அண்மையில் ஒரு டீவி சானலில் ஒரு தீவிர மதக் கட்சிக்காரார் ஒருவர்
பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார். நிகழ்ச்சியை நடத்தியவர் கேள்விகள் கேட்க, அவர்
பதில்கள் தர என்று சென்றது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அந்த கட்சிக்காரின் நோக்கம்,
ஒரு குறிப்பிட்ட மதத்தவரை சீண்டுவதிலும், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதனாலேயே மனம்
புண்பட்டுக் கிடப்பது போலவும் பேசினார். இத்தனை வருடங்களாக அவர் எங்கிருந்தார் என்று
தெரியவில்லை. ( இங்கு ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்தவர்களெல்லாம் மேனாட்டுக்குப் போய்
அந்த கறியை சாப்பிடுவது பற்றியும் அவர் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.)
பேட்டி முடிந்ததும் எனக்கு, பழைய சில நிகழ்வுகள் இன்றைய சூழலோடு நினைவுக்கு வந்தன.
வெளியில் சொல்லாதீர்கள்
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது. அந்த ஏரியா முழுக்க தனியார் மருத்துவமனைகளும்,
தனியார் நிறுவனங்களும் அதிகம். வெளியில் சாப்பிடும், கம்பெனி பிரதிநிதிகளையும் அதிகம்
காணலாம். அதற்கேற்ப அந்த ஏரியாவில் சைவ-அசைவ ஹோட்டல்களும், மெஸ்ஸுகளும் அதிகம். ஒருமுறை
அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஒருவரைப் பார்க்கப்
போயிருந்தேன். அப்போது வழியில், ஒரு பழைய நண்பரை டிவிஎஸ் மொபெட்டில் பார்க்க நேர்ந்தது. பொதுத்துறை ஒன்றில் தற்காலிக பகுதிநேர கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் இவர். வண்டியின்
பின்புறம் ஒரு பெரிய மரப்பெட்டி. அது ஒரு பெரிய சாக்கினால் இழுத்து மூடி கட்டப்பட்டு
இருந்தது. ரொம்பநாள் கழித்து அவரைச் சந்தித்ததால், வழக்கம் போல நலன் விசாரித்தேன்.
இப்போதும் அதே வேலையைச் செய்வதாகவும், வருமானம் போதாததால், இந்தப் பகுதியில் இருக்கும்
அசைவ உணவு விடுதிகளுக்கு தானும் இன்னும் சிலரும் மாட்டுக்கறி சப்ளை செய்வதாகவும், சில
இடங்களில் அங்கேயே மாட்டுகறியை ஆட்டுக்கறி
போல சின்னச் சின்ன துண்டுகளாக போடும் வேலையையும் செய்வதாகச் சொன்னார். ”வெளியில் சொல்லி
விடாதீர்கள், சார்” என்று எனக்கு அன்பு கட்டளை வேறு. எனக்கோ ஒரே ஆச்சரியம். ஏனெனில்
அவர் சொன்ன உணவு விடுதிகளில்தான் மக்கள், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி, மட்டன்
வறுவல் என்று ஆசையாக வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆக அவலை நினைத்துக்
கொண்டு வெறும் வாயை மெல்லுவது போல, ஆட்டுக்கறியை ( மட்டனை ) சாப்பிடுவதாக நினைத்துக்
கொண்டு எல்லோரும் மாட்டுக்கறியை ( பீப் ) வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
பெரிய ஆட்டுக்கறி
அப்போதெல்லாம் (இப்போதும்தான்) மாட்டுக்கறியை பெரிய ஆட்டுக்கறி
என்றுதான் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். (இப்போது பீப் என்று அடையாளம் செய்கிறார்கள்)
கடைகளில் அசைவம் சாப்பிடவே யோசிப்பார்கள். காரணம் கலந்து விடுவார்கள் என்ற பயம்தான்.
கலத்தல் என்றால் மாட்டுக்கறியை சின்ன சின்ன துண்டுகளாக்கி ஒருமுறை வேகவைத்து, மறுபடியும்
ஆட்டுக் கறியோடு கலந்து வேகவைத்து சமைப்பது ஹோட்டல்காரர்களைக் கேட்டால் ஆட்டுகறி விற்கும்
விலையில், நமக்கு கட்டுப்படி ஆகாது சார் என்கிறார்கள். நம்ப பாய் வீட்டுக் கல்யாணம்,
கச்சேரி , விசேஷம் என்றால் அங்கு மட்டன் பிரியாணிதான். ஆனால் எங்கே கலந்து விடுவார்களோ
என்ற பயத்தில், ஒரு காளிமார்க் கலரை அல்லது சோடாவை மட்டும் சாப்பிட்டுவிட்டு , மொய்
செய்துவிட்டு வந்தவர்களும் உண்டு. இப்போது அப்படி இல்லை. பிரியாணி என்றால் நிறையபேர்
மறுப்பதில்லை. ( நான் சைவம்; மீன் மட்டும் சாப்பிடுவேன் என்றால்
யாரும் சிரிக்கக் கூடாது )
தள்ளுவண்டி வியாபாரம்
இது ஒரு பக்கம் என்றால், எல்லா ஊர்களிலும் இருக்கும் பழைய, புதிய
பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் சாராயக் கடைகள் பக்கம், பீப் பிரியாணி, பீப்
வறுவல், பீப் பகோடா என்று வெளிப்படையாக போர்டு போட்டுக் கொண்டு, இரவு நேரத்தில் வெள்ளை நிற பல்புகள் ஜொலிக்க , தள்ளுவண்டிகளில் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பக்கம்
சாலையைக் கடந்தாலே ஒரே மசாலா நெடி எனக்கு குமட்டுகிறது. அங்கு நின்று கொண்டு வாங்கி
சாப்பிடுவர்களை இன்ன ஜாதி, இன்ன மதம் என்று அடையாளம் சொல்ல முடியாது. நல்ல கும்பல். அந்த தள்ளு
வண்டிக்காரர்கள், மற்ற கடைக்காரர்களைப் போலவே கொடுக்க வேண்டிய மாமூலை கொடுத்து விடுகிறார்கள்;
கூடவே இலவசமாக ஒரு பொட்டலமும் உண்டு. அப்புறம் என்ன? எந்த கட்சிக்காரன் வந்து தடுக்கப்
போகிறான்?
அதெல்லாம் சரி! நகர்ப்புறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரோட்டில்
மாடுகளை மேய விட்டு விடுகிறார்களே அவர்களை ஏன் யாரும் தண்டிப்பதில்லை? போக்குவரத்திற்கு
இடைஞ்சலான மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் பட்டியில் அடைப்பதில்லை? இவ்வாறாக அலையும்
மாடுகளில் சில, தினமும் காலையில் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் வந்துவிடுகின்றன.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒரு மாடு யாராவது , எதையாவது தின்ன தர மாட்டார்களா என்று
நின்றுவிடும். கொடுத்தால்தான் வாசலைவிட்டு நகரும்.