அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நாங்கள் வசித்த திருச்சி டவுன் பகுதியில் ஒரே பரபரப்பு. மக்கள் எல்லோரும் சீட்டுப் பணம் கட்ட முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள். பேப்பரில் விளம்பரம் கிடையாது. ஒரு பிட் நோட்டிஸ் கிடையாது. எப்படி இந்த செய்தி முளைத்தது, யார் வந்து சொன்னார்கள் என்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அங்கங்கே ஒருவருக்கு ஒருவர் சொல்லி திருச்சி முழுக்க செய்தி பரவி பரபரப்பு அதிகமாகியது. இந்த சீட்டை நடத்தியவர் அலெக்ஸ் என்ற பெண்மணி. எனவே எல்லோரும் ”அலெக்ஸ் சீட்டு “ என்றே அழைத்தார்கள்.
இது பாத்திர சீட்டோ ஏலச் சீட்டோ அல்லது குலுக்குச் சீட்டோ கிடையாது. இது ஒரு புது மாதிரியான சீட்டு. தமிழ்நாட்டிலேயே திருச்சியில்தான் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஒரு பொருளுக்கு அந்த பொருளின் விலையை விட மிகமிகக் குறைவாக ஒரு விலையைச் சொல்லி ( மூன்றில் ஒரு பங்கு ) பணம் கட்டச் சொல்லுவார்கள். பணம் கட்டிய நாளிலிருந்து சில நாள் கழிந்ததும் பணம் கட்டிய ரசீதைக் காட்டியதும் அந்த பொருளைத் தந்துவிடுவார்கள். மேற்கொண்டு எதுவும் கட்ட வேண்டாம். அப்போதுதான் ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ, ஸ்டீல் கட்டில் என்று புதிதாக மக்களிடம் பரவலாகிக் கொண்டிருந்த சமயம். அந்த பொருட்களோடு பேன், டேபிள் பேன், சைக்கிள், ரேடியோ போன்றவற்றையும் அலெக்ஸ் அம்மாள் சீட்டில் தந்தார்கள். ஆரம்பத்தில் நடுத்தர மக்கள்தான் இதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதிக சீட்டுகள் சேர்ந்தார்கள்.
ஆரம்பத்தில் ஒருவாரத்தில் பொருட்கள் கிடைத்தது. அவ்வாறு வாங்கியவர்கள்
மேற்கொண்டும் வாங்க பல சீட்டுகளை கட்டினார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும்
கட்டினார்கள். நாளுக்கு நாள் நிறையபேர் சேர்ந்தார்கள். பின்னர் ஒருவாரம் என்பதை பதினைந்து
நாட்கள் கழித்துதான் என்று சொன்னார்கள்.எங்கள் வீட்டில் என் அம்மா ஸ்டீல் ஈசி சேருக்கு பணம் கட்டி, சரியாக பதினைந்துநாள்
கழித்து வாங்கினார்கள். ( இன்னும் அந்த சேர் எங்கள் அப்பாவிடம் இருக்கிறது ) எனது
நண்பனின் வீட்டில் இரண்டு ஸ்டீல் சேர்கள் வாங்கினார்கள்.
ஒருநாள் நானும் எனது நண்பனும் அந்த சீட்டு ஆபிஸ் இருக்கும் இடத்தைப் பார்க்க நடந்தே
சென்றோம். அலெக்ஸ் அம்மாளின் சீட்டுக் கம்பெனி அப்போது திருச்சி தில்லை நகரில்
இருந்தது. அப்போதுதான் திருச்சி தில்லைநகர் உருவாகி இருந்த நேரம். அங்கொன்றும்
இங்கொன்றுமாய் வீடுகள். மெயின் ரோட்டில் வரிசையாய் தென்னங் கன்றுகள். இடத்தைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் சிரமமாய் இல்லை. அலெக்ஸ் சீட்டு என்றவுடனேயே வழி சொன்னார்கள். ஒரு பெரிய
வீட்டில் அந்த சீட்டுக் கம்பெனி இருந்தது. உள்ளே செல்ல முடியாதபடி மக்கள் வரிசை. சீட்டு முடிந்து பொருட்களை வாங்கியவர்கள்
கை ரிக்சாவிலும், தட்டு ரிக்சாவிலும் ஏற்றிக் கொண்டு இருந்தனர். சீட்டுப் பணம்
கட்ட ஒரு பெரிய வரிசை. வெளியே இருந்தபடியே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தோம். அலெக்ஸ்
அம்மாள் கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும் கெட்டப்பில் இருந்தார்.
கொஞ்சநாள் சென்றதும் காருக்கு சீட்டுப் பணம் கட்டலாம் என்று சொன்னார்கள். பணம்
கட்டிய நாளிலிருந்து ஒரு மாதமோ இரண்டு
மாதமோ ( சரியாக நினைவில் இல்லை ) கழித்து கார் கிடைக்கும் என்றார்கள். நிறையபேர்
கார் வாங்கும் ஆசையில் பல சீட்டுகளைக் கட்டினார்கள். மாதச் சம்பளம் வாங்குபவர்களும், அதிகாரிகளும், வசதி படைத்தவர்களும் என்று நிறையபேர் பணம் கட்டினார்கள்.
ஒருநாள் பணம் கட்டியவர்களுக்கு ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ,
ஸ்டீல் கட்டில் போன்றவற்றை சரியாகத் தரவில்லை என்று கலாட்டா. சீட்டுக் கம்பெனி
மூடப்பட்டதாக தகவல் வந்தது. பணம் கட்டியவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு
ஓடினார்கள். நாளிதழ்களில் செய்தியும் பலரது பேட்டியும் வந்தன. சிலர் போலீசில்
சொன்னார்கள். விசாரித்ததில் அலெக்ஸ் அம்மாள் வெளிநாடு சென்று விட்டதாக சிலரும்
சென்னைக்கு போய்விட்டதாவும் சொன்னார்கள். ஒன்றும் நடக்கவில்லை..
இதில் வேடிக்கை என்னவென்றால் அதே பெண்மணி சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு
அதே கம்பெனியை தொடங்கினார். நான் படித்து முடிந்ததும் வங்கி வேலையில் சேர்ந்து
இருந்த நேரம். எனது அந்த நண்பன் பொன்மலை ரெயில்வேயில் இருந்தான். அவன் அலெக்ஸ்
அம்மாளிடம் பணம் கட்டும்போது என்னையும் அழைத்துச் சென்றான். ஏற்கனவே அந்த அம்மாள்
மோசடி செய்து இருப்பதால் வேண்டாம் என்று தடுத்தேன். அவனோ “ஆரம்பத்தில் ஓட
மாட்டார்கள். கொஞ்சநாள் கழித்துதான் ஓடுவார்கள் “ என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு
பொருளுக்கு பணம் கட்டினான். நான் கடைசிவரை அதில் சேரவில்லை. நாங்கள் அந்த சீட்டுக்
கம்பெனிக்கு போனபோது முன்பு இருந்த கூட்டம் இல்லை. அலெக்ஸ் அம்மாள் அதே கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும்
கெட்டப்பில் இருந்தார். பத்துவருடத்திற்கு முன்பு இருந்த இளமை இல்லை. ஆனாலும்
தைரியமான லேடிதான். இந்தமுறை போன தடவை ஏமாந்த மக்கள் முந்திக்கொண்டு போலீஸ்
ஸ்டேசன் சென்றனர். அலெக்ஸ் அம்மாள் கம்பெனி இழுத்து மூடப்பட்டது. ஆனால் யாருக்கும்
எதுவும் திரும்பவும் கிடைக்கவில்லை.
இப்போது விதம் விதமான சீட்டுக்கள். விதம் விதமான மோசடிகள். எல்லாவற்றிற்கும்
இந்த உலகில் இடம் உண்டு.
(
PICTURES : THANKS TO “ GOOGLE ” )