நான் பணிஓய்வு பெற்று விட்டேன். மனைவி மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.
இன்று ( 28.09.17 ) மாலை ஆயுதபூஜையை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் கொடுத்த பொரி, பொட்டுக்கடலை பையையும்
இன்னும் சிலவற்றையும் கொண்டு வந்தார். எனக்கு எனது பணிக்காலத்தில் நான் பணியாற்றிய
வங்கிக் கிளைகளில் நடைபெற்ற பூஜைநாட்கள் நினைவுக்கு வந்தன.
எல்லாம் முதல்நாளேதான்.
நாளைக்கு ஆயுதபூஜை என்றால், முதல்நாளே, அதாவது இன்றைக்கே பெரும்பாலும்
எல்லா அலுவலகங்களிலும் எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு அலுவலகத்தில்
பூஜை செய்து விடுகிறார்கள். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு சீனியரிடம் “ சார்
.. நாளைக்குத் தானே ஆயுதபூஜை. நாம் இன்றைக்கே அந்த பூஜையை செய்வது சரிதானா?” – என்று
கேட்டேன். அதற்கு அவர் “ நீ சொல்வது சரிதான் … ஆனால் நாளைக்கும் நாளை மறுநாளும் இரண்டு
நாள் ஆபிஸ் லீவு .. பூஜைக்காக யாரும் மெனக்கெட்டு வரமாட்டார்கள். அதனால் எல்லா ஆபிசிலும்
இன்று இப்படித்தான்” என்றார். இதற்கு சாத்திரத்தில் ஏதேனும் விதிவிலக்கு இருக்கிறதா
என்று நான் கேட்கவில்லை. வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்று ஓடிக் கொண்டு இருந்த நேரம்
அது. நானும் எல்லோருடனும் சேர்ந்து சாமியைக் கும்பிட்டு விட்டு, கொடுத்த கொண்டைக்கடலை,
பொரி, பழம் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ட்ரெயினுக்கு நேரம் ஆயிற்று என்று அன்றைக்கு
கிளம்பி விட்டேன்.
இதுவே நடைமுறை
ஆயுதபூஜை மட்டுமல்ல, அரசு அலுவலர்கள், அவரவர் அலுவலகங்களில் கொண்டாடும்
பொங்கல், தீபாவளி போன்ற எல்லா பண்டிகைகளிலும் இதே நடைமுறைதான். எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாக
இருந்தால் சரி. இதுவாவது பரவாயில்லை, முதலமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஒவ்வொரு
ஆண்டும் சில தினங்களில், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்று உறுதிமொழி எடுத்துக்
கொள்வார்கள். ஒருவேளை அந்த தினம் விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முதல்நாளே உறுதிமொழி
எடுத்துக் கொள்ளப்படும். நல்லவேளையாக இந்திய சுதந்திரதினத்தை அன்றைய தினத்தில் மட்டுமே
கொடியேற்றி கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரி, சரஸ்வதி பூஜை,
ஆயுதபூஜை
நவராத்திரிவிழா என்றாலே எங்கள் வங்கியில் அது பெண்கள் கொண்டாடும்
விழாவாக மாறி விடும். அதிலும் நான் வேலை பார்த்த இரண்டு கிளைகள், பெண் ஊழியர்கள் அதிகம்.
எல்லோரும் அந்த ஒருவாரம் பட்டு உடுத்திதான் வருவார்கள். இன்னும் சிலர் தங்கள் வீட்டு
குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். முதல்நாளே கொலு வைத்து விடுவார்கள். வேலை நேரம்
முடிந்ததும் கொலு வைத்துள்ள இடத்தில் பூஜை செய்து எல்லோருக்கும் அன்றைக்கு என்று விஷேசமாக
செய்யப்பட்ட கொண்டைக்கடலை அல்லது பொங்கல் என்று பிரசாதத்தை வழங்குவார்கள். இந்த பிரசாதத்தை
செய்யும் பொறுப்பை வெளியில், ஊழியர்களில் யாருக்கேனும் தெரிந்த ஒரு சமையல் மாஸ்டரிடம்
ஒப்படைத்து விடுவார்கள்.
ஆயுதபூஜைக்கு விடுமுறை என்பதால். முதல்நாளே நவராத்திரி நிறைவு விழா,
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்று ஒரேநாளில் முடிந்துவிடும். அன்று எல்லோருக்கும் பொரி
பொட்டுக்கடலை பொட்டலங்கள் மற்றும் தொன்னையில் வைக்கப்பட்ட மசாலாவுடன் கூடிய கொண்டைக்கடலையும்
வழங்கப்படும். எல்லாம் முடிந்தவுடன் அந்த கொலு பொம்மைகள் ஒரு கறுப்பு டிரங்கு பெட்டியில்
வைக்கப்பட்டு ஒரு மூலைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு விடும். இனிமேல் அது அடுத்த
ஆண்டுதான் திறக்கப்படும்.
மதச்சார்பற்ற
எனக்குத் தெரிந்து ரொம்பகாலமாக இந்த ஆயுதபூஜை என்பது மதச்சார்பற்ற
ஒன்றாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் பெரும்பாலும் மோட்டார் மெக்கானிக்குகள்,
ஆட்டோ ஓட்டுநர்கள், கார் டிரைவர்கள், ரெயில்வே ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என்று எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் இதில் மதவேறுபாடு
இல்லாது ஒன்றாகவே கொண்டாடுகிறார்கள். வருடா வருடம் ஒவ்வொரு கார் ஸ்டாண்டிலும் இன்னிசை
கச்சேரி நடக்கும். சென்ற ஆண்டு இதேநேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையை முன்னிட்டு இந்த கச்சேரி
கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டார்கள். இந்த ஆண்டு முதல் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.