Sunday, 31 December 2017

ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நானும்



,விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே’ என்ற கதையாக நிறைய வலைப்பதிவர்கள் இப்போது வலைப்பக்கம் எழுதுவது இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடித் தேடிப் போனதில், பலரும் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) இரண்டிலும் சங்கமம் ஆகி இருப்பது தெரிந்தது. பலநாட்களாக இவற்றிலிருந்து ஒதுங்கியே இருந்த நானும், அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆவலில் அந்த கடலில் குதித்து மீண்டு விட்டேன். ஏற்கனவே நான் இதே பொருளில் எழுதி இருந்தாலும், அனுபவம் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள்.

                                                                                             
தன்விவரம் (PROFILE) இல்லாத நண்பர்கள்

எனது ஃபேஸ்புக்கில் பல நண்பர்கள் Friend Request கொடுக்கிறார்கள். தெரிந்த முகமாக இருக்கலாம் என்று தேடிப்பார்த்தால் அறிமுகமானவர்களாக இல்லை. சிலர் தங்களது முகமாக வேறொருவர் படத்தை  (தங்களுக்குப் பிடித்த கடவுள், தலைவர், நடிகர், நடிகை இன்னும் சிலர் பூக்களின் படத்தை) முகமூடியாக தங்கள் தன்விவரத்தில் (PROFILE) வைத்து இருக்கிறார்கள்

மேலும், அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும்  ஃபேஸ்புக்கில் Overview என்று பார்த்தால் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

Friends – No Friends to show
Photos – Follow ………… to get her public posts in your News Feed
Work and Education - No workplaces to show - No schools to show
Places He's Lived - - No places to show
Family and Relationships - No relationship info to show

காலம் இருக்கும் இருப்பில், எனக்கு எந்த விதத்திலும் அறிமுகம் இல்லாத அல்லது தன்விவரம் (PROFILE) சரியாகச் சொல்லாத அல்லது ஒரு சில அடிப்படை விவரங்கள் கூட தர விரும்பாத - அன்பர்களின் Friend Request ஐ எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது அல்லது அவர்களைத் தொடர்வது என்று தெரியவில்லை. எனவே நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின்பும் தன்விவரம் (PROFILE) இல்லாதவர்களையும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்களையும் மற்றும்  எனது ஃபேஸ்புக் கணக்கில் பெயருக்கு நண்பர்களாக இருப்பவர்களையும் நீக்கி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஆனாலும் அதேசமயம் இன்னொரு மனம் அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்று தடுக்கிறது.

வாட்ஸ்அப் நண்பர்கள்

ஃபேஸ்புக் என்பது ஒருவிதமான மயக்கம் என்றால் வாட்ஸ்அப் என்பதும் ஒருவகை மேனியா எனலாம். இங்கு உள்ள ஒரே சவுகரியம் குழுவில் இருப்பவர்கள் அனைவரது செல்நம்பர்களைக் கொண்டு, அவர்களை இன்னார் என்று அடையாளம் காணுவது எளிது. 

ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப ஒரே தகவலையோ படத்தையோ அல்லது வீடியோ காட்சியையோ பதிவு செய்கிறார்கள். எனது பழைய ஆன்ட்ராய்டு போன் ஒன்று இவற்றாலேயே அடிக்கடி ஹேங்க் ஆகி விடும்; பாட்டரியும் சீக்கிரம் தீர்ந்து விடும். (இப்போது புதிய ஆன்ட்ராய்டு போன் வாங்கி விட்டேன்.)

“அன்புடையீர், தேவையில்லா செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்று திரும்பத் திரும்ப இங்கே பதியப்படுவதால் எனது செல்போனில் இவற்றை நீக்கவே நான் அதிக நேரத்தை தினமும் செலவிட வேண்டி இருக்கிறது. எனவே வெளியேறுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, நான் இணந்து இருந்த சில வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறி விட்டேன். எனினும், இப்போதும் தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் கணக்கை முடிக்காமல் தொடர்கின்றேன்.

பொதுவான அம்சங்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இரண்டிலும் காப்பி பேஸ்ட் பதிவர்கள் ஆதிக்கம் அதிகம். நீங்கள் கஷ்டப்பட்டு எழுதும் தகவலோ அல்லது எடுக்கும் படமோ இன்னொருவர் பெயரில் அப்படியே மாற்றம் ஆகி விடுகிறது. ஒருமுறை, ஃபேஸ்புக்கில், ஒரு குழுவில், நான் எனது கேமராவில் எடுத்த புகைப்படத்தை இன்னொருவர் தான் முதன்முறையாக எடுத்தது போல், தனது பக்கத்தில் பதிந்து கொண்டார். இதுபோல் அடிக்கடி நிகழும். ( நான் என்னால் எடுக்கப்பட்ட படம்  தவிர, மற்றவர்களது  படங்களை இணைக்கும் போது  எங்கிருந்து எடுக்கப் பட்டவை என்பதனை சொல்லி விடுவது வழக்கம்) 

ஆனாலும் விழா அழைப்பிதழ்கள், கூட்ட நிகழ்ச்சிகள், இரங்கல் செய்திகள் என்று கருத்து பரிமாற்றம் செய்ய இரண்டு தளங்களுமே சிறப்பாக உதவுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு சிரமம் பலர் இந்த இரண்டு சேவைச் செய்திகளையும் தாமதமாக படிக்கிறார்கள், அல்லது பார்ப்பதே இல்லை என்பதால் போனிலும் ஒருமுறை இந்த தகவல்களை சொல்லி விட வேண்டி இருக்கிறது.

பொதுவெளியில் தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளும் பலரை, இங்குள்ள பதிவுகள் மூலம், அவர்ளது ஒரு சார்பான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் முக்கியமான, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சில புரட்சிகரமான குழுவினர், மற்ற பொதுவான குழுக்களிலும் ஊடுருவி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய வேலை எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்ப்பதுதான். எனவே இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கால நலன் கருதி கவனமாக இருப்பது நல்லது.

என்னதான் மாய்ந்து மாய்ந்து  எழுதினாலும், குறுஞ்செய்திகளை விரும்புவோரே இங்கு அதிகம் என்பதனால், நமது பதிவுகளை படிக்காமல் அப்பால் போவோர்களே அதிகம்.படிக்கிறார்களோ இல்லையோ லைக் போடுவோர்கள் அதிகம்.

ஏதேனும் ஒரு பதிவை மறுபார்வை பார்க்க வேண்டுமென்றால், இவ்விரண்டிலும் ரொம்பவே கஷ்டம். அதேசமயம், வலைத்தளத்தில் வாசகர்கள் அதிகம் வருவார்கள் என்பதோடு, பழைய பதிவுகளை உடனே பார்ப்பதும் எளிது
.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களில் இடம் பெற்று இருந்தாலும், நான் முதலிடம் தருவது வலைத்தளத்திற்கு மட்டுமே. 

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஃபேஸ்புக் என்றே சொல்வேன் http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post.html
ஃபேஸ்புக்கை (Facebook) முகநூல் என்பது சரியா? http://tthamizhelango.blogspot.com/2015/11/facebook_4.html
வாட்ஸ்அப் குப்பைகள் http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_30.html

               அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு 2018 வாழ்த்துகள்

 
                (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 

Wednesday, 27 December 2017

தங்கம் மூர்த்தியின் தேவதைகளால் தேடப்படுபவன்



புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ஒரு கவிதை நூலை ரொம்ப நாட்களாக வாங்க முயற்சி செய்து, சென்ற மாதம்தான், புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாங்க சந்தர்ப்பம் அமைந்தது. அந்த கவிதை நூலின் பெயர் ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்பதாகும். நூலை வாங்கி, வீட்டிற்கு வந்தவுடனேயே படிக்கத் தொடங்கி படித்தும் முடித்து விட்டேன்.

ஆசிரியர் பற்றி

தேவதைகளால் தேடப்படுபவன் என்ற இந்த நூலின் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை நான் நேரில் சந்தித்தது புதுக்கோட்டை வீதி இலக்கிய கூட்டங்களில் தான். ஒருமுறை புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ் பயிற்சி முகாமில் முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றி எழுதி, தொடங்கி வைத்தார். பின்னர் அவரே அங்கு விரிவாக்கமும் செய்துள்ளார்.

தங்கம் மூர்த்தி தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி. சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியாளர் என்ற நிலையிலும் இவர் அரும்பணியாற்றிவருகிறார். சுமார் 10 கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் இலக்கிய மட்டும் பட்டிமன்ற மேடைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடத் திட்டத்தில் உள்ளன. இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ( நன்றி https://ta.wikipedia.org )

மனதைத் தொட்ட கவிதை

இந்த கவிதை நூலைத் திறந்ததுமே சிறு முன்னுரையாய் ஒரு கவிதை. என் மனதைத் தொட்ட வரிகள். வெள்ளந்தியாய் அந்த கிராமத்து மக்கள் பேசும் இயல்பான நடையில். வார்த்தை ஜாலம் ஏதுமில்லை. கவிஞரின் மனதிலிருந்து விழுகின்றது கண்ணீர் அருவி.

பார்வை
மங்கலாய்த் தெரியுதேப்பா
என்றார்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு
இவ்வளவு வெளிச்சமானதா
இவ்வுலகம் என்றார்
                                                  
இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு             (இந்நூல் பக்கம்.3)

கவிதையைப் படித்தவுடன், எனது அம்மா நினைவில் வந்தார்– என்னவென்றே நான் எழுதுவது. கனத்த மனத்தோடு அடுத்து நகர்ந்தேன்
.
சித்தர் ஞானம்

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடி வைத்தான் ஒரு கவிஞன். வாழ்க்கை என்றால் என்ன என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் சரியாகச் சொல்ல முடியாது. நமது கவிஞரும் ‘மெய் உணர்தல்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையைச் சொல்லி இருக்கிறார்.

எல்லாம்
அடைந்துவிட்டதைப் போலிருக்கிறது
எல்லாம்
இழந்துவிட்டதைப் போலவும் இருக்கிறது
……. ……. ……. …….
நன்றாய்
வாழ்ந்ததைப் போலிருக்கிறது
என்றோ
செத்ததைப் போலவும் இருக்கிறது.     (இந்நூல் பக்கம்.3)

இங்கே இவர் எழுதிய வரிகள் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம் என்று உணர்த்துவது போல் இருக்கிறது.

திருவிழாக்கள்

விழா என்றாலே மகிழ்ச்சிதான். ஒவ்வொரு ஆண்டும் விழாக்கள் வருகின்றன. சின்ன வயது சந்தோஷம் இப்போதும் இருக்கின்றதா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.. இன்றும் திருவிழா என்றால், புத்தாடை அணிந்து இனிப்புடன் குதூகலிப்பது குழந்தைகள்தாம். கவிஞரின் வரிகள் இவைகள்.

திருவிழாக்களை
வரவேற்று
அழைத்து வருகிறார்கள்
குழந்தைகள்
                                                         
குழந்தைகளைக் கண்டதும்,
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள்       (இந்நூல் பக்கம்.14)

எதார்த்தமான உண்மைகள்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் சொல்லும் பெரும்பாலான கவிதைகள்  எதார்த்தமானவைகளாக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மைகளாக உள்ளன. இதனை தமிழ் இலக்கியத்தில் ‘இயல்பு நவிற்சி அணி’ என்பார்கள்.

இப்போதெல்லாம் உடற்பயிற்சியின் வரிசையில் நடைப்பயிற்சி (Walking) என்பது ரொம்ப ரொம்ப அவசியம் ஆகி விட்டது. அதிலும் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் நிறையவே ஆலோசனைகள்.. இந்த நடத்தல் (Walking) குறித்து கவிஞர் கண்ட காட்சி இது.

நடைப்பயிற்சி செய்வோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை
….. …. …. …. ….….. …. …. …. ….
அலைபேசியில் பேசியே
அத்தனை சுற்றும்
முடிப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
மருத்துவருக்கு பயந்தும்
மனைவிக்கு பயந்தும்
வருவோருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
பாதியில் நிறுத்தி
பழங்கதை உரைத்து
கெடுப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
என்போல்;
எப்போதாவது
நடப்போருண்டு
…… …. … … ….. …..….. …. …. …. ….
என்று நிறையவே சொல்லிச் செல்கின்றார். (இந்நூல் பக்கம் .49 - 50)

இப்போதெல்லாம் ‘தோட்டி முதல் தொண்டைமான் வரை’ எல்லோரும் விசிட்டிங் கார்டு அடித்து வைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ‘சாப்பாடு பிரமாதம் … யார் சமையல்?” என்று சொல்லி விட்டால் போதும், உடனே அந்த சமையல் மாஸ்டர் அல்லது காண்டிராக்டர் நம் முன்னே வந்து அவருடைய  விசிட்டிங் கார்டை தந்து விட்டு, “சார் யாரும் கேட்டால் சொல்லுங்கள்” என்று தருகிறார். இதுவாவது பரவாயில்லை. ஏதேனும் துக்க நிகழ்ச்சிக்கு போகும்போது, அங்கே ஆடி பாடி பறையோ அல்லது ட்ரம்மோ அடிப்பவர்களைப் பார்த்து “எந்த ஊர் செட்” என்றவுடனேயே ஒரு கார்டை நீட்டி “சார் நாங்க திருவிழாவிற்கும் அடிப்போம் “ என்று சொல்லுகிறார்கள். எனக்கு இது மாதிரியான விசிட்டிங் கார்டு அனுபவங்கள் நிறையவே உண்டு.

கவிஞர் தனது அனுபவத்தை நகைச்சுவையாகவே சொல்கிறார்.  
   
அந்த
மரண ஊர்வலத்தின்
முன் பகுதியில்
பறையடித்துச் சென்றவர்களில்
ஒருவன் என்னிடம் தந்தான்
அக்குழுவின் விசிட்டிங் கார்டை
                                                                    
பரிந்துரைக்கச் சொல்கிறானா
பயன்படுத்தச் சொல்கிறானா    (இந்நூல் பக்கம் 57)

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே அரசாங்கம் மதுக் கடைகளை திறந்து வைத்து குடிக்கச் சொல்லுகிறது. இப்போது குடிப்பது என்பது பேஷனாகி விட்டது சிலருக்கு.. ‘குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது பழமொழி. கவிஞரின் வரிகள் கீழே.

குறைந்த ஒளியின்கீழ்
ச்சியர்ஸ்
சொல்லிக் கொள்கின்றன
கோப்பைகள்
                                                     
திரவத்துளி பட்டதும்
மெல்ல நழுவி
வெளியேறுகின்றன
பொய்கள்
                                                     
உண்மைகளோ
தள்ளாடியபடி
தவிக்கின்றன   (இந்நூல் பக்கம் 40)

இதுபோன்ற தள்ளாடல்கள் இக்கவிதையில் நிறையவே உண்டு  குடித்துப் பார்க்கவும் . மன்னிக்கவும் படித்துப் பார்க்கவும்.

நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களைப் பற்றி இரண்டு பக்கக் கவிதையும் இந்நூலில் உண்டு.

இன்னும்  வளர்ப்பு வண்ண மீன்கள், தொட்டிச் செடிகள், செல்லப் பிராணிகள், பறவைகள், மனுக்கள் படும்பாடு, திருட்டு புளியம்பழம் – என்று நிறையவே தொட்டுச் செல்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்.

