Saturday, 30 August 2014

சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் (SELF ATTESTATION) - பிரதமருக்கு நன்றி!



ஆரம்பத்தில் கல்லூரியில் பி.ஏ முடிக்கும் வரை சான்றொப்பம் (ATTESTATION) என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. ஏனெனில் ஒரு பள்ளியை விட்டு இன்னொரு பள்ளிக்கு சென்றபோதோ அல்லது பள்ளியை விட்டு சென்றபோதோ இது பற்றி யாரும் கேட்டதில்லை. விண்ணப்ப பாரங்களில் கேட்டு இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்வதோடு சரி. நேரில் செல்லும்போது ஒரிஜனல் சான்றிதழ்களை கொண்டுவரச் சொல்லுவார்கள். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது சரி பார்ப்பார்கள். அப்புறம் ஒரு கல்லூரியை விட்டு இன்னொரு கல்லூரி சேரும் போதும் இந்த. சான்றொப்பம் (ATTESTATION) சமாச்சாரம் இல்லை.

பின்னர் இன்னொரு கல்லூரிக்கு எம்.ஏ சேரும்போது ஆரம்பமானது இந்த சான்றொப்பம் (ATTESTATION) தொல்லை. அப்போதெல்லாம் ZEROX  சமாச்சாரம் எல்லாம் இல்லை. எனவே எல்லா சர்ட்டிபிகேட்டுகளையும் அதில் உள்ளவைகள் போல நகல் எடுக்க (டைப் செய்ய) வேண்டும். பல்கலைக் கழகம் தரும் பட்டம் அல்லது புரொவிஷனல் சர்டிபிகேட் வர நாள் ஆகும். அவை என்றால் எல்லாம் ஒரே பக்கத்தில் அடங்கி விடும் எனவே பியூசி, பி.ஏ மேஜர் மற்றும் ஆன்சிலரி என்று அனைத்தையும் ஜாப் டைப்பிங் செய்தவரிடம் கொடுத்து நகல் எடுத்துக் கொண்டு பச்சை இங்க்கில் கையெழுத்து போடும் அதிகாரியைத் தேடினேன். எனக்கென்று அப்போது தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் முனிசிபல் டாக்டரிடம் சென்றேன். அவரோ எனக்கு இதில் எல்லாம் நேரம் இல்லை என்றார். அதே போல வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பள்ளியில் இருந்த என்,சி.சி. ஆபிஸரும் சொல்லி விட்டார். பின்னர் ஒருவர் “நீங்கள் படித்த அரசு கல்லூரி ஆசிரியரிடமே சான்றொப்பம் (ATTESTATION) வாங்கலாமே “  என்றார். எனக்குப் பழக்கமான நான் படித்த அரசு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் வீட்டிற்கு மாலையில் சென்றேன். அவரோ வெளியூர் சென்று விட்டார். இரண்டு தடவை அலைந்து அவரிடம் பச்சை இங்க் கையெழுத்து வாங்கினேன். பின்பு எம்.ஏ முடித்த பிறகு வேலைக்கு சேரும்போதும் அவர்தான் எனக்கு பச்சை இங்க்கில் உதவினார்.

வேலைக்கு சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்த சான்றொப்பம் (ATTESTATION) முறை பற்றியும், யார் யார் கையெழுத்து போடலாம், யார் யார் தொண்டுள்ளத்தோடு இலவசமாக இந்த சேவையைச் செய்கிறார்கள்  என்பதையும் தெரிந்து கொண்டேன். (மத்திய,மாநில அரசுப் பணியில் இருக்கும் குரூப் 1 மற்றும் 2 அதிகாரிகள் ( Class  I and  II (Gazetted) public servants.)  மட்டுமே சான்றொப்பம் (ATTESTATION) அளிக்க முடியும்) மேலும் இப்போது ZEROX  முறை வந்துவிட்டதால் டைப் செய்யும் தொல்லை இல்லை. அதன் பிறகு இந்த விஷயத்துக்கெல்லாம் அலைவது கிடையாது. யாரேனும் ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் ஒரு சர்டிபிகேட்டிற்கு சான்றொப்பம் (ATTESTATION) செய்ய இவ்வளவு என்று பணம் கொடுத்து பச்சை இங்க்கில் வாங்கிக் கொண்டேன்.. எனது மகள் படிப்பு, வேலை விஷயமாகவும் மற்றும்  மகன் படிப்பு சம்பந்தமாகவும் நிறைய கொடுத்து இருப்பேன் காசு இல்லாதவர்களுக்கு எனது பழைய கதைபோல அலைச்சல்தான். அதிலும் நமது கிராமத்து மக்கள் மஞ்சள் பையோடு, தனது பிள்ளைகளுக்காக இந்த சான்றொப்பம் (ATTESTATION) முறையினால் எவ்வளவு அலைந்து இருப்பார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன்.

இப்போது ஆட்சிக்கு பிரதமராக வந்துள்ள நரேந்திர மோடி அரசில் ஒரு உத்தரவு வந்துள்ளது.

புதுடில்லி:'விண்ணப்பங்களுடன் சான்றிதழ் நகல்களை இணைக்கும்போது, விண்ணப்பதாரர் சுய ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டால் போதும்; இறுதியில் வேண்டுமானால், ஒரிஜினல் சான்றிதழ்களை சரி பார்த்துக் கொள்ளலாம்; இந்த முறையை, அனைத்து அலுவலகங்களி லும் பின்பற்ற வேண்டும்' என, மத்திய நிர்வாக சீரமைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, உத்தரவிட்டுள்ளது. ( நன்றி : தினமலர் )

இந்த சட்டத்தினால் இனிமேல் பண விரயம் மற்றும் நேர விரயம் இருக்காது. குறிப்பாக நடுத்தர,ஏழை மாணவர்களுக்கு இதிலிருந்து விடுதலை. இந்த முறையைக் கொணர்ந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு நன்றி!

REFERENCE:

SELF-CERTIFICATION OF DOCUMENTS INSTEAD OF ATTESTATION OF DOCUMENTS BY GAZETTED OFFICERS – DEPARTMENT OF ADMINISTRATIVE REFORMS RECOMMENDS SELF-CERTIFICATION OF DOCUMENTS IN LIEU OF GAZETTED OFFICER’S ATTESTATION. 
    No.K-11022/67/2012-AR
    Government of India
    Ministry of Personnel, Public Grievances and Pensions
    Department of Administrative Reforms & Public Grievances
    Sardar Patel Bhavan, Sansad Marg,
    New Delhi-110001. Dated the 10th May, 2013

    
    OFFICE MEMORANDUM


Subject: Self-certification

The Second Administrative Reforms Commission in its 12th Report titled “Citizen Centric Administration – The Heart of Governance”, has recommended, adoption of self-certification provision for simplifying procedures. (www:darpg.gov.in)

2. Taking a cue from this some Ministries/State Governments have adopted the provision of self-certification of documents like marksheet, birth certificate etc. by the applicants/stakeholders instead of asking for an attested copy of the documents by a Gazetted Officer or filing of affidavits. Under the self attestation method, the original documents are required,to be produced at the final stage.

3. You will appreciate that the above method is citizen friendly and obtaining either an attested copy or affidavit not only cost money but also involves wastage of time of the citizens and the Government officials.

3.  It is requested to kindly review the existing requirements of attested copy or affidavit in various application forms in a phased manner and wherever possible make provision for self-certification of documents, after obtaining the approval of the competent authority.

Sd/-
(Sanjay Kothari)
Secretary to the Government of India


FOR THE ABOVE GOVT MEMORANDUM – MY THANKS TO: http://indiangovernmentnews.blogspot.in/2013/06/self-certification-of-documents-instead.html 


Saturday, 23 August 2014

பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம்



சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது.  அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும்  ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்‌ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று அர்த்தம்.

மகாபாரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் அந்த தொடரை பார்த்தவர்கள் அனைவருமே ரசித்தனர். கதை தெரியாதவர்களுக்கு மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்தனர். கதையின் பிரமாண்டத்திலும் அதன் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்புகளிலும் மக்கள் மனதைப் பறி கொடுத்தனர். எனக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரமாண்டமான பத்துக் கட்டளைகள் ( TEN COMMANTMENTS) மற்றும் பென்ஹர் (BENHAR) திரைப்பங்களை நினைவூட்டின.

தொடரில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மகாபாரத கதைப் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர்.

(படம் மேலே) கதையின் தொடக்கத்தில் வரும் மன்னன் சந்தனு வேடத்தில் ரிஷப் சுக்லா (Rishabh Shukla)  மற்றும் தனது முதல் ஏழு குழந்தைகளைக் கங்கையில் கொல்லும் கங்காதேவியாக நடித்த கிரோன் ஜுனேஜா (Kiron Juneja)

(படம் மேலே) சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா.( Mukesh Khanna ). அவர் இந்த தொடரில் பிதாமகர் பீஷ்மராக நடித்து இருந்தார். நல்ல உயரம். நல்ல குரல்

(படம் மேலே) பிறவிக் குருடனாகப் பிறந்த ஹஸ்தினாபுரத்து அரசன திருதிராஷ்டிரன் வேடத்தில் வந்து மனங் கவர்ந்தவர் கிரிஜா சங்கர் (GIRIJA SHANKAR)

(படம் மேலே) கிருஷ்ணர் வேடத்தில் நிதிஷ் பரத்வாஜ்
என்.டி ராமராவ் என்றால் அவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கிருஷ்ணர் வேடம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஆந்திர ரசிகர்களும் அவரை கிருஷ்ணராகவே தரிசித்தனர். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தில் நிதிஷ் பரத்வாஜ் (Nitish Bharadwaj) கிருஷ்ணனாக காட்சி அளித்தார். அவர் தனது கதாபாத்திரத்தை திறம்படவே செய்தார்.

(படம் மேலே) கைகளில் தாயக் கட்டைகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பவர் சகுனிமாமா. அவர் மூன்று, ஐந்து என்று சொல்லி தாயக் கட்டைகளை வீசுவார். நினைத்தபடியே தாயக் கட்டைகள் விழும். அந்த அழுத்தமான சகுனி வேடத்தில் நடித்தவர் கூஃபி பெயிண்டால் (Gufi Paintal). ( கொசுறு செய்தி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் சகுனிக்கு கோயில் உண்டு. தகவல் உபயம் - விக்கிபீடியா)

(படம் - மேலே) பஞ்ச பாண்டவர்களோடு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி. (யுதிஷ்ட்ரன் வேடத்தில், கஜேந்த்ர சவுகான் (Gajendra Chouhan ), அர்ச்சுனன் வேடத்தில் அர்ச்சுன் (Arjun) , பீமன் வேடத்தில் ப்ரவீன் குமார் (Praveen Kumar ) , நகுலன் வேடத்தில் சமீர்(Sameer ), சகாதேவன் வேடத்தில் சஞ்சீவ் (Sanjeev) மற்றும் திரௌபதி வேடத்தில் ரூபா கங்கூலி (Roopa Ganguly) ஆகியோர் நடித்தனர்.

.பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில் இந்தியில் தொடராக ஒளி பரப்பப்பட்ட போது, எங்கள் வீட்டில் எனது அப்பா அம்மா என்று எல்லோரும் தொடர்ந்து பார்த்தனர். என்னால் தொடர்ந்து பார்க்க இயலாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து இருக்கிறேன்  இப்போது அதன் தமிழ் வடிவத்தை (94 EPISODES (அத்தியாயங்கள்)   YOUTUBE இல் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. விக்ரம் கிருஷ்ணா (VIKRAM KRISHNAN) என்பவர் 94 அத்தியாயங்களையும் யூடியூப்பில் ஏற்றி வைத்துள்ளார். இதுவரை 25 அத்தியாயங்கள் (EPISODES) பார்த்து விட்டேன். தொடர்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் வடிவத்தில் ஆரம்ப காட்சியாக ஒலிக்கும் பாடலின் வரிகள் இவை .
  
(சங்கு ஒலிக்கிறது)
மகாபாரதம் ....
மகாபாரதம் ....
மகாபாரதம்
அ... ஆ... அ.. ஆ...
இதுதான் மகாபாரதக் கதை
இதுதான் மகாபாரதக் கதை
ஆ ... ஆ ..
மகாபாரதக் கதை
மகாபாரதக் கதை
ரு கதைக்குள் பல கதை
பல கதைகளின் ஒரு விதை
கடவுளே ஒரு மனிதனாய்
வந்தவரித்த  திருக்கதை!
தர்மம் என்றும் வெல்லுமே ...
என்றே உணர்த்தும் பெருங்கதை!
தர்மம் என்றும் வெல்லுமே ...
(சங்கு ஒலிக்கிறது)

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
சம்பவாமி யுகே யுகே …. சம்பவாமி யுகே யுகே

(இதன் பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைகுனிவு ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் இந்த பூமியில் அவதரிக்கிறேன். சாதுக்களை ரட்சிப்பது,  தர்ம வழியில் நில்லாத தீயவர்களை சித்திரவதமான முறையில் அழிப்பது,  தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகிய இம்மூன்று பயன்களுக்காகவே இந்த பூமியில்  நான் அவதரிக்கிறேன்.)

 பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தின் மேலே சொன்ன ஆரம்ப காட்சி (TITLE SONG) பாடலையும் மற்றும் 94 அத்தியாயங்களையும் (94 EPISODES ) தமிழில் கண்டும கேட்டும் ரசிக்க கீழே உள்ள வலைத்தளம் செல்லவும்.*****.


முதல் அத்தியாயம் முடிந்தவுடன் தொடர்ந்து அனைத்து 94 அத்தியாயங்களும் அவைகளாகவே ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்துவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!  
( PICTURES AND YOUTUBE   - THANKS TO “ GOOGLE “ )


***** ( திருத்தம்:28.12.18) ஒரு முக்கிய தகவல்  :
மேலே உள்ள இணைப்பில் (Link) - Video unavailable This video is no longer available because the YouTube account associated with this video has been terminated. - என்ற செய்தி வருவதால் கீழே உள்ள யூடியூப் இணைய முகவரிக்கு செல்லுங்கள்.
 


 

Friday, 22 August 2014

சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)



(படம் மேலே) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கிழக்கு வாசல் 

எனது நண்பர்கள் சிலர் 25 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஒருநாள் சமயபுரத்தில் அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த அன்னதானத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இணைந்துள்ளேன்.

ஆரம்பத்தில் சமயபுரத்தில் கடைத் தெருவில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய சத்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த அறப்பணி நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு முதல்நாள் மாலையிலேயெ சென்று விடுவோம். சத்திரம் என்றால் ஒவ்வொன்றும் ஒரு கல்யாண மண்டபம். ஒரு விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்று சமையல்காரர்களை வைத்து சமையல் வேலை நடக்கும். பெரும்பாலும் புளி சாதம்தான். நண்பர்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஆளுக்கு ஒரு வேலையாக புளிசாதத்தை 500 அல்லது 600 பொட்டலங்களாக போட்டுவிடுவோம். அடுத்தநாள்  புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் ஆகியவை அந்த சத்திரத்து வாசல் படியிலேயே சமயபுரம் வரும் பக்தர்களுக்கு வழ்ங்கப்படும். ஆனால் சமீப காலமாக சுகாதாரத்தை முன்னிறுத்தி அன்னதானம் செய்வதில் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.     

சென்ற ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனவே சென்ற ஆண்டு முதல் முறைப்படி உணவுக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கோகுல சமாஜம் அறக்கட்டளை தயார் செய்து கொண்டு வந்த உணவு வகைகளை காலை உணவாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தினசரி அன்னதானம், கல்வி, மருத்துவம் மற்றும் கோசாலை சம்பந்தப்பட்ட தொண்டுகளை செய்து வருகின்றனர்.  இந்த ஆண்டும் 27 ஆவது வருடமாக சென்ற ஆண்டைப் போலவே 18.08.14 திங்கட் கிழமை அன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. சமயபுரம் கடைத் தெருவில் உள்ள அருள்மிகு கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே இந்த அன்னதானம் செய்யப்பட்டது. காலை இனிப்பு பன், இட்லி சாம்பார் மற்றும் காபி ஆகியவை சமயபுரம் வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  (அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே)

(படம் மேலே) அன்னதானம் நடைபெற்ற அருள்மிகு கருப்பண்ண சாமி மதுரைவீரன் சாமி கோயில் வாசல்

(படம் மேலே) கோயில் உள்ளே வேனில் கொண்டு வரப்பட்ட உணவு வகைகள்.)

 

   

(படங்கள் மேலே) அன்னதானம் நடைபெறுகிறது

(படம் - மேலே) அன்னதானம் - பக்தர்கள் வரிசை

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பர்கள்

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பரோடு நான்

(படம் - மேலே) சமயபுரம் கடைவீதி

  

Tuesday, 19 August 2014

பில்லி சூன்யம் ஏவல்



சொந்தக்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. பார்க்கப் போயிருந்தேன் ஆள் இளைத்துப் போயிருந்தார். என்ன பண்ணுகிறது என்று கேட்டபோது , தொழில் போட்டியில் எனக்கு செய்வினை செய்து வைத்து விட்டார்கள் என்றார்.

நான் பணியில் இருந்த சமயம், என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர் நீண்ட லீவில் இருந்தார். அவர் ஒரு முஸ்லிம். அவரைப் பார்க்க சென்றபோது , அவர் “ பக்கத்து வீட்டுக்காரனுக்கும் எங்களுக்கும் வீட்டு சந்து பிரச்சினை. கேஸ் நடந்து கொண்டு இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் எங்களுக்கு செய்வினை செய்து வைத்து விட்டான். அதில் என் மனைவிக்கு உடம்பு நலமில்லாமல் போய்விட்டது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். துணைக்கு யாரும் இல்லாததால் நான் லீவு போடும்படி ஆகி விட்டது.என்றார். இத்தனைக்கும் நம்ம பாயோட பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு முஸ்லிம். கொஞ்சநாளில் நமது நண்பர் அந்த வீட்டை விற்று விட்டு வேறு இடம் சென்றார்.வேறு இடம் போனதும் அந்த அம்மாள் குணமாகி விட்டார்.

மந்திரவாதிகள்:

எனக்கு என்னோட எதிரிகள் செய்வினை செய்து வைத்து விட்டார்கள். அதுதான் இபபடி ஆகிவிட்டது” -  இதுபோல் செய்வினை,பில்லி சூன்யம் என்று நிறைய பேர் புலம்புவதை நம்மில் பலபேர் கேட்டு இருக்கலாம். அதிலும் ஒரு கால், ஒரு கை ஒருவருக்கு சரியாக இயங்கா விட்டால் (பக்கவாதம்) அதற்கு காரணம் செய்வினை என்றே நம்புகிறார்கள். பில்லி சூன்யம் ஏவல் என்றால் என்ன? தன்னுடைய எதிரிகளை அல்லது தனக்கு வேண்டாதவர்களை நேருக்கு நேர் எதிர்க்க முடியாதவர்கள் சிறு தெய்வங்கள் அல்லது துர் தேவதைகள் மூலம் அவர்களுக்கு கெடுதல் செய்தல் அல்லது அவர்களை அழித்தல். இதற்கு மாந்திரீகம் தெரிந்த மந்திரவாதி ஒருவன் இடையில் இருந்து காரியம் செய்வான். காசையும் பிடுங்குவான். செய்வினையை எடுப்பதற்கும் மந்திரவாதிகளை நாடுவார்கள். இதுமாதிரியான காரியங்களுக்கு மலையாள மந்திரவாதிகளுக்கு மவுசு அதிகம். இதற்கு எதிராளியின் தலை முடி. காலடி மண், உபயோகப் படுத்தும் எதேனும் ஒரு பொருள் அல்லது எதிராளியின் புகைப்படம் கேட்பார்கள் நடு ராத்திரியில் அல்லது அதிகாலை வேளைகளில் முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் கறுப்புக் கயிறு, முட்டை, மிளகாய் போன்றவற்றை மந்திரித்து வைத்து விடுவார்கள். நான் இவறறை  அடிக்கடி அதிகாலையில் ஆற்றுக்கு போகும் வழியில் கண்டதுண்டு. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. (அப்போது மந்திரித்த தாயத்து, கறுப்புக் கயிறு, தகடு ஏதேனும் ஒன்றை எதிராளி இருக்கும் இடத்தில் அவனுக்குத் தெரியாமல் வைத்து விடுவார்கள்.)

இதில் வேடிக்கை என்னவென்றால், ஊர்ப் பெரிய மனிதர்கள், தன்னை பெரிய பலசாலியாக காட்டிக் கொள்பவர்கள் என்று பெரும்பாலானோர் பயத்தின் காரணமாக கழுத்து ,கைகள், இடுப்பு ஆகியவற்றில் மாந்திரீக கயிறுகள், தாயத்துகள் கட்டிக் கொள்வதைக் காணலாம். ஆக ஒரு பெரிய முரட்டு ஆசாமியை மடக்க ஒரு வதந்தியே போதும்.

ஒருநாள் இரவு:

நாங்கள் திருச்சி  டவுனில் (சுமார் 30 வருடங்களுக்கு முன்னர்) குடியிருக்கும்போது எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பையனுக்கு பேய் பிடித்து விட்டதாகச் சொன்னார்கள். எப்படி பேய் பிடித்தது என்றால், முருகன் டாக்கீசில்  இரவு சினிமா பார்த்து விட்டு காந்தி பூங்கா வழியாக வந்து இருக்கிறான். அப்போதெல்லாம் அந்த பகுதியில் வீடுகள் அதிகம் இல்லை; ஆள் நடமாட்டமும் அதிகம் இருக்காது. அப்போது அந்த பூங்காவின் அருகில் இருந்த முச்சந்தியில் சிலர் மந்திர வேலைகள் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். இவன் பேசாமல் வந்து இருந்தால் பிரச்சினை இல்லை. அங்கு நின்று வேடிக்கை பார்த்து இருக்கிறான். அவர்கள் மந்திரவேலை முடிந்ததும் ஏதோ ஒன்றை ஊத இவன் மீது பட்டு இருக்கிறது. இவன் பயந்து போய் விட்டான். அன்றிலிருந்து அந்த பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கடுமையான குளிர் சுரம். கண்டபடி உளறினான். ஒருநாள் இரவு அவனுக்கு பேய் ஓட்டப் போவதாகச் சொன்னார்கள். ஒரு பூசாரி அந்த பையனின் தலையில் உள்ள முடியை பிடித்துக் கொண்டு நடந்தார். அவனது குடும்பத்தை சேர்ந்த சிலர் உடன் சென்றனர். நானும் என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பதற்காக கூடவே சென்றேன். அவன் பயந்ததாகச் சொல்லப்படும் முச்சந்தியில் அந்த பூசாரி அவனை வைத்து ஏதேதோ முணுமுணுத்து அவன் மீது திருநீற்றை வீசினார். பின்னர் வீட்டிலிருந்து கொண்டு சென்ற சொம்புத் தண்ணீரை அவன் முகத்தில் பளிச் பளிச் என்று அடித்தார்.தலை முடியில் இரண்டை வெட்டி எடுத்து காந்தி பூங்காவிற்குள் (PARK) இருந்த புதருக்குள் வீசினார். பின்னர் அவனது ஒரு கையில் மணிக்கட்டில்  ஒரு கருப்புக் கயிறு கட்டினார். அப்புறம் கொஞ்சநாளில் சரியாகி விட்டான்.

