Friday, 5 February 2016

அசெம்ப்ள்டு கம்ப்யூட்டரா?



தலைப்பைப் பார்த்ததும் உலகில் உள்ள எல்லாமே அசெம்ப்ள்டுதானே – உருவாக்கப் பட்டவைதானே – இது என்ன என்று திட்டி விடாதீர்கள். நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கும்போது, ஆலோசனை கேட்டால்   அசெம்ப்ள்டா அல்லது கம்பெனியா என்று கேட்பார்கள். இதில் கம்பெனி என்றால் ப்ராண்டேடு (BRANDED) என்று அர்த்தம். அசெம்ப்ள்டு (ASSEMBLED) என்றால் தனிநபர் ஒருவர் வெவ்வேறு கம்பெனி பாகங்களை ஒன்றாக இணைத்து (அவை புதிதா? அல்லது பழையதா?) ஒரு செட் உருவாக்கி தருவார். கம்பெனி செட்டைவிட நன்றாக இருக்கும்; விலை குறைவு என்பார். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரேடியோ விற்பனைக் கடைகளில், அசெம்ப்ள்டு ரேடியோ செட்தான் விற்பனை அதிகம். அப்புறம் டிரான்சிஸ்டர்களில் ‘டெல்லி செட்’ வந்து அந்த பெயரையே வைத்து விட்டார்கள்.

முதல் கம்ப்யூட்டர்:

ஏழு வருடங்களுக்கு முன்னர், முதன் முதல் ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதற்காக, எல்லோரையும் போல தெரிந்தவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும் ஆலோசனை கேட்டேன். வழக்கம் போல ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூறினார்கள். நான் பணி புரிந்த இடத்திற்கு வரும் கம்ப்யூட்டர் பாடம் படித்த டிப்ளோமோ என்ஜீனியர்கள் தாங்களே ஒரு நல்ல செட் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தியில்லை. எனவே தூர்தர்ஷனில் அப்போது பணிபுரிந்து கொண்டு இருந்த எனது நண்பரிடம் விவரம் சொன்னேன். அவரும், என்னைப் போலவே, ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுவிட்டு, அண்மையில் தான் வாங்கிய கம்ப்யூட்டர் பற்றிய விவரத்தைச் சொன்னார். தான் இப்போது கொடைக்கானல் பக்கம் இருப்பதாகவும் திருச்சிக்கு வந்தவுடன், அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். அப்படியே சென்றேன். அவர் வாங்கிய கம்பெனி  ப்ராண்டேடு கம்ப்யூட்டர் பிடித்து இருந்தது. 

அவர் வாங்கிய இடத்திலேயே ‘COMPAQ‘ டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை வாங்கினேன். விலையும் எனது பட்ஜெட்டிற்குள்ளேயே வந்தது. windows xp யை கம்ப்யூட்டரில் நிறுவியதோடு வேண்டிய மற்றைய நிரல்களையும் இணைத்துக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இந்த கம்யூட்டர் நன்றாகவே உழைத்தது. அவர்கள் அவ்வப்போது கொடுத்த சர்வீஸ்சும் நன்றாகவே இருந்தது.

அசெம்ப்ள்டு செட்:

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் கம்ப்யூட்டர் வாங்கிய ஏஜென்சிக்காரர்கள் வேறு ஒரு மார்க்கெட்டிங்கிற்கு போய் விட்ட படியினால், வேறு ஒரு சர்வீஸ் என்ஜீனியருக்கு மாற வேண்டியதாயிற்று. அவர் அவ்வப்போது வருவார். என்னோடு பணிபுரிந்த ஒருவர் வழியாக அறிமுகம். சென்ற வருடம் மானிட்டரில் வர்ணங்களாக வர ஆரம்பித்ததால் அதனை அவரிடம் சொல்லி அதனை மட்டும் (டெல்) மாற்றினேன். இப்போது CPU வில் பிரச்சினை. நான் பேசாமல் கம்பெனி தயாரிப்பையே நேரிடையாக (மானிட்டர் டெல் என்பதனால் ) வாங்கி இருக்கலாம். விதி வலியது. அவரிடமிருந்து அசெம்ப்ள்டு CPU ஒன்றை வாங்கினேன்.. வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. சண்டிமாடு போல் அடிக்கடி படுத்துகிறது. ஒரு சில சாப்ட்வேர் பிரச்சினைகளை, அனுபவம் காரணமாக நானே சரி செய்து விடுவேன். ஆனால் ஹார்டுவேர்தான் உதைக்கிறது. கம்பெனி தயாரிப்பிற்கும், அசெம்ப்ள்டு செட்டுக்கும் அப்படி ஒன்றும் விலை வித்தியாசம் அதிகம் இல்லை. பேசாமல் கம்பெனி (ப்ராண்டேட்) தயாரிப்பையே வாங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதில் வாரண்டி உண்டு. அசெம்ப்ள்டு பி.சி இல் இல்லை.

என்ன நண்பர்களே உங்கள் அனுபவம் எப்படி.? வலையுலகில் நிறையபேர் கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறீர்கள்.?

                                          (PICTURE COURTESY: GOOGLE IMAGES)