( PICTURE - COURTESY: “GOOGLE”)
நாட்டில் அவரவருக்கு
ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். வாய்க்கு இல்லை, வயிற்றுக்கு இல்லை என்று கால் வயிற்று
கஞ்சிக்கு மக்களில் பலர், ஒருபக்கம் அல்லாடிக் கொண்டு இருந்தாலும், “ யார் சிறந்தவர் அல்லது
விஞ்சியவர் ” என்று இன்னொரு பக்கம் பட்டிமன்றம் நடத்திக்
கொண்டு இருக்கும் தேசம் இது. எனக்கு பெருமாள் முருகன் யாரென்று தெரியாது. அவர்
நூல்களைப் படித்ததும் கிடையாது. அண்மையில் அவர் எழுதிய “மாதொரு பாகன்” சர்ச்சை , மற்றும் அவரது உருக்கமான அறிக்கை என்று
பரபரப்பான செய்திகளைப் படித்தவுடன் எனக்கும் என்ன ஏதென்று அறியும் ஆர்வக் கோளாறு
வந்துவிட்டது.
என்ன பிரச்சினை?
மாலைமலரில் வந்த
செய்தி இது:
திருச்செங்கோடு, டிச. 26– திருச்செங்கோட்டில் இன்று காலை பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பினர் , மோரூர் கண்டங்குல
கொங்கு நாட்டு வேளாளர்
அறக்கட்டளை அமைப்பினர் ஆகியோர் கைலாசநாதர் கோவில் வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு
திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு வந்தனர். இந்த ஊர்வலத்துக்கு ஏற்கனவே போலீசார் அனுமதி
மறுத்த போதிலும் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம்
எழுப்பினர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலைப் பற்றியும். பெண்களை
பற்றியும் மிக இழிவாக
சித்தரித்து மாதொரு பாகன் என்ற புத்தகம் எழுதிய எழுத்தாளர் நாமக்கல் பெருமாள் முருகன் மற்றும் அந்த
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த அமைப்பினர் கோஷம்
எழுப்பினார்கள்.
பின்னர் அந்த புத்தகத்தின்
நகலை தீவைத்து எரித்தனர். அதன் பிறகு எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
- (நன்றி : மாலைமலர்
)
வழக்கம் போல கூகிளில்
(GOOGLE) தேடிய போது
பிரச்சினையின் சாராம்சத்தை உணர முடிந்தது. மேலும் 2010 - இல் வெளிவந்த நூலுக்கு இப்போது எதிர்ப்பு. கடந்த நாலு
வருடங்களாக அந்த ஊரைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூடவா இந்த நூலை படிக்காமல்
இருந்திருப்பார்கள் எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று
பெருமாள் முருகனின் வலைத்தளம் www.perumalmurugan.com சென்றால்
404. That’s an error. ஒரு
அறிவிப்பு வருகிறது. ஒருவேளை புத்தகம் கடையில் கிடைக்கிறதோ என்னவோ என்று, எதற்கும்
உதவும் என்று சகோதரர் S.மது
அவர்களது வலைத்தளத்திலிருந்து http://www.malartharu.org/2015/01/mothoru-paakan.html இந்த நூலை டவுன்லோட் (Download) செய்து கொண்டேன். அவருக்கு நன்றி.ஒரு புத்தகத்தை வாசிப்பது போல்,
மின்நூலை தொடர்ந்து வாசிக்க முடியாது
என்பதால் புத்தகக் கடைகளில் சென்று கேட்டேன். எங்கும் இல்லை. ஆன் லைனில் வாங்கலாம்
என்று நுழைந்தால் OUT OF STOCK
என்ற பதில். வேறு வழியின்றி மேலே சொன்ன அடோப் ரீடர்(Adobe Reader) டவுன்லோட் வழியே நாவலை படித்தேன்.
கதைச் சுருக்கம்:
சுமார் நூறு
ஆண்டுகளுக்கு முந்திய கதை என்பதனை, நாவலைப் படித்து முடித்த பின்னர்தான் தெரிந்து
கொள்ள முடிகிறது.
அந்த கிராமத்துக்கு
அருகில் இருக்கும் ஒரு பெரிய ஊரின் தேர்த் திருவிழாவின் போது, குழந்தை
இல்லாதவர்கள், ”சாமிக் குழந்தை வரம்” வாங்குவது வழக்கம் (கடவுளின் பெயரால், இருளில்,
காட்டில், கூட்டத்தோடு கூட்டமாய் முகம்
தெரியாத ஆணிடம் (சாமி) உறவு கொண்டு பெண் கர்ப்பம் தரிப்பது) காளி – பொன்னா தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
பொன்னாவின் அம்மாவும் மாமியாரும் அண்ணனும் , ஊர் வழக்கப்படி வரம் வாங்க தேர்த்
திருவிழாவுக்கு பொன்னாவை போகச் சொல்ல, கணவன் காளிக்கு இதில் உடன்பாடு இல்லை. பொன்னா
சாமி வரம் வாங்க, தேர்த் திருவிழா செல்கிறாள். கதை முடிவில் காளியின் வாழ்வு
முடிகிறது. அவலச் சுவையில் முடியும் நாவல் இது.
நாவலில் வரும் கதை
மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அந்தக் கால கிராமிய நடையிலேயே கொண்டு
செல்லுகிறார் ஆசிரியர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அடையும் ஏக்கத்தினையும்,
மற்றவர்கள் வறடன், வறடி என்று செய்யும் ஏளனத்தையும் அவர்கள்
அடையும் மனக்குமுறலையும் காளி –
பொன்னா (பொன்னாயீ) என்ற பாத்திரப் படைப்புகள் வழியே நூல் முழுக்க காணலாம். பழமையை
எதிர்த்து அந்த காலத்தில் கிராப் வைத்துக் கொண்ட மைனர் வாழ்க்கை நடத்திய சித்தப்பா
நல்லுப் பையன். அவருக்கு ஆக்கிப் போடும் அருந்ததியர் பையன், காளியை இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லும் மாட்டுத்
தரகர் செல்லப்பா கவுண்டர், சேக்காளியாகவும் மச்சானாகவும் வரும் முத்து. இப்படி
சிலர்.
இன்னும் பூவரசு மரம்,
நாடார் குறி சொல்லுதல், குழந்தை இல்லாததற்கு சாபம்தான் காரணம் என்று சொல்லப்படும்
சாபக் கதைகள், பட்டியில் ஆடு வளர்த்தல், பிள்ளை இல்லாதவர்கள் கோயில் கோயிலாக
போதல்,கடலைக்காய் பயிரிடும் முறை, தீண்டத் தகாதவர்கள் சூழல், தெய்வக் குழந்தை
வாங்குதல் என்று கதை நீண்டு கொண்டே செல்கிறது.
இடையிடையே,
“முண்டை வளர்த்த பிள்ளை தண்டமாகத்தான் போகும்”
”நல்லாயி பொல்லாதவ நாளும் கெழமயும் இல்லாதவ”
”நாம என்ன கோட்ட கட்டி ஆள்ற வம்சமா”
”இன்னிக்கு நம்மள எவன் பாக்கறான். எல்லாப்
பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்”
போன்ற வாசகங்களையும்
காணலாம்
எழுத்தாளரின்
ஆர்வக் கோளாறு:
இந்த நூலின் நடையைப்
பார்க்கும் போது, ஒரு பேராசிரியர் ஒருவர்தான் இப்படி எழுதினாரா என்று யோசிக்க
வைத்தது. காரணம் பச்சையாக, கிராமங்களில் பேசும் பல சொற்களை, குஜிலி அச்சக
புத்தகங்கள் போல, நாவலின் பல இடங்களில் பேராசிரியர் பெருமாள் முருகன் சர்வ
சாதாரணமாக கதா பாத்திரங்கள் வழியே பேசுகிறார். இவற்றை “இடக்கரடக்கல்” என்ற முறையில் தவிர்த்து இருக்கலாம்.
