Saturday 29 March 2014

திருச்சிக்கு ஏது திருப்புமுனை?



எந்த கட்சி திருச்சியில் மாநாடு நடத்தினாலும் அவர்கள் சொல்லும் வார்த்தை திருச்சி மாநாடு எங்களுக்கு ஒரு திருப்புமுனை மாநாடு “  இது எல்லா அரசியல்வாதிகளாலும் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை. காரணம், திருச்சி என்ற பெயரிலும் திரு இருக்கிறது; திருப்புமுனை என்ற சொல்லிலும் திரு இருக்கிறது. திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் ஏற்படுமடா! உந்தன் விருப்பம் நிறைவேறுமடா! என்ற பாடலில் வரும் எதுகை மோனை போன்றுதான் இதுவும். அடுக்குமொழி வார்த்தை. ஆனால் இந்த அரசியல்வாதிகளால் திருச்சிக்கு ஏதாவது திருப்புமுனை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.

பேருந்து நிலையங்கள்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. எல்லா மாவட்ட தலைநகர்களிலும் புது பேருந்து நிலையம் கட்டி விட்டார்கள். ஆனால் இன்னும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மாற்றப்படாமல் மூத்திர நாற்றம் வீச, அதே நெருக்கடியோடு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டி வெளியே உள்ள டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் படும்பாடு சொல்ல முடியாது. பயணிகளுக்கான இடம் முழுவதும் சிறு வியாபாரிகள். பிளாட்பாரத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் சறுக்க வைக்கும் அமைப்பு. படிக்கட்டுகள் இல்லை. கீழே எப்போதும் கழிவுநீர் மற்றும் குப்பை. புறநகர் செல்லும் பிரயாணிகள் நிற்க இடம் கிடையாது. கூட்டத்திற்குள் பஸ் வேகமாக நுழையும்போது மக்கள் இங்கும் அங்கும் ஓட வேண்டி உள்ளது.


  
ஒவ்வொரு தடவையும் நகரசபை தேர்தல் முடிந்தவுடன், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  நகரசபை தலைவர் (இப்போது மேயர்) சொல்லும் வாசகம் “விரைவில் திருச்சிக்கு என்று புதிய பேருந்து நிலையம் பெரிதாக அமைக்கப்படும்என்பதுதான். இடம் பார்ப்பதாக இங்கும் அங்கும் சென்று “பிலிம்காட்டுவார்கள். அப்புறம் அவ்வளவுதான். என்ன காரணத்தினாலோ அந்த திட்டம் கிடப்பில் போடப்படும். உண்மையான காரணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சிலர்தான் என்கிறார்கள். காரணம் பேருந்து நிலையத்தை புதிதாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் அவர்கள் வியாபாரம் படுத்துவிடும் என்பதுதான். உண்மையில் புதிய இடத்திற்கு பேருந்து நிலையம் போனாலும் இந்த பேருந்து நிலையமும் செய்லபட வாய்ப்புகள் அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

திருச்சியில், இந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு இணையாக உள்ளது , சிந்தாமணி பகுதியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம். இங்கே பெரும்பாலும் டவுன் பஸ்கள் வந்து போகின்றன.  மற்றொரு கோடியில் வெளியூர் பஸ்கள் நிறுத்தப் படுகின்றன. மத்திய பேருந்து நிலைய அவலங்கள் இங்கேயும் அப்படியே உள்ளன.


 
எனவே சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் போல் திருச்சியில் , ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி வாழ் மக்களின் நெடுநாள் கோரிக்கை ஆகும்.

குடிநீர்ப் பிரச்சினை:

காவிரி ஆறே கரை புரண்டு ஓடினாலும், காவிரிக் கரையில் இருக்கும் திருச்சி மக்களுக்கு மட்டும் குடிக்க  தண்ணீர் சரிவர கிடைக்காது. திருச்சி நகரத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இன்னும் குடங்களை வைத்துக் கொண்டு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது “ .

காவிரிக் கரையில் உள்ள திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினை  http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_26.html என்ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன் . அந்தப் பதிவில் எழுதிய மேலும் சில கருத்துக்கள்:

// இங்கு இவ்வாறு திருச்சி மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டு இருக்கும்போது, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பிற மாவட்ட மக்களுக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப் படுகிறது. மேலும் செல்லும் வழியில் சில இடங்களில் இந்த குழாயிலிருந்து திருட்டுத்தனமாகவும் தண்ணீர் எடுக்கிறார்கள். அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பது போல திருச்சி அரசியல்வாதிகள், அடுத்தவர்களுக்கு த்ண்ணீரை தானம் செய்து விட்டு திருச்சி மக்களை தாகத்தில் விட்டு விட்டார்கள். புறநகர் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டினாலும் தரப் போவது காவிரிநீர் கிடையாது. போர்வெல் தண்ணீரும் காவிரி தண்ணீரும் கலந்த ஒன்றுதான். சுத்தமான காவிரி தண்ணீர் இல்லை..//

தொழில்வளம் இல்லை:

திருச்சியில் தொழிற்சாலைகள் தொடங்கும் அளவுக்கு நிறைய வசதிகள் வாய்ப்பும் இருந்தும் என்ன காரணத்தினாலோ புறக்கணிக்கப் படுகிறது. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெல் ( BHEL ) நிறுவனம் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை மட்டும்தான். அதன் பின்னர் தொழில் வளர்ச்சி என்பதே இல்லை. இதைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் பேசுவதே இல்லை.

