Sunday, 31 January 2016

பெரம்பலூர் – புத்தகத் திருவிழா 2016 சென்றேன்



சில மாதங்களாக, வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாமல் இருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று விலகியதால், இப்போது அடிக்கடி வெளியூர் பயணம். சென்றமுறை புதுக்கோட்டை. இந்த தடவை பெரம்பலூர்

முதல்நாள்:

ஏற்கனவே பத்திரிகைகளில் பெரம்பலூரில் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள் வெளியாகி இருந்ததால் அங்கு போக வேண்டும் முடிவு செய்து இருந்தேன். நேற்று (30.01.16 சனிக் கிழமை) மாலை சென்றேன். பஸ் பயணம். புத்தகக் கண்காட்சி தொடங்கிய இரண்டாம் நாள் என்பதால் மக்கள் வருகை குறைவு. ஆனாலும் மாணவர்கள் அதிகம் தென்பட்டனர். BAPASI ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா இது.

(படம் மேலே) நுழைவு வாயில்
(படம் மேலே)  கலந்து கொண்ட 120 பதிப்பகங்கள்
(படங்கள் மேலே)  வாசலில் இருந்த ப்ளக்ஸ் பேனர்கள்.

வாங்கிய நூல்கள்:

பெரம்பலூர் போவதற்கு முன்னர் இண்டர்நெட்டில் ‘நூலுலகம்’ சென்று, வாங்க வேண்டிய இரண்டு நூல்களைத் தெரிவு செய்து கொண்டேன். ஒன்று தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள்; இன்னொன்று முகில் எழுதிய ஹிட்லர் –ஏனெனில் இப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் வாங்குவதில்லை; வாங்கியவரை போதும் என்ற எண்ணம்தான். அப்படியும் கூடுதலாகவே சில புத்தகங்கள் (பழக்க தோஷம்) வாங்கும்படி ஆகி விட்டது. இரத்தின நாயகர் & சன்ஸ் ஸ்டாலில் சில பழைய கதை நூல்கள் வாங்கினேன் ; முன்புபோல் அவர்கள் வெளியிட்ட பெரிய எழுத்து நூல்கள் இல்லை. அப்புறம் பிரேமா பிரசுரம் வெளியிட்ட  பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள். (ஏற்கனவே வாங்கி இருந்த இந்த கதைநூல், பலரிடம் படிக்க கொடுத்ததில் சிதைந்து விட்டது.

(படங்கள் மேலே)  அரங்கத்தின் உள்ளே 

(படங்கள் மேலே)  கவிஞர் வைகறை (புதுக்கோட்டை) அடிக்கடி ”வரலாறு முக்கியம் நண்பரே” என்று நம்மையும் நிகழ்ச்சிகளில் போட்டோ எடுத்துக் கொள்ளச் சொல்லுவார். அதற்காக வேண்டி, நான் இருக்கும் படங்கள்.

எனக்கு சமூக வரலாறு, மக்கள் பண்பாடு நூல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம். மேலே வாங்கியவற்றுள், த.தனஞ்செயன் எழுதிய ‘தமிழகத்தில் புரத வண்ணார்கள்’ என்ற நூலினைப் பற்றி தி இந்து (தமிழ்) நல்ல விமர்சனம் வந்து இருந்தது. எனவே அந்த நூல். எனக்கு பழக்கமான, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தினரும் வழக்கம்போல் ஸ்டால் போட்டு இருந்தனர். அங்கு இருந்த தெரிந்த தோழரிடம் பெரம்பலூர் ஆசிரியர் இரா.எட்வின் வந்தாரா என்று விசாரித்தேன். எட்வின் எனக்கு அறிமுகம் கிடையாது. (இவரும் ஒரு சிறந்த வலைப்பதிவர் மற்றும் ஆசிரியர் என்ற முறையில் சந்திக்க விருப்பம்); அவர் காலையிலேயே வந்து விட்டு சென்றதாகச் சொன்னார்.

