செட்டிநாட்டில் உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா எப்படி
கவிஞர் கண்ணதாசன் ஆனார், திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய உலகிலும் எவ்வாறு
புகழ்பெற்றார் என்பதனைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் இது. ‘கவியரசு கண்ணதாசன்
கதை’ என்ற - இந்நூலை எழுதிய எழுத்தாளர் வணங்காமுடியின் இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன் என்பதாகும்.
இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிகுளம் பண்ணையூர் ஆகும். ராணி வார
இதழின் துணை ஆசிரியரான இவர் இந்தத் தொடரை அந்த பத்திரிகையில் 64 வாரங்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் மனவாசம், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என்று,
தான் எழுதிய எல்லா நூல்களிலும், அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களை ஆங்காங்கே சொல்லி
இருக்கிறார். ஆனால் எழுத்தாளர் வணங்காமுடி அவர்கள் கவிஞரின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி,
கவிஞரின் தோற்றம் முதல் மறைவு வரை ஒரு முழு நூலாக சுவைபடச் சொல்லி இருப்பதே இந்த நூலின்
பெருமை ஆகும்.
கவிஞரும் மதுவும்:
கண்ணதாசனும் மதுவும் மங்கையும் என்று பெரிய கட்டுரையே எழுதலாம்.
அவற்றை பல்வேறு பக்கங்களில் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.
‘” உங்களைக் கவிஞராக்கிய நிகழ்ச்சி எது? “ என்று வாசகர் ஒருவர்
கேட்டார். அதுக்கு கண்ணதாசன் சொன்ன பதில்
“என் முதல் காதல் தோல்வி “ அப்போதெல்லாம் அவர் அடிக்கடி முணுத்த பாடல் இது (இந்நூல்
பக்கம்.26)
என் அன்னை செய்தபாவம் நான் மண்ணில்
வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னைக் கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல்
கொண்டது
”ஒருபக்கம் மதுவையும்,, மறுபக்கம் மாதுவையும் வைத்தால் உங்கள் மனம்
என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு, “எனக்கு இரண்டு கரங்கள் .ஒரே மனம். அவை, சம அளவில்
பிரியும்” என்று பதிலளித்தார், கண்ணதாசன். (இந்நூல் பக்கம்.87)
வசமான பெண்மையும் வளமான கிண்ணமும்
வாழ்க்கையில் உள்ள மட்டும்
வாராது வஞ்சகம் வாராதிங்கு என்னிடம்
வாராது மரண பயமே!
…… ….. ….. ….. …..
தங்கமே கிண்ணமெங்கே?
சரிபாதி நீயுண்டு தருவாய் என்கையிலே
தழுவாது மரண பயமே!
என்பது கவிஞரின் ‘மதுக்கோப்பை’ என்ற கவிதை.(இந்நூல் பக்கம்.88)
கவிஞரின் பாட்டு பிறந்த
கதை:
நூலின் பல இடங்களில், கவிஞரின் பாடல் வரிகளைக் காட்டும் நூலாசிரியர்
வணங்காமுடி ‘பாட்டு பிறந்த கதை’ என்ற தலைப்பில், சில பாடல்கள் பிறந்த பின்னணியையும்
சுவையாகச் சொல்லுகிறார்.
‘கர்ணன்’ படத்தில் வரும் ’உள்ளத்தில்
நல்ல உள்ளம் .உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா’ என்ற பாடல் பெருந்தலைவர் காமராஜரை
நினைத்து எழுதியது. (இந்நூல் பக்கம்.106)
‘படிக்காத மேதை’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரே
ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ பாடலில் பாதி, பாங்குக்கு போகும் அவசரத்தில் எழுதியது.
(இந்நூல் பக்கம்.107)
கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படமான ’கறுப்புப் பணம்’ வெளியான போது
கவிஞருக்கு கடன் அதிகம். கவிஞருக்கு அப்போது, தீபாவளிக்கு கையில் காலணா இல்லை. அப்போது
பி.எஸ். வீரப்பா ‘ஆனந்த ஜோதி’ என்ற படத்திற்கு பாட்டெழுத அழைக்கிறார். அப்போது எழுதிய
பல்லவி ‘காலமகள் கண் திறப்பாள் சின்னையா – நாம் கண்கலங்கி
கவலைப்பட்டு என்னையா?” (இந்நூல் பக்கம்.112)
சம்பத்துக்காக தேர்தலில் கடுமையாக உழைத்தார் கவிஞர் கண்ணதாசன்.
இருந்தும் அவர் தோல்வி. அப்போது கவிஞர் எழுதிய ஒரு பாடல் ‘யாரை
எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல’ (இந்நூல் பக்கம்.118)
ஒருமுறை அறிஞர் அண்ணா , தன்னைப் பார்க்க வந்த தி.மு.க தொண்டரிடம்,
‘நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்க, அவர் “கருவூரிலிருந்து வருகிறேன்” என்று சொன்னார்.
உடனே அண்ணா “எல்லோரும் கருவூரிலிருந்து தான் வருகிறார்கள்’ என்று மென்சிரிப்பு செய்தார்.
இதை அருகிலிருந்து ரசித்த கவிஞர், அந்த சம்பவத்தை பின்னாளில் ‘எந்த ஊர் என்றவனே” என்று தொடங்கும் பாடலை எழுதினார்
.(இந்நூல் பக்கம்.123)
இப்படி நிறைய குறிப்புகளைத் தந்து இருக்கிறார் நூலாசிரியர்.
அரசியலும் கவிஞரும்
தி.மு.கவில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ”வனவாசம்” என்ற
நூலில் குறிப்பிட்டுள்ளார். தி.மு.கவை விட்டு விலகியதும் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியில்
இருந்த காலத்து) நடந்த சம்பவங்களை, “மனவாசம்” என்று எழுதினார். சிலர் வனவாசம் என்ற
நூலை வைத்துக் கொண்டு கருணாநிதிக்கும் கவிஞருக்கும் இடையில் ஏதோ தீராப் பகைமை போல்
பேசுவார்கள். ஆனால் நமது ஆசிரியர் வணங்காமுடி அவர்கள், தமது நூலில், இருவருக்கும் இடையில்
எத்தகைய அன்பு இழையோடியது என்பதை, கருணாநிதி மீது காதல், காதல் அல்ல… கனிந்த அன்பு
– என்ற தலைப்புகளில் சொல்லி இருக்கிறார். மேலும் இருவருக்கும் இடையில் எதனால் நிரந்தர
இடைவெளி உண்டாகியது என்பதனையும் அடுத்து வரும் சில தலைப்புகளில் மிகைப்படுத்தாமல் சொல்லி
இருக்கிறார். மேலும் கண்ணதாசனுக்கு கலைஞர் கருணாநிதி ‘கவிஞர் என்ற பட்டம் தந்ததும்,
கவிஞரை முதன்முதல் அரசியல் மேடையில் பேசச் சொன்னதும் பொள்ளாச்சியில்தான் என்று சுவைபடச்
சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வணங்காமுடி. (இந்நூல் பக்கங்கள் 136 முதல் 139 முடிய)
மற்ற அரசியல் தலைவர்களுடனும் இவர் அவ்வப்போது இணக்கம் கொண்டு இருந்ததையும்,
சுணக்கம் கொண்டதையும் நூலின் பல பக்கங்களில் காணலாம். இங்கே கலைஞர் கருணாநிதியுடனான
நட்பை மட்டும், நான் சொல்லக் காரணம், ஏதோ அவர்களுக்கிடையில் ஜென்மப்பகை போன்று தவறாக
சொல்வதால்தான்.
சில சுவையான தகவல்கள்
கண்ணதாசனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட காரணமாக இருந்த நண்பர்கள் இருந்த
ஊர் புதுக்கோட்டை இராயவரம். எனவே கவிஞர் புதுக்கோட்டையை மதுக்கோட்டை என்றே செல்லமாக
அழைப்பார் .(இந்நூல் பக்கம்.90)
ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், நண்பர்களுடன் காரில் செல்லும்போது, வேலூர்
நகர எல்லையில் வடை டீ சாப்பிட காரை நிறுத்துகிறார். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்களில்
ஒருவன் அவரைப் பார்த்தவுடன் ‘நீங்கள் பாடல்
கண்ணதாசன்தானே?” என்று கேட்கிறான். அவனிடம் அவர் “பாடல் கண்ணதாசன் என்று எதில் படித்தாய்
தம்பி?” என்று சிரித்தபடியே கேட்க, அவன் “ரேடியோவில் சார்” என்று பதிலளித்தான். .(இந்நூல்
பக்கம்.183 – அப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர் பெயரைச் சொல்லும் போது, கவிஞரை
பாடல் கண்ணதாசன் என்று சொல்லுவார்கள்)
1977 ஆம் ஆண்டு வாக்கில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், அப்பாஸ் இப்ராகிம்
என்ற நண்பர் நடத்திய பத்திரிகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க திருக்குரானுக்கு விளக்கவுரை
எழுதத் தொடங்கினார். சில நண்பர்கள் அதை விரும்பவில்லை; கண்டனம் தெரிவித்தார்கள்.
கண்ணதாசனும் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு மேற்கொண்டு எழுதுவதை நிறுத்தி விட்டார்.
(இந்நூல் பக்கம் – 377)
’இன்றைய இளைஞனுக்கு என்னுடைய வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. புகை,மது
போன்ற கொடிய பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்பதற்கல்ல
… எப்படி வாழக்கூடாது என்பதற்கு நான் ஒரு எடுத்துக் காட்டு’. – கவிஞர் கண்ணதாசன்
தனது வாழ்க்கை பற்றி கவிஞர் சொன்ன வார்த்தைகள் இவை. (இந்நூல் பக்கம்
– 100)
இன்னும் நிறையவே இந்நூலில் தகவல்கள் உண்டு. கவிஞர் கண்ணதாசன் பற்றி
கட்டுரைகள் எழுத விரும்புவோருக்கும், மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், மற்றும்
கவிஞர் மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர்களுக்கும் பயனுள்ள நூல்.
நூலின் பெயர்: கவியரசு கண்ணதாசன் கதை
ஆசிரியர்: வணங்காமுடி
நூலின் பக்கங்கள்: 424 விலை: ரூ
80/= நான்காம் பதிப்பு டிசம்பர், 2008
நூல் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாச்ன் சாலை, தியாகராய நகர், சென்னை
– 600017 தொலைபேசி 0431 24332682
(இப்போது இந்நூலின் விலை ரூ 130/= என்று தெரிய வருகிறது)
தொடர்புடைய எனது பிற பதிவுகள்