திருப்புமுனை:

எனவே அரசியல் கட்சிகள் திருச்சியில் திருப்புமுனை மாநாடுகள் நடத்துவதோடு இல்லாது திருச்சிக்கும் ஏதாவது செய்ய நினைக்க வேண்டும்.






43 comments:

  1. எதுகை மோனை . அடுக்குமொழி வார்த்தைகளால் அவலமாகிப் போனது நம் வாழ்க்கை. திருச்சியின் நிலையைக் கண்முன் காட்டி இருக்கின்றீர்கள்..
    திருச்சி மாநகரின் நிலையைக் குறித்து - பல சமயங்களில் எனக்கு இருந்த வருத்தம் அப்படியே - தங்களது கட்டுரையில் கண்டேன்..

    ReplyDelete
  2. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று சொல்வார்களே
    அது போலத் தான் இதுவும் வெறும் அடுக்கு மொழியில்
    பேசும் போது வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றிப் பேசி விடலாம்
    மக்கள் மனம் போல வாழ்வமைப்பதற்கு இவர்களுக்கு ஏது
    அந்த அளவிற்குப் பெரிய மனசு ?..மனம் இருந்தால் இதுவும்
    சாத்தியமாகும் அதற்கென்று நல்ல தலைவர்களை மக்கள்
    தான் தேர்ந்தெடுக்க வேண்டும் .மிகவும் சமூகப் பொறுப்பு
    உணர்ந்து எழுதப்பட்ட இவ் ஆக்கத்திற்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    ReplyDelete
  3. எனக்குத்தெரிந்து கடந்த ஒரு 25-30 வருடங்களில், திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் + சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் எவ்வளவோ மாற்றங்கள், விரிவாக்கங்கள், வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

    >>>>>

    ReplyDelete
  4. இருப்பினும் அவை போதவில்லை. காரணம் ஜனத்தொகை அதிகரிப்பு, வாகனங்கள் அதிகரிப்பு, வாகனங்களின் தேவை அதிகரிப்பு, மக்களில் பொருளாதார முன்னேற்றங்கள் அதிகரிப்பு, வியாபாரிகள் + கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புக்கள் போன்றவைகளும் ஆகும்.

    >>>>>

    ReplyDelete
  5. மேலும் திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல ஊர்களிலிருந்து வந்து போவோரும் மிகவும் அதிகமாக உள்ளனர்.

    ஆரம்பத்தில் சற்றே சுகாதாரமாக அமைக்கப்பட்ட அவசர ஆத்திர அறைகள், இப்போது மிகவும் மோசமாகவே தான் உள்ளன. இது நம் ஊர் திருச்சியில் மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலுமே உள்ள சாபக்கேடு. காசு மட்டும் வசூல் செய்கிறார்கள். சுத்தமோ சுகாதாரமோ தண்ணீர் வசதிகளோ ஒன்றுமே சரிவர இருக்காது. கொடுமை தான்.

    >>>>>

    >>>>>

    ReplyDelete
  6. பஸ் ஸ்டாண்டை வேறு இடங்களுக்கு மாற்ற இருப்பதாக அடிக்கடி ஸ்டண்ட் அடித்து வருகிறார்கள் என்பதும் உண்மை தான். அதெல்லாம் மாறவே மாறாது என்பதே இதில் உள்ள உண்மை.

    காவிரிக்குடிநீர் பற்றி தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். காவிரி நீர் வரத்தே குறைந்து போய் உள்ளது, திருச்சி தஞ்சைக்கே குடிக்கவும் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. இதில் கூட்டுக்குடிநீர் திட்டம் என ஆங்காங்கே திரும்பி விட பல திட்டங்கள் தீட்டி வருகிறார்கள். இதனால் திருச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து தான் ஏற்படப்போகிறது. சந்தேகமே இல்லை.

    >>>>>

    ReplyDelete
  7. தொழில்வளத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொஞ்சமாகவும், சிறு தொழிற்சாலைகள் நிறையவும் [மாத்தூர், துவாக்குடி போன்ற பகுதிகளில்] ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. மின் தடைகளால் அவைகளும் தடுமாறித்தான் வருகின்றன.

    திருப்பு முனையாவது வெங்காயமாவது .... அதெல்லாம் சும்மாச் சொல்வது.

    நல்லதொரு அலசலுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  8. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // திருச்சி மாநகரின் நிலையைக் குறித்து - பல சமயங்களில் எனக்கு இருந்த வருத்தம் அப்படியே - தங்களது கட்டுரையில் கண்டேன்.. //

    உங்களுக்கு மட்டுமல்ல, திருச்சி நகர மக்களுக்கும், திருச்சிக்கு வந்து போகும் அனைவருக்கும் இந்த வருத்தம் எப்போதும் உண்டு.

    ReplyDelete
  9. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    // .மிகவும் சமூகப் பொறுப்பு உணர்ந்து எழுதப்பட்ட இவ் ஆக்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா //

    சகோதரி கவிஞர் அம்பாளடியாள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! திருச்சியைச் சேர்ந்த நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன்.

    // எனக்குத்தெரிந்து கடந்த ஒரு 25-30 வருடங்களில், திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் + சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் எவ்வளவோ மாற்றங்கள், விரிவாக்கங்கள், வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. //

    நீங்கள் சொல்வது போல மாற்றங்கள், விரிவாக்கங்கள், வசதிகள் செய்து இருந்தாலும் அவை பொதுமக்களின் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை. பதிவில் உள்ள படங்களைக் கூட செல்போனில் எடுக்கும்போது பயந்து பயந்துதான் எடுக்க வேண்டி இருந்தது.

    ReplyDelete
  11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (2)

    // இருப்பினும் அவை போதவில்லை. காரணம் ஜனத்தொகை அதிகரிப்பு, வாகனங்கள் அதிகரிப்பு, வாகனங்களின் தேவை அதிகரிப்பு, மக்களில் பொருளாதார முன்னேற்றங்கள் அதிகரிப்பு, வியாபாரிகள் + கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புக்கள் போன்றவைகளும் ஆகும்.//

    நீங்கள் சொல்வதுபோல ஆக்கிரமிப்புகள் மட்டுமன்றி இட நெருக்கடியும் ஒரு காரணம். நான் அடிக்கடி பஸ்சில் வெளியூர் செல்பவன். நான் அடிக்கடி பார்த்து வெறுத்துப் போன அவலத்தையே இங்கு பதிவாக வெளியிட்டேன். இன்னும் எவ்வளவோ இருந்தாலும், அவற்ரையெல்லாம் எழுதவில்லை. திரு VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3, 4, 5 )

    //மேலும் திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல ஊர்களிலிருந்து வந்து போவோரும் மிகவும் அதிகமாக உள்ளனர்.
    ஆரம்பத்தில் சற்றே சுகாதாரமாக அமைக்கப்பட்ட அவசர ஆத்திர அறைகள், இப்போது மிகவும் மோசமாகவே தான் உள்ளன. இது நம் ஊர் திருச்சியில் மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலுமே உள்ள சாபக்கேடு. காசு மட்டும் வசூல் செய்கிறார்கள். சுத்தமோ சுகாதாரமோ தண்ணீர் வசதிகளோ ஒன்றுமே சரிவர இருக்காது. கொடுமை தான்.//

    ஆமாம் அய்யா! இந்த சுகாதாரக் கேடு என்பது தமிழ்நாட்டு பேருந்து நிலையங்களின் சாபக்கேடு! மாறவே மாறாது.

    // பஸ் ஸ்டாண்டை வேறு இடங்களுக்கு மாற்ற இருப்பதாக அடிக்கடி ஸ்டண்ட் அடித்து வருகிறார்கள் என்பதும் உண்மை தான். அதெல்லாம் மாறவே மாறாது என்பதே இதில் உள்ள உண்மை. //

    பஸ் ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றப் போவதாக, மூன்று தலைமுறையாக இதனையேயே சொல்லி வருகிறார்கள்

    // காவிரிக்குடிநீர் பற்றி தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். காவிரி நீர் வரத்தே குறைந்து போய் உள்ளது, திருச்சி தஞ்சைக்கே குடிக்கவும் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. இதில் கூட்டுக்குடிநீர் திட்டம் என ஆங்காங்கே திரும்பி விட பல திட்டங்கள் தீட்டி வருகிறார்கள். இதனால் திருச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து தான் ஏற்படப்போகிறது. சந்தேகமே இல்லை.//

    நான் புறநகர்ப் பகுதியில் ஏர்போர்ட் பக்கம் இருக்கிறேன். இங்கு குடிநீர் என்பது பெரும்பாலும் மினரல் வாட்டதான். குடிசைப் பகுதிகளுக்கு மட்டும் ஓட்டுக்காக லார் மூலம் தண்ணீர் தந்து விடுகிறார்கள். எங்கள் வீட்டு கார்ப்பரேஷன் குழாயில் கடந்த 7 வருடங்களாக காற்றுதான் வருகிறது. ஆனாலும் வரியை மட்டும் கட்ட வேண்டி உள்ளது.

    // தொழில்வளத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொஞ்சமாகவும், சிறு தொழிற்சாலைகள் நிறையவும் [மாத்தூர், துவாக்குடி போன்ற பகுதிகளில்] ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. மின் தடைகளால் அவைகளும் தடுமாறித்தான் வருகின்றன. //

    துவாக்குடி பக்கம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் மாத்தூர் பக்கம் மின்தடை மட்டுமன்றி ஏற்ற இறக்க மின்பகிர்வும் தொழிற்சாலைகளுக்கு தடையாக உள்ளது.

    // திருப்பு முனையாவது வெங்காயமாவது .... அதெல்லாம் சும்மாச் சொல்வது. நல்லதொரு அலசலுக்கு நன்றிகள், ஐயா. //

    திருப்புமுனையாவது வெங்காயமாவது .... தங்களது எதார்த்தமான விமர்சனம் எனக்கு எப்போதுமே பிடிக்கும்! VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி!



    ReplyDelete
  13. இங்கும் ஒவ்வொரு முறையும் கலர் கலராக பிலிம் ஓடும்... அங்கு குடிநீர்ப் பிரச்சினை... இங்கு நீர் கிடைப்பதே பிரச்சனை... நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை...

    இப்போது 10 நாளைக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம்... வரும் நாட்களில் 10 நாள் தொடருமா...? என்பதும் சந்தேகம் தான்... இன்றைய நிலை 1000 லிட்டர் உப்புத் தண்ணீர் 170 ரூபாய்... நல்ல தண்ணீர் பல மடங்கு...!

    நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனைகளும்... ஏன் அதைவிட அதிக பிரச்சனைகளும் இங்கு உள்ளது... ஒருவேளை தி என்பதாலோ...?

    ReplyDelete
  14. Your style is unique compared to other people I've read stuff from.

    Thanks for posting when you've got the opportunity, Guess I'll just book mark this blog.


    Review my web-siteon skype credit hack ()

    ReplyDelete
  15. ஓட்டினைப் பெறுகிறவர்களுக்குத்தான் தேர்தல் முடிவுற்றவுடன் திருப்பு முனை.
    வோட்டுப் போடுகிறவர்களுக்குத் திருப்புமுனை என்பதே கிடையாது.
    சுதந்திரம் பெற்று அறுபத்து ஆறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் அடிப்படைவசதிகள் கூட முழுமையான் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை.
    சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, மின் வசதி......
    வாழ்க ஜனநாயகம்

    ReplyDelete
  16. பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதில் மேயருக்கும் அதிகாரிகளுக்கும் "நடைமுறை சிக்கல்" இருக்கலாம், அரசியல் பிரச்சனை தான். எங்கள் ஊர் ராஜபாளையத்திலேயே ஊருக்கு ஒதுக்குப்புறமாக பேருந்து நிலையம் வந்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அப்போது பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது என அப்போதைய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எதிர்த்தது. ஆனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக, எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கு ஆளும் கட்சியினரை சாடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் தேவையாக இருப்பது இந்த நிகழ்விலேயே தெரிகிறது.

    கழிவறைகளின் நாற்றம் எல்லா ஊர்களிலும் உண்டு. அதைக் குறைப்பதற்கோ மறைப்பதற்கோ நம் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, ஏன் நாமே கழித்துவிட்டு வந்ததும் மறந்துவிடுகிறோம், சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

    இன்றைய குடிநீர் பிரச்சனை எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. எங்கள் ஊரிலும் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான். குடும்பத்துடன் ஊருக்குப் போவதற்குக் கூட யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

    ReplyDelete
  17. திருப்பு முனை மாநாடு என்று ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனக்குள்ளும் இதே கேள்வி தோன்றும் - அப்படி என்ன திருப்பிட்டாங்க? என்று...

    பேருந்து நிலைய அவலங்கள் எல்லா ஊருக்கும் பொதுவாகிவிட்டது. விமான நிலையம் போகும் வழியில் புதிய பேருந்து நிலையம் வரப்போவதாக முன்னர் ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுவும் பேச்சளவிலேயே இருந்துவிட்டது.

    தில்லியில் இது போன்ற பேருந்து நிலையங்கள் நிறைய இடங்களில் உண்டு. எந்த எல்லை வழியே வெளியேற வேண்டுமோ அதன் அருகில் ஒரு பேருந்து நிலையம். - Inter State Bus Terminal. இப்படி இருக்கும் எல்லா ISBT-க்களையும் இணைக்கும் நகரப் பேருந்துகள் உண்டு. இந்த மாதிரி திருச்சியிலும் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  18. திருச்சி நகரின் பேருந்து நிலைய அவலத்தை மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இப்போது பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எவ்வித சுயலாபமுமின்றி அரசியல்வாதிகள் செயல்படும் நாளில்தான் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். அது வெறும் கனவாகவே இன்றுவரை தொடர்கிறது என்பது வருத்தம் தரும் உண்மை. பகிரவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. நானும் பெருமையாக 'எங்க ஊர் எங்க ஊர்' என்று அந்தக் காலத்திலிருந்து திருச்சியைச் சொல்லிவருவது வழக்கம். சென்ற ஆண்டு வந்திருந்தபோது குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல வேண்டியதற்காக பஸ் நிலையத்தில் நின்றபோது எந்த பஸ் எந்த இடத்தில் என்ற சரியான தகவல் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு கோக்குமாக்காய் இருக்கிறது பேருந்து நிலையத்தின் நிலைமை.
    கழிப்பிடங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எல்லா நிலையங்களிலும் ஒன்றுபோலவேதான் என்று சொல்வதா? அல்லது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோலவேதான் என்று சொல்வதா?
    எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் பாதிதான் செய்யமுடியும், பாதிப் பங்களிப்பு மக்களிடம் இருந்து வரவேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைமை.

    ஆனால் மக்கள் பங்களிப்பு என்பது சுத்தமாக ஒரு பெரிய ஸீரோ. பொதுக் கழிப்பிடம் ஒரு பக்கம் இருக்கட்டும். ரயில் பெட்டிகளில் சுத்தமாகத்தானே கழிப்பறையை அமைத்திருக்கிறார்கள்? சிறிது நேரத்திற்குள் அதனை எந்த அளவுக்கு மக்கள் அசிங்கப்படுத்தி வைக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். முதல் வகுப்புப் பெட்டிகளில் மட்டுமல்ல ரிசர்வ் செய்துவிட்டுச் செல்லும் பெட்டிகளிலும் இதேதான் நிலைமை.

    இவற்றிலெல்லாம் ஓரளவு படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள்தானே பயணம் செய்கிறார்கள் என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.
    திருச்சி -திருப்பம் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் என்பது முழுக்க முழுக்க உண்மை.

    ReplyDelete
  20. திருச்சி மலைக்கோட்டை பகுதிக்கு காரில் சென்று பார்க் பண்ண இடமே இல்லை .திருச்சியின் சாலை ஓரங்களை வியாபாரிகள் கபளீகரம் செய்து விட்டார்கள் 50 வருடம் பின்னோக்கி உள்ளது . '###மாமா தன்னை மட்டும் வளபடுத்திகொண்டு திருச்சியை தெருவில் விட்டுவிட்டார் .

    ReplyDelete
  21. நீங்கள் கூறுவதுபோல்தான் இங்கு கர்நாடகாவிலும் கூறுகிறார்கள். எங்களுக்கே நீர் பற்றாக்குறை எனும் போது தமிழ்நாட்டுக்கு எப்படி நீர் கொடுக்க முடியும் , சென்னையில் கோயம்பேடு பேரூந்து நிலையம் அமைக்கப்படவுன் ஏராளமான எதிர்ப்புகள் இருந்தது. There will always be resistance to change.