(படம் மேலே) நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்று

ஹிட்லர் கொடுத்த அலைச்சல்:

வீடு திரும்பியதும், நேற்று வாங்கிய நூல்களை எனது மனைவியும் . மகனும் வாங்கி பார்த்தனர். எனது மகன் ( எம்.ஏ..,ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு மாணவர்) முகில் எழுதிய ஹிட்லர் என்ற நூலை மேலெழுந்த வாரியாக படித்தவர், “ அப்பா, அப்பா இந்த புத்தகத்தில் 20 பக்கங்கள் இல்லை; ஹிட்லர் வாழ்க்கையில் நடந்த அந்த முக்கியமான நாட்களைப் பார்ப்பதற்காக புரட்டியதில் இவை இல்லை” என்று சொன்னார்.  ’மர்மயோகி’ சினிமாவில் வரும் “பீம்சிங் இதென்ன புதுக் குழப்பம்” வசனத்தை நினைத்துக் கொண்டு அந்த நூலை வாங்கிப் பார்த்தேன். அதில் 336 ஆம் பக்கத்திற்குப் பிறகு 357 ஆம் பக்கம் தொடங்கியது – 20 பக்கங்கள் அதில் இல்லை. புத்தகம் விற்பனை செய்த ’விழிகள் பதிப்பகம், சென்னை’ கொடுத்த ரசீது புத்தகதின் உள்ளேயே இருந்தது.

இரண்டாம் நாள்:

(படம் மேலே ) இரண்டு நாட்களுக்கும் வழங்கப்பட்ட இரண்டு இலவச அனுமதிச் சீட்டுகள்.

எனவே, இன்று காலை (31.01.16 ஞாயிறு) மீண்டும் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி செல்ல வேண்டியதாயிற்று. முதல் வேலையாக, அரங்கத்தினுள் நேரே ’விழிகள் பதிப்பகம்’ ஸ்டாலுக்கு சென்று, விவரத்தைச் சொல்லி புத்தகத்தை மாற்றிக் கொண்டேன். இன்று நேற்றைய தினத்தை விட கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அதிகம். ஒரு சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களே மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி ஸ்டால்களுக்கு வெளியே, கலைஅரங்கம், மற்றும் சிறிய ஸ்நாக்ஸ்’ கடைகளோடு ’உலகத் தமிழர்கள் அரங்கம்’ என்று ஒரு சிறிய காட்சிக் கூடத்தையும் வைத்து இருந்தனர். அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)

                                                                                                                                        
வாங்கிய நூல்கள் விவரம்:
                                                                                                                                                                      நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் நான் வாங்கிய நூல்கள் இவை.

பவளக் கொடி மாலை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
சித்திராபுத்திர நாயனார் கதை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
மாடுபிடி சண்டை –  B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.1
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.2
இலக்கண வினா-விடை (சாரதா பதிப்பகம்)
தமிழகத்தில் புரத வண்ணார்கள் – த.தனஞ்செயன் எழுதியது
விக்கிரமாதித்தன் கதைகள் – பிரேமா பிரசுரம்
THE COUNT OF MONTE CRISTO (Abridged Classics)  
ஹிட்லர் – முகில் எழுதியது
எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை – முகில் எழுதியது
சாண்டோ சின்னப்பா தேவர் – பா.தீனதயாளன் எழுதியது
  

Thursday, 28 January 2016

’பயணங்கள் முடிவதில்லை’ - By VGK

Gmail

’பயணங்கள் முடிவதில்லை’ - By VGK



(மூத்த வலைப்பதிவர் அய்யா திரு VGK (http://gopu1949.blogspot.in வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் “பல்வேறு காரணங்களால் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுக்க எனக்குத் தற்சமயம் விருப்பம் இல்லை” என்று கீழே உள்ள கட்டுரையை எனது வலைத்தளத்தில் வெளியிடச் சொல்லி மின்னஞ்சல் வழியே அனுப்பி வைத்துள்ளார். அவரது விருப்பப்படி அதனை அப்படியே இங்கு வெளியிட்டுளேன்)





