ஒரு நல்ல நாவலைப்
படித்து முடிக்கும் போது, நம்மோடேயே இருந்த ஒருவர் நம்மை விட்டு பிரிவது போன்ற
உணர்வு வரும். அதைப் போலவே குடும்பக் கதை கொண்ட பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து
முடிந்ததும்,நெடுநாள் பழகிய குடும்பம் ஒன்றை விட்டுப் பிரிவது போல் இருக்கும்.
மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஒரு
படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தால், கேட்கவே வேண்டாம். படம் பார்த்து
விட்டு, தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல
இருக்கும். (எஸ்.வி.ரங்காராவ்
03.ஜூலை.1918 – 18.ஜூலை.1974)
இவர் படங்களைப்
பார்க்கும்போது இவர் தெலுங்கு திரையுலகிலிருந்து வந்தவர் என்ற எண்ணமே வந்ததில்லை. நம்மில்
ஒருவராகவே தோன்றினார். இவர் பெரும்பாலும் பல படங்களில் பாசக்கார அப்பாவாகவே வந்து
இருப்பார். மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் சம்பந்தப்பட்ட படங்களில் மட்டும் வில்லனாகவே
வருவார். இவருடைய உயரமும் கம்பீரமும் அப்படி. இவரைப் பற்றி வலைப்பதிவில் எழுத
வேண்டும் என்பது வெகுநாள் ஆசை.
நான் பார்த்த
படங்கள்::
இவர் தமிழ் படங்களில்
நடிக்கத் தொடங்கிய போது நான் சிறுவன். எனவே இவரது அனைத்து படங்களையும் பார்த்ததில்லை.
எல்லாம் பெரியவன் ஆன பிறகு, மீள் வெளியீடாக தியேட்டர்களில் வந்தபோது
பார்த்ததுதான்.
மிஸ்ஸியம்மா
– அந்தக் கால இளமையான ஜெமினி
கணேசன் – சாவித்திரி ஜோடி, மற்றும்
கே.சாரங்கபாணி, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் நடித்த நகைச்சுவை படம்.
எஸ்.வி.ரங்காராவிற்கு பள்ளிக்கூடம் நடத்தும், கண்ணியமான பணக்கார கனவான் வேடம்.
அவருக்கே உரிய ஜிப்பா, அங்கவஸ்திரம், கைத்தடியோடு வருவார். இவரது பள்ளியில் பிள்ளைகளுக்கு,
பாடம் சொல்லிக் கொடுக்க பி.ஏ படித்த தம்பதியினர் வேண்டும் என்று விளம்பரம்
செய்வார். வேலையில்லாத படித்த பட்டதாரிகளான ஜெமினியும், சாவித்திரியும் கணவன்
மனைவி போல நடித்து வருவார்கள். ஆசிரியர் பணி செய்வார்கள். பின் நிஜமாகவே கல்யாணம்
செய்து கொள்வார்கள். “வாராயோ வெண்ணிலாவே” என்ற இந்த படத்தில் வரும் மறக்க முடியாத பாடல்
காட்சியில் எஸ்.வி.ரங்காராவும் வருவார்.
இந்த பாடலை கண்டு
கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: Kandasamy SEKKARAKUDI SUBBIAH
PILLAI)
எங்க
வீட்டுப்பிள்ளை – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,
சரோஜாதேவி நடித்த இந்த படத்தில் , சரோஜாதேவிக்கு பணக்கார அப்பாவாக வந்து
அசத்துவார். தனது ஒரே செல்ல மகளான சரோஜாதேவியுடன் மாப்பிள்ளை பார்க்க எம்,ஜி.ஆர்
வீடு வருவார்; நம்பியார் முன் வீட்டில் நடக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யமானவை.
எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாயார அழைப்பார்.
படிக்காத
மேதை – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் இந்த
படத்தில் ரங்காராவ் – கண்ணாம்பா
தம்பதியினரின் பிள்ளைகளோடு, ரங்கன் என்ற விசுவாசமுள்ள
ஒரு வளர்ப்பு மகனாக சிவாஜி கணேசன் வருவார். வீட்டில் ஒரு வேலைக்காரனுக்கும் மேலாக
உழைப்பார். எதனையும் எதிர்பாராத, பாரதி கண்ட “கண்ணன் என் வேலைக்காரன்” என்ற பாடலின் பாத்திரப் படைப்பே இந்த ரங்கன் எனலாம். ஒரு
சூழ்நிலையில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, சிவாஜியை, ரங்காராவே வீட்டை விட்டு
வெளியேற்றி விடுவார். ஆனாலும் வெளியேறிய சிவாஜியை நினைத்து நினைத்து துடிப்பார்.