இது மாதிரி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். இவ்ற்றை நான் உளவியல் மருத்துவம் என்ற அடிப்படையிலேயே பார்க்கிறேன்.

துளசிதளம்:

எண்டமூரி வீரேந்திரநாத் என்ற தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய “துளசிதளம்என்ற நாவல் இந்த பில்லி சூன்யத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் . இதனை நான் தமிழில் (தமிழாக்கம்: சுசீலா கனக துர்கா) படித்து இருக்கிறேன். ந்ன்கு விறுவிறுப்பான நாவல். சாவி - வாரப் பத்திரிகையில் தொடராக வந்து வாசகர்களின் வயிற்றைக் கலக்கியது. துளசி என்ற  குழந்தைக்கு வைக்கப்படும் ஏவலை எப்படி எடுக்கிறார்கள் என்பது கதை. மேலும் இந்த நாவலில் பில்லி சூன்யம் பற்றிய விவரங்களையும் நாவலாசிரியர் சொல்கிறார். இந்த நாவலில் வரும் காத்ரா என்ற மந்திரவாதியையும் காஷ்மோரா என்ற சூன்யமான ஏவலையும் மறக்க முடியாது

காளி கோயில்கள்:

நம்நாட்டில் பில்லி சூன்யம் விலகுவதற்காக வேண்டிக் கொள்வதற்காக விசேடமான கோயில்கள் நிறைய உண்டு. குறிப்பாக துர்க்கை எனப்படும் காளி கோயில்கள் இதற்கு பிரசித்தி பெற்றவை. நமது தமிழ்நாட்டில் இந்துக்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்களிலும் முஸ்லிம்களிலும் இந்த பில்லி,சூன்யம்,ஏவலை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். அந்த ஊரிலுள்ள அம்மனைப் பற்றிய ஒரு தகவல்.

மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள். ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள்  மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள். சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன்  நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது.  சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்
(பார்க்க: எனது பதிவு: http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html )

எல்லாமே நம்பிக்கைதான்:

ஒருமுறை அப்பரும்,சம்பந்தரும் மதுரைக்கு செல்வதாக இருந்தது. அப்போது நாளும் கோளும் சரியில்லை என்று அப்பர் பயணத்தை தள்ளி வைக்க சொன்னார். ஆனால் சம்பந்தரோ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் சிவனையே நினைந்திருப்பவருக்கு ஒன்றும் செய்யாது “ என்று ஒரு பதிகம் (கோளறு பதிகம்) பாடினார். ஒரு பதிகம் என்பது பத்து பாடல்கள் கொண்டது. அந்த பதிகத்தின் முதல் பாடல் இது.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே                       -   திருஞானசம்பந்தர் தேவாரம்


திருஞானசம்பந்தராவது பரவாயில்லை மென்மையாகவே பாடினார். இன்னொருவர் முருக பக்தர். பெயர் குமரகுருபரர். நேரிடையாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறார்.

நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-          குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)


ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்ற நம்பிக்கை உடையவன் நான். ஆனால் இந்த பில்லி சூன்யம் இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஏனெனில் நல்லவனாக இருக்கும் ஒருவன் சொல்லும் வாக்கே பலிப்பதில்லை. இதில் தீய எண்ணம் தீய செயல் கொண்ட ஒருவன் சொல்லும் செயலும் பலிக்கும் என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. அப்படி நடந்து இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சாம்பலாக போயிருக்கும்.