எந்த கட்சி திருச்சியில் மாநாடு நடத்தினாலும் அவர்கள் சொல்லும் வார்த்தை ” திருச்சி மாநாடு
எங்களுக்கு ஒரு திருப்புமுனை மாநாடு “ இது எல்லா அரசியல்வாதிகளாலும் அடிக்கடி சொல்லப்படும்
வார்த்தை. காரணம், திருச்சி என்ற பெயரிலும் திரு இருக்கிறது; திருப்புமுனை என்ற
சொல்லிலும் திரு இருக்கிறது. ” திருப்பதி சென்று திரும்பி
வந்தால் திருப்பம் ஏற்படுமடா! உந்தன் விருப்பம் நிறைவேறுமடா!’ – என்ற பாடலில் வரும் எதுகை மோனை போன்றுதான் இதுவும். அடுக்குமொழி வார்த்தை.
ஆனால் இந்த அரசியல்வாதிகளால் திருச்சிக்கு ஏதாவது திருப்புமுனை ஏற்பட்டு
இருக்கிறதா என்றால் இல்லை.
பேருந்து நிலையங்கள்:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. எல்லா மாவட்ட தலைநகர்களிலும் புது பேருந்து நிலையம் கட்டி
விட்டார்கள். ஆனால் இன்னும் திருச்சி மத்திய
பேருந்து நிலையம் மாற்றப்படாமல் மூத்திர நாற்றம் வீச, அதே நெருக்கடியோடு ஐம்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டி
வெளியே உள்ள டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் படும்பாடு சொல்ல முடியாது.
பயணிகளுக்கான இடம் முழுவதும் சிறு வியாபாரிகள். பிளாட்பாரத்தில் ஏறும் போதும்
இறங்கும் போதும் சறுக்க வைக்கும் அமைப்பு. படிக்கட்டுகள் இல்லை. கீழே எப்போதும்
கழிவுநீர் மற்றும் குப்பை. புறநகர் செல்லும் பிரயாணிகள் நிற்க இடம் கிடையாது. கூட்டத்திற்குள் பஸ்
வேகமாக நுழையும்போது மக்கள் இங்கும் அங்கும் ஓட வேண்டி உள்ளது.
ஒவ்வொரு தடவையும் நகரசபை தேர்தல் முடிந்தவுடன், எந்த கட்சி ஆட்சிக்கு
வந்தாலும், நகரசபை தலைவர் (இப்போது மேயர்)
சொல்லும் வாசகம் “விரைவில் திருச்சிக்கு என்று புதிய பேருந்து நிலையம் பெரிதாக
அமைக்கப்படும்” என்பதுதான். இடம் பார்ப்பதாக இங்கும் அங்கும் சென்று
“பிலிம்” காட்டுவார்கள். அப்புறம் அவ்வளவுதான். என்ன காரணத்தினாலோ
அந்த திட்டம் கிடப்பில் போடப்படும். உண்மையான காரணம் மத்திய பேருந்து நிலையத்தைச்
சுற்றியுள்ள சிலர்தான் என்கிறார்கள். காரணம் பேருந்து நிலையத்தை புதிதாக வேறு
இடத்திற்கு மாற்றப்பட்டால் அவர்கள் வியாபாரம் படுத்துவிடும் என்பதுதான். உண்மையில்
புதிய இடத்திற்கு பேருந்து நிலையம் போனாலும் இந்த பேருந்து நிலையமும் செய்லபட வாய்ப்புகள்
அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
திருச்சியில், இந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு இணையாக உள்ளது , சிந்தாமணி பகுதியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம். இங்கே
பெரும்பாலும் டவுன் பஸ்கள் வந்து போகின்றன.
மற்றொரு கோடியில் வெளியூர் பஸ்கள் நிறுத்தப் படுகின்றன. மத்திய பேருந்து
நிலைய அவலங்கள் இங்கேயும் அப்படியே உள்ளன.
எனவே சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் போல் திருச்சியில் , ஒரு
பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி வாழ் மக்களின் நெடுநாள்
கோரிக்கை ஆகும்.
குடிநீர்ப் பிரச்சினை:
” காவிரி ஆறே கரை புரண்டு ஓடினாலும், காவிரிக் கரையில்
இருக்கும் திருச்சி மக்களுக்கு மட்டும் குடிக்க தண்ணீர் சரிவர கிடைக்காது.
திருச்சி நகரத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியின்
புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இன்னும் குடங்களை வைத்துக் கொண்டு குடிநீருக்காக அலைய
வேண்டியுள்ளது “ –.
காவிரிக் கரையில்
உள்ள திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினை
http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_26.html என்ற ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன் . அந்தப் பதிவில் எழுதிய மேலும் சில
கருத்துக்கள்:
// இங்கு இவ்வாறு திருச்சி மக்கள் குடிநீருக்காக
அல்லாடிக் கொண்டு இருக்கும்போது, திருச்சி
காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பிற மாவட்ட மக்களுக்கு “ ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் “ என்ற பெயரில் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குழாய் மூலம்
காவிரி நீர் கொண்டு செல்லப் படுகிறது. மேலும் செல்லும் வழியில் சில இடங்களில் இந்த
குழாயிலிருந்து திருட்டுத்தனமாகவும் தண்ணீர் எடுக்கிறார்கள். ”அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்” என்பது போல திருச்சி
அரசியல்வாதிகள், அடுத்தவர்களுக்கு த்ண்ணீரை
தானம் செய்து விட்டு திருச்சி மக்களை தாகத்தில் விட்டு விட்டார்கள். புறநகர் பகுதிகளில்
தண்ணீர் தொட்டிகளை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள்
கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டினாலும் தரப் போவது காவிரிநீர்
கிடையாது. போர்வெல் தண்ணீரும் காவிரி தண்ணீரும் கலந்த ஒன்றுதான். சுத்தமான காவிரி
தண்ணீர் இல்லை..//
தொழில்வளம் இல்லை:
திருச்சியில் தொழிற்சாலைகள் தொடங்கும் அளவுக்கு நிறைய வசதிகள் வாய்ப்பும்
இருந்தும் என்ன காரணத்தினாலோ புறக்கணிக்கப் படுகிறது. பிரிட்டிஷ்காரர்கள்
காலத்தில் தொடங்கப்பட்ட பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையும், நாடு சுதந்திரம் அடைந்த
பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெல் ( BHEL ) நிறுவனம் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை மட்டும்தான். அதன் பின்னர் தொழில்
வளர்ச்சி என்பதே இல்லை. இதைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் பேசுவதே இல்லை.
திருப்புமுனை:
எனவே அரசியல் கட்சிகள் திருச்சியில் திருப்புமுனை மாநாடுகள் நடத்துவதோடு
இல்லாது திருச்சிக்கும் ஏதாவது செய்ய நினைக்க வேண்டும்.