Sunday, 18 November 2012

கவிஞர் கவி அருவி பி.கலைமணி
ஒருமுறை திருச்சியில் ஹால் ஒன்றில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். கவிஞரை பேச அழைத்தார்கள். மேடையில் ஏறியதும்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

 - பாடல்: கவிஞர் வாலி (படம்: பாசம்)

என்று தொடங்கும் எம்ஜிஆர் படப் பாடல் ஒன்றினை ராகம் மாறாமல் முழுதும் பாடினார். அதன் பிறகுதான் அவர் தனது பேச்சையே தொடர்ந்தார். அவர் எப்போதுமே மேடையில் பேசுவதற்கு முன் இந்த பாடலை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் கவிஞர் கவிஅருவி பி.கலைமணி. மேடைகளில் பாடும் திறனோடு கவி எழுதுவதிலும் வல்லவரான இவர் புள்ளி இயல் உதவி இயக்குநராக , பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை , திருச்சி மாவட்ட ஆசிரிய கல்வி பயிற்சி மற்றும் நிறுவன அலுவலகம், குமுளூரில் பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர்; இலக்கிய சொற்பொழிவாளர், மேடைப் பாடகர் ( இசைக் குழுக்களில் தற்போது பாடியும் வருகிறார்). 

ஆசிரியர் பெற்ற விருதுகள்:

1.கவி அருவி
2.வியன்கவி வேந்தர் 
3.சிகரம் தொட்ட சாதனையாளர்
4.பல்துறை வித்தகர்
5.சிந்தனைப் பேரொளி
6.மனித நேயக் கவிஞர்
7.சாதனைக் கவிஞர்
8.இசை அரசு
9.கல்விக் காவலர்
10. மத நல்லிணக்க நாயகர்
11.கர்மவீரா காமராஜர் விருது
12.பாரத ரத்னா ராஜிவ்காந்தி விருது
13.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விருது
14.வாழ்வியல் சிந்தனைச் செம்மல்

அவருடைய நூல்கள் பற்றிய எனது விமர்சனம்.கவி அருவி கலைமணி கவிதைகள்


இந்த கவிதை நூலில் கவிஞரின் எளிய நடையில் அமைந்த பல கவிதைகளைக் காணலாம். மனைவி என்ற தலைப்பில் ஒரு கவிதை (பக்கம் 17)

சிந்தனையில் தாயாக
சிரிப்பினில் சேயாக
மொழியினில் தமிழாக
மொழியவள்நல் மனைவி!

உயர்ந்தவர்கள் என்ற கவிதையில் (பக்கம் 35)

நாடு போற்றும் நல்லவர்கள்
நற்பண்பை வளர்ப்பவர்கள்
பீடு மிகவும் கொண்டவர்கள்
பிறரை என்றும் மதிப்பவர்கள்!

கவிநர் தமிழ்ப் பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்கவர். இந்தியனாக வாழ்ந்திடுவோம்என்ற கவிதையில்

இந்தியனாக வாழ்ந்திடுவோம்!
ஏழ்மை வறுமை ஒழித்திடுவோம்!
இயன்ற வரையில் உழைத்திடுவோம்!
இல்லாமையினை விரட்டிடுவோம்!

என்றே முழங்குகிறார்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 40/= பக்கம் -103)

நெஞ்சம் எனும் வானிலே

நெஞ்சம் எனும் வானிலே என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். நூல் முழுவதும் அழகு தமிழில்  சின்னஞ் சிறு அடிகளில் அமைந்த ஒரு பக்கக் கவிதைகள். இயற்கை, சமுதாயம், உறவுகள், பல்சுவை என்று பல கவிதைகள். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தலைப்பு கொடுத்து இருக்கிறார்.

தனது கவிதை நூலினை 

செம்மொழி உயர்வைப் பெற்றவளே
சிந்தைக்கு இனிய என் தமிழே
உலகில் உள்ள மொழிகளிலே
உயரிய மொழியே நீதானே!

என்று தமிழன்னை வாழ்த்தோடு (பக்கம் 20 ) தொடங்குகிறார்.

மலைச் சாரலில்  என்ற தலைப்பில்

விடியற் காலையில்
வீசிடும் சாரலில்
இதயம் குளிர்கிறதே
என்னில் இன்பம் சுரக்கிறதே!  (பக்கம் 21)

எது வசந்தம்? என்று வினா எழுப்பி அவரே விடைகளையும் ஒரு பக்கத்தில் தருகிறார். (பக்கம் 31). இறைவனிடம்

என்னை உலகுக்கு கொடுத்த இறைவா
எல்லோர் மனதிலும் மகிழ்வை ஊட்டு
ஏழ்மை தாழ்மை இவற்றை நீக்கி
இனிக்கும் வாழ்வைக் கொடுத்தருள்வாயே!

என்று கேட்கிறார். (பக்கம் 40 ) ஆசிரியர் பெருமை குறித்து,

வாழ்வைச் சொன்னவர் இவரே
வாழ்க்கைக் கல்வியும் இவரே
பாட்டால் கதையால் என்றும்
பண்படுத்தியவரும் இவரே!

என்ற வரிகளால் சிறப்பிக்கிறார்.  (பக்கம் 45 ) எது வேண்டும் என்று? ஒரு இடத்தில் கேட்கிறார் கவிஞர். (பக்கம் 49)

அறிவு வேண்டுமா? நூல்களைப் படி!
அன்பு வேண்டுமா? உயிர்களை நேசி!
உயர்வு வேண்டுமா? கடினமாய் உழை!
உவகை வேண்டுமா? இல்லறம் பேணு!

இலக்கியம் என்னும் தலைப்பில்

இலக்கியம் படிப்பது இன்பத்தைக் கொடுக்கும்
இதயம் சிறக்க அறிவை வளர்க்கும்
கவிதைகள் தோன்றும் கற்பனை பெருகும்
காலம் முழுதும் இதயமோ நெகிழும்

என்று உரைக்கிறார். .  (பக்கம் 91) இன்னும் உலகம், வாழ்க்கை, சமத்துவம், அறிவு என்று பல்வேறு தலைப்புகளில்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 80/= பக்கம் -112)

சிந்தனை மின்னல்கள்

அடுத்து சிந்தனை மின்னல்கள்  என்று கவிஞரின் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய நூல். கவிஞர் எம்.ஏ பொருளியல் படித்தவர். புள்ளியியல் துறையில் அதிகாரி. அதன் தாக்கம் நூலின் பல இடங்களில் எதிரொலிக்கிறது.

முதல் கட்டுரை அம்மாவும் அன்னைத் தமிழும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சியில் தமிழின் வளர்ச்சிக்கும் , தமிழ் மொழியின் உயர்வுக்கும் செய்த பணிகளை விவரிக்கின்றார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது, மாணவர்களுக்கு அளித்த சலுகை, தமிழ் மொழிக்கான விருதுகள் என்று அவர் ஆட்சிக் கால
சாதனைகளை பட்டியலிடுகிறார்.

பண்டைத் தமிழர் வாழ்வியல் பண்பாடு, தாய்மொழி வழிக் கல்வி, சமுதாய மறுமலர்ச்சி என்று நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளை தந்துள்ளார்.

கவிஞர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவர். அந்த கிராமத்து பொங்கலையும் அந்த மண்ணின் மக்களையும் மறக்க முடியாதவர்.“ பொங்கல் விழா “ என்ற தலைப்பில் சுவையான செய்திகள் தருகிறார்.

தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் நம் கவிஞர் பி. கலைமணி அவர்கள். நூலில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களைப் பற்றியும். மகாகவி சுப்ரமண்ய பாரதியாரைப் பற்றியும்,  அறிஞர் அண்ணாவின் எழுத்துகளைப் பற்றியும் இலக்கிய ரசனையோடு எழுதியுள்ளார்.

நம்பிக்கையுடன் பா.விஜய் - என்று  அந்த கவிஞரைப் பற்றியும் சிறப்பித்து பேசுகிறார்.