    ReplyDelete
  22. தங்கள் கூறியுள்ள அனைத்தும் உண்மையே! வரும் தேர்தலுக்குப் பின்னராவது
    சீர்படுமா?

    ReplyDelete
  23. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // இங்கும் ஒவ்வொரு முறையும் கலர் கலராக பிலிம் ஓடும்... அங்கு குடிநீர்ப் பிரச்சினை... இங்கு நீர் கிடைப்பதே பிரச்சனை... நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை...//

    திருப்பூருக்கு சாயக் கழிவு நீர் பிரச்சினை போல், திண்டுக்கல்
    தோல் தொழிற்சாலை கழிவுநீர் ஒரு சாபக்கேடு.

    // இப்போது 10 நாளைக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம்... வரும் நாட்களில் 10 நாள் தொடருமா...? என்பதும் சந்தேகம் தான்... இன்றைய நிலை 1000 லிட்டர் உப்புத் தண்ணீர் 170 ரூபாய்... நல்ல தண்ணீர் பல மடங்கு...! //

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால், திண்டுக்கல்லுக்கு ஒரு பெரிய மழை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பெய்தால்தான் நல்லது போல் தெரிகிறது. இறைவனிடம் வேண்டுவோம்!

    // நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனைகளும்... ஏன் அதைவிட அதிக பிரச்சனைகளும் இங்கு உள்ளது... ஒருவேளை தி என்பதாலோ...? //

    தி என்றாலே திருகுவலிதான் போலிருக்கிறது.

    ReplyDelete
  24. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    கருத்துரை தந்த சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    // ஓட்டினைப் பெறுகிறவர்களுக்குத்தான் தேர்தல் முடிவுற்றவுடன் திருப்பு முனை. வோட்டுப் போடுகிறவர்களுக்குத் திருப்புமுனை என்பதே கிடையாது.//

    சரியாகச் சொன்னீர்கள்! எல்லா கட்சிககளுக்கும் இது பொருந்தும். இதுதான் உண்மை!

    //சுதந்திரம் பெற்று அறுபத்து ஆறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் அடிப்படைவசதிகள் கூட முழுமையான் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை. சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, மின் வசதி...... வாழ்க ஜனநாயகம் //

    என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்?

    ReplyDelete
  25. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    கருத்துரை சொன்ன சகோதரர் ஸ்கூல் பையனுக்கு நன்றி!

    // பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதில் மேயருக்கும் அதிகாரிகளுக்கும் "நடைமுறை சிக்கல்" இருக்கலாம், அரசியல் பிரச்சனை தான்.//

    எல்லாவற்றிலும் அய்யா – அம்மா பாலிடிக்ஸ்!

    // கழிவறைகளின் நாற்றம் எல்லா ஊர்களிலும் உண்டு. அதைக் குறைப்பதற்கோ மறைப்பதற்கோ நம் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, ஏன் நாமே கழித்துவிட்டு வந்ததும் மறந்து விடுகிறோம், சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. //
    நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்.

    // இன்றைய குடிநீர் பிரச்சனை எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. எங்கள் ஊரிலும் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான். குடும்பத்துடன் ஊருக்குப் போவதற்குக் கூட யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். //

    இன்னும் கொஞ்சநாளில், குடிதண்ணீருக்காக ஒவ்வொரு ஊருக்கும் இடையில் கடுமையான போர் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

    ReplyDelete
  26. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    கருத்துரை தந்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

    //திருப்பு முனை மாநாடு என்று ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனக்குள்ளும் இதே கேள்வி தோன்றும் - அப்படி என்ன திருப்பிட்டாங்க? என்று... //

    ஒவ்வோரு கட்சி மாநாட்டின் போதும், கட்சிக்காரர்களுக்காக எல்லா ஓட்டல்களிலும் தோசையையும், புரோட்டாவையும் அதிக அளவில் திருப்பி போட்டார்கள்.

    //பேருந்து நிலைய அவலங்கள் எல்லா ஊருக்கும் பொதுவாகிவிட்டது. விமான நிலையம் போகும் வழியில் புதிய பேருந்து நிலையம் வரப்போவதாக முன்னர் ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுவும் பேச்சளவிலேயே இருந்துவிட்டது. //

    திருச்சியில் எல்லோருக்கும் அந்த மிலிட்டரி கிரவுண்ட் மேல் ஒரு கண்தான்.

    // தில்லியில் இது போன்ற பேருந்து நிலையங்கள் நிறைய இடங்களில் உண்டு. எந்த எல்லை வழியே வெளியேற வேண்டுமோ அதன் அருகில் ஒரு பேருந்து நிலையம். - Inter State Bus Terminal. இப்படி இருக்கும் எல்லா ISBT-க்களையும் இணைக்கும் நகரப் பேருந்துகள் உண்டு. இந்த மாதிரி திருச்சியிலும் வந்தால் நன்றாக இருக்கும். //

    இதுவும் நல்ல யோசனை! மாவட்ட நிர்வாகம் பார்த்து செய்தால் உண்டு.

    ReplyDelete
  27. மறுமொழி > கீத மஞ்சரி said...

    சகோதரி கீதமஞ்சரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // திருச்சி நகரின் பேருந்து நிலைய அவலத்தை மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இப்போது பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எவ்வித சுயலாபமுமின்றி அரசியல்வாதிகள் செயல்படும் நாளில்தான் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். அது வெறும் கனவாகவே இன்றுவரை தொடர்கிறது என்பது வருத்தம் தரும் உண்மை. பகிரவுக்கு நன்றி ஐயா. //

    நீங்கள் அப்போது பார்த்த திருச்சிக்கும், குறிப்பாக மரங்கள் சூழ்ந்த பொன்மலை ரெயில்வே காலனிக்கும், இப்போதுள்ள திருச்சிக்கும் நிறைய மாற்றம். அப்போது இருந்த குடிதண்ணீர் வசதி, சுவையான ஆற்றுநீர் இப்போது இல்லை

    ReplyDelete
  28. மறுமொழி > Amudhavan said...