எனக்குத் தெரிந்து கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை புரவலர். இன்னும் கல்விப் புரவலர் என்றும் சொல்லலாம். புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இரண்டு புத்தகத் திருவிழாக்களின்  வெற்றிக்கு இவரது ஆர்வமும் முனைப்புமே முக்கிய காரணம் எனலாம். இவரது மேடைப் பேச்சை நிறைய சந்தர்ப்பங்களில் ரசித்து கேட்டு இருக்கிறேன். வாசிப்பு அனுபவம் உள்ளவர். இவருக்குள் நிறையவே அனுபவங்கள். எனவே இவர் கவிதை படைப்பதோடு நின்றுவிடாமல், நிறைய கட்டுரைகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எழுதி,  அவற்றையும் நூல்களாக வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நூலின் பெயர்:  தேவதைகளால் தேடப்படுபவன்
நூலின்  வகை: கவிதை நூல்
ஆசிரியர்:   தங்கம் மூர்த்தி
நூலின் விலை: ரூ 60  ­ பக்கங்கள்: 70
பதிப்பகம்: படி வெளியீடு, சென்னை – 600078 பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், Ph 044 65157525 – Mobile 91 8754507070



Saturday, 23 December 2017

கூடு விட்டு கூடு பாயும் கதைகள்



நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் பகுதியில் சண்முகம் என்று ஒருவர் இருந்தார். தினமும் இரவு நேரத்தில், ஒரு பொது இடத்தில், அவர் என்னைப் போன்ற பையன்களை கூட்டி வைத்து சின்னச் சின்ன கதைகளை சொல்லுவார். அவரை கதைசொல்லி (Storyteller) என்று சொல்லலாம். கதைகள் பெரும்பாலும் பறக்கும் குதிரை, மந்திரக் கம்பளம், பாதாள பைரவி என்று மந்திர தந்திரக் கதைகளாகச் சொல்லுவார். அதிலும் கூடு விட்டு கூடு பாயும் கதைகளை ரொம்பவும் ரசிக்கும்படி சொல்லுவார். மார்கழிப் பனியில் போர்வையை போர்த்திக் கொண்டு இது மாதிரி கதைகளைக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம்தான். கதை கேட்கும் ஆர்வத்தில் வீட்டிற்கு போவதற்கு கூட மறந்து விடுவேன். அது மாதிரியான நாட்களில், எனது அம்மா என்னைத் தேடி எங்கள் வீட்டிலிருந்து வந்து விடுவார்கள். நான் கதை கேட்ட பிறகு வருவேன் என்று சொல்லி விடுவேன்.

விக்கிரமாதித்தன் மதனகாமராஜன் கதைகள்:

பெரியவன் ஆன பின்பும் இந்த கூடு விட்டு கூடு பாயும் கதைகள் மீது ஆர்வம் உண்டு. அப்புறம் இந்த விக்கிரமாதித்தன் கதைகளில் நிறைய இடங்களில் கூடுவிட்டு கூடு பாய்தல் நடைபெறும் விக்கிரமாதித்த மகாராஜாவே கூடுவிட்டு கூடு பாய்வான்.. அவ்வாறு செய்வதற்கு முன் தனது உடலை தனது ஆருயிர் நண்பன் பட்டி மூலம் பத்திரமாக ஓரிடத்தில் மறைத்து விடுவான். ஒருமுறை ஒரு பெண் கிளியின் துயரத்தைப் போக்குவதற்காக, அதன் துணையான இறந்து போன ஆண் கிளியின் உடலில் புகுந்து கொள்வான். திரும்ப வந்த பிறகு பார்த்தால், விக்கிரமாதித்தன் உடலில் ஒரு மந்திரவாதி கூடு விட்டு கூடு பாய்ந்து, போலி விக்கிரமாதித்தனாக உலா வருவான். அப்புறம் எப்படி போலி ஒழிந்தான் என்று ஒரு கிளிக்கதை சொல்லும்.மதனகாமராஜன் கதையில் வரும் கதைகளும் மந்திரம் தந்திம், வீரபிரதாபங்கள்  நிறைந்தவைதான்.