’பயணங்கள் முடிவதில்லை’
தொடர்பதிவு 
By வை. கோபாலகிருஷ்ணன்

எனது அருமை நண்பர் 
திருச்சி திருமழபாடி திரு. தி. தமிழ் இளங்கோ 
அவர்களின் அன்புக்கட்டளைக்காக 
எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

Reference:  




 



1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

என் பெரிய அக்காவுக்கு, திருச்சி-தஞ்சை மார்க்கத்தில், தஞ்சாவூர் பக்கம் சூலமங்கலம் என்ற கிராமத்தில் 1954 இல் திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு  4 அல்லது 5 வயது மட்டுமே. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் கடும் ஜுரமாகவும் அப்போது இருந்துள்ளது. திருச்சியிலிருந்து ரயிலில் திருமண சாமான் - சட்டிகளுடன் என்னையும் என் வீட்டார் சூலமங்கலம் கிராமத்திற்குக் கூட்டிப்போனார்கள். திருமண சாமான்களை அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறக்கும் போது என்னையும் ஒரு மூட்டை போல நினைத்து தொப்பென்று கீழே போட்டார்கள். அது எனக்கும் இன்னும் நன்கு நினைவில் உள்ளது. 

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?




(1)

என் 25வது வயதில், 1975 டிஸம்பர் மாதம் என் அலுவலக நண்பர்கள் சிலருடன் (என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு ஆண்கள் மட்டுமே) சென்னை, மும்பை, கோவா, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களுக்கு முதல் LTC யில் சென்று வந்தேன். நான், முருகன், ராஜேந்திரன், சிவலிங்கம், வேலு என நாங்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள். வேலுவின் நண்பர் என்ற முறையில் எங்களுக்கு அதிக அறிமுகம் இல்லாத மற்றொருவர் .... அவர் பெயரை ‘ரவி’ என நாம் இங்கே வைத்துக்கொள்வோம்.

சென்னை to மும்பை தனி கூபேயில் நாங்கள் ஆறுபேர்கள் மட்டுமே ஜாலியாகச் சென்றோம். 



மும்பை to கோவா 24 மணி நேரப்பயணமாக முதன் முதலாக கப்பலில் ஏறிச்சென்றோம். கோவாவில் நடுக்கடலில் கப்பலிலிருந்து இறங்கி ஸ்டீம் போட்டில் பயணம் செய்து கோவாவின் தலைநகர் பனாஜியின் கரையை அடைந்தோம். 

மும்பையிலும் கோவாவிலும் பல இடங்களைச் சுற்றி மகிழ்ந்தோம். ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு தனிப்பதிவே எழுதக்கூடிய அளவுக்கு, ஏராளமான நகைச்சுவைச் சம்பவங்கள் நிகழ்ந்த, மிகவும் இனிய பயணம் அது.

அவற்றில் மறக்க முடியாத ஒரு சின்ன சம்பவம்: 

தமிழும் சரளமான ஹிந்தியும் தெரிந்த வழிகாட்டி ஒருவருடன், நாங்கள் ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது, மும்பையில் ரெட்-லைட் ஏரியா என்ற மிக நீண்ட தெருவிலும் நாங்கள் நடந்து செல்ல நேர்ந்தது. இருபுறமும் ஏராளமான வீடுகள். வாசல் கதவுகள், மாடிப்படிகள். பால்கனிகள். சின்னச்சின்ன வயதில் ஏராளமாகவும், தாராளமாக ஆயிரக்கணக்கான குட்டிகள். எங்கள் கைகளைப்பிடித்து இழுக்காத குறை மட்டுமே. 

15 வயது முதல் 50 வயது வரை, அரையும் குறையுமாக ஆடைகளை அணிந்துகொண்டு, முகம் பூராவும் ஜோராக மேக்-அப் போட்டுக்கொண்டு, உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் பல்வேறு செய்கைகளில் எங்களை நோக்கி அவர்களின் அழைப்புகள் இருந்தன. 