    // நானும் பெருமையாக 'எங்க ஊர் எங்க ஊர்' என்று அந்தக் காலத்திலிருந்து திருச்சியைச் சொல்லிவருவது வழக்கம். சென்ற ஆண்டு வந்திருந்தபோது குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல வேண்டியதற்காக பஸ் நிலையத்தில் நின்றபோது எந்த பஸ் எந்த இடத்தில் என்ற சரியான தகவல் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு கோக்குமாக்காய் இருக்கிறது பேருந்து நிலையத்தின் நிலைமை.//

    உங்களுக்கு எப்போதோ ஒரு தடவை ஏற்படும் அனுபவம் ர்ங்களுக்கு தினமும் ஏற்படுகிறது. பஸ்ஸின் பக்கவாட்டிலோ அல்லது பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியிலோ எழுதப்பட்டு இருக்கும் ஊர்களுக்கு பெரும்பாலும் அந்த பஸ்கள் செல்வதில்லை. அதிலும் குறிப்பாக டவுன் பஸ்களில் பஸ் ரூட் நம்பரை வைத்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விடக் கூடாது.

    // கழிப்பிடங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எல்லா நிலையங்களிலும் ஒன்றுபோலவேதான் என்று சொல்வதா? அல்லது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோலவேதான் என்று சொல்வதா?//

    //எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் பாதிதான் செய்யமுடியும், பாதிப் பங்களிப்பு மக்களிடம் இருந்து வரவேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைமை. //

    தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் நிச்சயம் நடக்கும் உதாரணம் : குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம்..

    // ஆனால் மக்கள் பங்களிப்பு என்பது சுத்தமாக ஒரு பெரிய ஸீரோ. பொதுக் கழிப்பிடம் ஒரு பக்கம் இருக்கட்டும். ரயில் பெட்டிகளில் சுத்தமாகத்தானே கழிப்பறையை அமைத்திருக்கிறார்கள்? சிறிது நேரத்திற்குள் அதனை எந்த அளவுக்கு மக்கள் அசிங்கப்படுத்தி வைக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். முதல் வகுப்புப் பெட்டிகளில் மட்டுமல்ல ரிசர்வ் செய்துவிட்டுச் செல்லும் பெட்டிகளிலும் இதேதான் நிலைமை. இவற்றிலெல்லாம் ஓரளவு படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள்தானே பயணம் செய்கிறார்கள் என்பதற்காக இதனைச் சொல்கிறேன். //

    பெரும்பாலான பயணிகள் அவ்வாறு செய்வதில்லை. இதற்கென்றே சில ஆட்கள் இருக்கின்றனர். பஸ்ஸில் நடத்துநர்கள் இருப்பது போல் , ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பரிசோதகர்கள் இருந்தால் இவற்றினை தவிர்க்கலாம். எல்லோருக்கும் நல்லது. ரெயில்வேக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

    // திருச்சி -திருப்பம் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் என்பது முழுக்க முழுக்க உண்மை. //

    மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அவர்களது கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  29. மறுமொழி > Anonymous said... (1 )

    அனானிமஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // திருச்சி மலைக்கோட்டை பகுதிக்கு காரில் சென்று பார்க் பண்ண இடமே இல்லை .//

    நானே இதுபற்றி விவரமாக எழுத வேண்டும் என்று இருந்தேன். மலைக்கோட்டை பகுதியில் மட்டுமல்ல, திருச்சியில் எல்லா இடத்திலும் இதே பிரச்சினைதான். இதனாலேயே திருச்சிக்கு மலைக்கோட்டையைப் பார்க்க வரும் பலபேர், பார்க்காமலேயே சென்று விடுகின்றனர்.

    // திருச்சியின் சாலை ஓரங்களை வியாபாரிகள் கபளீகரம் செய்து விட்டார்கள் 50 வருடம் பின்னோக்கி உள்ளது .//

    நீங்கள் சொல்வது உண்மைதான்! நடிகர் விவேக் நடைபாதை வியாபாரிகள் பற்றி சொன்ன கமெண்ட் ஜோக்கை இங்கு நினைத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  30. மறுமொழி > G.M Balasubramaniam said...

    பெரியவர் அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // நீங்கள் கூறுவதுபோல்தான் இங்கு கர்நாடகாவிலும் கூறுகிறார்கள். எங்களுக்கே நீர் பற்றாக்குறை எனும் போது தமிழ்நாட்டுக்கு எப்படி நீர் கொடுக்க முடியும் , //

    நல்ல வாதம்தான்! ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரே தமிழ்நாட்டிற்கு போகக் கூடாது என்றே, போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறி ஆங்காங்கே அணைகள் அல்லவா கட்டுகிறார்கள். மழை கொஞ்சம் பெய்தால், இருதரப்பிலும், அந்த வருடம் போராட்டம் செய்பவதில்லை.

    // சென்னையில் கோயம்பேடு பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டவுன் ஏராளமான எதிர்ப்புகள் இருந்தது. There will always be resistance to change. //

    நீங்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete
  31. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // தங்கள் கூறியுள்ள அனைத்தும் உண்மையே! வரும் தேர்தலுக்குப் பின்னராவது சீர்படுமா? //

    திருச்சியில் மூனறு தலைமுறையாக இதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் இந்த பதிவு.






