ஒரு உரையாடலின் போதோ அல்லது ஒரு
கவிதையைப் படைக்கும் போதோ அல்லது கட்டுரையை எழுதும்போதோ சில
சொல்லாடல்கள் சுவாரஸ்யமாக வந்து விழுவதுண்டு. அவற்றை இலக்கியத்தில் காணலாம். தற்கால
மொழி நடையில் இவற்றை சிறந்த மேற்கோள்கள் (QUOTES) எனலாம்.
குறுஞ்செய்திகள்:
உண்மையில் சொல்லாடல் என்பது வார்த்தைப் பிரயோகம்தான் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச்
டயாலாக்குகளையும், தற்போது செல்போனில் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் (SMS) இந்த வகையில் சேர்க்கலாம். தமிழ் அறிஞர் தி.க.சி அவர்களோடு உரையாடும்போது சுவாரஸ்யமான
சொற்களைச் சொல்லுவார் என்று சொல்லுவார்கள். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது எழுத்துக்களில் ‘சொலவடை’ என்ற பெயரில்
நிறைய பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.. இதனை ஒரு பொருள் குறித்த ஒரு சொல், பல
பொருள் குறித்த ஒரு சொல், ஒரு பொருள் குறித்த பல சொற்கள்,என்ற அடிப்படையில் நாம்
ரசிக்கலாம்.
அந்த காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் சுவடிகளாக, கட்டு
கட்டாக பனை ஓலையில் இருந்தவைதாம். பனை ஓலையில் எழுத்தாணியால் எழுத நிரம்ப பயிற்சி
வேண்டும். கொஞ்சம் அழுத்தினாலும் ஓலை கிழிந்துவிடும். எனவே ஓலையில் எழுதுவதற்கு
வசதியாகவும், மனப்பாடம் செய்வதற்கு எளிதாகவும் சொல்வதைச் சுருங்கச் சொல்லி விளங்க
வைத்தார்கள். இதற்கு செய்யுள் எனப்படும் கவிதை வடிவம் உதவியது..
சங்க இலக்கியங்கள்:
சங்க இலக்கியத்தில் காலம் கடந்தும் இன்றும் நிற்கும் பல
சொல்லாடல்களைக் காணலாம். உதாரணத்திற்கு சில
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா
- (கணியன் பூங்குன்றனார், புறநானூறு.192)
இதில் முதல் வரியில் ” எல்லா ஊரும் நம்
ஊரே; எல்லோரும் நம் உறவினரே ” என்ற அர்த்தத்தை
மறந்து, “எல்லாம் ஊருதான். எல்லோரும் இதனைக் கேளுங்கள் “ என்று சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்.
.
வான் பொய்ப்பினும், தான்
பொய்யா,
மலைத் தலைய கடல் காவிரி - பட்டினப்
பாலை
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தில்
, கோவலனிடம் இருந்த
யாழை வாங்கி, மாதவி, கானல் வரி பாடத் தொடங்குகிறாள். அப்போது
அப்பாடலில் காவிரியை வாழ்த்தி பாடும் போது
” நடந்தாய் வாழி காவேரி “ – (புகார்க் காண்டம்)
என்று காவிரியை வாழ்த்தி பாடுகிறாள். இன்றளவும் ஒலிக்கும்
இந்த சொற்றொடரை மறக்க முடியுமா?
கம்பர்:
இராமாயணக்கதை அனைவரும் அறிந்ததுதான். இராவணன் சீதையைத்
தூக்கிச் சென்று விடுகிறான். அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்றே
தெரியவில்லை. இராம தூதனாக நம்பிக்கைக்குரியவனாக அனுமன் செல்கிறான். பல்வேறு இடர்களுக்கிடையில்
இலங்கையில் அசோகவனத்தில் சீதை இருப்பதைக் காண்கிறான். முன்பின் தன்னைக் கண்டறியாத்
சீதையிடம் தான் யாரென்று சொல்லும்போது சுருக்கமாக “அண்டர் நாயகன் அருள் தூதன் யான்” என்று சுருக்கமாகச் சொல்லுகின்றான்.
இங்கே திரும்பி வந்த அனுமன், இராமனிடம் தான் வந்து போன
அனுபவங்களையெல்லாம் கதைக்காமல் நேரிடையாகவே “கண்டேன் சீதையை” என்று
சொல்லுகிறான். பல நண்பர்கள் இந்த வார்த்தையை கம்பன் கையாண்டதாக நினைத்துக் கொண்டு
இருக்கிறார்கள். இது தவறு. கம்பன் சொல்லவில்லை. இந்த சொல்லாடல் ராமாயண கதை இலக்கிய சொற்பொழிவாளர்கள் உருவாக்கியது
(குறிப்பாக வாரியார் சுவாமிகள் என்று நினைக்கிறேன்). கம்பன் சொன்னது “கண்டேன் என் கற்பினுக்கு அணியை, கண்களால்” என்பதே
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்
- கம்பன்.6031
(கம்பராமாயணம்/சுந்தர
காண்டம்/திருவடி தொழுத படலம்)
கம்பர் இதுபோல தனது நூலில் பல இடங்களில் இந்த
குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
திருவள்ளுவர்:
திருவள்ளுவர் எழுதிய ஒவ்வொரு குறட்பாவுமே ஒரு
குறுஞ்செய்தியை உள்ளடக்கி நிற்கின்றன. சில குறட்பாக்களை இரண்டாக ஒடித்து
பிரித்தாலும் குறுஞ்செய்தியாக நின்று பொருள் தரும்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு - திருக்குறள் 336
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? – குறள் 71
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் – குறள் 595
அவ்வையார்:
தமிழ் மூதாட்டி அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் உள்ள
ஒவ்வொரு வரியும் ஒரு குறுஞ்செய்தி எனலாம். ( சங்ககால அவ்வையார் வேறு பிற்கால
அவ்வையார் வேறு)
அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
ஆறுவது சினம்.
கண்டொன்று சொல்லேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
சேரிடம் அறிந்து சேர்
நூல் பல கல்
வைகறைத் துயில் எழு
இவ்வாறாக இலக்கியத்திலிருந்து மட்டுமன்றி, பழமொழிகள்,
திரையிசைப் பாடல்கள் என்று பலவற்றிலிருந்தும் சொல்லிக் கொண்டே போகலாம்.