காணாமலே நட்பு என்ற வகையில், வலையுலகில் எனக்கு அறிமுகமானவர் நண்பர்
திரு ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள். அவருடைய எழுத்துக்களால்
ஈர்க்கப்பட்டு, அவருடைய தேவியர் இல்லம் என்ற வலைத்தளத்தில் வெளியாகும் அருமையான கட்டுரைகளை
தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். புதுக்கோட்டையில் (2015) மிகவும்
சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் ஒருமுறை நேரில் அவரை சந்தித்ததுதான்.
ஜோதிஜியின் படைப்புகள்:
அவருடைய மின்நூல்களான ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள், ஈழம் வந்தார்கள்
வென்றார்கள், தமிழர் தேசம், வெள்ளை அடிமைகள், காரைக்குடி உணவகம் ஆகியவற்றை எங்கள் கம்ப்யூட்டரில்
உள்ள மின்நூலகத்தில் தரவிறக்கம் செய்ததோடு, ரசித்து படித்தும் இருக்கிறேன். அச்சு நூல்
வடிவில் வெளியான அவருடைய ‘டாலர் நகரம்’ - திருப்பூர் வரலாற்றில் ஒரு முக்கியமான நூல்
ஆகும். எனது வலைப்பதிவினில் இந்த நூலினுக்கு ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதி இருக்கிறேன்.
பழைய குப்பைகள்:
ஜோதிஜி (திருப்பூர்) அவர்களின் கட்டுரைகள் யாவும் எதார்த்தமானவை;
வாழ்வியல் சிந்தனைகளை அனுபவ வரிகளாகக் கொண்டவை. அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள
’பழைய குப்பைகள்’ என்ற நூலும் சிறப்பான ஒன்று.
நான் என்ற முன்னுரைப் பக்கம் தொடங்கி, அங்கீகாரமும் அவஸ்தைகளும் என்ற ஆறாவது கட்டுரை
வரை, எழுத்தாளர் ஜோதிஜி அவர்களின் எழுத்துலக, குறிப்பாக வலைப்பக்க அனுபவங்களைக் காண
முடிகிறது.
// மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து
வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத
இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை
உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. //
என்று தான் இன்னமும் எழுதி வருவதன் சூட்சுமத்தைச் சொல்லுகிறார்
ஆசிரியர்.
ஆசை மரம் – என்ற தலைப்பில், படிக்கப் படிக்க கூடவே எனது பழைய நினைவுகளும்
பின்னோக்கி சென்றன. அவர் இந்தக் கட்டுரையில் சொல்வது போல ‘வெறுமைதான்’ மனதில் வந்து,
ஏதோ ஒன்றை இழந்ததை, ஆனால் இன்னதென்று உணர முடியாமல், நெருடலைத் தந்தது.
பெரும்பாலும் புத்தகக் காதலர்கள் யாவரும் செய்யும் ஒரு காரியம்,
தாங்கள் படிக்கும் புத்தகங்களை வாங்கி வாங்கி சேர்ப்பதுதான். ஆனால் மற்றவர்களுக்கு
இவை பழைய குப்பைகள். இந்த புத்தகக் காதல் பற்றி ’பழைய குப்பைகள்’ என்ற தலைப்பினில்
ஆசிரியர் சொல்லி, இருக்கிறார்.
// ஆறாவது படிக்கும் போது வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு
படித்து முடித்த போது தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது, காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவது
என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின் தராக மந்திரம், ஆனால் புத்தக காதல் என்பது இன்று வரை
மாறவில்லை, என்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும்
யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும்
கொள்கையாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்த
புத்தக வாசிப்பு என்ற கொள்கை மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது
//
என்பது ஆசிரியரின் கருத்து.
சுருக்கமாகப் பேசு என்ற கட்டுரையைப் படித்த போது, நான் எனது சின்ன
வயதினில், ரெயில் பயணமாக திருச்சியிலிருந்து சென்றபோது, இடைப்பட்ட செங்கல்பட்டு தொடங்கி
மதுராந்தகம் ஏரியைத் தாண்டும் வரை உண்டான அந்த குளிர்ச்சியை, முதன் முதலாக அந்தக் கால
மெட்ராஸுக்குள் ’பட்டணப் பிரவேசம்’ செய்த அந்த நாளை நினைத்து, எனக்குள் மனம் பரிதவித்தது.
இவற்றுள் வரும் அவரது நடைமேடை (ரெயில் நிலையம்) அவருக்கென்று அமைந்த அருமையான சிந்தனை
மேடை.
’சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை’ – என்ற கட்டுரையில் களம்.1
களம்.2 களம்.3 என்று அமைத்து போலியான சாதி ஒழிப்பாளர்களைப் பற்றியும், குழந்தைகள் மனதில்
ஜாதி, மதம் உண்டாக்கும் நெருடல்களைப் பற்றியும், இசுலாமியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்
படுவது பற்றியும் வெளிப்படையாக நடுவுநிலையோடு சொல்லி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
இன்னும் பயணம் பற்றியும், விழா தரும் போதை பற்றியும், விளம்பரம்
படுத்தும் பாடு பற்றியும், ஆன்மீகத் தேடலில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றியும்., தமிழ்
தேசியம் பற்றியும், மதம் மற்றும் சாதீயம் பற்றிய தனது பார்வையையும் - இந்த நூலில் சொல்லி இருக்கிறார்.
குப்பை என்பதற்கு தமிழில் செல்வம் என்ற பொருளும் உண்டு. ( ’கோடிபல
அடுக்கிய கொழுநிதிக் குப்பை’ – சிலப்பதிகாரம்) ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய
இந்த ’பழைய குப்பைகள்’ என்ற நூல், வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய ஒரு பொக்கிஷம் என்றே
சொல்லலாம்.
(நூலினைத் தரவிறக்கம் செய்ய http://freetamilebooks.com/ebooks/pazhaiya-kuppaigal
)