    ReplyDelete
  32. ஆங்கிலத்தில் ப்ளோட்டிங் பாப்புலேஷன் என்பார்கள். மக்கள் வந்து போய்க் கொண்டே இருக்கும் நகரம் எப்போதும் நரகமாகத்தான் இருக்கும். எங்கள் ஊருக்கு அருகே கோட்டையூர் என்ற ஊர் உள்ளது. புதுக்கோட்டை செல்ல, அறந்தாங்கி பக்கம் செல்ல இங்கிருந்து தான் பிரிய வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக ஒரு சிறிய கிராமம் போலத்தான் உள்ளது. ஒரு சதவிகித வளர்ச்சி கூட இல்லை.

    இங்கே அவினாசி முக்கிய சந்திப்பு. இதே தான். நிலவரம் மோசம்.

    என்னைக் கேட்டால் அரசியல்வாதிகளை அதிகாரிகளை குறையே சொல்ல மாட்டேன். மக்கள் நீ உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லட்டும். அப்புறம் பாருங்க. வேடிக்கை வினோத காட்சிகள் அரங்கேறும்.

    ReplyDelete
  33. திரு என்றால் திருப்பம்............ ஹி ..........ஹி ..........ஹி .......... இப்படி பேசிப் பேசிய நம்மை முட்டாளாக்கி கிட்டு இருக்கானுங்க.

    ReplyDelete

  34. திருச்சி மாநகரின் அவலங்களை இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. திருச்சியில் உள்ள சேவை சங்கங்கள்(Lions Club, Rotary Club போன்றவை) எல்லா வேட்பாளர்களையும் ஒரு பொது விவாத மேடைக்கு அழைத்து மேற்கூறிய அவலங்களை சொல்லி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் குறைகளைப் போக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கேட்கலாம். அவர்களில் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை பின்னர் மேடைக்கு அழைத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் பற்றி பேச சொல்லலாம். பொதுமக்களை கூட்டி போராடலாம். இதெல்லாம் செய்தால் குறைகள் தீருமா என்றால் தீராது என்பதே பதிலாக இருந்தாலும் எதிர்காலத்தில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு பயமாவது இருக்கும்.

    ReplyDelete
  35. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    கருத்துரை தந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!

    // ஆங்கிலத்தில் ப்ளோட்டிங் பாப்புலேஷன் என்பார்கள். மக்கள் வந்து போய்க் கொண்டே இருக்கும் நகரம் எப்போதும் நரகமாகத்தான் இருக்கும். //

    இங்கு திருச்சி பஸ் நிலையம் அப்படித்தான் உள்ளது.

    // என்னைக் கேட்டால் அரசியல்வாதிகளை அதிகாரிகளை குறையே சொல்ல மாட்டேன். மக்கள் நீ உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லட்டும். அப்புறம் பாருங்க. வேடிக்கை வினோத காட்சிகள் அரங்கேறும். //

    இன்றைய அதிகாரிகள் நாளைய அரசியல்வாதிகளாக மாறும் காலம் இது.

    ReplyDelete
  36. மறுமொழி > Jayadev Das said...

    கருத்துரை தந்த சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி!

    // திரு என்றால் திருப்பம்............ ஹி ..........ஹி ..........ஹி .......... இப்படி பேசிப் பேசிய நம்மை முட்டாளாக்கி கிட்டு இருக்கானுங்க. //

    அரசியல்வாதி தனது மேடைப் பேச்சாலும், போலி ஆன்மீகவாதி தனது மதத்தின் பெயராலும், போலி நாத்திகவாதி தனது பகுத்தறிவு வேடத்தாலும் – அவரவர் பங்கிற்கு ஒவ்வொருவரும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.



    30 March 2014 20:49

    ReplyDelete
  37. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    //திருச்சி மாநகரின் அவலங்களை இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. திருச்சியில் உள்ள சேவை சங்கங்கள்(Lions Club, Rotary Club போன்றவை) எல்லா வேட்பாளர்களையும் ஒரு பொது விவாத மேடைக்கு அழைத்து மேற்கூறிய அவலங்களை சொல்லி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் குறைகளைப் போக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கேட்கலாம்.//

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இங்கும் ஒவ்வொரு தேர்தலின் போது நீங்கள் சொன்ன கூட்டங்கள் நடத்தப்படுகின்ற்ன. வாக்குறுதிகள் தரப்படுகின்றன. ஆனால் சொன்னபடிதான் நடப்பது இல்லை.

    ReplyDelete
  38. எனவே அரசியல் கட்சிகள் திருச்சியில் திருப்புமுனை மாநாடுகள் நடத்துவதோடு இல்லாது திருச்சிக்கும் ஏதாவது செய்ய நினைக்க வேண்டும்.//

    இதே நிலைதான் ஒவ்வொரு ஊரிலும். சென்னை புறநகர் என்றுதான் பேர், ஆவடியில் திருச்சியில் இருக்கும் வசதிகள் கூட இல்லை. சமீபத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அம்பத்தூரிலும் இதே நிலைதான். என்ன நடந்தாலும் பொறுத்துக்கொண்டு செல்லும் மனம் படைத்தவர்களாயிற்றே தமிழர்கள்!

    ReplyDelete
  39. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // என்ன நடந்தாலும் பொறுத்துக்கொண்டு செல்லும் மனம் படைத்தவர்களாயிற்றே தமிழர்கள்!//

    தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவருக்கோர் குணமுண்டு – என்பது இதுதானோ, என்னவோ?

