தோழர் ஆசிரியர் அண்டனூர் சுரா
( இயற்பெயர் சு.ராஜமணிக்கம்) அவர்கள், வீதி இலக்கிய அமைப்பு புதுக்கோட்டை வழியே எனக்கு
அறிமுகம் ஆனவர். அவருடைய நூல்கள் எதனையும் நான் இதற்கு முன்னர் படித்ததில்லை. இவருடைய
’முத்தன் பள்ளம்’ என்ற நாவலை, அண்மையில் கந்தர்வகோட்டையில்
நடைபெற்ற இந்தநூலின் வெளியீட்டு விழாவில் வாங்கி இப்போதுதான் படித்து முடித்தேன்.
எந்தவகை நூல்?
”இதற்கு முன்பு என்னால் எழுதப்பட்ட பல நாவல்களைச் சுக்கு நூறாகக்
கிழித்து ஒன்றாகக் குவித்து அதிலிருந்து சில துண்டுகளைப் பொறுக்கி முத்தன் பள்ளம் என்கிற
இந்த வரலாற்று நாவலை முடித்திருக்கிறேன்” – என்று இந்நூலாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் இதனை,
வரலாறு என்ற, அந்த ஒரு பார்வையிலேயே அடக்கி விட முடியவில்லை
என்பதே உண்மை. நூலினை
நல்ல முறையில் அச்சிட்டு,
பார்த்தவுடனேயே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாகவும்
வெளியிட்ட மேன்மை பதிப்பகம் பாராட்டுக்குரியது.
தேசாந்திரியின் குறிப்புகள்
இந்தியாவிற்கு, சீனாவிலிருந்து வந்த யுவான்சுவாங் மற்றும் இத்தாலியின்
வெனீஸ் நகரிலிருந்து வந்த மார்க்கோபோலோ என்ற
யாத்திரிகர்கள் இருவரும் இந்தியாவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பயணக் குறிப்புகளாக
எழுதி வைத்துள்ளனர். இவர்களைப் போலவே, இந்த நூலாசிரியரும், ஒரு தேசாந்திரியாக, ஒவ்வொரு
நாளும், தான் கண்ட, கேட்ட நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு இந்த நாவலை எழுதி
இருக்கிறார் எனலாம். ஏனெனில் அண்டனூர் சுரா அவர்கள் தான் பிறந்து வளர்ந்து பணிபுரியும்
கந்தர்வகோட்டை பகுதி மக்களோடு ஒன்றாகக் கலந்து விட்டவர்
ஆண்ட்ராய்டும் போக்கிமானும்
பொதுவாக புதிதாக, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பயணம் செய்யும்போது வழியில் உள்ளவர்களை கேட்டுத்
தெரிந்து கொண்டோ அல்லது கைகாட்டி பலகைகளின் வழிகாட்டுதலோடு செல்வார்கள். இது ஸ்மார்ட்போன்
காலம். அதிலும் ஆண்ட்ராய்டு காலம். எனவே இந்த
நூலின் கதாநாயகன் தனது செல்போனில், ஆண்ட்ராய்டில் உள்ள போக்கிமான் என்ற விளையாட்டை
கந்தர்வகோட்டையில் தொடங்கி கூகிள் வழிகாட்ட நடைப்பயணமாக வந்து, தான் எதிர்பாராத முத்தன்
பள்ளத்தில் முடிக்கிறான்.
கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கம் > இடுகாடு சாலை > திறக்கப்படாத
பேருந்து நிலையம் > அக்கச்சிப்பட்டி > மல்லிகைநத்தம் எனப்படும் பெரியகோட்டை
– சொக்கம்பட்டி > ஒட்டப்பாலம் > வேலாடிப்பட்டி > மஞ்சம்பட்டி > வெள்ளாளவிடுதி
> வலச்சேரிப்பட்டி > வேளாண்மைப் பண்ணை > கால்ஸ் மதுபானத் தொழிற்சாலை >
கல்லாக்கோட்டை > அலும்பில் எனப்பட்ட அம்புக்கோயில் > முத்தன் பள்ளம் - இதுதான் அந்த வழித்தடம். அவ்வாறு பயணப்பட்டு வரும்போது
இடையில் உள்ள ஊர்களின் பெயர்க் காரணம், வரலாறு, ஊர் மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல்
என்று பலவற்றையும் தனது அனுபவங்களோடு சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
// கண்டராதித்தன் காலத்தில் கட்டப்பட்ட
இக்கோட்டை கண்டவராதித்தன் கோட்டை என அழைக்கப்பட்டு இன்று கந்தர்வகோட்டை என்றாகியிருக்கிறது
// (இந்நூல் பக்கம்.19)
// அக்கச்சிப்பட்டி …. …. மன்னன் கண்டவராதித்தன்
அக்காவிற்கு சீதனமாகக் கொடுத்த ஊர் என்பதால் அவ்வூருக்கு அப்படியொரு பெயர் ‘அக்கா ஆட்சி
பட்டி’ // (இந்நூல் பக்கம்.44)
// வெள்ளாளவிடுதி வேளாண்மைப் பண்ணை
… …. கந்தர்வகோட்டை பகுதியில் பொதுவுடமைக் கட்சிகள் ஆழமாகக் காலூன்ற காரணமாக இருந்த
பண்ணையாக அது இருந்தது. ஆண்களுக்கு சம்பளம் நூறு, பெண்களுக்கு சம்பளம் இருபது ரூபாய்
என ஏற்ற இறக்கத்துடன் இருந்த காலக்கட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம்
கொடுத்த பண்ணை அது. // (இந்நூல் பக்கம்.75)
கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கத்தில் பேசிய பிரபல தலைவர்கள், காந்திசிலை,
காந்தி மண்டபம், அம்பேத்கர், இந்திராகாந்தி சிலைகள் அமைய பாடுபட்டவர்கள் பெயர்கள்,
துப்புரவுப் பணியில் காண்ட்ராக்ட் விட்டு அந்த பணியாளர்களை சுரண்டுபவர்கள், கால்ஸ்
மதுபானத் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் – என்று நிறையவே தகவல்கள்.
பதாகை அரசியல்
இந்த நூல் முழுக்க இவர் சுட்டிக்காட்டும் மற்றும் நையாண்டி பண்ணும்
ஒரு விஷயம் மக்களிடையே பரவிக் கிடக்கும் ‘ப்ளக்ஸ் பேனர்’ எனப்படும் விளம்பர மோகம்தான்.
இந்த ப்ளக்ஸ் பேனரை இப்போதெல்லாம் பதாகை என்று என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். இவரும்
மற்றவர்களைப் போலவே ‘ப்ளக்ஸ் பேனரை பதாகை என்ற அர்த்தத்திலேயே சொல்லி இருக்கிறார்.
// ஒரு பதாகை காமராசரை நாடாராக்கி
யிருந்தது. இன்னொன்று பெரியாரை நாயக்கராகக் காட்டியது. இதைவிடவும் ஒரு பதாகை புதிதாக
நிறுத்தப் பட்டிருந்தது. தேவேந்திரகுல வேளாளர் என்கிற பதாகை அது. அதில் தேவநேயப் பாவாணரின்
கம்பீரம் தெறிக்கும் மீசையுடன் பழனி முருகனும் இருந்தார்கள். இப்பதாகை பலரும் கவனிக்கும்
படியாக இருந்தது. // (இந்நூல் பக்கம்.26)
// என்ன சண்டை …. எவனாவது மண்டபத்தில்
தேவை வைப்பான். இவன்க ப்ளெக்ஸ்ல உன் பேரப் போடலை, என் பேரப் போடலைனு அடிச்சிக்கிறுவான்க.
…. இவன்களெ வெட்டிக் கொத்தி ஆக்கி படைக்கணும். // (இந்நூல் பக்கம்.63)
இந்நூலில் வழியில் காணும் சிமெண்டால் ஆன விளம்பரப் பலகைகளையும்
பதாகைகள் என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார்
(பதாகை என்றால் எனக்கு அந்தக்கால ராஜாராணி, புராணக் கதை திரைப்படங்களிலும்,
இக்கால கோயில் திருவிழாக்களிலும் ஊர்வலத்தின் முன்னால் தூக்கி வரப்படும் துணியால் ஆனவையே
நினைவுக்கு வரும். ‘“தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள்
தாங்கிய செவ்வக வடிவத் துணி” – என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்லுகிறது))
கதைக்குள் கதை
அந்த காலத்து விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள் ஆகியவற்றில்
கதைக்குள் கதைகளாக நிறையவே கதைகள் வரும். அதனைப் போலவே இந்த நாவலிலும், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து முத்தன் பள்ளத்திற்கு
குடியேறிய பாட்டன் கதை உருவாகி இடையிடையே முத்தரையர்கள், தொண்டைமான்கள் மற்றும் குடிமக்களின்
சமூகநிலை பற்றிய சுவையான செய்திகள் சொல்லப்படுகின்றன.
அம்புநாட்டில் அறுத்துக்கட்டும் பழக்கம் அதாவது விதவை மறுமணத்திற்கு
தடை. மீறுபவர்களுக்கு தண்டனை இந்த தடையை மீறிய ஒரு ஜோடிக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும்
நேர்ந்த கொடுமைகளையும் ஓரிடத்து சொல்லக் காணலாம்.
