அவன் பித்தனா? என்று ஒரு தமிழ்த் திரைப்படம். நடிகர் எஸ்.எஸ்.ஆர்
கதாநாயகன். இந்த படத்தில், ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கத்தின் மிகுதியால் கதாநாயகன்
ஒரு நூறு ரூபாயை பிச்சையாகக் கொடுத்திட, அவனுக்கு அந்த பிச்சைக்காரன் கொடுத்த பட்டம்
பைத்தியம் என்பதாக ஒரு காட்சி வரும். (1966 இல் வெளிவந்த படம் இது – அன்றைக்கு நூறு
ரூபாய் என்பது பெரிய மதிப்பு ) இதே போல தமிழ் இலக்கியக் காட்சிகளிலும் சிலர் மிகை இரக்கம்
காரணமாக செய்த செயல்களும் உண்டு. ஆனால் அவற்றை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுவதில்லை.
இரண்டு வள்ளல்கள்
அன்றைய பறம்புமலையையும் அதனைச் சுற்றியுள்ள முந்நூறு ஊர்களையும்
தன்னகத்தே கொண்ட பறம்புநாட்டை ஆண்ட மன்னன் வேள்பாரி என்பவன்.
ஒருமுறை அவன் தேரில் செல்லும்போது வழியில் முல்லைக்கொடி ஒன்றைக் கண்டான். பொதுவாகவே காட்டுக் கொடி என்றால், அது அருகே உள்ள
ஒரு செடியையோ அல்லது மரத்தையோ பற்றி படரும். இந்த முல்லைக்கொடிக்கு அது மாதிரி படர
அருகில் எதுவும் இல்லை போலிருக்கிறது. அவன் நினைத்து இருந்தால் வேலையாட்களைக் கொண்டு,
அது பற்றிப் படர ஒரு பந்தலை போட்டு கொடுத்து இருக்கலாம். ஆனால் அந்த பாரி மன்னனோ தான்
வந்த தேரையே அதன் அருகில் நிறுத்தி, அந்த முல்லைக் கொடியை எடுத்து தேரின் மீது படர
விட்டு விட்டு, குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்து விட்டான். விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள்
மன்னனை ‘முல்லைக்குத் தேர் ஈந்த பாரி’ என்று போற்றினார்கள்.
இந்த கொடையைப் பற்றி கேள்விப்பட்ட, கபிலர் தனது பாடல்களில்
.... .... பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி – (புறநானூறு பாடல் எண்.200)
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி – (புறநானூறு பாடல் எண்.200)
என்றும்
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி - (புறநானூறு பாடல் எண்.201)
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி - (புறநானூறு பாடல் எண்.201)
என்றும் சிறப்பித்துப் பேசுகின்றார்.
இதே போல இன்னொரு வள்ளல். மலைசூழ்ந்த ஆவினன்குடியைச் சேர்ந்த பேகன். என்பவன். இவனும் ஒருமுறை தேரில் சென்று கொண்டு
இருக்கும் போது, மயில் ஒன்று தோகை விரித்து ஆடக் கண்டான். எங்கே மயிலுக்கு குளிருமோ
என்று இரக்கப் பட்டவன், தான் மேலுக்கு அணிந்து இருந்த சால்வையையே மயிலுக்கு போர்த்தி
விட்டான். மக்கள் மனதில் ‘மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகன்’ என்று வாழ்த்தினர்.
இந்த இரண்டு வள்ளல்களும் கடையெழுவள்ளல்கள் வரிசையில் வைக்கப்பட்டு பாராட்டப் படுகின்றனர்.
நத்தத்தனார் எனும் புலவர் தனது சிறுபாணாற்றுப்படை (84 – 91) எனும் நூலில்,
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகன் …….. ……
என்று பேகனையும்
…… ….. …. ….
சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி
என்று பாரியையும் சிறப்பித்துப் பேசுகிறார்.
பிற செய்திகள்:
இதே போல ஒரு வள்ளல், அவனை நாடி வந்த, வறுமையில் வாடிய புலவனுக்கு
ஒரு யானையையே பரிசிலாக தருகிறான். அவன் அந்த யானையைக் கட்டி தீனி போட்டானா என்று தெரியவில்லை
இன்னொருவன், பெயர் சிபி சக்கரவர்த்தி. தன்னை நாடி
வந்த புறாவுக்காக அதனைத் துரத்தி வந்த பருந்துவின் பசியை ஆற்ற வேண்டி, தன்னுடைய தொடையையே
அரிந்து கொடுத்தானாம். ( சக்கரவர்த்தி கை தட்டினால், அரண்மனை சமையல் அறையிலிருந்து இறைச்சி தட்டு தட்டாக வரும். ஆனாலும் அவனுக்குள் அப்படி ஒரு அவசரம் )
கொடைமடம்:
இவ்வாறு இந்த வள்ளல்கள் அளவற்ற அன்பு அல்லது அளவற்ற இரக்கம் காரணமாக,
அளவுக்கு மீறி அல்லது கொடை வாங்குவோரின் தகுதிக்கு மீறி செய்வதை கொடைமடம் என்று சொல்கிறார்கள்.
இந்த கொடைமடம் என்ற குறிப்பு பரணர் பாடிய புறநானூறு பாடல் எண். 142 இல் வருகிறது. கொடைமடம்
என்பதற்கு கொடுக்கும்போது இது சரியா என்று எண்ணாது அளவு கடந்து கொடுத்தல் எனலாம். இங்கே
‘ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்’
என்ற நமது. பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் இவை போன்ற செய்திகள் மிகைப்படுத்தப்
பட்டவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)