒவ்வாமை (ALERGY) உண்டு பண்ணும் குணமும் உண்டு.///
  அறிந்து உணர்ந்ததான் உண்ண வேண்டும்
  பயனுள்ள பதிவு ஐயா
  உணவே மருந்து
  மருந்தே உணவு
  என்பார்கள்

  ReplyDelete
 40. படியெடுத்துப் பாதுகாக்கப்படவேண்டிய பதிவு. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. மிகவும் அருமையான ஒரு பதிவு ஐயா! உணவே மருந்து என்பது சரிதான் ஆனால் அதைப் பலர் தவறாக உணர்ந்து அதை மருந்தாக உண்ணாமல், அதிகமாக உண்ணுவதால் தான் பல பிரச்சினைகள்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் உணர்ந்து அளவோடு உண்டால் நல்லதே!

  ReplyDelete
 42. நமக்கு என்ன பழகி இருக்கிறதோ அதைச் சாப்பிட்டு வருவதே சிறந்தது! அநியாயமான, நமக்கே தெரிந்த அவபத்தியங்களைத் தவிர்த்தால் போதும் என்று தெரிகிறது.

  ReplyDelete
 43. சரியாய்ச் சொன்னீர்கள் ஐயா..பகிர்விற்கு நன்றி
  ருசியில் அறுசுவை இருப்பதுபோல உடம்பிலும் அறுசுவை உண்டு..அதனதன் இயல்புக்கு ஒவ்வொரு உணவுப்பொருள் தேவை..ஒவ்வொன்றின் குறைவு நிறைவு அறிந்து சரியாகச் சாப்பிட வேண்டும் என்று உணவு மருத்துவம் என்ற நூலில் படித்தேன். அதனை வழிமொழிவதாய் இருக்கிறது உங்கள் பதிவு.

  ReplyDelete
 44. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 45. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  சகோதரர் கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 46. மறுமொழி > அருணா செல்வம் said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 47. மறுமொழி > Packirisamy N said...

  // தாங்கள் கூறியிருப்பது மிகவும் உண்மையானவைகள். ஒருவருக்கு நன்மையளிக்கும் உணவு, அனைவருக்கும் நன்மையளிக்கும் என்று பொதுவாக கூறிவிடமுடியாது. நாற்பது வயதுக்குள் ஒருவர் தன உடலுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறது என்று அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். இப்பொழுது இதனை ரத்தப்பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளவும் முடிகிறது. //

  சகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கும் ரத்தப் பரிசோதனை பற்றிய தகவலுக்கும் நன்றி!  ReplyDelete
 48. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1,2)

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 49. மறுமொழி > Dr B Jambulingam said...

  // படியெடுத்துப் பாதுகாக்கப்படவேண்டிய பதிவு. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள். //

  முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இன்றைய வலைச்சரத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் பற்றிய தகவல் தந்தமைக்கும் நன்றி!

  ReplyDelete
 50. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  // மிகவும் அருமையான ஒரு பதிவு ஐயா! உணவே மருந்து என்பது சரிதான் ஆனால் அதைப் பலர் தவறாக உணர்ந்து அதை மருந்தாக உண்ணாமல், அதிகமாக உண்ணுவதால் தான் பல பிரச்சினைகள்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் உணர்ந்து அளவோடு உண்டால் நல்லதே! //

  நல்லதொரு கருத்தினை சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொன்ன சகோதரர் வி.துளசிதரன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 51. மறுமொழி > ஸ்ரீராம். said.
  ..
  // நமக்கு என்ன பழகி இருக்கிறதோ அதைச் சாப்பிட்டு வருவதே சிறந்தது! அநியாயமான, நமக்கே தெரிந்த அவபத்தியங்களைத் தவிர்த்தால் போதும் என்று தெரிகிறது.//

  நன்றாகவே விளக்கம் தந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 52. மறுமொழி > தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... ( 1, 2 )

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 53. உணவே மருந்து என்பதெல்லாம் அந்த காலம் ,உணவு என்ற பேரில் விஷத்தை அல்லவா உண்டு கொண்டிருக்கிறோம் ?
  அறியாத பல தகவல்களை அறிய தந்ததற்கு நன்றி !
  த ம 10

  ReplyDelete
 54. உணவில் இத்தனை விஷயங்களா?

  ReplyDelete
 55. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 56. மறுமொழி > King Raj said...

  சகோதரர் கிங் ராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 57. மிகவும் பயனுள்ள கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா. யாருக்கு எது ஒவ்வாது என்பதை அவரவர் அறிந்து அவற்றைத் தவிர்க்கவேண்டும். ஆஸ்திரேலியாவில் பல குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜி உண்டு. வேர்க்கடலை மட்டுமல்ல பொதுவாகவே நட்ஸ் எனப்படும் கொட்டை வகையறாக்களில் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழப்பு வரை செல்வதுண்டு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மட்டுமல்ல எச்சரிக்கையும் தேவை என்பது மிகவும் சரியே.

  ReplyDelete
 58. மறுமொழி > கீத மஞ்சரி said...

  சகோதரி கீத மஞ்சரி அவர்களின் கருத்துரைக்கும் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி குறித்துச் சொன்ன தகவலுக்கும் நன்றி!

  ReplyDelete
 59. மருந்து போலவே உணவும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரிதான் என்று உங்கள் விளக்கத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.
  கரும்பைத் தின்றவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது வாய் வெந்துவிடும் என்று தகவல் எனக்குப் புதிது. திருக்குறளுடன் கூடிய விளக்கம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 60. பயனுள்ள பகிர்வு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 61. நண்பரே!
  நல்வணக்கம்!
  தங்களது இந்த பதிவு இன்றைய
  "வலைச்சரம்" பகுதியில்
  சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
  சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
  வாழ்த்துக்கள்

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  ( நண்பரே! "குழலின்னிசை" உறுப்பினராக இணைய வேண்டுகிறேன். நன்றி)

  ReplyDelete
 62. மறுமொழி > Ranjani Narayanan said...

  சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மறுமொழி தர நீண்டநாள் ஆனதற்கு மன்னிக்கவும்.

  // மருந்து போலவே உணவும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரிதான் என்று உங்கள் விளக்கத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன். //

  உங்கள் கருத்துரை வழியே மருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி என்ற கருத்தினை தெளிந்து கொண்டேன்.

  ReplyDelete
 63. மறுமொழி > மாதேவி said...

  // பயனுள்ள பகிர்வு. வாழ்த்துகள். //

  சகோதரி மாதேவி அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. மறுமொழி தர நீண்டநாள் ஆனதற்கு உங்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 64. மறுமொழி > yathavan nambi said...

  // நண்பரே! நல்வணக்கம்! தங்களது இந்த பதிவு இன்றைய
  "வலைச்சரம்" பகுதியில் சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
  சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது. வாழ்த்துக்கள் //

  இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவினை அறிமுகம் செய்து வைத்த, சகோதரி மேனகா சத்யா அவர்களுக்கு நன்றி.

  நட்புடன் தகவல் தந்த, நண்பர் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி. வலைச்சரம் சென்று பார்க்கிறேன்.

  சிலசமயம் வலைப்பதிவர்கள் வலையுலகை விட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் போக நேரிடுகிறது. அதுபோன்ற சமயங்களில் உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுக்கும் தகவல்களால், வலைச்சரம், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete