(இன்று (29.01.2017 ஞாயிறு) வீதி
– கலை இலக்கிய அமைப்பின் 35 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில்
அமைந்து இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது
அந்த கூட்டத்தில் பேசுவதற்கு உதவியாக நான் எடுத்து வைத்து இருந்த எனது கட்டுரை இது)
.
கூட்டத்தின் தலைவர் T.சுதந்திரராஜன்
அவர்களுக்கும், அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன்
அவர்களுக்கும் புரவலர் கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
வணக்கம். ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் நேற்று
முன்தினம் இம்மாத வீதி இலக்கிய கூட்டத்தில் வரும் ஞாயிற்றுக்
கிழமை (29.01.2017) உங்கள் வலையுலக
அனுபவங்கள் என்ற தலைப்பில் பேச முடியுமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி,
அப்போதே எனது வலைத்தளம் சென்று குறிப்புகள்
எடுக்கத் தொடங்கி விட்டேன். வலையுலக அனுபவங்கள்
என்று எடுத்துக் கொண்டால், தொடர்ந்து எழுதும் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும்
என்பது எனது கருத்து.
வலைப்பூ தொடக்கம்
எங்கள் வீட்டில் 2005 இல் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் இணைப்பு
வாங்கியவுடன், தமிழ்மணம் போன்ற தமிழ் திரட்டிகளை படிக்கும் வாசகனாகவே இருந்தேன். பின்னர்
கருத்துரைகளை எழுதும் ஆர்வம் வந்தபோது, தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாது. எனவே
வலைப்பதிவில் ஞானவெட்டியான் என்னும் பெயரில் எழுதிவந்த திரு ஜெயச்சந்திரன் அவர்களிடம்
ஆலோசனை கேட்டேன். அவர் இகலப்பை (eKalappai) என்ற தமிழ் எழுதியைப் பற்றி சொன்னார். இவர்
நான் பணிபுரிந்த வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்தவர். இந்த இகலப்பை
உதவியால் வலைப்பதிவுகளில் Open ID மூலம் பின்னூட்டங்கள் எழுதி வந்தேன். பின்னர் நாமும்
ஒரு வலைப்பூ தொடங்கலாமே என்று யோசித்தபோது
வேர்ட் ப்ரெஸ்சிலா (Wordpress) அல்லது ப்ளாக்கரிலா (Blogger) என்று யோசித்தபோது,
எல்லோரும் அதிகம் பயன்படுத்தும் ஜிமெயில் வழியான ப்ளாக்கரைத் தேர்ந்தெடுத்து ’பூவரசம்
பூ’ என்ற வலைத்தளத்தை தொடங்கினேன். ஆனால் அதில் தமிழ்மணம் ஓட்டுபட்டைக்காக, HTML இல்
மாற்றம் செய்தபோது அந்த வலைத்தளமே காணாமல் போனது. எனவே சில மாதம் சென்று, எனது எண்ணங்கள் http://tthamizhelango.blogspot.com
என்ற இப்போதைய வலைத்தளத்தினை 19 செப்டம்பர் 2011 அன்று தொடங்கி எழுதி வருகிறேன். வலைப்பதிவர் திரு
Faizal
K.Mohamed அவர்கள் எழுதிய. ஒரு கட்டுரையைப் படித்த பின்பு
NHMWriter என்ற தமிழ் எழுதியையே இன்று எல்லா வகையிலும் பயன்படுத்தி வருகிறேன்.
என்ன எழுதுவது?
தொடக்கத்தில் இலக்கியம் சம்பந்தமான பதிவாகவே இருக்க வேண்டும் என்று
எழுதத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆரம்பகாலத்தில் என்னுடைய
பல பதிவுகளுக்கு பூஜ்யம்தான். இதனை ஆதங்கமாக வைத்து ஒரு பதிவு ஒன்றை (புதிய பதிவர்களே!
பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!) வெளியிட்டேன். http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html
அதில் அப்போது அடிக்கடி வலையுலகில் வலம் வந்த வவ்வால்
என்பவர்,
// சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு
ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது) இப்படி
மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும்
எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட்
ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) நான் கூட பேங்கில இருந்து வீஆரெஸ் வாங்கலாம்னு
பார்க்கிறேன், ஆனால் ஒரு பேங்கிலும் எனக்கு வேலைத்தரமாட்டேன்கிறாங்க :-)) //
என்று நகைச்சுவையாக பின்னூட்டம் எழுதி இருந்தார். அவரது பின்னூட்டம்
என்னை யோசிக்க வைத்தது. எனவே வலையுலகை ஒரு மீள்பார்வையாக பார்த்தேன். அப்போது வலையுலகில்
மதச் சண்டை, ஜாதிச் சண்டை என்று ஒருபோக்கு ஓடிக் கொண்டு இருந்தது. எனவே எந்த நீரோட்டத்திலும்
கலக்காது, அரசியல், அனுபவம், இலக்கியம், கவிதை, நூல் விமர்சனம், சினிமா, என பல்வேறு
தலைப்புகளில் எழுதத்தொடங்கினேன். குறிப்பாக சினிமா, அரசியல் என்று எனது பழைய அனுபவங்களோடு
நிகழ்கால சூழலையும் கலந்து எழுதியபோது எனது தளத்திற்கு நிறையபேர் வந்தார்கள். எந்த
ஒரு பதிவையும் நமது அனுபவத்தோடு, நம்பகத் தன்மையோடு, மற்றவர்களை காப்பி செய்யாமல் நமது
தனித் தன்மையோடு எழுதினால் வலையுலகில் நிச்சயம் வரவேற்பு உண்டு. நான் எனது தன்விவரத்தை
(PROFILE) வெளிப்படையாகவே வைத்துள்ளேன்..எந்த பொருளில் எழுதினாலும், பொதுவெளியில் இந்தப்
பதிவால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா என்பதனையும் யோசித்துக் கொள்வேன்.
