இப்போது புதுக்கோட்டையிலும், சென்ற ஆண்டு (2014) மதுரையிலும் நடந்த வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு சென்று வந்துள்ளேன். இவைகளுக்கு முன்னர் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற இந்த சந்திப்பு விழாக்களுக்கு நான் சென்றதில்லை. ஒவ்வொரு விழா முடிவிலும், விழா பற்றிய பதிவு எழுதிய நண்பர்களும், அவற்றிற்கு பின்னூட்டம் எழுதிய அன்பர்களும், சொல்லும் ஒரு பொதுக் கருத்து என்னவெனில், “நிறைய பேரோடு பேச வேண்டும் என்று வந்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது” என்பதுதான்.
நானும் புதுக்கோட்டை சந்திப்பிற்குப்பின் எழுதிய, எனது பதிவினில்,
“ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், அய்யா கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மேற்பார்வையில்
, நல்ல ஒருங்கிணைப்பில், நல்ல திட்டமிடலின் அடிப்படையில் சிறப்பாக எந்தவித தடங்கலுமின்றி
சிறப்பாக நடைபெற்றன.”
என்று பாராட்டி
எழுதினேன். அந்த பதிவினில், ஜோதிஜி (திருப்பூர்) அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியில்,
”உங்கள் வாசகர் வட்டம் பெரியது. அவர்களில் நானும் ஒருவன். உங்களோடு
நேற்று புதுக்கோட்டையில், நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சந்தர்ப்ப
சூழ்நிலைகள் பேச முடியாமல் செய்து விட்டது. வேறு எந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல்,
வெறும் வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் மட்டுமே வைத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும்
போலிருக்கிறது”
என்று எழுதினேன். இதனைப் படித்த நமது நா. முத்துநிலவன் அய்யா அவர்கள்.
“எப்போது
வைப்போம் சொல்லுங்கள் - எனக்கும் இப்படி ஒரு கருத்து உண்டு(ஏதாவது சுற்றுலாத் தளத்தில் எல்லாரும் சந்தித்தால்தான் உண்டு, நாள் இடம் பற்றிப் பேசுவோமா? சென்னை? புத்தகத் திருவிழாவுக்கும் வருவது மாதிரி ஒரு தேதியாக இருந்தால் நல்லது? புத்தகத்திருவிழாவின் முதல் ஞாயிறு?) அல்லது ஊட்டியில் மேமாதம்...? இதுபற்றி நீங்கள் ஒரு பதிவிடலாம் அய்யா”
என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் எதிரொலியே இந்த ஆதங்கப் பதிவு.
பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள்
இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல்
(Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற
நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப்
பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை.
ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு
இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால் யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு
காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்பு”
என்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள்
நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப்
பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.
அண்மையில் புதுக்கோட்டையில் (11.10.2015 ஞாயிறு அன்று) நடைபெற்ற
வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில் கண்டு களிக்க கீழே உள்ள, இணைய முகவரிகளைச்
சொடுக்குங்கள் (CLICK)