அந்த துயரத்திலேயே அவர் இறக்கும் காட்சியில் ரங்காராவ் காட்டும் முகபாவங்கள்,
நடிப்பை இன்னொருவர் செய்ய முடியாது. உள்ளத்தை உருக்கும் இந்த பாடல் “ எங்கிருந்தோ
வந்தான் கண்ணன்”.
இந்த பாடலை கண்டு
கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.(நன்றி:Cinema
Junction)
நானும்
ஒரு பெண் – ஒரு பெண் கறுப்பாக பிறந்து விட்டதனாலேயே, இந்த
சமூகத்தில் எவ்வளவு அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை உணர்த்தும் படம். கறுப்பு பெண்ணாக
மேக்கப் போட்டு விஜயகுமாரி பாத்திரத்தோடு ஒன்றி நடித்த படம். விஜயகுமாரிக்கு
பாசமுள்ள மாமனாராக எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். ஜனாதிபதி
விருது பெற்ற படம். இதிலும் இவரது நடிப்பு சோடை போகவில்லை.
மாயாபஜார் – இன்றும் அதிக ரசிகப் பெருமக்களால்
ரசிக்கப்படும் படம். மகாபாரத கிளைக்கதை ஒன்றினை வைத்து எடுக்கப்பட்டது. இதில்
எஸ்.வி.ரங்காராவ் கடோத்கஜனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும், ”கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.” என்ற பாடலை இன்றைய டீவி சேனல்களில் அடிக்கடி
ஒளிபரப்ப்பக் காணலாம்.
இந்த பாடலை கண்டு
கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: kirubakaran soundararaj மாயா பஜார் திரைப்படத்தின் இப்பாடலுடன்
தெலுங்கு வண்ணப்படம் கலவை செய்யப்பட்டுள்ளது.)
பக்த
பிரகலாதா - கடவுள் உண்டா?
இல்லையா? அன்று தொடங்கிய விவாதம் இன்றும் தொடர்கிறது. இந்த படத்தில் கடவுள் இல்லை
என்ற இரணியகசிபு என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து தனது திறமையைக் காட்டியவர்
நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்.
அன்புச்சகோதரர்கள்
என்று ஒரு படம். இதில்
எஸ்.வி.ரங்காராவ் மூத்த சகோதரராக நடித்து இருப்பார்; தனது தம்பிகளுக்காக கல்யாணமே
செய்து கொள்ளாத கேரக்டர். இளைய சகோதரர்களாக மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன்.
ஜெய்சங்கர் ஆகிய மூவரும் நடித்து இருப்பார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த,
இவர்களது குடும்பம் எப்படி சிதறுகிறது என்பது கதை. அண்ணன் தம்பிகள் பாசக் கதை.
இதில் வரும்
முத்துக்கு முத்தாக,
சொத்துக்கு
சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
என்ற (சகோதரர்கள்
நால்வரும் பாடும்) பாடல் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பிற்பகுதி சோகம்னா சோகம், அவ்வளவு
சோகம். எஸ்.வி.ரங்காராவ் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, நெஞ்சை கனக்கச்
செய்து விடுவார்.
ஒரு தெலுங்கு – தமிழ் டப்பிங் படத்தில் இவரை ஒரு
மந்திரவாதியாக பார்த்ததாக நினைவு. படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இன்னும் நான்
பார்த்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.
படிக்கும் உங்களுக்கு “போர்” அடிக்கலாம்.
எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
சில தகவல்கள்:
எஸ்.வி.ரங்காராவ்
அவர்களுக்கு, ஆந்திராவில் , விஜயவாடா நகரில் மார்பளவு சிலை வைத்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமது பேட்டி ஒன்றில் ”எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர்
அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது
வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம்
பேர் உருவாக வேண்டும்” என்று
குறிப்பிட்டுள்ளார்.
பழைய தமிழ் சினிமா
குறித்து வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக எழுதுபவர் திரு R P ராஜநாயஹம் அவர்கள்.
அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர்
திரைப் படங்களில் இருபத்தைந்து
வருடங்கள் (1950களில், 1960களில், 1970களின் முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார்
என்பது விந்தை. எழுபது வயது
மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்”
‘இந்தியா சினிமா 100” என்ற தலைப்பில் “SUN NEWS” தயாரித்த நிகழ்ச்சி யூடியூப்பில் வீடியோவாக
வந்துள்ளது. கண்ணதாசன், சின்னப்பா தேவர்
தொடங்கி பலரது குறிப்புகள் அடங்கியது. இங்கே நடிகர் எஸ்.வி.ரங்காராவ்
சம்பந்தப்பட்ட வீடியாவை கண்டு கேட்டு
ரசிக்க கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி:Sun News)
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)