Monday, 27 August 2012

சர்க்கஸ் - பழைய நினைவுகள்


போகின்ற போக்கைப் பார்த்தால் வருகின்ற தலை முறையினருக்கு சர்க்கஸ் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே போய்விடும் போல் இருக்கிறது. விலங்குகள வதை தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் போன்றவற்றை எதிர்கொள்ள முடியவில்லை என்று,  பல சர்க்கஸ் கூடாரங்கள் காலியாகி விட்டன.

ஊருக்குள் சர்க்கஸ்:

ஊருக்குள் சர்க்கஸ் வந்து விட்டதன் அடையாளம். டும் டும் “ என்று பேண்ட் வாத்திய சத்தம். யானை, ஒட்டகம் என்று சில மிருகங்களோடு ஒரு சின்ன ஊர்வலம். கூடவே கோமாளி வேடம் அணிந்த ஒருவர் விளம்பர நோட்டீஸ்களை கொடுத்துக் கொண்டே செல்வார். வேடிக்கை பார்த்துக் கொண்டே நாங்களும் (சின்ன வயதில்தான்) கொஞ்ச தூரம் செல்வோம். திருச்சியில் அப்போது பெரும்பாலும் சர்க்கஸ் கீழபுலிவார்டு (முருகன் டாக்கீஸ் ) சாலையில் உள்ள டாக்டர் மதுரம் விளையாட்டு மைதானத்தில்தான் நடைபெறும். (இப்போது சர்க்கஸ் போலவே அந்த மைதானமும் பழைய நிலைமையில் இல்லை. அது மார்க்கெட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.) மேலும் அந்த மைதானம், காவிரி ஆற்றுக்கு அருகாமையில் இருந்தபடியானால் யானைகள், ஒட்டகம் போன்றவற்றை குளிப்பாட்ட அழைத்து வருவார்கள். அவைகள் ஆற்றில் குளிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கும்பல் நின்று கொண்டே இருக்கும்.

சர்க்கஸ் கூடாரம்:

சர்க்கஸ் கூடாரம் நன்கு பெரிதாக அடைக்கப்பட்டு இருக்கும். கூடாரத்தின் பல இடங்கள் கிழிந்துபோய் ஒட்டு போட்டு இருப்பார்கள். உள்ளேயிருந்து மேலே கூடாரத்தைப் பார்த்தால் சில இடங்களில் பெரிதாக இருக்கும் ஓட்டை வழியே ஆகாயம் தெரியும்.. வாசலில் பல்வேறு வண்ணக் கொடிக் கம்பங்களைக் காணலாம். கூடாரத்தின் பக்கவாட்டில், கூண்டு வண்டிகளில் அடைககப் பட்டிருக்கும் சிங்கங்களின் உறுமல், வெளியே கட்டப்பட்டு இருக்கும். குதிரைகளின் கனைப்பொலி இவைகளைக் கேட்கலாம். ஒட்டகங்கள் நின்று கொண்டு அல்லது படுத்துக் கொண்டு அசைபோட்ட வண்ணம் இருக்கும். யானைகள் தும்பிககையை ஆட்டியபடி அசைந்து கொண்டே நின்று கொண்டு இருக்கும். எல்லா விலங்குகளும் கட்டிப் போட்டுதான் இருக்கும். அந்த இடத்திலிருந்து மிரு்கங்களின் சாண வாடை வந்து கொண்டே இருக்கும். எங்களைப் போன்ற சிறுவர்கள் உள்ளே வந்து விடாதபடி காவலாளி ஒருவன் வாசலிலேயே விரட்டிக் கொண்டு இருப்பான்

சர்க்கஸ் காட்சிகள்:

பாம்பே சர்க்கஸ், இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்று பிரபலமான யாவும் திருச்சியில் சர்க்கஸ் காட்சிகளை நடத்தி உள்ளனர். திருச்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கிய புள்ளியை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சியின் முதல்நாளை தொடங்குவார்கள். பெரும்பாலும் மாலை நேரம்தான் சர்க்கஸ் காட்சிகள் தொடங்கும். விடுமுறை நாட்களில் மட்டும் பிற்பகல் காட்சியோடு இரண்டு காட்சிகள். வெளியூர்க்காரர்களுக்கு வசதி. என்ன இருந்தாலும் மாலை நேரம் தொடங்கி  இருட்டில் பிரகாசமான விளக்குகள் மத்தியில் நடைபெறும் சர்க்கஸ் காட்சிகள்தான் ரசிக்க நன்றாக இருக்கும்.

சர்க்கஸ் கூடாரத்தில் உள்ளே குறைந்த கட்டணத்தில் காலரிகளும், அதிக கட்டணத்தில் சர்க்கஸ் அரங்கத்தை ஒட்டி நாற்காலிகளும் இருக்கும். சர்க்கஸ் சாகசக் காட்சிகளை சொல்லுவதைவிட நேரில் பார்த்தால்தான் அதன் அருமை தெரியும். வண்ண வண்ண கொடிகளுடன் குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள், அழகு மங்கையர், சித்திரக் குள்ளர்கள் என்று அணிவகுப்பு. அதன் பின்னர் காட்சிகள் தொடங்கும்.  




குதிரைகள் ஓடுதல், தடைகளை தாண்டுதல், குதிரைவீரர்கள் சாகசம் ; பெரிய பெரிய கிளிகளின் ( பலூனை துப்பாக்கியால் சுடுதல் போன்ற) சாகசங்கள் நடைபெறும். சர்க்கஸ் ரிங் மாஸ்டர் சிங்கம், புலிகளை நாற்காலியில் உட்கார வைப்பார். சிங்கத்தின் ஆவென்று திறந்த வாயில் ஒருவர் தலையை வைத்து எடுப்பார். கரடி சைக்கிள் ஓட்டும். பெரும்பாலும் துஷ்ட மிருகங்கள் காட்சிகளின்போது பாதுகாப்பிற்காக இரும்பு வேலியை வட்டமாக அகலமாக அமைத்து விடுவார்கள். யானைகள் சாகசத்தின் போது அவைகள் நாற்காலியில் உட்காரும், பந்து விளையாடும் , ஒரு பயில்வான் வயிற்றின் மீது இருக்கும் பலகையில் ஏறி நடக்கும் முதலான காட்சிகள் நடைபெறும். இடையிடையே சர்க்கஸ் கோமாளிகள், சித்திரக் குள்ளர்கள் சிரிப்பு மூட்டுவார்கள்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பாரில் தொங்குதல், ஊஞ்சலில் ஆடுதல் உடம்பை வில்லாய் வளைத்தல், கத்தியை விழுங்குதல், ஒருவரை நிற்க வைத்து ஒருவர் அவரைச் சுற்றி கத்தியை வீசுதல் நடைபெறும். மரணக்கூண்டு எனப்படும் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்வார்கள்.

சில நினைவுகள்:

சிறுவயதில் கார்லோ கல்லோடி (Carlo Callodi)  எழுதிய பினாச்சியோ ( Pinocchio ) ஒரு மரப்பாவையின் கதை என்ற நூலை தமிழில் படித்து இருக்கிறேன். அதில் வரும் சர்க்கஸ் சம்பவங்கள் மறக்க முடியாதவை. எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நடித்த “ பறக்கும் பாவை “ என்ற படம் முழுக்க முழுக்க சர்க்கஸ் கலைஞர்கள் கதைதான். நாகேஷ் செய்யும் காமெடி வயிறு குலுங்க வைக்கும். அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சர்க்கஸ் கோமாளியாக குள்ளக் கமல் வேடத்தில் ( தந்திரக் காட்சி) நடித்துள்ளார்

( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )



குலமகள் ராதை என்று ஒரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது. அதில் சர்க்கஸ் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒரு பாடல். கருத்தாழம் மிக்க பாடல். இதோ ..... ...

இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று (2)
 

அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று (2)    (இரவுக்கு)

கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று (2)
 

பெண்மையின் பார்வை ஒரு கோடி
அவை பேசிடும் வார்த்தை பல கோடி (2)  (இரவுக்கு)

அங்கும் இங்கும் அலைபோலே
தினம் ஆடிடும் மானிட வாழ்விலே (2)
 

எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரரிவார் (2)    (இரவுக்கு)

-         பாடல்: கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)














Tuesday, 21 August 2012

எனக்குக் கிடைத்த “FABULOUS BLOG RIBBON AWARD “

சென்ற பதிவில் (வை.கோபாலகிருஷ்ணன்) திரு VGK அவர்கள் எனக்கு வலைப்பதிவருக்கான லிப்ஸ்டர் விருதினை (LIEBSTAR AWARD) தந்தபோது எனக்கு எழுதுவதற்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டது “ என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு மறுமொழி சொன்ன திரு VGK  ஆஹா! அந்தக் கவலையே தங்களுக்கு வேண்டாம். வெகு விரைவில் என்னிடமிருந்து தங்களுக்கு மேலும் ஓர் விருது கிடைக்க உள்ளது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் வந்து சேரும் .என்று சொன்னார். சொன்னது போலவே “FABULOUS BLOG RIBBON AWARD “ என்ற இந்த விருதினை எனக்கு (நாள்:16.08.12) அளித்துள்ளார்.http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html இந்த விருதினை அவருக்கு தந்தவர் திருமதி லதா அவர்கள்.http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html இருவருக்கும் நன்றி!


விருதின் விதிகள்:

வழக்கம் போல இந்த “FABULOUS BLOG RIBBON AWARD “ விருதிலும் சில விதிகள். அவையும் ஐந்து மட்டுமே!

1.இந்த விருதினை தந்த வலைப் பதிவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவரது பதிவிலும் இணைந்து கொள்ள வேண்டும்.

2.உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நிகழ்ந்த நம்பமுடியாத ( கதைகளில் வருவது போன்று ) நிகழ்ச்சிகள் ஐந்தினைத் தெரிவிக்க வேண்டும்.

3.நீங்கள் நேசிக்கும் ஐந்து - பற்றி தெரிவிக்க வேண்டும்.

4.நீங்கள் விரும்பாத ஐந்து - பற்றி தெரிவிக்க வேண்டும்

5.இந்த விருதினை தெரிந்தெடுத்த ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும்.

எனது வாழ்க்கையில் (கதைகளில் வருவது போன்று ) நிகழ்ந்த நம்பமுடியாத நிகழ்ச்சி:

எனது வாழ்வில் நடந்த, கதைகளில் வருவது போன்ற நம்ப முடியாத நிகழ்ச்சி ஒன்று. அப்போதுதான் ( இரண்டு ஆண்டுகளுக்கு முன்) எனக்கு மிகு இரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் சொல்லி மருந்து கொடுத்து இருந்தார். அடுத்தநாள் வெளி வேலைகள் காரணமாக மருந்து சாப்பிடாமல் படுத்து விட்டேன்.  அன்று இரவு எனக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது.. வீட்டில் எல்லோரையும் எழுப்பி விட்டேன். நான் ஏதேதோ பேசுகிறேன் சிறிது நேரத்தில் எனது உடலை விட்டு நான் வெளியேறுகிறேன். மேலே பறப்பது போல் இருக்கிறது.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு நிலை. கீழே எனது உடலையும், சுற்றி இருப்பவர்களையும், சுற்றி இருக்கும் பொருட்களையும் நானே பார்க்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் எனது உடலுக்குள் நான் வந்து விட்டது போன்று உணர்வு. உடம்பு முழுக்க வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. சாப்பிட வேண்டிய மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகி விட்டது. அப்புறம் தூக்கம் வந்து விட்டது. இதைச் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இங்கும் யாரும் நம்ப மாட்டார்கள்.   

நான் விரும்பும் ஐந்து:

ஏற்கனவே நான் விரும்பும் பதினொன்றை லிப்ஸ்டர் விருதினை பெற்ற  போது எழுதிய பதிவில் சொல்லி விட்டேன்.எனவே மீண்டும் வரிசைப் படுத்தி  பட்டியல் போடவில்லை ( மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா? என்று வவ்வால் சார் கிசுகிசுப்பது காதில் கேட்கிறது)


நான் விரும்பாத ஐந்து:

சிறு துரும்பும் பல் குத்த உதவும்என்பார்கள். எனவே விரும்பாத ஒன்று என்று எதனையும் குறிப்பிட விரும்பவில்லை.


விருதினைப் பகிர்ந்தளித்தல்:

நமது VGK  அவர்கள் (வை.கோபாலகிருஷ்ணன்) கையில் ஒரு அட்சய பாத்திரம். வாசகர்களின் அன்பினால் கிடைத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தனக்கு கிடைத்த விருதுகளை மற்ற வலைப் பதிவர்களுக்கு அவர் பகிர்ந்து அளிக்கிறார். ஏற்கனவே நிறைய பேருக்கு அவர் வழங்கியுள்ளார். அண்மையில் கூட 108 பேருக்கு இரண்டு தடவை இரண்டு விருதுகளை பகிர்ந்துள்ளார். இந்த விருதினையும் 108 பேருக்கு அவரவர் ( Profile ) படங்களுடன் பகிர்ந்துள்ளார். வித்தியாசமாக இருந்தது. ஈதல் இசைபட வாழ்தல் குணம் கொண்ட திரு VGK (வை. கோபால கிருஷ்ணன்) அவர்களுக்கு மீண்டும் நன்றி! சங்க இலக்கியத்தில், செல்வத்துப் பயன் ஈதல் என்ற கருத்தினை வலியுறுத்தும் ஒரு பாடல்........



தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189


( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )





Friday, 17 August 2012

எனக்குக் கிடைத்த லிப்ஸ்டர் விருது (LIEBSTER AWARD)

அடுத்து என்ன தலைப்பில் எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரு. VGK அவர்கள்  (வை.கோபாலகிருஷ்ணன்) (http://gopu1949.blogspot.in ) இந்த லிப்ஸ்டர் விருதினை (LIEBSTER  AWARD) தந்துள்ளார்கள். ஆக எனக்கு எழுதுவதற்கும் ஒரு தலைப்பும் கிடைத்து விட்டது. இந்த விருதினை அவருக்குத் தந்தவர்  திருமதி. லீலா கோவிந்த்  அவர்கள். ( http://leelashobbies.blogspot.in) திரு VGK அவர்கள் தான் பெற்ற இந்த விருதினை  108 பேருக்கு இந்த சுதந்திர தினத்தில்  (15.08.12) பகிர்ந்து தந்துள்ளார். இருவருக்கும் நன்றி. விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! 

இந்த விருதினைப் பற்றி சில வார்த்தைகள்:

இந்த விருதின் தொடக்கம் ஜெர்மனி என்று மட்டும் தெரிகிறது. Liebster என்ற ஜெர்மன் சொல்லிற்கு அன்பான (Dearest) என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். யார் இந்த விருதினை தொடங்கி வைத்து வழங்கினார்கள் என்று கூகிள் (GOOGLE ) உதவியில் தேடியும் வரலாறு தெரியவில்லை. ஆங்கில மொழியிலும் விருதினைப் பெற்றவர்களின் நன்றிக் கட்டுரைகள்தான் உள்ளன.

 இந்த லிப்ஸ்டர் விருதினைப் பெற்றவர்  தன்னைப் பற்றிய பதினோரு விவரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் சில விதிகள்.

1. இந்த விருதினைத் தந்த வலைப் பதிவருக்கு தனது பதிவின் மூலம் நன்றி சொல்ல வேண்டும்.

2. இந்த விருதினத் தந்தவர் பதிவில் இணைய வேண்டும்.

3. இந்த விருதிற்கு கொடுக்கப்பட்ட அடையாளத்தினை தனது பதிவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

4. இந்த விருதினை (பின் தொடர்பவர்கள் 200 பேருக்கு குறைவாக உள்ள) ஐந்து வலைப் பதிவர்களுக்கு தர வேண்டும்.

5. இந்த விவரத்தினை விருது பெற்றவர்களுக்கு அவர்கள் பதிவிற்கு சென்று தெரியப் படுத்த வேண்டும்.

என்னைப் பற்றிய விவரங்கள் பதினொன்று :

ஏற்கனவே VERSATILE BLOGGER AWARD மற்றும் SUNSHINE BLOGGER AWARD  - விருதுகள் பெற்ற போது என்னைப் பற்றி சொன்ன விவரங்களில் எனக்குப் பிடித்த பத்து குறிப்பிட்டு இருந்தேன். (1.புத்தகம் படித்தல். 2.காபி (COFFEE ) 3.பழைய தமிழ் சினிமா பாடல்கள். 4.பயணம் செய்தல்  5.போட்டோகிராபி 6.கூகிள் ( GOOGLE ) 7.வலைப் பதிவு 8.எங்கள் வீட்டு நாய் ஜாக்கி 9.மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி. 10.பிடித்த திரைப்பட கதாநாயகன் எம்.ஜி.ஆர்)  எனவே 11 ஆவதாக குறிப்பிடுவது எனது வீட்டு நூலகம்.  அப்பா சேர்த்து வைத்து இருந்த புத்தகங்களோடு எனது சேகரிப்பும் நிறைந்தது. வெள்ளத்தில் போனவை, இரவல் கொடுத்து திரும்ப வாராமல் போனவை போக  மீதமுள்ள கவிதை, கட்டுரை, வரலாறு, மானிடவியல், உள்வியல், கதைகள், இலக்கியம் என்று பல துறையைச் சார்ந்த நிறைய நூல்கள். பெரும்பாலும் தமிழ் நூல்கள். 

எனது பகிர்ந்தளிப்பு:  

வலைப் பதிவில் விருதுகள் என்பவை வலைப் பதிவருக்கு  மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருபவை. சிலசமயம் ஒரே விருது, பலமுறை ஒரு பதிவருக்கு வெவ்வேறு பதிவர்களால் வழங்கப்பட்டுவிடும். அதிக ஆர்வம்தான் இதற்கு காரணம்.விருதுகள் வழங்கும் அளவுக்கு நான் பெரிய ஆளோ அல்லது பெரிய வலைப் பதிவரோ கிடையாது. எனக்கு வலைப் பதிவில் அறிமுகமான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1..திரு.காளிதாஸ் முருகையா தொடுவானம்
தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரர். கவிதை, கட்டுரைகளை தனது வலைப் பதிவில் தருபவர்.

2. தோழன் மபா தமிழன் வீதி http://tamilanveethi.blogspot.in
நூல் விமர்சனம் முதல் சமுதாயக் க்ண்ணோட்டம் வரை பல் வேறு தலைப்புகளில் மனதில் பட்டதை எழுதி வருகிறார்.

3.திரு கோவி முரண்சுவை http://muransuvai.blogspot.in
கோவைக்காரர். கல்வித்துறை. அனுபவங்களையும், தகவல்களையும் அள்ளித் தருகிறார்.

4.வல்லத்தான் - http://duraigowtham.blogspot.in
தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள வல்லம் என்ற ஊர்க்காரர். சினிமா, அரசியல், சொந்த மண் பெருமை என்று வலைப் பூவில் வலம் வருகிறார்.

5.திரு த.மணிகண்டன் மதன்மணி அன்பைத் தேடி
ஈரோட்டுக்காரர். தமிழ் இலக்கிய மாணவன். தனது வலைப்பூவில் தமிழ் இலக்கிய மணம் கமழ எழுதுகிறார்.  கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி.திருச்செங்கோடு .நாமக்கல் மாவட்டம்2009-2012 பாரதியார் பல்கலைக்கழகம் கோவை 2012-2014 

நன்றி! எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்!












Monday, 13 August 2012

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.

தமிழ் நாட்டில் திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் ஆடி மாதம் முழுக்க பக்தர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் சமயபுரத்தைச் சுற்றியுள்ள அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மன் பக்தர்கள் குழுவாக அவர்கள் ஊரிலிருந்து நடைப் பயணமாக மஞ்சள் ஆடை அணிந்து (சிறுவர்கள் உட்பட) சமயபுரம் கோயிலுக்கு வருவார்கள். அதுசமயம் வழியெங்கும் பக்தர்களுக்கு பன், டீ, தண்ணீர் பாக்கெட், நீர்மோர், அன்னதானம் என்று சில பக்தர்கள் தர்ம சிந்தனையில் வழங்குவார்கள்.

திருச்சி நகரப் பகுதியில் உள்ள கிளைகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் சிலர் நண்பர்களுடன் இணைந்து கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆவணி மாதத்தில் ஒருநாள் இந்த அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். முன்பு புளியோதரை பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. அதில் பல பக்தர்களால் வீணடிக்கப் படுவதால், சென்ற ஆண்டிலிருந்து புளியோதரைக்குப் பதில், ஒரு அட்டை தட்டில் வெண் பொங்கல் சுடச் சுட சாம்பாரோடு கொடுக்கப்பட்டது. மேலும் பன்னும், பாலும், தண்ணீர் பாக்கெட்டும் வழங்கப் பட்டன. காலை வேளை என்பதால் பசி உள்ளவர்கள் மட்டுமே இந்த வெண்பொங்கலை வாங்கி சாப்பிட்டார்கள். எதுவும் பக்தர்களால் வீணடிக்கப் படவில்லை. இந்த வருடம் இன்று (13.08.12) அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அங்கு நான் எடுத்த  புகைப்படங்கள் சில. (நான் ஸ்டேட் பாங்கிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து வருடங்களாக அந்த அன்னதான நண்பர்களோடு இணைந்துள்ளேன்) 

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நுழைவு வாயில்:


கோயிலின் முகப்பு (கிழக்கு) வாயில்:

 கோயிலின் தெற்கு வாயில்:

 

அன்னதானம் நடந்த இடம்:


 அன்னதான காட்சிகள்: 





 



கோயில் திருமண மண்டபத்தில் உள்ள தேர்:










































Friday, 10 August 2012

விடைபெறும் பதிவர்கள்


ஆரம்பத்தில் முதன் முதலாக வலைப் பக்கங்களை நான் எட்டிப் பார்த்த போது எழுதிக் கொண்டு இருந்த பல பதிவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வலைப் பக்கங்களை எழுத ஆரம்பித்தவுடன் ஒரு உத்வேகம் காரணமாக எழுதுவதில் ஒரு விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். முதன் முதல் வலைப் பதிவை எழுதி அதனை தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் இணைத்து வெளிவந்தவுடன் ஏற்பட்ட, அந்த பரவசம் நாளடைவில் குறைந்து விடுகிறது. ஒரு பத்திரிகைக்கு நமது படைப்புகளை (புனை பெயரில் எழுதினால் கூட) கிடைக்கும் அங்கீகாரம் அல்லது எழுத்தாளன் என்ற பெயர் வலைப் பதிவுகளைப் போடுவதால் கிடைப்பதில்லை.. இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதிக் கொண்டே இருப்பது என்று சிலர் சலிப்படைந்து இருக்கலாம் சிலர் அவர்கள் வீட்டில் ஏச்சுக்கு கூட ஆளாகி இருக்கலாம். அதிலும் முகமூடி அணிந்த பதிவர்களுக்கு இதைவிட சலிப்பு அதிகமாக இருக்கலாம்.

சொல்லாமல் சென்றவர்கள்:

இணைய குசும்பன், இந்துராணி கருணாகரன் (கமகம), இராதா கிருஷ்ணன் (நினைவோடை), உதயகுமார் (பாலக்கரை பாலனின் பால்ய பார்வை), அலெக்ஸ் பாண்டியன் (காவிரிக் கரையோரம்), கண்ணன் (அரட்டைக் கச்சேரி), குமரிமைந்தன் (குமரிமைந்தன் படைப்புக்கள்), தேசிகன் (தேசிகன் பக்கம்), பாலாஜி-பாரி (உருமி மேளம்), மாயவரத்தான் (ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது) என்று அப்போது பலர் பதிவுகளை எழுதி வந்தனர்.  எல்லோருடைய பெயர்களும் நினைவில் இல்லை. இதில் குமரி மைந்தன் என்பவர் 1984 இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) இப்போது அவருக்கு நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். எனவே இவர் இப்போது எழுதவில்லை என்று நினைக்கிறேன். மற்றவர்கள் facebook, twiter என்று பிற தளங்கள் பக்கம் போய்விட்டார்களா அல்லது  சொல்லாமல் எழுதுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனரா என்று தெரியவில்லை.   

விடை பெற்றுச் சென்றவர்கள்:

இன்னும் சிலர் விடை பெற்றுச் செல்கிறேன் என்று, குட் பை சொல்லி விட்டே சென்று விட்டனர். அப்படி சென்ற சிலர் மீண்டும் வந்து எழுதுகிறார்கள். இன்னும் சிலர் அப்போதைக்கு அப்போது எழுதுகின்றனர். நானும் இப்போதுதான் கடந்த ஓராண்டாக வலைப் பதிவை எழுதி வருகின்றேன். விடை சொல்லி விட்டு சென்றவர்களில் சிலர் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்.

அல்வா சிட்டி (போட்டுத் தாக்கு) என்ற பதிவில் விஜயகுமார் அவர்கள் 

//ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.//

என்று சொல்லுகிறார்.

ஆச்சி ஆச்சி ( http://aatchi.blogspot.in ) என்ற பதிவர் 2012 மார்ச்சு 14 ஆம் தேதி ஒரு பெரிய பதிவையே இதற்காகப் போட்டு விட்டார்.. 

// எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன். யோசித்து கொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன். //

இதில் அவர் வலைப் பதிவு எழுதுவதில் ஒரு பெண் என்ற முறையில் தனக்கிருந்த சூழ்நிலையை விளக்கி விட்டார்.

அண்மையில் திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் ஒரு கருத்தினை (மே மாதம்,2012 ) வெளியிட்டு இருந்தார். http://gopu1949.blogspot.in/2012 05 01 archive.html

// பகிர்ந்து கொள்ள ஆயிரக் கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக் கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நீங்கள் எல்லோரு்ம் எனக்குக் கொடுத்து வந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்  //

தற்பொழுது, பதிவுகள் எழுதா விட்டாலும் மற்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக VGK அவர்கள் கருத்துரைகள் தந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ்வாசி பிரகாஷ் ( www.tamilvasi.com ) என்ற பதிவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அவர் அண்மையில் விடை பெற்றார். ஜூன் 2012 இல் அவர் சொன்ன காரணம்.... ...

// நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்... //

திரும்பவும் வந்தவர்கள்:

சில பதிவர்கள் சில காரணங்களை முன்னிட்டு விடை பெற்றுச் சென்றாலும் மீண்டும் வந்து எழுதுகிறார்கள்.

எம்.ஏ. சுசீலா என்ற பதிவர் ( www.masusila.com ) மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியை பணி புரிந்தவர்.அவர் நல்ல பதிவுகளை தந்துள்ளார். அவர்  

//என் பயணம் முடிந்து 25.08.09 புது தில்லி திரும்பிய பின்னர் வலைப் பதிவுகளைத் தொடர்கிறேன்.  அதுவரை வலை வாசக அன்பர்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன். //
 
என்று சொன்னார். சொன்னது போலவே இப்போது  மீண்டும் வந்து எழுதுகிறார். பரிசல்காரன், உண்மைத் தமிழன், சேட்டைக்காரன் முதலானவ்ர்களும் மீண்டும் பதிவுலகம் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் இதில் சேட்டைக்காரன் ( http://settaikkaran.blogspot.in ) முன்பு சொன்ன வாசகங்கள் இவை. (. Sunday, June 13, 2010 )

// இப்போதைக்கு விடைபெறுகிறேன் வலையுலகம் சலித்து விட்டது! இறைவன் சித்தமும் எனக்கு விருப்பமுமிருந்தால் திரும்ப வருவேன் ஆதரித்த அனைவருக்கும் நன்றி! //

உதாரணத்திற்காக இங்கு ஒரு சிலரை மட்டுமே  குறிப்பிட்டேன். தமிழ் வலைப் பதிவாளர்கள்( TAMIL BLOGGERS LIST ) கணக்கைப் பார்த்தால் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பேரும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதாகத் தெரியவில்லை. ஆக சொந்தக் காரணங்களை முன்னிட்டே வலைப் பதிவு எழுதுவதிலிருந்து பெரும்பாலோனோர் நின்று விடுகின்றனர். யாரும் வலைப் பதிவை வெறுக்கவில்லை.

எழுதிச் செல்லும் விதியின்கை
     
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
     
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
     
வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
     
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
                  - கவிஞர் உமர் கய்யாம்


நண்பர்களே உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலிப்பு வரும் அளவுக்கு வலைப் பதிவிலேயே மூழ்கி அடிமை (addict) ஆகி விடாதீர்கள சொந்த வேலைகளையும் பாருங்கள். நண்பர்களோடும், மற்றவர்களோடும் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.  தினம் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். தங்களுக்கு வரும் விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள். தாங்கள் படித்து முடித்த பதிவுகளுக்கு மட்டுமே கருத்துரை தாருங்கள். படிக்காமலேயே  ஆகா!  ஓகோ! பேஷ்! பேஷ்! “ என்ற பாணியில் விமர்சனம் செய்யாதீர்கள். இப்போது ஆங்காங்கே வலைப் பதிவர்கள் சந்திப்பை நட்பு மனம் கொண்டவர்கள் நடத்துகிறார்கள். இந்த சந்திப்பினால் வலைப் பதிவர்கள் இன்னும் உற்சாகம் அடையலாம். எனவே எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள்.