இது ஒரு நாவல் என்ற
படியினால், கதையினில் வரும் ஒரு பெரிய ஊரின் பெயரை கற்பனைப் பெயராக வைத்து
புனைந்து இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்து இருக்காது என்று எண்ணத்
தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு கதையை நூலாக வெளியிடும் போது சட்ட பாதுகாப்பிற்காக,
“இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன
அல்ல” என்று ஒரு அறிவிப்பை செய்து இருப்பார்கள்.
இப்போது நிறையபேர் அப்படி செய்வது இல்லை. ஆனால் நூலாசிரியர் பெருமாள் முருகன்
அவர்கள், தனது முன்னுரையில் ” ரகசிய
ஊற்றுக்களில் ஒன்று“ என்று தனது கருத்துக்களை நியாயப்படுத்தி இருப்பது, நூலை எதிர்ப்பவர்களுக்கு
வசதியாகப் போய் விட்டது. பெருமாள் முருகனே இவ்வளவு தூரத்திற்கு இது போகுமென்று எதிர்பார்த்து
இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த ஜாதிதானே ஒன்றும் ஆகாது என்று அசட்டையாக நினைத்து
, ஆர்வக் கோளாறு காரணமாக எழுதியதாகவே தெரிகிறது.
நூலைப் பற்றி
பொதுவாகச் சொல்வதானால் கொங்கு வட்டார வழக்கு மொழி நிரம்பிய ஒரு நாவல், எதிர்ப்பாளர்களால் இலக்கிய உலகில், அனைவரது
பார்வையையும் தன் பக்கம் இழுத்து விட்டது.
சாதாரண குடிமகன்
தனக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டு போய்விடுவான். அவன் சொன்னது அன்றே அப்போதே
காற்றோடு காற்றாய் மறைந்து விடும். ஆனால் அதனையே எழுத்தாக்கி அச்சில் ஏற்றினால்
ஆவணமாக மாறிவிட வாய்ப்பு அதிகம். ” உலகம் இதிலே
அடங்குது” என்று தொடங்கும் பாடலில் வரும்
பொய் சொன்னாலும்
மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப்
பலனில்லே - அதை
மையில நனச்சுப்
மையில நனச்சுப்
பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே
- பாடல் கண்ணதாசன் (படம்: குலமகள்
ராதை)
என்ற வரிகள்
இதைத்தான் சொல்லுகின்றன..
மிரட்டல் தவறு
எது எப்படி இருந்த
போதிலும், சட்டப்படி வழக்கு தொடருவதை விடுத்து, எல்லோருமாகச் சேர்ந்து, ஒரு
எழுத்தாளரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டியது தவறாகவே தோன்றுகிறது. இதே அவர் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்திருந்தால் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. பெருமாள் முருகன் மீதுள்ள
பொறாமை அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே யாரோ சிலர் இந்த நூலைப் பற்றி
பெரிதாக்கி இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஏனெனில் 2010 - இல் வெளியான இந்த
நூலுக்கு இப்போதுதான் (2014 –
2015 இல்) எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.
” எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன்
கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை.
மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன்
மட்டுமே உயிர் வாழ்வான்”
என்று எழுத்தாளர்
எழுதிக் கொடுக்கும் அளவிற்கு நிலைமை போய் விட்டது வருத்தமான விஷயம்தான். ஒருவேளை
அவர் மீண்டும் எழுதத் தொடங்கினாலும், அவருடைய எழுத்துக்களில் பழைய யதார்த்தத்தை
எதிர் பார்க்க இயலாது என்பது உண்மை. அவரும் அவர் குடும்பத்தினரும் இப்போது எப்படி
இருக்கின்றனர்? பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.