விமர்சனங்கள்
(COMMENTS)
பல்வேறு தலைப்புகளில் எழுதினாலும் எனது தளத்திற்கு வந்து ஊக்கமளித்தவர்கள்
மட்டுமல்லாது எதிர்மறை கருத்து தெரிவித்தவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் என்று எல்லோரும்
உண்டு. பெரும்பாலும் அவைகள் எல்லாவற்றிற்கும் மறுமொழிகள் கொடுத்து விடுவேன். அதேபோல
அவர்களுடைய வலைத்தளங்கள் சென்று எனது கருத்துரையையும் எழுதுவேன். ஆனாலும் ஒருகட்டத்தில்
பெயரிலிகள் (Anonymous), முகமூடிகள், போலிகள் (Fake ID) என்று விதண்டாவாதம் செய்பவர்களின்
தொந்தரவுகள் அதிகமாக இருந்தது. எனவே எனது வலைத்தள Comments Settings சென்று, அதில்
இருந்த Anonymous தேர்வை நீக்கி விட்டேன். இருந்தாலும் சிலர் பேருக்கு ஒரு ஐடியை வைத்துக்
கொண்டு வருகிறார்கள் (அவர்கள் தன்விவரம் (PROFILE) சென்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது)
அவர்களால் பிரச்சினை ஏதும் இல்லாத வரை சரிதான்.
வலைப்பதிவர் சந்திப்பு:
நான் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்தது நமது
வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் மிகையாகாது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற
வலைப்பதிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்தது. இதன் பெருமை
புதுக்கோட்டை ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களையே
சேரும். அடுத்து மூத்த வலைப்பதிவர் வை.கோபாலகிருஷ்ணன்
அவர்களை முன்னிட்டு பல வலைப்பதிவர்கள் எனக்கு அறிமுகம் ஆனதோடு சிலரை பதிவர்கள்
சந்திப்பிலும் சந்திக்க முடிந்தது. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களும் எந்த ஊர் சென்றாலும், அந்த ஊர் வலைப்பதிவர்களைச்
சந்திப்பதில் ஆர்வம் உள்ளவர்.
இந்த அடிக்கடியான வலைப்பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான முக்கியமான
காரணம், அவரவர் எல்லையை உணர்ந்து , அவரவர் இடத்தில் இருந்து கொண்டு நட்பை தொடர்வதுதான்.
தொழில்நுட்ப அனுபவங்கள்:
வலைப்பதிவர் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சலும்
, வலைப்பதிவிற்காக இன்னொரு மின்னஞ்சலும் வைத்துக் கொள்வது நல்லது.
எனது வலைத்தளத்திற்கான எந்த தொழில்நுட்ப உதவி என்றாலும்,
Blogger இல் உள்ள Help பகுதிக்கு சென்று தேடுவேன். அல்லது Google சென்று ஆங்கிலம் தமிழ்
இரண்டிலும் தேடினால் நிச்சயம் தீர்வு கிடைத்துவிடும்.
ஒருமுறை ஏற்கனவே வெளிவந்த, ’எல்லோர் கையிலும் ‘ரிவால்வர்’ என்ற
பதிவினை எடிட் செய்யும்போது, DASHBOARD இல் ஏதோ ஒரு குழப்பத்தில் தவறுதலாக நீக்கி விட்டேன்.
பின்னர் Google's cache உதவியுடன் கண்டெடுத்து
மீண்டும் அப் பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிட்டேன்.
என்னால் ஏதேனும் முடியாத பட்சத்தில் திண்டுக்கல்
தனபாலன் அவர்களுக்கு போன் செய்து அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்து விடுவேன்.
நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எனது வலைப்பதிவில் Reply Button கிடையாது. ஏற்கனவே
சுட்டுக் கொண்ட அனுபவம் காரணமாக, நானாகவே HTML இல் மாற்றம் செய்ய எனக்கு பயம். எனவே
நான் என்னுடைய பாஸ் வேர்டை அவருக்கு அனுப்பி வைத்து மாற்றம் செய்து கொண்டேன். இப்போது
ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கீழே நான் மறுமொழிகள் எழுத எளிமையாக இருக்கிறது.