நேற்று,
வீட்டிற்கு பேப்பர் போடும் தம்பி “சார், இந்து நவராத்திரி மலர் வாங்குவீர்களா? “
என்று தயங்கியபடியே கேட்டார். அவரது கையில் தி இந்து – நவராத்திரி மலர் – 2014. “சரிப்பா வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வாங்கினேன். தீபாவளி
மலர் அளவில் இருந்தது. விலை ரூ80/= (பக்கங்கள் 132).
வண்ணமும் வாசமும்:
ஆசிரியர்
கே.அசோகன் அவர்கள் ” செப்டம்பர் 16,2014 அன்றுடன் தி இந்து
தமிழ் நாளிதழ் தொடங்கி , வாசகர்களாகிய உங்களின் நல்லாதரவோடு ஓராண்டைப் பூர்த்தி
செய்யும் நிறைவோடு வாசம் மிக்க இந்தமலரை சமர்ப்பிப்பதில் உவகை அடைகிறோம் “ என்று
முன்னுரை படிக்கிறார்.
ஓவியர் சிவா
வரைந்த பிள்ளையார் படத்துடனும், தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் சொன்ன
அருள்வாக்கோடும் மலர் துவங்குகிறது. தீபாவளி மலர் போன்று நிறைய வண்ணப் படங்கள்,
கட்டுரைகள், அனுபவம், சிறுகதை என்று இந்த நவராத்திரி மலர் விரிகின்றது.
நவராத்திரி
சிறப்புக்கள்:
புராணங்களில்
சொல்லப்பட்ட விளக்கம் மற்றும் சோழர் காலம் முதல் மராட்டியர் காலம் வரை நவராத்திரி
விழா கொண்டாடப் பட்ட வரலாற்றைச் சொல்லுகிறார் (கலையின் நாயகிக்கு ஒரு விழா)
அ.கா.பெருமாள்.
இந்த நவராத்திரி மலரில்
என்.ராஜேஸ்வரி அவர்களின் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன என்பது தனிச் சிறப்பு.
கூடவே வண்ணப்படங்கள். ” ஒவ்வொரு நாளும் கொண்டாடும் முறைகள்” பற்றி
குறிப்பிடும் அவர் இந்த மலரின் இறுதியில் கொலு வைக்கப்படும் ஒவ்வொரு படிக்கும்
ஒவ்வொரு தத்துவம் உண்டு என்கிறார்.
(படம் மேலே) “கொலு உருவான கதை”யில் கொலுவில் சுண்டல் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது
என்பதற்கு, வட இந்திய கிராமப்புறங்களில் சொல்லப்படும் அனுசூயா கதையை அழகாகச்
சொல்லுகிறார்
கொலு வைத்தல்:
மதுரையில்
மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி வைபவங்கள் பற்றி சொல்லுகிறார் கே.கே
மகேஷ். நம் ஊர் தசரா போன்று வேறு பல நாடுகளில் நடக்கும் கொண்டாட்டத்தை ” தரணி எங்கும் தசரா” வில் (ஸ்ரீஜா வெங்கடேஷ்) காணலாம். இன்னும் சாரி எழுதிய
“பன்னிரு நவராத்திரிகள்”,
கா.சு.வேலாயுதன் எழுதிய “கோவையின் தசரா கோலங்கள்” ஆகியன.
குள.சண்முகசுந்தரம்
எழுதும் நாட்டார் வரிசைக் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இந்த மலரில் மெச்சி
ஆச்சி வீட்டு கொலுவைப் பற்றி சொல்லுகிறார். மைசூர் தசரா போன்று ராமநாதபுரம்
அரண்மனை வளாகத்தில் கொண்டாடப்படும் தசரா பற்றிய விவரத்தினைத் தருகிறார் ராமேசுவரம்
ராஃபி. நவராத்திரிக்கு ஏற்ற ஒவ்வொரு
நாளும் ப்டைக்கப்படும் சுண்டல் போன்ற நிவேதனங்கள் பற்றி சொல்லுகிறார்
விருகம்பாக்கம் மீனலோசனி. இன்னும், கொலு
பொம்மைகள் தங்களுக்குள் பேசினால் எனன பேசும் என்று கற்பனை செய்து பார்க்கிறார்
தேனுகா.
வேறு கட்டுரைகள்:
இடையிடையே வேறு சில
கட்டுரைகள். ஒரு வரவேற்பறை எப்படி அமைய வேண்டும் என்பதனை விளக்குகிறார் குமார். நடனமாடும்
வீடு ஒன்றைப் பற்றிச் சொல்லுகிறார் ம.சுசித்ரா. ரசிகமணி டி.கே.சி யின் “ என்னைக்
கவர்ந்த புஸ்தகங்கள் “ என்ற மறுவாசிப்பு கட்டுரை இலக்கிய வாசகர்களை மனம்
குளிரச் செய்யும். நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடுவது குறித்து பேசுகிறார்
ரவிசுப்பிரமணியன். சென்னையில் ” நடக்க
இடம் உண்டா?” என்று அங்காலாய்த்துக் கொள்கிறார் ஆசை என்ற
புனைபெயர்க்காரர்.
தி இந்துவின் இந்த நவராத்திரி மலரின் வண்ணமும் வாசமும் வரப்போகும் தீபாவளி மலருக்கான முன்னோட்டம் எனலாம். வாங்கி படியுங்கள்!
அனைவருக்கும் எனது
உளங்கனிந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!
( நன்றி: தி இந்து
- மேலே உள்ள படங்கள் அனைத்தும் தி இந்து – நவராத்திரி மலர் – 2014 புத்தகத்திலிருந்து CANON POWER SHOT A800 கேமரா மூலம் காப்பி செய்யப்பட்டு எடிட் செய்யப்
பெற்றவை. )