அம்புலிமாமா கதைகள்:

அம்புலிமாமாவில் அழகிய வண்ணப் படங்களோடு வரும் மந்திர தந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வம் தரும். இதிலும் குழந்தைகளுக்கு பிடித்தமான  வகையில் நிறைய மந்திர தந்திரக் கதைகள். வேதாளம் சொன்ன கதைகளுக்கு அம்புலிமாமா போட்ட படம்தான் இன்றைக்கும் சூப்பர்.

விட்டாலாச்சார்யா படங்கள்:

தெலுங்கு பட உலகில் விட்டாலாச்சார்யா என்பவருக்கு தனியே ஓர் இடம் உண்டு. மாயாஜால மன்னன் என்று சொல்வார்கள். இவரது படங்களிலும் கூடு விட்டு கூடு பாயும் கதைகள் தொழில் நுட்பம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே  தந்திரக் காட்சிகளை தனது ராஜாராணி, மந்திரபவாதி படங்களில் சிறப்பாக செய்து காட்டியவர். இவர் எடுத்த இந்த வகையான பல தெலுங்கு படங்கள் உடனுக்குடன் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் பல இடங்களில் வெளியிடப்பட்டன. பெரும்பாலும் அவை விக்கிரமாதித்தன் பாணி கதைகள். தமிழ் டப்பிங் படங்களான மங்கம்மா சபதம், மதன காமராஜன் கதை, கந்தர்வ கன்னி, ஜெகன் மோகினி, மதன மஞ்சரி, நவ மோகினி ஆகியவை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ன.                                                                              
நான் இந்த பதிவை எழுதத் தொடங்கியவுடன், கூடு விட்டு கூடு பாய்ந்த ஒரு கதை அரைகுறையாக நினைவில் வந்தது. அந்தக் கதையில் ஒரு இடத்தில் மந்திர தந்திரம் கற்ற குருவுக்கும், அவனது சீடனுக்கும் ஏற்பட்ட தகராறில், இருவரும் ஒவ்வொரு வடிவமாக (பாம்பு – மயில்; புறா – கழுகு என்று மாறுவார்கள்.) இறுதியில் கெட்டமதி படைத்த அந்த குரு அழிவார். இந்தக் கதையையும் காட்சியையும் வைத்து, காந்தாராவ் நடித்த ஒரு படம் தெலுங்கில் வந்தது இந்த படத்தின் பெயர்: குருவுனு மிஞ்சிய சிஷ்யுடு (Guruvunu Minchina Sishyudu).. பின்னர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு (வீரத்திலகம் என்ற பெயரில்) வெளிவந்தது. தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷன் விட்டாலாச்சார்யா.

திருமூலர் கதை:

பதினெண் சித்தர்களில் ஒருவராகிய திருமூலர் வரலாறு என்பது முழுக்க முழுக்க கூடு விட்டு கூடு பாய்ந்த கதைதான். தன்னுடலை விட்டு, இறந்து போன மூலன் என்பவன் உடலிலேயே கடைசிவரை அவரது வாழ்க்கை கடந்து முடிந்து இருப்பதாக அவரது கதை சொல்லுகிறது.

ஆங்கில திரைப்படங்கள்:

ஆங்கில திரைப்பட வரிசையில், நவீன தொழில் நுட்பத்துடன், ஸ்பைடர்மேன், பேட்மேன் என்ற பெயரில், இப்போது வரும் படங்களை, கூடு விட்டு கூடு பாயும் கதைகளின் இன்னொரு வடிவம் எனலாம். இன்னும் இந்த விஞ்ஞான பார்முலா படங்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)