தப்பித்தோம் பிழைத்தோம் என நாங்கள் வேகமாக நடந்து, அந்தத்தெருவினைத் தாண்டி, பஸ்ஸில் ஏறி, நாங்கள் தங்கியிருந்த மாதுங்கா ’அரோரா’ தியேட்டருக்கு அருகில் இருந்த லாட்ஜ் ரூமுக்கு ஓடிவந்துவிட்டோம். எங்களுடன் வந்த வேலு என்பவனுக்கு இதையெல்லாம் பார்த்ததிலேயே குளிர் ஜுரம் வந்துவிட்டது. கடும் கம்பளியைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டான்.

எங்கள் க்ரூப்பில் மற்றொருவன் (வேலுவுக்கு மட்டும் நெருங்கிய நண்பன் ரவி), எங்களை ரூமில் விட்டுவிட்டு தனியே இரவில் அங்கு அந்த ரெட்-லைட் ஏரியாவுக்கு, திரும்ப அந்த வழிகாட்டியுடன் புறப்பட்டுச் சென்று விட்டான். பிறகு அவனை ஆளையே காணும். மறுநாள்தான் ஒருவழியாக வந்து சேர்ந்தான். அவன் எங்களிடம் பல அனுபவக்கதைகள் சொல்லி மகிழ்ந்தான்.     

நாங்கள் அனைவரும் அவனின் இந்த இழிவான செயலுக்கு மிகவும் கண்டனம் தெரிவித்தோம்.  அதற்கு அவன் எங்களைப்பார்த்து “மிகவும் அருமையான சந்தர்ப்பம் இது. இதை அநியாயமாக நீங்கள் நழுவ விட்டதோடு அல்லாமல் என்னை இப்படித் திட்டுகிறீர்களே” எனச்சொல்லி அவனின் கண்டனங்களை எங்களுக்குத் தெரிவித்து மகிழ்ந்துகொண்டான். 


தமிழகத்தைத் தாண்டிச்சென்ற மேலும் சில பயணங்கள்.

(2)

கேரளா குருவாயூர், கொச்சின் போன்ற இடங்களுக்கு ரயிலில், மகிழ்வுப்பேருந்தில் + காரில் என பலமுறை குடும்பத்துடன் சென்று வந்துள்ளேன்.  கொச்சின் கொந்தளிக்கும் கடலில் பரிசலில் சென்றது மிகவும் த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது.  


(3) 

1978-ஆம் வருடம் என் குடும்பத்தாருடன் ஹகரி (குண்டக்கல் அருகில்) என்ற சிற்றூருக்குப் புனிதப்பயணம் சென்று வந்தேன்.

(4)

குடும்பத்தாருடன் 1983 இல் கர்னூல், திருப்பதி, திருத்தணி, காளகஸ்தி போன்ற இடங்களுக்கு ஒருமுறை காரிலும் மறுமுறை ரயிலிலும் புனிதப்பயணம் மேற்கொண்டேன். 

(5)

1984-இல் குடும்பத்தாருடன் அலஹாபாத், காசி, ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குப் புனிதப்பயணம் சென்று வந்தேன்.
அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நான்.


(7) 

1985-இல் குடும்பத்தாருடன் பண்டரீபுரம் புனித யாத்திரை செய்து வந்தேன். 

(8)

2004 டிஸம்பரில் குடும்பத்தார் அனைவருடனும் மும்பைக்கு தேசிய விருது வாங்கச் சென்று வந்தேன்.

(9) 

2006 மார்ச்சில் தலைநகர் டெல்லிக்கு முதன் முதலாக என் சின்ன மகனுடன்  சென்று வந்தேன். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம். பல இடங்களை ஆசைதீர சுற்றிப்பார்த்து மகிழ்ந்தோம்.


^குதுப் மினார்^

^பாராளுமன்றம்^
^இந்தியா கேட்^
^மஹாத்மா காந்தி நினைவு இடம்^

^மிருகக் காட்சி சாலை^
^ஜூம்ஆ மசூதி^
(10)

2007 பிப்ரவரியில் தேசிய விருது + முதல் பரிசு தங்க மெடல் வாங்க ஜாம்ஷெட்பூருக்கு சென்றேன். பேச்சுத்துணைக்காக என் அக்கா மகனையும் என்னுடன் அழைத்துக்கொண்டு சென்று வந்தேன்.