காதலுக்காக மன்னர் அல்லது பிரபு பட்டத்தையும் அதிகாரத்தையும் துறந்தவர்கள் பற்றிய
வரலாற்றினை இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் கேள்விப்பட்டது உண்டு. இதேபோன்று,
ஆஸ்திரேலிய பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட, புதுக்கோட்டை சமஸ்தானத்து ராஜ மார்த்தாண்ட
பைரவத் தொண்டைமான், அந்த பெண்ணுக்காக மன்னர் பட்டத்தையும், உறவுகளையும், ஜாதி பட்டத்தையும்
துறந்து இருக்கிறார். இதனை ஒரு சிறுகதை போல இங்கே அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
// கல்லாக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க
கோயில் ஒன்று இருக்கிறது. தொண்டைமான் காலத்து மாரியம்மன் கோயில் அது. அக்கோயிலுக்குள்
சாதி மதம் கடந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் அதிகாரத்தை புதுக்கோட்டை சமஸ்தானம்
கொடுத்திருந்தது. தலித் மக்கள் ஜமீன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனையும், அக்கோயிலும் சேரி மக்களால் கட்டப்பட்டதால்
அரண்மனைக்குள் நுழைந்து மன்னனை சந்திக்கும் அதிகாரமும், கோயிலுக்குள் நுழையும் உரிமையும்
அவர்களுக்கு கிடைத்திருந்தன // (இந்நூல் பக்கங்கள்
.87 - 88)
( இந்த நூலின் பல இடங்களில் கள்ளர், தொண்டைமான், முத்தரையர் என்று
குறிப்பிடும் நூலாசிரியர், மேலே சொன்ன தகவலில் தலித், சேரிமக்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டதற்குப்
பதிலாக, இன்ன பிரிவினர் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தால், பின்னாளில் அம்மக்களைப்
பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுபவர்களுக்கு துணையாக இருக்கும் )
முத்தன் பள்ளம் என்ற ஊர்
இந்த ஊரைப் பற்றிய பதிவுகளை, இந்நூலின் இரண்டாம் பகுதியினுள்,ஒரு
வண்டித்தடம் அளவிற்கே உள்ள பாதை, பாம்புகள் நெளியும் தண்ணீர்க்காடு மற்றும் இருபுறமும்
காட்டுவேலி, இந்த பாதையைக் கடக்கும் வரை அவ்வூர் பள்ளிச் சிறுவர், சிறுமியர் படும்பாடு,
பாம்பு கடித்தவரை மந்திரிப்பதற்காக, கயிற்றுக் கட்டிலில் தூக்கிச் செல்லும் அவ்வூர்
மக்கள் – என்று சொல்லோவியங்களாக செதுக்கியுள்ளார்.. கூடவே பாட்டன் முத்தாயி காதல் கதை.
இந்த நாவலைப் படிக்கையில் நானும் இண்டர்நெட்டில் இந்த பாதையை விக்கிமேப்பில் (Wikimapia)
தொடர்ந்து வந்தேன். நூலில் குறிப்பிடப்படும் பல ஊர்கள் அந்த விக்கிமேப்பில் குறிக்கப்பட
வில்லை.. எனவே அந்தந்த ஊர் ஆர்வலர்கள் தங்கள் ஊர் பெயர்களை விக்கிமேப்பியாவில் இடம்
பெறச் செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள் வெளியிட்ட கிராமப் பெயர்களிலும் முத்தன்
பள்ளம் பற்றி ஒரு செய்தியும் இல்லை. கந்தர்வகோட்டை பகுதியையைச் சேர்ந்த எனது உறவினர்,
இந்த ஊருக்கு கல்லாங்கோட்டைக்கு சென்று அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ளடங்கிய இந்த
ஊருக்கு நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ செல்ல வேண்டும்: பஸ் வசதி அதிகம் இல்லை
என்றார்.
எனக்குத் தெரிந்து ’முத்தன் பள்ளம்’ போன்ற கிராமங்கள் தமிழ்நாட்டில்
நிறையவே உண்டு. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை. ஓட்டு வாங்கும்
அரசியல்வாதிகளும் பணிபுரியும் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் மனசாட்சியுடன் நடந்து
கொண்டாலேயே நிறைய பிரச்சினைகள் தீர்ந்து விடும்
நூலின்
பெயர்:
முத்தன்
பள்ளம் / வகை: நாவல்
ஆசிரியர்: அண்டனூர் சுரா
நூலின்
விலை:
ரூ
150 பக்கங்கள்: 212
பதிப்பகம்:
மேன்மை
வெளியீடு,
5/2 பெர்தோ
தெரு,
இராயப்பேட்டை,
வி.எம்.தெரு,(கில்
ஆதர்ஷ்
பள்ளி
அருகில்)
சென்னை
600014 தொலைபேசி:
044 2847 2058
தொடர்புடைய எனது பிற பதிவு: