Sunday, 30 August 2015

இலக்கியத்தில் சொல்லாடல்கள்



ஒரு உரையாடலின் போதோ அல்லது ஒரு கவிதையைப் படைக்கும் போதோ அல்லது கட்டுரையை எழுதும்போதோ சில சொல்லாடல்கள் சுவாரஸ்யமாக வந்து விழுவதுண்டு. அவற்றை இலக்கியத்தில் காணலாம். தற்கால மொழி நடையில் இவற்றை சிறந்த மேற்கோள்கள் (QUOTES) எனலாம்.

குறுஞ்செய்திகள்:

உண்மையில் சொல்லாடல் என்பது வார்த்தைப் பிரயோகம்தான் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச் டயாலாக்குகளையும், தற்போது செல்போனில் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் (SMS)  இந்த வகையில் சேர்க்கலாம். தமிழ் அறிஞர் தி.க.சி அவர்களோடு உரையாடும்போது சுவாரஸ்யமான சொற்களைச் சொல்லுவார் என்று சொல்லுவார்கள். எழுத்தாளர் கி.ராஜநாராயணன்  தனது எழுத்துக்களில் ‘சொலவடைஎன்ற பெயரில் நிறைய பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.. இதனை ஒரு பொருள் குறித்த ஒரு சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், ஒரு பொருள் குறித்த பல சொற்கள்,என்ற அடிப்படையில் நாம் ரசிக்கலாம்.

அந்த காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் சுவடிகளாக, கட்டு கட்டாக பனை ஓலையில் இருந்தவைதாம். பனை ஓலையில் எழுத்தாணியால் எழுத நிரம்ப பயிற்சி வேண்டும். கொஞ்சம் அழுத்தினாலும் ஓலை கிழிந்துவிடும். எனவே ஓலையில் எழுதுவதற்கு வசதியாகவும், மனப்பாடம் செய்வதற்கு எளிதாகவும் சொல்வதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். இதற்கு செய்யுள் எனப்படும் கவிதை வடிவம் உதவியது..

சங்க இலக்கியங்கள்:

சங்க இலக்கியத்தில் காலம் கடந்தும் இன்றும் நிற்கும் பல சொல்லாடல்களைக் காணலாம். உதாரணத்திற்கு சில
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா  
              - (கணியன் பூங்குன்றனார், புறநானூறு.192)

இதில் முதல் வரியில் எல்லா ஊரும் நம் ஊரே; எல்லோரும் நம் உறவினரே என்ற அர்த்தத்தை மறந்து, “எல்லாம் ஊருதான். எல்லோரும் இதனைக் கேளுங்கள் “ என்று சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். .

வான் பொய்ப்பினும், தான் பொய்யா,
மலைத் தலைய கடல் காவிரி -   பட்டினப் பாலை

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில் , கோவலனிடம் இருந்த யாழை வாங்கி,  மாதவி, கானல் வரி பாடத் தொடங்குகிறாள். அப்போது அப்பாடலில் காவிரியை வாழ்த்தி பாடும் போது

நடந்தாய் வாழி காவேரி “ (புகார்க் காண்டம்)

என்று காவிரியை வாழ்த்தி பாடுகிறாள். இன்றளவும் ஒலிக்கும் இந்த சொற்றொடரை மறக்க முடியுமா?

கம்பர்:

இராமாயணக்கதை அனைவரும் அறிந்ததுதான். இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று விடுகிறான். அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்றே தெரியவில்லை. இராம தூதனாக நம்பிக்கைக்குரியவனாக அனுமன் செல்கிறான். பல்வேறு இடர்களுக்கிடையில் இலங்கையில் அசோகவனத்தில் சீதை இருப்பதைக் காண்கிறான். முன்பின் தன்னைக் கண்டறியாத் சீதையிடம் தான் யாரென்று சொல்லும்போது சுருக்கமாக “அண்டர் நாயகன் அருள் தூதன் யான் என்று சுருக்கமாகச் சொல்லுகின்றான்.

இங்கே திரும்பி வந்த அனுமன், இராமனிடம் தான் வந்து போன அனுபவங்களையெல்லாம் கதைக்காமல் நேரிடையாகவே “கண்டேன் சீதையை என்று சொல்லுகிறான். பல நண்பர்கள் இந்த வார்த்தையை கம்பன் கையாண்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தவறு. கம்பன் சொல்லவில்லை. இந்த சொல்லாடல் ராமாயண கதை இலக்கிய சொற்பொழிவாளர்கள் உருவாக்கியது (குறிப்பாக வாரியார் சுவாமிகள் என்று நினைக்கிறேன்). கம்பன் சொன்னது “கண்டேன் என் கற்பினுக்கு அணியை, கண்களால் என்பதே

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்என்று, அனுமன் பன்னுவான்
                                  - கம்பன்.6031
(கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/திருவடி தொழுத படலம்)

கம்பர் இதுபோல தனது நூலில் பல இடங்களில் இந்த குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.

திருவள்ளுவர்:

திருவள்ளுவர் எழுதிய ஒவ்வொரு குறட்பாவுமே ஒரு குறுஞ்செய்தியை உள்ளடக்கி நிற்கின்றன. சில குறட்பாக்களை இரண்டாக ஒடித்து பிரித்தாலும் குறுஞ்செய்தியாக நின்று பொருள் தரும்.

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு  - திருக்குறள் 336

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? – குறள் 71

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் – குறள் 595

அவ்வையார்:

தமிழ் மூதாட்டி அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் ஒரு குறுஞ்செய்தி எனலாம். ( சங்ககால அவ்வையார் வேறு பிற்கால அவ்வையார் வேறு)

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
கண்டொன்று சொல்லேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
சேரிடம் அறிந்து சேர்
நூல் பல கல்
வைகறைத் துயில் எழு

இவ்வாறாக இலக்கியத்திலிருந்து மட்டுமன்றி, பழமொழிகள், திரையிசைப் பாடல்கள் என்று பலவற்றிலிருந்தும்  சொல்லிக் கொண்டே போகலாம்.

Saturday, 29 August 2015

ஹர்திக் படேல் போராட்டம் – சில ஐயப்பாடுகள்



இந்த ஜாதியில் பிறந்தவன் இந்த தொழிலைத்தான் பார்க்க வேண்டும் என்று, பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற வருணாசிரம தர்மத்தின்,  இடஒதுக்கீட்டை கற்பித்தவர்கள் பிறந்த நாடு நமது இந்திய நாடு. தலைமுறை தலைமுறையாக இதனை ( ஜாதீய இடஒதுக்கீட்டை)  செயல்படுத்த காரணமானவர்களே, இன்று எங்களை பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் அல்லது இடஒதுக்கீடே கூடாது என்று கலவரம் செய்வது காலம் செய்த கோலமாக இருக்கிறது.

படேல் சமூகம்

இன்று இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம், ஹர்திக் படேல் (HARDIK PATEL) என்பவர் தலைமையில்,  குஜராத்தில் நடக்கும் படேல் (PATEL) எனப்படும் பட்டிடார் (PATIDAR ) சமூகத்தின் போராட்டம்தான். பேஸ்புக் (FACEBOOK) போன்ற சமூக வலைத்தளங்கள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்க மற்றும் வழிநடத்த பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

படேல் எனப்படும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக நிலச் சுவான்தார்கள். பெரும்பாலான படேல்கள் சிறு அல்லது பெரும் தொழிலதிபர்கள். வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலும் தாங்கள் உயர்ந்த குலத்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். இன்றைக்கு நாடு முழுக்க இருக்கும் வைர வியாபாரம், துணி ஆலைகள், இரும்பு தொழிற்சாலைகள், பெயிண்ட் கம்பெனிகள், கிரனைட் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள்,  மர அறுவை மில்கள், இன்னும் பிற தொழில்கள் என்று மிகப் பெரும் தொழில்களையெல்லாம் கையில் வைத்து இருப்பவர்கள். மேலும் காலத்திற்கு ஏற்ப சுயநிதிக் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் இவர்கள் கையில்தான்.

தி இந்து – தமிழ் தினசரியில் வந்த செய்தி இது.

இந்தப் போராட்டங்கள் குறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் தலைமைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, காரணம் மாநிலத் தலைமை படேல் சமூகத்தினரின் ஆதரவை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வணிக நலன்களை பிரதானமாகக் கொண்டுள்ளனர்” என்றார்.

"நான் ஹர்திக்கை சந்தித்தது இல்லை, அதனால் அவரை எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத்திலிருந்து இங்கு அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே வந்துள்ளேன். ஏனெனில் அவர் நல்லதுக்காக போராடுகிறார்" என்று சூரத்தில் டெக்ஸ்டைல் வர்த்தகம் செய்யும் மனோஜ் படேல் என்பவர் கூறினார்.+

(நன்றி : தி இந்து (தமிழ்) (27, ஆகஸ்ட், 2015)    

மத்தியிலும் குறிப்பாக குஜராத்திலும் ( இன்னும் சில மாநிலங்களிலும்)  ஆண்ட அரசியல் கட்சிகள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இவர்களுக்கு கொடுத்த சலுகைகள் ஏராளம். ஆகக் கூடி இந்திய பொருளாதாரமே இவர்கள் கையில்தான். மற்ற ஒடுக்கப்பட்டவர்களோடு ஒப்பிடுகையில், பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவர்கள் மேல்தட்டில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.

சுதந்திர இந்தியாவில்:

பலபேருக்கு தெரியாத பொதுவான விஷயங்கள் சிலவற்றை கீழே சொல்லியுள்ளேன்.  இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் , இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக வேண்டி பல தொழில் அதிபர்களுக்கும், புதிய தொழில் அதிபர்களுக்கும் (இவர்களில் பலர் முன்னவர்களின் வாரிசுகளாக அல்லது பங்குதாரர்களாக இருப்பார்கள் ) தொழிற்சாலைகள் தொடங்கவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகவே பல ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. இப்பொழுதும் ஆட்சியாளர்கள்  நினைத்தால் இதுபோன்று செய்யலாம். பல புறம்போக்கு நிலங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.  (இன்றைக்கு நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தொழிற்சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசாங்கம் கொடுத்த இடம் எவ்வளவு என்று ஆதியந்தமாக விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்)

அதேபோல வங்கிக் கடன்கள். பெரும்பாலான தொழில் அதிபர்களுக்கு அவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளுக்கு வங்கிகளில் ஓவர்டிராப்ட் எனப்படும் நிரந்தரக் கடனோடு பல்வேறு சலுகைகள் ( அவ்வப்போது வட்டி தள்ளுபடி மற்றும் வாராக் கடன் என்ற பெயரில் முழுக் கடனுமே தள்ளுபடி) உண்டு..

விவசாயிகள் என்ற பெயரில் பல ஏக்கர் நிலங்களுக்கு விவசாயக் கடன், இலவச மின்சாரம் உண்டு. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல பணக்கார விவசாயிகள்தான் பெரும்  பலன் அடைந்தனர். (ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய நகைக்கடனில் (அதிலும் விவசாயத்திற்கு என்று வாங்கியிருக்க வேண்டும்) மட்டும் தள்ளுபடி சலுகை பெற்றனர்.

இப்படியாக சுதந்திர இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில், பொருளாதாரச் சலுகைகளை சில குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

ஹர்திக் படேலின் கோஷம்:

இப்படியான இவர்கள், இடஒதுக்கீடு இல்லாததால் எங்கள் சமூகம் பின்தங்கி விட்டது என்று போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி போராடும் இவர்களே ஒருசமயம் (1980 இல்) SC, ST மற்றும் BC சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கலவரம் செய்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இப்போது  இடஒதுக்கீட்டில் முற்பட்டோருக்கான 50.5% சதவீதத்தில் இருக்கும் இவர்கள் 49.5% உள்ள பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தங்கள் சமூகத்திற்கும் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்., ”இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டுங்கள்; அல்லது அனைத்து சமூகத்துக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்” என்ற ஹர்திக் படேலின் கோஷம்  நாட்டில் பல ஐயப்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

Saturday, 22 August 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- சில யோசனைகள்.




இந்த ஆண்டிற்கான வலைப்பதிவர்கள் சந்திப்பு புதுக்கோட்டையில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது. இதனை முன்னின்று நடத்தும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க வலைப்பதிவர்களுக்கும், எல்லோரையும் ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் அய்யா கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும்  நன்றியும் வாழ்த்துக்களும்.

 புதுக்கோட்டை வலைப்பதிவர்கள்:


(படம் – மேலே) புதுக்கோட்டையில் 2014 இல் நடைபெற்ற இணையத்தமிழ் பயிற்சிபட்டறை அமைப்புக் குழுவினர். http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_19.html )

புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்களின் ஆர்வத்தினையும், உழைப்பையும் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், ஆசிரியைகள் என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். புதுக்கோட்டையில் அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பினையும், இணையத்தமிழ் பயிற்சி வகுப்புகளையும், வலைப்பதிவர்  நூல் வெளியீட்டு விழாக்களையும் அடிக்கடி நடத்தி மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருப்பவர்கள். மதுரையில் சென்ற ஆண்டு நடந்த வலைப்பதிவர் மாநாட்டிற்கு ஒரு குழுவாக வந்து வலைப்பதிவர் ஒற்றுமையைக் காட்டியவர்கள். எனவே இவர்களது திட்டமிடல் மற்றும் விழாக்கால பணிகள் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

(படம் – மேலே) புதுக்கோட்டையில்  அண்மையில் ( 8/7/2015 புதன்கிழமை) நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு கடிகாரச் சுற்றில்.. நண்பர்கள் மகா.சுந்தர், வைகறை, மது(கஸ்தூரி), கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன்,  கரந்தைஜெயக்குமார்(நடுவில்), முனைவர் ஜம்புலிங்கம், கில்லர்ஜி, தமிழ்இளங்கோ, செல்வா, ஜலீல், மு.கீதா, ஏஇஓஜெயா, மாலதி, ஆர்.நீலா, மற்றும் மீனாட்சி (படம் உதவி – நன்றியுடன்: http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html

சிலயோசனைகள்:

ஒரு வலைப்பதிவாளன் என்ற முறையிலும், வங்கிப் பணியில் இருந்தபோது ஒருங்கிணைப்பாளராக (COORDINATOR) சில நிகழ்ச்சிகளுக்கு இருந்தவன் என்ற முறையிலும் சில யோசனைகளை இங்கு முன் வைக்கிறேன்.

வலைத்தளம்: புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்திற்கென்று ஒரு வலைத்தளத்தை (BLOGSPOT) ஒன்றைத் தொடங்கி, அதில் விழா பற்றிய தகவல்களை ( நன்கொடை விவரம், வரப்போகும் வலைப்பதிவர்கள், செய்துள்ள ஏற்பாடுகள் போன்றவற்றை) தரலாம். இந்த தகவல்களை மற்ற நண்பர்கள் தங்கள் பதிவுகளில் சொல்லலாம்.

வலைப்பதிவர் அறிமுகம்: மேடையில் ஏறினால் பல நண்பர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பின்னால் பேச வரும் நண்பர்களுக்கு நேரம் இல்லாமல் செய்து விடுகின்றனர். இந்த சந்திப்பில் வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய  கையேடு ஒன்றை வெளியிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த  கையேட்டில் உள்ளபடி வலைப் பதிவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை, இரண்டு அல்லது மூன்று வலைப்பதிவர்கள் தொடர்ந்து செய்யலாம்.

மதிய உணவு: பெரும்பாலும் புதுக்கோட்டையில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அசைவ உணவு பரிமாறுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். பல திருமண விழாக்களில். பலர் சாப்பிடாமலேயே சென்று விடுவதை பார்த்து இருக்கிறேன். இதனை தவிர்த்து அறுசுவை உணவாக சைவ சாப்பாட்டையே வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நூல் வெளியீடு: வலைப்பதிவர்கள் எழுதிய நூல்களை வெளியிடும்போது ஒரே சமயத்தில் எல்லா நூல்களையும், ஒரு நூலாசிரியருக்கு ஒருவர் என்ற முறையில் வெளியிட ஏற்பாடு செய்யவும்; அந்தந்த நூலாசிரியர் நூல் அறிமுகத்தின்போது அவரது குடும்ப நண்பர்களையும் மேடையில் தோன்றச் செய்யலாம்.

