Sunday, 3 April 2016

வறுமை ஓவியம்



’கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் ஔவையார். அன்றுமுதல் இன்று வரை எல்லோரும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவோம் என்றும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். சொன்னபடி அரசியல்வாதிகள் பலரும் தங்கள், தங்கள் வீடுகளில் இருந்த வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். 

சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் சங்ககாலத்திலும், தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லாத வறுமை இருந்ததை அறிய முடிகிறது. இங்கு சங்ககால ’பத்துப்பாட்டு’ என்ற தொகுப்பில் இருக்கும், ’சிறுபாணாற்றுப்படை’ என்ற நூலிலிருந்து, அன்றைய வறுமையின் ஒருகாட்சியைக் காணலாம் ( காட்சியைப் படம் பிடித்து காட்டுபவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர்.) சங்க இலக்கியங்களை ஊன்றிப் படிக்கும் எவரும், அவை ஒவ்வொன்றும் நமது மனதில் உண்டாக்கும் நிழலோவியங்களை மறந்து விட முடியாது. படிப்பவரே ஒரு ஓவியராக இருப்பின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ஓவியத்தை தூரிகை கொண்டு வரைந்து விடுவார்.

வீட்டின் நிலைமை:

அது ஒரு குடிசை வீடு. கழிகளால் ஆன கூரையால் அமைந்தது. அந்த கழிகளும் கயிறு இற்றதால் விழுகின்ற நிலைமை. வீட்டின் சுவர்களோ கறையான் அரித்து மிகவும் பழைமையானவை. இந்த நிலைமையில் அந்த வீட்டில் பலநாட்கள் சமையல் இல்லை. எனவே அடுப்பங்கரையில் நெருப்பே மூட்டப்படாததால், அடுக்களையில் காளான் பூத்துக் கிடக்கிறது. 

நாயின் நிலைமை:

அந்த வீட்டின் அடுக்களைப் பக்கம் ஒரு நாய். அப்போதுதான் அது ஒரு குட்டியை ஈன்று இருக்கிறது. வீட்டில் நிலவிய வறுமை காரணமாக நாய்க்கு உண்ண எதுவும் கிடைக்கவில்லை. குட்டி ஈன்ற அசதியில் வெளியே எங்கும் சென்று உணவு தேடவும் முடியாத நிலைமை. மேலும் குட்டியை மட்டும் தனியே விட்டு விட்டுச் செல்லவும் பயம். எனவே அதுவும் பட்டினி. இந்த சூழ்நிலையில், வெறும் வயிற்றில் தனது குட்டிக்கு கொடுப்பதற்கு அதனிடம் மடிப்பால் கூட இல்லை. இதனை அறியாத, கண்கூட விழிக்காத , அப்போதுதான் பிறந்த, வளைந்த காதுகளைக் கொண்ட, அந்த நாயின் குட்டி , தனது தாயின் மடியை கவ்விக் கவ்வி இழுக்கிறது. பால் சுரக்க வில்லை. அந்த நாய்க்கோ தனது குட்டிக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன், குட்டி படுத்தும் பாட்டால் வேதனை தாங்காமல் குலைத்துக் கொண்டே இருக்கிறது. 

பாணன் நிலைமை:

மேலே சொன்ன அந்த குடிசையில் இருந்தவன் ஒரு இசைக் கலைஞன். கிணைப்பறை கொட்டுபவன். (பொருநன் என்றும் சொல்லுவாரகள்.) அவனுடைய மனைவியும் அவனுக்குத் துணையாக சென்று இசைப்பவள். கைகளில் வளையல்கள் அணிந்து இருக்கிறாள். வேறு நகைகள் ஏதும் அவளிடம் இல்லை. தற்போது வருவாய் ஏதும் இல்லை. வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக , இடை மெலிந்து காணப்படுகிறாள்.
வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை. உப்பு கூட இல்லை. எனவே, என்ன செய்வது என்று யோசித்த அவள், வாசலில் விளைந்த குப்பைக் கீரையைப் பறிக்கின்றாள்., உப்பு இல்லாமல் சமைக்கிறாள். வீட்டிற்கு வெளியில் இருந்து பார்ப்பவர்கள் தம்மை இகழ்ச்சியாக எண்ணுவார்கள், பரிகாசம் செய்வார்கள்  என்றெண்ணி வாசற் கதவை அடைத்து வைக்கிறாள். பின்னர் தான், சமைத்த அந்த உப்பில்லாத குப்பைக் கீரை உணவை கணவனோடு தானும் உண்கிறாள். 

பாடல் வரிகள்:
                                                                                                                                                                
……………….. இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் (129-132)
காழ்சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட………… (133-140)

                                                                                                                                                             
-               -  சிறுபாணாற்றுப்படை (இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்)

பாடலின் முடிவு:

நல்லியக்கோடன் என்றொரு வள்ளல். அவனைக் கண்டு, பரிசில்கள் பெற்று வருகிறான் இன்னொரு பாணன். அவன் வழியிலே. மேலே சொன்ன, வறுமையின் பிடியில் சிக்கி உழன்ற அந்த இசைக் கலைஞனை காண்கிறான். அவனிடம், .நல்லியக்கோடன் என்ற வள்ளலைக் கண்டு தன்னைப் போலவே வறுமை நீங்குமாறு ஆற்றுப்படுத்தி விட்டுச் செல்கிறான்.