 

(11)

2008 செப்டெம்பரில் ஹைதராபாத்துக்கு EXECUTIVE ORIENTATION PROGRAM TRAINING க்குக்காக அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேர்களுடன் (BHEL திருச்சியிலிருந்து ஒரே ஒரு பெண் + 14 ஆண்கள்) புறப்பட்டுச் சென்று அங்கு 15 நாட்கள் தங்கிவிட்டு வந்தோம். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி உள்பட பல இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.      


  
FOUR FINANCE EXECUTIVES FROM BHEL TIRUCHI .... AT TRAIN JOURNEY




^AT BHEL GODAVARI GUEST HOUSE - HYDERABAD^

^AT HRDC - BHEL - HYDERABAD ^

  








^AT RAMOJI RAO FILM INSTITUTE - HYDERABAD^




^ AT A VERY BEAUTIFUL PARK AND 
SHOPPING AREA AT HYDERABAD^

^ சார்மினார் பஜாரில் ^
^கோல்கொண்டா கோட்டையில்^ 

3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

எங்குமே தனியே பயணிக்கப்பிடிக்காது. பேச்சுத்துணைக்கு 'நம்மாளு’ யாராவது வேண்டும். ஜன்னல் ஓரமாக இடம் கிடைத்தால் மிகவும் பிடிக்கும். பணம் அதிகம் செலவானாலும் பயணமும் இருக்கையும் படுக்கையும் மிகவும் COMFORTABLE ஆக எனக்கு இருக்க வேண்டும்.


4.பயணத்தில் கேட்க விரும்பும் சை

பயணத்தில் இசை கேட்கும் விருப்பம் ஏதும் எனக்கு இல்லை. பொதுவாகக் காட்டுக்கத்தலாக இல்லாமல் மெல்லிசையாக இருப்பின் சகித்துக்கொள்வேன்.

5.விருப்பமான பயண நேரம்

அதி விரைவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும், சகல செளகர்யங்களுடனும் திட்டமிட்ட கன்ஃபார்ம்ட் ரிஸர்வேஷனுடன் கூடிய பயணமாக இருக்க வேண்டும். நேரமெல்லாம் எதுவாக இருப்பினும் OK தான்.


6.விருப்பமான பயணத்துணை.

ஹனுமன் போன்ற அனைத்துத் திறமைகளும், சாமர்த்தியங்களும்,  புத்தி சாதுர்யமும் வாய்ந்த என் பெரிய சம்பந்தி திரு. P. பாலசுப்ரமணியன் என்பவரும் அவரின் துணைவியாரான திருமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் அவர்களும், எங்களுடன் பயணம் செய்ய வந்தால் மிகவும் மகிழ்வேன். இவர்களுடன் செல்லும் போது நான் எதற்குமே கவலைப்படாமல் மிகவும் ஜாலியாக பயணத்தை மட்டுமே ரஸித்து அனுபவிக்க நேரிடும்.  

மற்றபடி டிக்கெட் ரிஸர்வேஷன் செய்வது, பயண டிக்கெட்களை பயணம் முடியும்வரை பாதுகாப்பது, ஆங்காங்கே விசாரணைகள் செய்வது, லோக்கல் பயண வண்டிகளை ஏற்பாடு செய்வது, எதையும் நன்கு முன்கூட்டியே திட்டமிடுவது, எனக்கு வேண்டிய ருசியான ஆகாரங்கள் தருவது, ஆங்காங்கே தங்குமிடங்கள் ஏற்பாடு செய்வது, அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இடுவது, பயணத்திட்டங்களைத் தீட்டுவது, என் லக்கேஜ்கள் உள்பட அனைத்தையும் பொறுப்பாகக் கண்காணித்துப் பார்த்துக்கொள்ளுவது, ஆங்காங்கே லக்கேஜ் தூக்க ஆள் ஏற்பாடு செய்வது என அனைத்தையுமே அவர்கள் இருவரும் திட்டமிட்டு தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். 

இவர்கள் இருவருடனும் சேர்ந்து பயணம் செய்தால் எனக்கும் என் மனைவிக்கும் எந்தவொரு தலைவலிகளும் இருக்காது. அவர்களிடம் மொத்தமாகப் பணத்தைக்கொடுத்துவிட்டு, மிகவும் ஜாலியாக பயணத்தை மட்டும் நாங்கள் அனுபவிப்போம்.

7.பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

தனியாக எங்கும் பயணிக்காததால் புத்தகமெல்லாம் எனக்குத் தேவைப்படாது. நெடுந்தூர பணமாக இருந்து மிகவும் போர் அடித்தால் சீட்டுக்கச்சேரி போடப்பிடிக்கும். மற்றபடி அரட்டை அடித்துக்கொண்டு பயணம் செய்யவே பிடிக்கும்.

8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

சிறுவயதினில் நடந்தும், சைக்கிளிலும், மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும், சைக்கிள் ரிக்‌ஷாவிலும், மோட்டர் சைக்கிள்களிலும் என அனைத்திலும் நான் பயணம் செய்துள்ளேன்.










முதன் முதலாக குதிரை வண்டியில் பயணம் செய்ததை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் சிரிப்பான அனுபவமாகும். ஒரு குதிரை வண்டிக்குள் என் குடும்பமே ஏறிக்கொண்டது. என்னை கடைசியாக குதிரை ஓட்டியின் அருகே என் காலைத்தொங்கப்போட்டபடி அமர்த்தி விட்டார்கள். எனக்கு 5-6 வயதுதான் இருக்கும் அப்போது. 

நல்ல வாளிப்பான மொழு மொழு என்று இருந்த முரட்டுக்குதிரை அது. வால் முடிகள் அதற்கு மிகவும் நீளமாக இருந்தது. அடிக்கடி குதித்துக்கொண்டு ஓடிய அது, என்னைத் தன் வாலால் ப்ரஷ் அடித்துக்கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. 

குதிரை ஓட்டுபவர் சாட்டையால் குதிரையைச் சொடுக்கிக்கொண்டே இருப்பார். சாட்டை என் கண்களில் பட்டுவிடுமோ என பயந்துகொண்டே பயணம் செய்தேன். 

வேக வேகமாக ஓடும்போது நடுவில் வாலைத்தூக்கிய அந்தக்குதிரை, பச்சைக்கலரில் சாணி போட ஆரம்பித்தது.  குமட்டிடும் அந்த வாடை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. 

அத்துடன் அது சாணி போட்டு முடிக்கும்வரை, அதன் வாலால் என் முகத்தில் விசிறி அடித்துக்கொண்டே இருந்தது. எப்போது வண்டியை விட்டு இறங்கப்போகிறோம் என்று ஆகி விட்டது எனக்கு. :)

தற்சமயம் 5 கிலோமீட்டருக்குள் என்றால் ஆட்டோ. 6 to 20 கிலோ மீட்டருக்குள் என்றால் கால் டாக்ஸி.




முன்பெல்லாம் .... 55 வயதுவரை 100 CC சுசுகி சாம்ராயில் 100 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல் விரட்டிப் பயணம் செய்வது எனக்கு மிகவும் ஜாலியாக இருந்து வந்தது. இப்போது போக்குவரத்துகள், பாதைகள் எல்லாம் மிகவும் மோசமாகவும், ஆபத்தாகவும் இருப்பதால், பைக் ஓட்டுவதை சுத்தமாகவே நிறுத்திக்கொண்டுள்ளேன். 

நீண்ட தூரப்பயணம் என்றால் (Even Tiruchi to Chennai or Bangalore) பெரும்பாலும் ஒஸத்தியான ஏ.ஸி. காரில் பின்பக்கம் இடது பக்கம் ஓரமாக ஜன்னலை ஒட்டி அமர்ந்து செல்லவே விரும்புவேன்.





ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி சிரமப்படாமல், வீட்டு வாசலிலிருந்து புறப்பட்டு திரும்பவும் வீட்டுவாசல் வரை அழகாக வந்துசேரும் வசதிமிக்க ஒஸத்தியான AC CAR பயணமே எனக்கு ரயில் பயணங்களைவிட மிகவும் பிடித்தமானது. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் காரை நிறுத்தச்சொல்லி, நம் ஏற்றுமதி இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, பயணத்தைத் தொடர வசதியாக இருக்கும். அப்படிப்பட்ட காரிலும் டிரைவரைத்தவிர 3 அல்லது 4 பேர்கள் மட்டுமே தாராளமாக அமர்ந்துகொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டு அமர்ந்து கும்பலாகச் செல்வது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

                                                                                                                                                         
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அவ்வப்போது காணும் காட்சிகளைப் பொருத்து சில சினிமாப் பாடல்களை என் வாய் முணுமுணுக்கும்.


10.கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணத்திற்காக என் மனதில் எவ்வளவோ ஆசைகள் + கற்பனைகள் உள்ளன. எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாக என்னால் சொல்ல இயலாமல் உள்ளது. :)




நீண்ட தூரம் செல்லும் சொகுசுப் பேருந்துகளில் இப்போது தூங்கும் வசதிகளும், கழிவறை வசதிகளும்கூட கொடுக்கப்படுகின்றன.  கட்டணம் அதிகமானாலும், இரயிலில் உள்ள படுக்கை வசதியைவிட  இவற்றில் நன்றாகக் காலை நீட்டியும், புரண்டும் படுக்க முடிகிறது. சமீபத்தில் பெங்களூரிலிருந்து திருச்சிவரை, இதுபோன்றதோர் சொகுசுப் பேருந்தில் என் குடும்பத்தார் அனைவரும் நிம்மதியாகவும் செளகர்யமாகவும் படுத்துத் தூங்கிக்கொண்டு வந்தோம்.




விமானப்பயணத்திலும் கூட மிகவும் நெருக்கமாகவும்,  மூன்று இருக்கைகளை ஒட்டியும் போட்டிருப்பதால் பயணிக்கும் போது பலருக்கும் மிகவும் கஷ்டமாகவே உள்ளது.  இருக்கைகள் தாராளமாக விசாலமாக உள்ள EXECUTIVE CLASS + காலை நீட்டி தூங்கும் வசதிகளுடன் உள்ள விமானப்பயணம் தான் எப்போதும் இனிமையானதாக உள்ளது.   





இந்தப்பதிவினை எழுதி அனுப்ப என்னைத் தூண்டிய என் இனிய நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு மீண்டும் என் இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தத்தொடர் பதிவினை எழுத யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்களெல்லாம் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் VGK

 பிற்சேர்க்கை (30.01.16) -

அன்புள்ள V.G.K அவர்கள் அனுப்பி வைத்த மின்னஞ்சலில் இருந்த படங்கள் இங்கே (கீழே) -

My Dear Sir, வணக்கம்.

மேலும் சில போட்டோக்கள் இப்போதுதான் கிடைத்தன. கீழே இத்துடன் அவற்றை அனுப்பியுள்ளேன். முடிந்தால் தங்களின் பதிவினில் கடைசியாக இவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.

அன்புடன் VGK

டெல்லி பாராளுமன்றம் அருகில் - VGK

 இந்திரா காந்தி நினைவிடத்தில் - VGK + HIS SON 

டெல்லி மெட்ரோ ரயில் பயணத்தில் - VGK
VVIPs மட்டுமே தங்கிடும் 
மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் VGK 


டெல்லி இந்தியா கேட் அருகே VGK

மஹாத்மா காந்தி நினைவிடத்தில் 
பிரார்த்தனையில் VGK 

டெல்லி குதுப்மினாருக்கு வந்திருந்த  
ஜீன்ஸ் பட கதாநாயகன் பிரஸாந்த் அவர்களுடன் VGK

 டெல்லி மிருகக்காட்சி சாலையில் - VGK

டெல்லி ஜூம்ஆ மசூதியைப் பார்த்துவிட்டு 
திரும்பும்போது VGK

டெல்லியில் உள்ள பல இடங்களை 
ஆட்டோவில் சுற்றிக்காட்டிய சர்தார்ஜியுடன் VGK