கலந்துரையாடல்: பெரும்பாலும் இதுமாதிரியான சந்திப்புகளில் கலந்துரையாடலுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே மாலையில் தேநீர் வேளையில் வலைப்பதிவர்கள் கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கலாம்.

அன்பார்ந்த வலைப் பதிவர்களே!

அனைவரும் புதுக்கோட்டையில்  வரும் 11.10.2015 ஞாயிற்றுக் கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.! 




Tuesday, 18 August 2015

சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)



பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர் சங்கர் அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு (இவரும் நானும் ஒன்றாக பணிபுரிந்தோம்) “ இந்த ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சமயபுரத்தில் அன்னதானம். காலையிலேயே வந்து விடுங்கள்.” என்று தகவல் சொன்னார். நானும் “சரி வழக்கம் போல வந்து விடுகிறேன்” என்றேன். எப்போதும் தினமும் காலையில் 5 மணிக்கு உறக்கத்திலிருந்து எழுவது வழக்கம். அன்றைக்கு (17.08.2015, ஞாயிறு) 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு சமயபுரம் செல்ல கே.கே.நகர் (திருச்சி) பஸ் ஸ்டாண்ட் வந்தேன். இதற்கு முன்னர்  எனது TVS மொபெட்டில் செல்வேன். இப்போது எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மக்களோடு மக்களாய் சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பஸ் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

சத்திரம் பஸ் நிலையம் வந்தேன். சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் சமயபுரத்திற்கு சில சிறப்பு தினங்களில் மட்டும் செல்வார்கள். இப்போது வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  காலியாக நின்ற பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன். காவிரிப் பாலம் வந்தது. ஆடி  பதினெட்டிற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைந்து அரை ஆறாக காவிரி சலசலத்துக் கொண்டு இருந்தது. காவிரி பாலத்திலிருந்து சமயபுரம் வரை நிறைய பக்தர்கள் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார்கள். பக்தர்களின் அடையாளமாக மஞ்சள் ஆடை, துண்டு அணிந்து இருந்தார்கள். பல பெண்கள் தலை முடியில் வேப்பிலையை சூடி இருந்தனர்.  எல்லோரும் தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தார்கள். சமயபுரத்திற்கு முன்னர் உள்ள வாய்க்கால் எப்போதும் ஆறுபோல் இருக்கும். பெரும்பாலான நடை பக்தர்கள் அதில்தான் குளியல் போடுவார்கள். இன்று வாய்க்காலில் தண்ணீரே இல்லை. எல்லோரும் வழியில் கிராமங்களில் இருந்த தண்ணீர் தொட்டி குழாய்களிலும் அடி பம்புகளிலும் குளியல் போட்டுக் கொண்டும் துணிகளை பிழிந்து கொண்டும் இருந்தனர்.

பஸ் சமயபுரம் நெருங்கியதும் காலை நேரம் என்பதால் கடைத்தெருவில் எல்லா கடைகளிலும் ஊதுவத்தி சாம்பிராணி மணத்தோடு பக்திமணம் நிரம்பிய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபடியினால், சமயபுரம் கோயில் குளத்திலும் கட்டணக் குளியல் இடங்களிலும்  குளிக்க கும்பல் அலை மோதியது.

நண்பர்கள் அன்னதானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் காலை நேரம் என்பதால் பக்தர்களுக்கு பன்னும் டீயும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கப்புறம் இட்லியும் சாம்பாரும் சுடச்சுட கொடுக்கப்பட்டன.

இந்த வருடமும் வழக்கம் போல,  இன்று அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி (கவிஞர் கண்ணதாசன் ஊர்) அருகே உள்ள அரிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இவரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மற்றும் ஓய்வு பெற்ற நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன். இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) மற்றும் மேலே சொன்ன செல்வம் இருவரும்தான். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.


















இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)