மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , கலைஞர் கருணாநிதியும் திரையுலக நண்பர்கள்.
இந்த நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதியா
அல்லது நாவலர் நெடுஞ்செழியனா என்ற கேள்வி வந்த போது., அப்போது கட்சிக்கு வெளியே உள்ள
பலரும் சொன்ன வாசகம் படித்த நாவலர்தான் வர வேண்டும் என்பது. ஆனால் அப்போது, எம்.ஜி.ஆர்
தனது திரையுலக நண்பர் கருணாநிதிக்கு ஆதரவு தந்தார். நாவலருக்கென்று கோஷ்டி அரசியல்
நடத்த ஆட்கள் இல்லை. கட்சித் தொண்டர்களின் ஆதரவும் கலைஞருக்கே இருந்தது. கலைஞர் கருணாநிதி
முதலமைச்சர் ஆனார்.
கருணாநிதி எதிர்ப்பு அரசியல்
முதல்நாள் ஒரு தி.மு.க மாநாட்டில் கட்சிக்காக இராணுவத்தையே எதிர்ப்பேன்
என்ற எம்.ஜி.ஆர், ஒருநாள் கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர் உட்பட மேலிடம் வரை அனைவரின்
சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்றார். தி.மு.கவை உடைக்க, இந்திரா காங்கிரசின்
சதி என்றார்கள். எம்ஜிஆர் தி.மு.கவை விட்டு நீக்கம் செய்யப்பட்ட போது ‘எம்.ஜி.ஆர் கணக்கு
கேட்டார்; கருணாநிதி அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்” என்று பிரச்சாரம் செய்தார்கள்.
மேலும் கட்சியின் தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்குப் பின்னாலேயே சென்றார்கள். அதன்
பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கியதும் ஆட்சியைப் பிடித்ததும்
எல்லோரும் அறிந்த வரலாறு. அன்று தொடங்கிய கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, எம்.ஜி.ஆருக்குப்
பின் வந்த ஜெயலலிதாவின் காலத்திலும் தொடர்ந்தது.
தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான்
என்று சொன்னார்கள்; காவிரிப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலும்
கருணாநிதிக்கு எதிராகவே வை.கோபால்சாமி, நடராஜன் (சசிகலா), பழ.நெடுமாறன், சுப்ரமணியன்
சுவாமி, போன்ற தி.மு.க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இந்த கருணாநிதி
எதிர்ப்பு அரசியலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வெளியே இவர்களுக்குள்
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் இவர்களுக்குள் ஒரு UNDERSTANDING
உண்டு. கருணாநிதி எது செய்தாலும் எதிர்ப்பார்கள்; ஆனால் அதே காரியத்தை ஜெயலலிதா செய்தால்
வாயே திறக்க மாட்டார்கள். ஜெயலலிதா காலத்தில் இன்னும் வேகமாக கருணாநிதியை ஒரு தீயசக்தி
என்று சொல்லி அரசியல் நடந்தது. கலைஞர் கருணாநிதியின் குடும்பம் சார்ந்த அரசியலும் தி.மு.க
ஆட்சியில் ’குறுநில மன்னர்கள்’ பாணியில் மாவட்டத் தலைவர்கள் செய்த பரிபாலனமும் இந்த
எதிர்ப்பிற்கு வலு சேர்த்தன.
சசிகலா அரசியல்
சசிகலாவின் அரசியல் என்பது, ஜெயலலிதாவோடு நட்பு தொடங்கிய காலத்திலிருந்தே
தொடங்கி விட்டது எனலாம். ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி நிழல் அரசியல் நடத்தியவர் இந்த
சசிகலாவை இயக்கியவர் அவரது கணவர் நடராஜன். இந்த அரசியலுக்கு மேலே சொன்ன கருணாநிதி எதிர்ப்பு
அரசியல் பக்க பலமாக விளங்கியது.
இப்போது வரலாறு திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதியின்
உடல்நிலையாலும் இப்போது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது மங்கி விட்டது. கலைஞருக்குப்
பின்னால் தி.மு.க எப்படி என்று சொல்ல முடியாது. எனவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது
எதிர்மறை பலனையே தரும். அதேபோல இறந்து போன ஜெயலலிதாவை குற்றவாளி என்று திரும்பத் திரும்ப
சொன்னாலும் எதிர்மறை பலன்தான். ( நமது நாட்டில் எப்போதுமே, இறந்தவர்களை அவர் எவ்வளவு
பொல்லாதவராக இருந்தாலும் மன்னித்து, நல்லவராக்கி விடுவார்கள்: இது தெரியாத ஸ்டாலின்
ஜெயலலிதாவை தூற்றுவதில் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.. பி.ஜே.பியிலிருந்து ஜெயலலிதா
பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை என்பதிலிருந்தே அவர்களின் யுத்தியை அறிந்து கொள்ளலாம்
) இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், இதுநாள் வரை சசிகலா நடராஜன் என்று
அழைக்கப்பட்ட இவர் இப்போது வி.கே.சசிகலா என்ற பெயரில், சின்னம்மாவாக உருவெடுத்து இருக்கிறார்.
சசிகலா எதிர்ப்பு அரசியல்
அன்றைக்கு திமுகவை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.ஆருக்குப்
பின் வந்த ஜெயலலிதாவிற்கும் ஜாதி மத அபிமானங்களைக் கடந்த கட்சித் தொண்டர்கள் என்ற ஆதரவு இருந்தது. ஆனால்
இப்போது அரசியல் பிரவேசம் செய்துள்ள சசிகலா நடராஜனுக்கு இந்த தொண்டர்கள் ஆதரவு இல்லை.
எனினும் ஜெயலலிதா மறைவிற்குப் பின், முதல்வர் பதவியை அடைய ரொம்பவும் சாமர்த்தியமாகவே
காய்களை நகர்த்தினார். ஏனெனில் அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவருமே ( ஓ.பி.எஸ்
உட்பட) சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் கோர்ட் தீர்ப்போ அவரை சிறைக்குள்
தள்ளி விட்டது. இப்போது சிறையில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ள
ஆசைப்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் ஜாதி, மதம் கடந்து சொல்லும்
ஒரு வாசகம் “வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இந்த சசிகலா வகையறாக்கள் மட்டும்
வர வேண்டாம்” என்பதே. அந்த அளவுக்கு வெளியே வெறுப்பு அனல் பறக்கிறது. இதனாலேயே, ஓ.பி.எஸ்
எனப்படும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் பலரும் அவற்றை கண்டு கொள்வதில்லை.
மத்தியில் ஆளும் பி.ஜே.பியும் தாங்கிப் பிடிக்கிறது.. ( சசிகலா - நடராஜன் மட்டும் தனக்கு
ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை வைத்து, தமிழ், தமிழர் நலன் என்று தமிழ்நாட்டு நலனிலும்
உண்மையான அக்கறை காட்டி வெளிப்படையான அரசியல் செய்து இருந்தால், இன்று எங்கோ உயர்ந்து
இருப்பார் ; இவருக்கென்று ஒரு ‘மாஸ்’ ( mass ) உருவாகி இருக்கும். ஆனால், நிழல் மனிதர்கள்
வெளிச்சத்தில் மறைந்து போய்விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.)
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் “நான் ஒரு பாப்பாத்தி“
என்று தன்னை சொல்லிக் கொண்டாலும், பிராமணர்களுக்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை
என்பதே அந்த சமூக மக்களின் கருத்து. இன்றும் ”ஜெயலலிதா கெட்டிக்காரி” என்று வாயால்
சொன்னாலும், அவரைப் பற்றி அவர்கள் சொல்லும் ஒருவரி விமர்சனம் ‘பிடிவாதக்காரி’ என்பதே.
பிராமணர்களில் பலருக்கு இன்னும் காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திரரை கைது செய்த விவகாரத்தில்
யார் பின்புலம் என்பதை மறக்க மாட்டாதவர்களாகவே உள்ளனர்.
அடுத்து என்ன?
எம்.ஜி.ஆர் அபிமானம், ஜெயலலிதாவின் செல்வாக்கு என்ற காரணங்களால்
கிடைத்த, தற்போதுள்ள ஆட்சி, அதிகாரம், எம்.எல்.ஏ பதவி என்ற காரணங்களுக்காக – இந்த பதவியில்
உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்தார்கள். அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமியை
தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். தினகரன் மூலம் தனது பதவிக்கு ஆபத்து என்றதும்,
இவரும் ஓ.பி.எஸ் போலவே இப்போது சசிக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிறார். எத்தனை நாட்களுக்கு
இப்படியே ஓடும்? ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு அல்லது கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி
வருமேயானால், எல்லாம் தலைகீழ்தான்.
ஆனால் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை,
சசிகலாவிற்கான எதிர்ப்பை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காலூன்ற,
மேலே மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பி.ஜே.பி முயற்சி செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.கவை
தங்கள் கைப்பாவையாக்கி, அவர்களை முன்னிறுத்தி காரியம் நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்த
ஒன்று. இதற்கு தி.மு.க எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களது மறைமுக ஆதரவும் உண்டு. காரணம்
அவர்கள், வெளியே பெரியார் கொள்கை, தமிழ் தேசியம், ஈழம் என்று பேசினாலும் அவர்களைப்
பொருத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம்
கொண்டவர்கள் மேலும் கலைஞரின் நேரடி வழிகாட்டுதல் இல்லாத இல்லாத திமுக இனி எப்படி பயணம்
செய்யும் என்று சொல்ல முடியாது. இது திராவிட பூமி, பெரியார் மண், இங்கு பி.ஜே.பியை
விட மாட்டோம் என்பதெல்லாம், சிலர் தமக்கு தாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள்
ஒழிய வேறு இல்லை. ஏனெனில் இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்போ, ஒற்றுமை உணர்வோ அல்லது
சகிப்புத் தன்மையோ கிடையாது .தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் என்று வந்தால், அ.தி.மு.க
- பி.ஜே.பி கூட்டணி என்று ஒன்று உருவாகி, சட்டசபைக்குள் பி.ஜே.பிக்கு என்று சில சீட்டுகள்
கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும்
இல்லை.
(பேசாமல் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ‘பிரஜா ராஜ்யம்’ என்ற, தான்
தொடங்கிய கட்சியை காங்கிரசில் கரைத்தது போல அ.தி.மு.கவை பா.ஜ.கவில் இணைத்து விடலாம்
)
( ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. கால மாறுதலுக்கு
ஏற்ப, கொஞ்சம் திருத்தி வெளியிட்டுள்ளேன் )
xxxxxxxxxxxxxxxxxxx .
தொடர்புடைய எனது பிற பதிவுகள்