நான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நான் படித்த பள்ளி திருச்சி நகருக்கு மத்தியிலும் மலைக் கோட்டைக்கு அருகாமையிலும் உள்ளது. அக்கம் பக்கம், குறிப்பாக மலைக் கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த பள்ளியில் அதிகம் படித்தனர். அவர்களில் சிலர் எனது வகுப்பு நண்பர்கள் ஆனார்கள். அவர்களோடு மதியம் சாப்பாட்டு இடைவேளையின் போதோ அல்லது ஆசிரியர் வராத வகுப்புகளிலோ அரட்டை நடக்கும். அப்போது அவர்கள் மலைக் கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரகசிய சுரங்க வழிகளைப் பற்றியும், மலைக் கோட்டையில் இருக்கும் குகைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாக சொல்வார்கள். அதேபோல் மலைக் கோட்டையின் வடக்குப் பக்கத்தில் வெளிப் புறத்தினை ஒட்டிய நீண்ட இடுக்கின் வழியே சென்றால் கடைசியில் ஒரு குகை இருப்பதாகவும் அங்கு விபீஷணர் பாதம் இருப்பதாகவும் அங்கு செல்ல குனிந்து கொண்டே செல்ல வேண்டும் என்றும் ஆவலைத் தூண்டினார்கள். மேலும் நாங்கள் படிக்கும் பள்ளியின் மைதானத்திலிருந்து அந்த இடத்தைப் பார்க்கும் போது எப்போதாவது சிலர் குனிந்து கொண்டே அந்த இடுக்கில் செல்வது தெரியும்.
அப்போதெல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றி கீழேயுள்ள இடங்களில் வெட்ட வெளி இடங்களும், நீட்டிக் கொண்டு இருக்கும் பாறைகளும் , சின்னச் சின்ன பள்ளங்களும், ஒன்றிரண்டு பெரிய பள்ளங்களும் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வளர்க்கும் ஆடுகள் திரிந்து கொண்டு இருக்கும். இப்போது அந்த இடங்களை தூர்த்து ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள்.
ஒரு நாள் நண்பர்களுடன் அந்த இடங்களைப் பார்க்க முடிவாயிற்று. வீட்டில் சொன்னால் விட மாட்டார்கள். எனவே நண்பனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு மலைக்கோட்டை உள்வீதியில் இருந்த நண்பனைப் பார்க்க நானும் இன்னொரு நண்பனும் சென்றோம். அங்கிருந்து மலக்கோட்டையின் மேற்குப் புறம் பளீரென்று பாறை தெரியும் பகுதியில் ஏறி விளையாடினோம்.. அங்கு பொம்மக்கா எனப்படும் சிறு செடிகளும் பொன்வண்டு எனப்படும் பச்சை நிற வண்டுகளும் அதிகம் இருந்தன. அங்கிருந்து தெப்பக் குளத்தினையும் கிறிஸ்தவ தேவாலயத்தையும் கண்டு ரசித்தோம். அதன் பிறகு கீழே இறங்கி மலைக் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள ஒரு இடத்தின் பெயர் சறுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ப இருந்தது அந்த இடம். அங்கு விளையாடியபோது கீழே ஒரு பெரிய பள்ளம். நல்லவேளை அதற்குள் விழுந்து விடவில்லை. எனது நண்பன் அங்கிருந்து மேலே பாறை இடுக்கில் ஒரு ஆள் குனிந்து கொண்டே செல்லும் ஒரு வழியைக் காட்டினான். அங்கு செல்வதற்கு உச்சிப் பிள்ளையார் கோயில் வந்து கீழே இறங்க வேண்டும் என்று சொன்னான். அவனும் இதுவரை அங்கு சென்றதில்லை. அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் எங்களை அதட்டி அந்தப் பக்கம் எல்லாம் போகக் கூடாது என்று விரட்டி விட்டார். இன்னோரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று பிரிந்தோம்.
அதற்குள் எங்கள் வீட்டில் நான் ரொம்ப நேரம் இல்லாததால் தேடி இருக்கிறார்கள். நான் வந்ததும் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. நான் சும்மா இருக்காமல் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த சித்தப்பா வீட்டில் நான் சென்று வந்த விவரங்களை உளறி விட்டேன். அவர்கள் மூலம் இதனைக் கேட்ட என் அம்மா ரொம்பவும் பதறிப் போனார். என் அப்பா என்னைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லியதோடு அந்த இடத்தைப் பற்றிய அவரது அனுபவத்தினையும் சொன்னார். அவர் லால்குடி பள்ளியில் படிக்கும்போது நண்பர்கள் இருவரோடு மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் சென்று அங்கிருந்து கீழே இறங்கி ( அப்போது சுற்றுச் சுவர் கிடையாது ) அந்த நீண்ட இடுக்கின் வழியே செருப்பில்லாமல் குனிந்து கொண்டே சென்றனர். கடைசிவரை ( உச்சிப் பிள்ளையார் கீழ்புறம் ) சென்று விபீஷணர் பாதம் கண்டு வந்தனர். திரும்ப வரும்போது அனுபவம் இல்லாத படியினாலும் பயத்தின் காரணமாகவும் என் அப்பாவிற்கு கால் பாதங்கள் வேர்க்கத் தொடங்கி விட்டன. மேலும் பாறையும் வழுக்கத் தொடங்கி விட்டது. எப்படியோ மலையிலிருந்து கீழே விழாமல் திரும்ப வந்து சேர்ந்து விட்டார்.
என் அப்பா சொன்னதைக் கேட்டு நானும் அப்புறம் அங்கு செல்லவே இல்லை.. இப்போது அந்த இடத்திற்கு யாரும் செல்வதாகத் தெரியவில்லை. இப்போதும் நீங்கள் திருச்சி மலைக் கோட்டையின் வடக்குப் பக்கத்தை எங்கிருந்து பார்த்தாலும் விபீஷணர் பாதம் இருக்கும் குகைக்குச் செல்லும், நீளமான அந்த இடுக்கு வழியைப் பார்க்கலாம்.
விபீஷணர் பாதம் வரலாறு:
இலங்கை போருக்குப் பின்னர் ராமனுக்கு பட்டாபிசேகம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு திரும்பும் விபீஷணனுக்கு ராமன் தன் நினைவாக ஸ்ரீரங்கநாதர் சிலையை பரிசாகத் தருகிறான். எடுத்துச் செல்லும்போது கீழே எங்கும் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் சொல்கிறான். ஆகாய மார்க்கமாக வரும் விபீஷணன், வழியில் சோலைகளோடு கூடிய காவிரியைக் கண்டு நீராட விரும்புகிறான். கீழே இறங்கி சிலையை தரையில் வைக்கக் கூடாதே என்று எண்ணும்போது அங்கே சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையை வைத்திருக்கச் சொல்லிவிட்டு காவிரியில் நீராடுகிறான். சிறுவன் சிறிது நேரம் அந்த சிலையை கைகளில் வைத்திருந்து விட்டு தரையில் வைத்து விடுகிறான். காவிரியில் நீராடி முடித்த விபீஷணன் தரையில் வைக்கப் பட்ட சிலையை எடுக்கும் போது எடுக்க முடியவில்லை. தரையோடு ஒட்டிக் கொண்ட அந்த சிலையை பெயர்த்தெடுக்கவும் முடியவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் அந்த சிறுவனை அடிக்க முற்படும்போது அவன் ஓடிப் போய் அருகிலுள்ள மலையின் (திருச்சி மலைக்கோட்டை) உச்சியில் உட்கார்ந்து கொள்கிறான். விபீஷணன் துரத்திச் சென்று சிறுவன் தலையில் குட்டுகிறான். சிறுவன் மலை உச்சியில் அமர்ந்த இடம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும், விபீஷணன் அவர் தலையில் குட்டும்போது நின்ற இடத்தில் உருவான பாதம் இரண்டும் “ விபீஷணர் பாதம் “ என்றும் அழைக்கப் பெற்றது. உச்சிப் பிள்ளையாருக்கு இதனால் தலையில் பள்ளம் ஏற்பட்டது. காவிரியில் சோலைகள் நடுவே வைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதர் சிலை இருந்த இடம் ஸ்ரீரங்கம் ஆயிற்று.
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் .
( PHOTOS THANKS TO “ GOOGLE ” )