நேற்று முன்தினம் (21.04.16) மாலை, எப்போதும் போல், கணினித் தமிழ்ச்
சங்கத்தின் வாட்ஸ்அப் (Whatsapp) செய்திகளைப் பார்க்கலாம், என்று எனது செல்போனைத் திறந்த
போது ஒரு அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது.
// அன்புக் கவிஞர் வைகறை காலமாகி விட்டார்… //
தகவலைத் தந்தவர் கவிஞர் மீரா செல்வகுமார்.. அவரைத் தொடர்ந்து நண்பர்கள்
பலரும் வாட்ஸ்அப்பில், கவிஞருக்கான தங்களது இரங்கலை பதிவு செய்து இருந்தனர். நான்,
// அதிர்ச்சியான செய்தி. நம்ப முடியவில்லை. அந்த சிரித்த முகத்தை
என்னால் மறக்க இயலாது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கவிஞர் வைகறையின்
ஆன்மா அமைதி பெறட்டும் – கண்ணீருடன் தி.தமிழ் இளங்கோ //
என்று, எனது கண்ணீர் அஞ்சலியைப் பதிவு செய்தேன்.
நல்லடக்கம்:
அவரது சொந்த ஊரான அடைக்கலாபுரத்தில் (தூத்துக்குடி தாண்டி ஆறுமுகநேரி
அருகில்) வெள்ளிக்கிழமை (22.04.16) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் நடைபெறும், புதுக்கோட்டை
நண்பர்கள் காலை 7 மணிக்கு ஒரு வேனில் புறப்பட இருப்பதாக தகவல் தந்தார்கள். அவர்களோடு
செல்ல எனக்கு சாத்தியப் படாததால், நான் மட்டும் திருச்சியிலிருந்து (காலை 7 மணிக்கு
புறப்பட்டு) பஸ்சில் மதுரைக்கு சென்றேன்; மதுரையிலிருந்து, தூத்துக்குடி வழியாக மதியம்
2.45க்கு அடைக்கலாபுரம் சென்று சேர்ந்தேன். புதுக்கோட்டை நண்பர்கள் எனக்கு முன்னதாக
வந்து சென்று விட்டனர். ஊரினுள் நுழைந்ததும் கவிஞர் வைகறை என்று சொல்லிக் கேட்டால் யாருக்கும்
தெரியவில்லை. இறந்தவர் புதுக்கோட்டையில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்று சொன்னதும்தான்
அவர்களுக்கு தெரிந்தது. வழி காட்டினார்கள்.
கவிஞரின் வீட்டின் வெளியே காம்பவுண்டிற்குள் அமைக்கப்பட்டு இருந்த
பந்தலில் அவரது உடல் சவப்பெட்டியில், பூமாலைகளின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. அதே
சிரித்த அமைதியான முகம். அருகில் அவரது மனைவி கதறியபடியே இருந்தார். அவரது ஒரே மகன், உறவினர் ஒருவர்
மடியில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டு இருந்தான். எனக்கு மனது தாளவில்லை. கவிஞரின்
வீடு இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப் படவில்லை.அங்கு போன பின்புதான், கவிஞர் வைகறை
அவர்கள் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர் என்பதும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பதும்
எனக்கு தெரிய வந்தது. உறவினர்களும், நண்பர்களும், அவரோடு பணி புரிந்தவர்களும் குழுமி
இருந்தனர்.
சரியாக மூன்று மணி அளவில், அந்த ஊர் பங்கு சாமியார் வந்து ஜெபம்
செய்த பின்பு கவிஞரின் உடலை, அவர்களின் பங்கு கோயிலான ‘அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்
வைத்து, பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட
அவ்வூர் கல்லறைத் தோட்டத்திலேயே அவரை நல்லடக்கம்
செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, நான் நேற்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.
எப்படி இறந்தார்?
அடைக்கலாபுரத்திற்கு, திண்டுக்கல்லிலிருந்து கவிஞர் வைகறை அவர்களது
ஃபேஸ்புக் (facebook) நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்
இது. கவிஞர் வைகறை எப்போதுமே, தனது உடம்பிற்கு ஏதாவது என்றால் , தனக்கு இப்படி இருக்கிறது
என்று மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்து எடுத்துக் கொள்வாராம். டாக்டரிடம் செல்வதில்லை. ரொம்ப நாளாகவே அவருக்கு வயிற்றுவலி இருந்திருக்கிறது. எப்போதும் போல, அல்சர்தானே என்று
எண்ணி, இவர் மருந்தை மெடிகல் ஷாப்பில் வாங்கி சுயமருத்துவம் பார்த்து இருக்கிறார்.
வலி அதிகமாகவே கவிஞரை, புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு, பின்னர்
மதுரைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விதி விளையாடி விட்டது. 35 வயதிலேயே அவருக்கு மரணம்.
( நான் பணியில் இருந்தபோது, என்னோடு பணிபுரிந்த, யூனியன் தலைவர்
ஒருவரும் இப்படித்தான். தனக்கு அல்சர்தான் என்று நினைத்துக் கொண்டு, ஜெல் எனப்படும்
திரவ மருந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தார். ஒருநாள் திடீரென்று வயிற்றுவலி அதிகமாக,
திருச்சியிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
PANCREAS என்றார்கள். இது நடந்து 15 வருஷம் இருக்கும்)
எனவே நண்பர்களே , டாக்டர் ஆலோசனையின்றி , சுயமருத்துவம் (Self
treatment ) எதுவும் செய்யாதீர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.
தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் தர்மபுரியில் வசித்து வந்தார்.
ஆசிரியப் பயிற்சி படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து “வளர்பிறை” எனும் கையெழுத்து
இதழ் நடத்தினார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ‘நந்தலாலா.காம்’ எனும்
கவிதைகளுக்கான இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள்:-
ஒரிஜினல் தாஜ்மகால் (2008)
நிலாவை உடைத்த கல் (2012)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)
இதழாசிரியர்:- நந்தலாலா.காம்.
ஆன்மா அமைதி பெறட்டும்.
ஒருமுறை ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் வீட்டில் , நண்பர்
தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது. நான் பெரும்பாலும், சங்கோஜப் பட்டுக் கொண்டு, எனது கேமராவில் என்னையே படம்
எடுக்கச் சொல்லி எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படித்தான். நான் மற்றவர்களைப் படம் எடுத்துக் கொண்டு இருந்தேன்.
இதனைக் கவனித்த, கவிஞர் வைகறை அவர்கள் “நீங்களும் அவர்களோடு போய் நில்லுங்கள். நான்
எடுக்கிறேன். நீங்களும் படத்தில் இருக்க வேண்டும். வரலாறு முக்கியம் நண்பரே! ” என்று
சொல்லி எனது கையில் இருந்த கேமராவை வாங்கி என்னையும் படம் எடுத்தார். இன்று அவரே வரலாறாகி
விட்டார்.
ஜோசப் பென்சிஹர் என்கிற கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும். ஆதரவற்ற அவருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும்.