    ReplyDelete
  40. தி.தமிழிளங்கோ சார்,

    தேசியநெடுஞ்சாலை-45 இல்,சமயபுறம் அருகே திருச்சிக்கு திரும்பனும் இல்ல அதை சொல்லி இருப்பாங்க "திருச்சி என்றால் திருப்பம்" என ,நீங்க வேற நினைச்சிக்கிட்டா அவங்களாப்பொறுப்பு.

    கடலூரில் இருந்து திருச்சி வரப்பேருந்தில் ஏறினா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவீங்க, சுமார் 150 கி.மி தான் தூரம் 5-6 மணி நேரம் ஓட்டோ ஓட்டுனு ஓட்டிருவாங்க அவ்வ்!

    # மாவட்டப்பேருந்து நிலையங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நல்லாப்பெருசாவே இருக்கு,ஆனால் சரியாப்பயன்ப்படுத்தலைனு நினைக்கிறேன்.

    திருச்சி நல்ல ஊர் சார்,அங்கே இருக்க ஹோட்டலில் பார்கள் எல்லாம் காலை 11 மணிக்கு மேலத்தான் திறக்கிறாங்க அவ்வ்.

    துவாக்குடி டவுன் பஸ் நிக்குற படம் போட்டிருக்கீங்களே அதுக்கு எதிர ஒரு ஹோட்டல் இருக்கு,அங்கே தங்கி இருந்தப்போது தான் அனுபவம் கிட்டிச்சு!

    திருச்சியில கையில வெண்ணைய வச்சிக்கிட்டு தண்ணியில்லனு நிக்கிற கதையா இருக்கு,எம்சிஆர் காலத்தில திருச்சிய தலைநகரா மாத்தலாம்னு யோசிச்சப்பவே அங்கே தண்ணிப்பிரச்சினை ,வேண்டாம்னு சொன்னாங்களாம் :-))

    ஹி..ஹி என்னைய மட்டும் திருச்சிக்கு எம்பியாக்குங்க, 24 மணி நேரமும் கொழாய்ல காவிரி தண்ணி கொட்டும்.

    ReplyDelete
  41. மறுமொழி > வவ்வால் said...

    வாங்க சார்! வவ்வால் சார்!

    // கடலூரில் இருந்து திருச்சி வரப்பேருந்தில் ஏறினா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவீங்க, சுமார் 150 கி.மி தான் தூரம் 5-6 மணி நேரம் ஓட்டோ ஓட்டுனு ஓட்டிருவாங்க அவ்வ்!//

    எல்லா ஊர் பேருந்துகளையும் இப்படியேதான் ஓட்டிக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு தடவையும் ஆட்சி மாறும்போது, புதுசு புதுசா வாங்கின பேருந்துகளை இப்போது பார்க்கவே முடியலை சார்!
    // # மாவட்டப்பேருந்து நிலையங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நல்லாப்பெருசாவே இருக்கு, ஆனால் சரியாப் பயன்ப்படுத்தலைனு நினைக்கிறேன்.//

    அதிகம் பேர் வந்து போகும், தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் திருச்சிக்கு, இந்த பேருந்து நிலையம் போதாது.

    // திருச்சி நல்ல ஊர் சார்,அங்கே இருக்க ஹோட்டலில் பார்கள் எல்லாம் காலை 11 மணிக்கு மேலத்தான் திறக்கிறாங்க அவ்வ்.
    துவாக்குடி டவுன் பஸ் நிக்குற படம் போட்டிருக்கீங்களே அதுக்கு எதிர ஒரு ஹோட்டல் இருக்கு,அங்கே தங்கி இருந்தப்போது தான் அனுபவம் கிட்டிச்சு! //

    நீங்கள் திருச்சிக்கு வருவது தெரியாமல் போயிற்றே? ஆனால் எனக்கு அவ்வ் ... பழக்கம் இல்லை! சொல்லி இருந்தால் வந்து பார்த்து இருப்பேன்.

    // திருச்சியில கையில வெண்ணைய வச்சிக்கிட்டு தண்ணியில்லனு நிக்கிற கதையா இருக்கு,எம்சிஆர் காலத்தில திருச்சிய தலைநகரா மாத்தலாம்னு யோசிச்சப்பவே அங்கே தண்ணிப்பிரச்சினை ,வேண்டாம்னு சொன்னாங்களாம் :-)) //

    இருக்கின்ற தண்ணீரை திருச்சிக்கு மட்டும் சீராகக் கொடுத்தாலே போதும். அவ்வாறு செய்வதில்லை.

    // ஹி..ஹி என்னைய மட்டும் திருச்சிக்கு எம்பியாக்குங்க, 24 மணி நேரமும் கொழாய்ல காவிரி தண்ணி கொட்டும்.//

    நீங்க எம்பி ஆகனும்னா உங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் போட்டோ உட்பட தெரிவிக்க வேண்டுமே?

    ReplyDelete
  42. திருச்சி பேருந்து நிலையம் பற்றிய அழகான பதிவு. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஏன் இந்தியா முழுவதும் இப்படித்தான் இருக்கின்றன. எல்லா பேருந்து நிலையங்களுக்கும் பொருந்துவது போலத்தான்...நிறைய அறிய முடிந்தது..திருச்சியிலும் தண்ணீர் கஷ்டமா...அதுவும் காவிரி ஆற்றின் கரையில்...அப்படி என்றால் தண்ணீர் பற்றாக் குறை என்பதை விட தண்ணீர் மேலாண்மை சரியில்லை என்றே தோன்றுகின்றது...ஐயா..

    ReplyDelete