Sunday, 1 July 2012

” பெண் என்று பார்க்கிறேன் ” - சாமான்யனும் தசரதனும்

எனது பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு சமயம், எங்களது குடும்பம் வாடகை வீட்டில் இருந்தது. அப்போது நாங்கள் இருந்த பகுதி நகரத்தின் ஒரு பகுதியில் நடுத்தர வகுப்பினர் இருந்த பகுதியாகும். அங்கு பல தரப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளைக் காண நேர்ந்தது.

ஒரு குடும்பம். புருசனுக்கு ரெயில்வேயில் கலாசி வேலை. பெண்டாட்டி , மூன்று குழந்தைகள் என்று அளவான குடும்பம். இருந்தாலும் அந்த வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை, சத்தம்தான். அந்த பெண்டாட்டிக்காரி தனது புருசனை ஒரு ஆளாகவே நினைப்பது கிடையாது. அவ்வளவு பேச்சு. மரியாதை இல்லாமல் திட்டுவாள். இவன் அவளை அடிக்க கையை ஓங்குவான். அவள் உடனே ஒரு பொம்பளைய அடிக்கிறியே! உனக்கு வெக்கமா இல்லை? “ என்பான். அவன் கோபம் தலைக்கு ஏற “ பொம்பளைன்னு பார்க்கிறேன். இல்லேன்னா நடக்கிறதே வேற “ என்பான். அவளும் சளைக்காமல் “ யோவ் உன்னால என்ன பண்ண முடியும்என்று உசுப்பேத்துவாள். அவன் வெறியாகி அவளை ரெண்டு சாத்து சாத்துவான். அதுவரை வேடிக்கை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் பிரித்து விட்டு “ ஏய்யா பொம்பளைய போட்டு இப்படி அடிக்கிறேஎன்பார்கள். இப்படியாக சண்டை நடக்கும்.

அந்த பெண் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும், நடந்து கொள்ளும் முறையும், ஒரு பெண்ணுக்குரிய தன்மையில் இருக்காது. அவனுக்கு அவளை அடிக்கத்தான் தோன்றும். ஆனால் அடிக்க முடியாது. அடித்தால் ஏன் பெண்ணை அடிக்கிறாய் என்பார்கள். விட்டு விட்டால் அவளுக்கு வாய் நீளம். அவனால் எதுவும் பண்ண முடியாது. குடும்ப கவுரவத்தை நினைத்து அமைதியாகி விடுவான்.. இதே நிலைமை ஒரு ராஜாவுக்கும் ஏற்பட்டது. அவர் வேறு யாரும் இல்லை. தசரதன் என்ற அயோத்தி மகா சக்கரவர்த்திதான் அவர். .

என்றோ ஒருநாள் தசரத ராஜன் கண்ணாடியில் காதோரம் நீண்டிருந்த நரைமுடியைப் பார்க்க, தனக்கு வயதாகி விட்டது என்று அப்போதுதான் நினைக்கிறான். எனவே மூத்த மகன் ராமனுக்கு முடிசூட்ட நினைக்கிறான். விடிந்தால் ராமனுக்கு மகுடாபிஷேகம். நாடே மகிழ்ச்சியில் இருக்கும் போது அரண்மனை வேலைக்காரி கூனி தசரதனின் இளைய தாரம் கைகேயிக்கு போதனை செய்கிறாள். வந்தது வினை. தசரத மகராஜா அந்தப்புரம் வரும்போது, தனது சொந்த விவகாரத்தை ஆரம்பிக்கிறாள்.

 
என்றோ தசரதனிடம் கேடடுப் பெற்ற வரங்களை வைத்துக் கொண்டு இன்று அவனை மிரட்டுகிறாள்.. ஒரு பக்கம் முறைப்படி மூத்த மகன் ராமனுக்கு முடி சூட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இளைய தாரமான இவளோ அதையே தடுத்து தனது மகன் பரதனுக்கு முடி சூட்ட நினைக்கிறாள். அது மட்டுமல்ல. ராமன் காட்டுக்கு போக வேண்டும் என்றும் சொல்கிறாள். தசரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தான் ஒரு சக்கரவர்த்தியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று உடல் பதறுகிறது. அவளை ஏதாவது செய்தால் என்ன என்று ஆவேசம் அடையும் போது , அவள் ஒரு பெண்ணாயிற்றே  பழி வந்து சேருமே என்று அடக்கிக் கொள்கிறான். அந்த நாளில் அவன் ( ஒரு ஆண் ) பட்ட பாட்டை கம்பன் தனது காவியத்தில் சுவை படச் சொல்லுகிறான்.

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர
, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும்
, வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
?
வேதனை முற்றிட
, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன
, வெய்து உயிர்த்தான்

உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது
; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது
; 'தக்கது என்கொல்?' என்று என்று
அலந்து அலையுற்ற
, அரும் புலன்கள் ஐந்தும்.

மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்
;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்
;-
ஆவி பதைப்ப
, அலக்கண் எய்துகின்றான்

பெண்ணென உற்ற; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும்
; வன் கைவேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான்
             
                   - கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்) 


முடிவில் தசரதன் தோற்கிறான். இளைய தாரமான கைகேயி அரசியலில் மூக்கை நுழைத்து காரியத்தை சாதித்து விடுகிறாள். அரசியலில் இளைய தாரத்தின் பேச்சை கேட்பது என்பது, அன்றும் இன்றும் என்றும் நடப்பதுதானே!

PICTURE THANKS TO ARTIST:  ASHOK  DONGRE 
(GOOGLE)