சிலநாட்களுக்கு முன் வீட்டுத் திண்ணையிலிருந்து நாங்கள் வளர்த்த ” ஜாக்கி” ( JACKIE ) (வயது 10) விழுந்து விட்டது. அதற்கு காய்ச்சல் ஏற்பட மருந்து கொடுக்க சரியானது. (சின்ன குட்டி நாயாக இருந்தபோது எனது மகன் அதனை எடுத்து வந்தான்.) அதற்கு அடுத்து சிலதினம் சென்று, வீட்டு படிக்கட்டில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டேன்.முதுகில் அடிபட்டதால் வலி வந்து இப்போது குறைந்து விட்டது. அப்போதிலிருந்து மனது சரியில்லை. மேலும் சின்னச் சின்ன பிரச்சினைகளால் குழப்பம். இந்தச் சூழ்நிலையில் ஜாக்கிக்கு மறுபடியும் உடம்பு நலமில்லை. திடமான உணவை ஜாக்கியினால். சாப்பிட இயலவில்லை. சென்ற வாரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். சரியாக சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் பால், தண்ணீர் தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை.
மனது
சரியில்லாததால் படிப்பது, எழுதுவது, வலைப் பதிவுகள் பக்கம் செல்வது என்று
இருந்தேன். வெள்ளிக் கிழமை (27.09.2013) காலை
வலையில் ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் ” (http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_26.html) என்ற ஜோதிஜியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ”ஜென்மம்
நிறைந்தது சென்றவர் வாழ்க “ என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை வீடியோ இணைப்பாகக் கொடுத்து
இருந்தார்.அந்த பாடலைக் கேட்ட போது மனதில் இனம் புரியாத விளக்கம். இந்த
பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தது. (பின்னர் எங்கு என்பதற்கு விடை கிடைத்தது )அப்போது அவர் பதிவில் கருத்துரைப் பெட்டியில் நான்
எழுதியது
// தாங்கள்
இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு – இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை
நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!
//
அடுத்தநாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் இனம் புரியாத உணர்வு. ஏதோ ஒன்று நடக்கப்
போவதாய் உள்ளுணர்வு. இன்னதென்று சொல்ல இயலவில்லை ஷேக்ஸ்பியர் நாடகத்தில், போரில்
வெற்றி பெற்ற ” மாக்பெத்” (MACBETH) தனது நண்பனும் இன்னொரு
தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில்
இன்னதென்று இனம் புரியாத கலக்கம். மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.
” நல்லதும் கெட்டதும் நிறைந்த இது
போன்ற ஒருநாளை இதுவரை நான் கண்டதில்லை.”
” So foul and fair a day I have not seen. (MACBETH - 1.3.38)”
மாக்பெத் மன நிலைமையில் நான் இருந்தேன். மனதில்
ஆறுதல் தேடி மீண்டும் ஜோதிஜியின் கட்டுரையிலுள்ள இணைப்பை சென்று பார்க்கச் சென்ற போது, எனக்கான
மறுமொழியில் அவர்
// இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது //
என்று எழுதியிருந்தார். இருந்தாலும் நேற்று முன்தினம் இரவு (சனிக் கிழமை) அந்த பாடலைக் கேட்டேன். மேலும்
GOOGLE இல் தமிழில் “ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து அதில் வந்த
கட்டுரைகளைப் படித்தேன். படுக்க இரவு மணி 12 ஆகிவிட்டது.
அன்று இரவு 1.30 மணி அளவில் வீட்டினுள்ளே வராண்டாவில்
இருந்த ஜாக்கி வெளியே விடச் சொல்லி முனகியது. வெளியே சென்ற ஜாக்கி தண்ணீர் குடித்துவிட்டு மாடிப்படிகளின்
மேல் சென்று படுத்துக் கொண்டது. (வீட்டின் நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்) நான்
கதவைப் பூட்டிவிட்டு வீட்டினுள் படுத்து
விட்டேன். நேற்று (29.09.2013) ஞாயிறு காலை 6.30 மணி அளவில் ”ஜாக்கி ஜாக்கி “ என்று அழைத்தேன். வரவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து கிரில் கேட்டைத் திறந்து வெளியில் பார்த்தபோது வீட்டு வாசலில்
இறந்து கிடந்தது (மாடிப்படிகளில் இருந்து கீழே ஓடிவந்து இருக்கிறது). வீட்டினுள்
நான், எனது மனைவி மற்றும் எனது மகன் (கல்லூரி மாணவர்) என மூவர் மட்டுமே. எல்லோரும்
அழுதோம். விஷயம் கேள்விப் பட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தனர். அடுத்த
வீட்டிலும் விசாரித்தனர்.
இறந்து போன்
ஜாக்கியை வீட்டின் கொல்லைப் பக்கம் புதைக்கலாம் என்றால், அந்த இடத்தைப் பார்க்கும்
எனது மகன் எப்போதும் அழுது கொண்டே இருப்பான். மேலும் அதன் நினைவுகள் அடிக்கடி எல்லோரது மனதிலும் வந்து
மனதை அலைகழிக்கும். எனவே வெளியில் எங்காவது புதைக்க முடிவாயிற்று. ஞாயிற்றுக்
கிழமை என்பதால் கார்ப்பரேசன் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஒரு சில
ஊழியர்கள் ”புதைக்க
மாட்டோம். சாக்கில் கட்டி வெளியே தொலைவிற்கு சென்று காட்டில் வீசி விடுவோம்” என்றார்கள். நாங்கள்
அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து எனது டிவிஎஸ் – 50 XL ஐ எடுத்துக் கொண்டு அலைந்தேன். கடைசியாக 11.30
அளவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் இடுகாடுகளில் சவக்குழி தோண்டும் கான் என்ற முஸ்லிம் சகோதரரைச் சொன்னார்கள். அவரும்
முன்வந்தார். இவர் ஒரு தட்டு ரிக்ஷாக்காரர். அவரது தட்டு ரிக்ஷாவிலேயே ஜாக்கியை ஒரு சாக்குப் பையில் நானும் எனது மகனும் எடுத்துச்
சென்று, இடுகாட்டின் ஒரு மூலையில் காம்பவுண்டு சுவர் அருகே அடக்கம் செய்தோம்.
எங்கள்
ஜாக்கியைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு பதிவாக எழுதலாம் என்று
இருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. நாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா
சாந்தியடையட்டும்
(மண்ணில் தோன்றிய எல்லா உயிரினமும் இறைவன் படைப்புதான். சுயநலம் காரணமாக சில
உயிர்களை நேசிக்கிறோம்; சில உயிர்களை வெறுக்கிறோம்.. கவிஞர் வைரமுத்து மனித உயிரின் பயணத்திற்காக மட்டும்
இந்த கவிதையை எழுதியதாக நான் நினைக்கவில்லை. மண்ணுலகில் தோன்றிய அனைத்து
உயிர்களுக்குமாகவே எழுதியதாக நினைக்கிறேன் )
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! கவிதை இங்கே.
ஜென்மம்
நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
-
கவிஞர் வைரமுத்து
இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் “க்ளிக்” செய்யுங்கள்.
VIDEO THANKS TO GOOGLE ( YOUTUBE )
ஒரு சிறிய குறிப்பு :
ஒரு நாயின்
ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள்
என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில்,
அதாவது மனிதனின் வயதோடு
ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன் வயது 65 ஆகிறது (நன்றி: www.pedigree.com )
தி தமிழ் இளங்கோ – 06.10.2013
தி தமிழ் இளங்கோ – 06.10.2013