கதையின்
ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு
முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால நடுத்தர
மக்கள் ஒண்டு குடித்தனங்களாக வாழ்ந்த முறையையும் சுவைபடச் சொல்கிறார். அவர் சொல்லும், அப்போதைய மக்கள் பயன்படுத்திய சிம்னி அரிக்கேன்
விளக்குகள், திரி ஸ்டவ் , ரம்பத்தூள் அடுப்புகள் இந்தக் கால பிள்ளைகளுக்கு
தெரியாது. மேலும் அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது
சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைச் சொல்லி அந்த காலத்திற்கே
அழைத்துச் செல்கிறார். இந்த காலத்து
தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய பழைய கால குடித்தனம் பற்றிய செய்திகள் சுவையாக
உள்ளன.
ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு லேசில் பேசிவிட முடியாது. ஏதாவது
புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டும் என்றாலும் யாரேனும் ஒரு பெரியவர்
துணையோடுதான் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மலர்ந்த ஒரு காதல்
கதையைச் சொல்லுகிறார்.
ஒரு பெண் தனது காதலை எப்படி வெளிப்படுத்துவாள் என்பதனை
சுவையாகவே சொல்கிறார். அவனிடம் வலிய வந்து பேசுதல், அவன் வைத்து இருந்த குழந்தையை
வாங்கி அவன் எதிரிலேயே முத்தம் கொடுத்தல், குழந்தையைத் தரும் சாக்கில் தொடுதல்
என்று தெரியப் படுத்துகிறார்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு தீபாவளி சமயம் அவள்
வீட்டிற்கு அவள் பெற்றோர் இருக்கும் சமயம் அவள் வீட்டிற்கு அவன் செல்ல
நேரிடுகிறது. அங்கு அவள் கையால் அவனுக்கு இனிப்பும் காரமும் தருகிறார்கள். மேலும்
அவனது வேலை, சம்பளம் இவற்றையெல்லாம் அந்த பெண்ணின் பெற்றோர் விசாரிக்கிறார்கள்.
இதனால் அவன் தனக்குத்தான் இந்த பெண் அமையும், இவர்கள்தான் தனக்கு மாமனார் – மாமியார் என்ற பரவசத்துடன் வீட்டுக்கு வருகிறான். அதற்குப்
பிறகு அந்தப் பெண்ணை அவன் காணவே முடியவில்லை. அவனுடைய காதல் அவனுக்குள்ளேயே அடக்கமாகி விட்டது. ஆனாலும் அவள் கையில் இருந்து வாங்கி சாப்பிட்ட ரவாலாடு
மட்டும் அவன் நினைவை விட்டு அகலவில்லை. அவனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து
திருமணம் செய்து வைக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமைகிறது. இங்கே
இன்னாருக்கு இன்னார் என்ற தத்துவதைச் சொல்லுகிறார் கதாசிரியர் திரு V.G.K அவர்கள்.
இதற்கிடையில் எதிர்பாரத விதமாக பல வருடத்திற்குப் பிறகு அந்த
பெண்ணை கடைவீதியில் சந்திக்கிறான். அவனும் அவளும் ஒரு உணவு விடுதிக்குச் சென்று
பேசுகின்றனர். அப்போது இருவரும் அடையும் மனப் போராட்டங்களை சொல்லுகிறார்.
இருவருக்குமே வயதான தோற்றம். இருப்பினும் பழைய நினைவுகள்.
இவ்வாறு பேசியது போல் அப்போதே பேசி இருந்தால், ஒருவேளை இருவரது காதலும் நிறைவேறி
இருக்கும். அவளிடம் அவன் தன் மணிபர்சைத் தந்து வேண்டியதை எடுத்துக் கொள் என்று
சொல்கிறான். அவளோ அவன் நினைவாக ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே
பர்சை கொடுத்து விடுகிறாள். இங்கே பணத்துக்காக அவள் விரும்பவில்லை என்பதைக்
கோடிட்டுக் காட்டுகிறார்.
இறுதியாக தனது மகனின் காதலியாக வருபவள் தனது முன்னாள்
காதலியின் மகள்தான் என்று தெரிந்து கொள்ளும்போதும், தனது காதலி இப்போது மனநிலை
பாதிக்கப்பட்டவள் என்பதனை அறியும் போதும் அவன் ” மறக்க மனம்
கூடுதில்லையே” என்று படும்பாட்டை திரு V.G.K அவர்கள் தனக்கே உரிய எழுத்துத் திறமையால் கதையை
நகர்த்துகிறார். இறுதியில் அவன் அந்த பெண்ணின் மகளை தனது மருமகளாக ஏற்றுக்
கொள்ளும்போது வாசகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறான்.
முக்கிய குறிப்பு:
திரு V.G.K
(வை.கோபாலகிருஷ்ணன் ( http://gopu1949.blogspot.in ) அவர்கள் நடத்திய, V.G.K சிறுகதைகள்
விமர்சனப் போட்டிக்கு, நான் அனுப்பி வைத்த எனது இரண்டாவது விமர்சனக் கட்டுரை (26.03.2014) இது)
தொடர்புடைய
எனது முந்தைய பதிவு:
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன்