சிலபேர் சும்மாவே இருக்க மாட்டார்கள். எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
சிலபேர் வேலையிலிருந்து ரிடையர்டு ஆனாலும் வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள்.
கேட்டால் ” வீட்டில் என்னால் சும்மா உட்கார்ந்து இருக்க முடியல சார் “ என்பார்கள்.
எம் ஆர் ராதாவைப் பற்றி பேசும்போது அவர் சொன்னதாக ஒரு டயாலக். “ ஒரு கலைஞன் சும்மாவே இருக்கக் கூடாது.
தூங்கும்போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை யென்றால் அவனை செத்து விட்டான் என்று தூக்கி புதைத்து
விடுவார்கள்”
இன்னும் சிலர் இருக்கிறார்கள். யானைப்
பாகன்கள். அவர்களுக்கு யானையின் மொழி தெரியும். எவ்வளவு பெரிய யானையாக
இருந்தாலும், மதம் பிடித்து இருந்தாலும் தம் வசமாக்கி விடுவார்கள். அவ்வளவு பெரிய
யானை இந்த சின்ன மனிதன் சொல்வதைக் கேட்டு உட்கார் என்றால் உட்காரும். நில் என்றால்
எழுந்து நிற்கும். தெருக்களில் சிலசமயம்
சிலர் கரடியைக் காட்டி காசு வாங்க அதனை அழைத்து வருவார்கள் அப்போது அதன் வாயை
இரும்பு தகட்டால் இறுக்கி வைத்து இருப்பார்கள்.
சர்க்கஸில் புலி, சிங்கம் இவைகளை ரிங் மாஸ்டர் ஆட்டி வைப்பார். எனவே சிங்கம்,புலி,கரடி வாயையும் கட்டலாம் எனத் தெரிகிறது.
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் ரசவாதம் (ALCHEMY ) செய்வது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இரும்பு, தாமிரம், பித்தளை,
வெள்ளி, காரியம் போன்ற உலோகங்களை பாதரசம் மற்றும் சில மூலிகைகளை
சேர்த்து தங்கமாக மாற்றும் கலை ரசவாதம்
எனப்படும்.நம்நாட்டில்
சில மூலிகைகள் இருக்கின்றனவாம். அவற்றை கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க
வேண்டும். அந்த சாற்றோடு பாதரசம் மற்றும் சில
உலோகத் துண்டுகளைப் போட்டு மண் சட்டியில் வைத்து காய்ச்சினால் அவை உருகி தங்கமாக
மாறிவிடும். இதை அந்த காலத்து சித்தர்கள் செய்ததாக கதை உண்டு. இந்த டெக்னிக்கைச்
சொல்லி இப்போது காசு பறிப்பவர்களும், ஏமாறுபவர்களும் இப்போதும் இருக்கிறார்கள். Alchemist எனப்படும்
ரசவாதம் செய்பவர்கள் பற்றி நிறைய கதைகள் உண்டு.
அப்போதெல்லாம் ” வாலிப வயோதிக அன்பர்களே! சேலம் சித்த டாக்டர்கள் வருகை!
இன்னின்ன நாட்களில் இந்த இந்த விடுதிகளில் தங்குவார்கள். இளமையை மீண்டும் பெறலாம்
“ என்று விளம்பரம் பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கும். எத்தனை பேர் இளமையைத்
திரும்பப் பெற்றார்கள் என்று தெரியவில்லை. புறநானூற்றில் பிசிராந்தையார் இளமையின்
ரகசியத்தை சொல்லுவார். எம்ஜிஆரும் என் டி ராமராவும் நல்ல உணவு நல்ல உடற்பயிற்சி செய்து இளமையாகவே வாழ்ந்தார்கள். இப்போது இளமையாக காட்டிக் கொள்ள தலைச் சாயம் பூசிக் கொள்கிறார்கள். இன்னும் நிறைய வழி முறைகள்.
விக்கிரமாதித்தன் கதைகளில் கூடு விட்டு கூடு பாயும் அதிசயங்களை அடிக்கடி
காணலாம். பல தெலுங்கு படங்களிலும், டப்பிங் படங்களிலும் ரொம்பவும் சுவாரஸ்யமாக
இந்தக் கதையச் சொல்லுவார்கள். நமக்கும் அப்படி கூடு விட்டு கூடு பாய ஆசைதான்.
உடலுக்கு எங்கே போவது. அப்படியே போனாலும் நமது உடம்பு என்ன ஆவது? நாம் நாமாகவே
இருப்பதுதான் நல்லது. பைபிளில் இயேசுநாதர் கடல் மீது நடந்து கடும் புயலையும் மழையையும்
நிறுத்தியதாகச் சொல்வார்கள். வடக்கே சிலபேர் தண்ணீரில் நடந்து காட்டுகிறேன்
பேர்வழி என்று காமெடி செய்த செய்திகள் உண்டு. செய்ய முடியாதவற்றை கனவு
கண்டு ஹாரிபாட்டர் போன்ற கதைகளைச் சொல்லலாம்.
ஆக மனிதனால் எல்லா விஷயங்களையும் செய்ய முடியும். யானையை தன் வசப்படுத்தலாம். கரடி, புலி வாயை கட்டலாம். சிங்கத்தின் முதுகின் மேல் சவாரி செய்யலாம். பாம்பை கையில் எடுத்து ஆட்டலாம். ரசவாதத்தினால் தங்கம் செய்து விற்கலாம். யாரும் காணாத நிலையினை அடையலாம். விண்ணவரை அடிமை ஆக்கலாம். எப்போதும் இளமையாகவே இருக்கலாம். கூடு விட்டு கூடு பாயலாம். தண்ணீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மீது அமரலாம். தன்னிகரில்லாத சக்திகளை அடையலாம். ஆனாலும் மனிதனால் ஒன்று மட்டும்
செய்ய முடியாது. அது சும்மா இருத்தல். அதாவது மனதை அடக்கி ஆண்டு பக்குவ நிலையில்
சும்மா இருத்தல்.
மேலே சொன்ன கருத்துக்களை உள்ளடக்கி தாயுமானவர் ஒரு பாடலாக பாடி வைத்து
இருக்கிறார். படித்துப் பாருங்கள்.
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாங்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை ஏவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.
- தாயுமானவர். (தேசோமயானந்தம், பாடல் எண்.8)
( தாயுமானவர் திருமறைக்காடு என்று சைவ இலக்கியங்கள் போற்றும் வேதாரண்யத்தில் பிறந்தவர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது, திருச்சிராப்பள்ளியில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக வேலை பார்த்தார். மட்டுவார்குழலி என்ற பெண்ணை திருமணம் செய்தவருக்கு இல்லறத்தில் நாட்டம் இல்லை. எனவே பட்டினத்தார் போன்று துறவறம் மேற்கொண்டு பல கோயில்களுக்குச் சென்று இலட்சுமிபுரம் (ராமநாதபுரம்) என்ற ஊரில் முக்தி அடைந்தார்.)
எல்லோரும்
இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
(பராபரக்கண்ணி - 221)
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
(பராபரக்கண்ணி - 221)
( PICTURES : THANKS TO
“ GOOGLE ” )