மேலும் குறளில் இல்லறம், கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்மையும் தத்துவமும், பாரதியும் இலட்சியப் பெண்மையும், கற்றபடி நிற்க, எண்ணித் துணிக, செல்வம் என்பது சிந்தையின் நிறைவும் சமத்துவ உணர்வு சிந்தனைகள், நாடு உயர  போன்ற அற்புதமான தலைப்புகளில் கட்டுரைகளை தந்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இந்த நூலுக்கு வாழ்த்துரை தந்துள்ளமை இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

நூல் வெளியீடு: க.கிருஷ்ணகுமாரி பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 100/= பக்கம் -166)
21 comments:

 1. பிடித்த பாடலோடு ஆரம்பம் அருமை...

  கவிஞர் கவி அருவி பி.கலைமணி பற்றிய
  தகவல்களுக்கு நன்றி... நூலை வாங்கி படிக்க வேண்டும்... முகவரி, அலைபேசிக்கும் நன்றி...
  tm1

  ReplyDelete
 2. அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ, ஐயா.

  வணக்கம், ஐயா.

  கவிஞர் கவி அருவி பி.கலைமணி அவர்கள் பற்றியும், அவரின் மூன்று கவிதை நூல்கள் பற்றியும் மிகச்சிறப்பாக விமர்சனம் செய்து எழுதியுள்ளீர்கள்.

  அனைத்துத்தகவல்களும் அருமை + இனிமை !

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 3. நல்ல கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 4. கவிஞர் கவிஅருவி பி.கலைமணி நூல்கள் பற்றி அருமையான அறிமுகம் .. நன்றிகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. //அறிவு வேண்டுமா? நூல்களைப் படி!
  அன்பு வேண்டுமா? உயிர்களை நேசி!
  உயர்வு வேண்டுமா? கடினமாய் உழை!
  உவகை வேண்டுமா? இல்லறம் பேணு!//

  என்று அற்புதமாக வரிகளை தந்த அந்த கவிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  ReplyDelete
 6. என்னை உலகுக்கு கொடுத்த இறைவா
  எல்லோர் மனதிலும் மகிழ்வை ஊட்டு
  ஏழ்மை – தாழ்மை இவற்றை நீக்கி
  இனிக்கும் வாழ்வைக் கொடுத்தருள்வாயே!

  சிறப்பான வரிகள் அழகிய அறிமுகம் .

  ReplyDelete
 7. அருமையானவரை அருமையாக
  அறிமுகம் செய்துள்ளீர்கள்
  எடுத்துக்காட்டு கவிதைகளும் அருமை
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 8. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  சகோதரரின் அன்பான வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்பு மிக்க VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

  சென்ற ஆண்டே இந்த கவிஞரை நான் அறிமுகப்படுத்த எண்ணினேன். இவரையும் வலைப் பதிவில் எழுதச் சொல்லியுள்ளேன். முயற்சிப்பதாக சொல்லியுள்ளார். சகோதரர் T N முரளிதரன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


  ReplyDelete
 11. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 12. மறுமொழி > Sasi Kala said...

  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி! விரைவில் உங்கள் கவிதை நூலைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

  ReplyDelete
 13. மறுமொழி > Ramani said... (1. 2)

  கவிஞரைப் பாராட்டிய கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
 14. மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ

  ReplyDelete
 15. மறுமொழி > desiyam Divyamohan said...
  சகோதரி தேசியம் திவ்யா மோகன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 16. வணக்கம் சார்!
  தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தாரும்படி அன்போடு அழைக்கிறேன்!
  http://blogintamil.blogspot.in/2012/11/4_22.html

  ReplyDelete
 17. அன்புள்ள ஐயா, வணக்கம்.

  இன்று 22.11.2012 வலைச்சரத்தில் தங்களின் பெயரும் பதிவும் நம் யுவராணி அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன.

  அதற்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 18. மறுமொழி > யுவராணி தமிழரசன் said...
  வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரிக்கு நன்றி

  ReplyDelete
 19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  வலைச்சரம் தகவல் சொன்ன VGK அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete