Wednesday, 30 October 2013

தீபாவளி : அன்றும் இன்றும்



தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் சிறுவனாக இருந்தபோது கொண்டாடிய தீபாவளிக்கும் இப்போது கொண்டாடப்படும் தீபாவளிக்கும் இடையில் எவ்வளவோ மாற்றங்கள். இருந்தாலும் தீபாவளி சந்தோஷம் என்பது குழந்தைகளுக்கு என்றுமே. மாறாத ஒன்று. நாம்தான் குழந்தையாக இருந்து வயதில் மூத்தவராக மாறிவிட்டோம். சந்தோஷமும் மாறி விட்டது.

தின் பண்டங்கள்:

விழாக்கால கொண்டாட்டம் என்றாலே தின்பண்டங்கள் தயார் செய்வது முக்கியமான ஒன்று. அப்போதெல்லாம் யாரும் தீபாவளிக்கான இனிப்பு, காரம் வகைகளை கடைகளில் வாங்க மாட்டார்கள் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிப்பு வேலைகள் தொடங்கி விடும். முன்பெல்லாம் வீடுகளில் செய்யும் தின்பண்டங்களை பெரிய பிஸ்கட் டின்களில்தான் அழகாக பொறுமையாக அடுக்கி வைப்பார்கள். எனவே அதற்கென்றே வாங்கப்பட்டு இருக்கும் அந்த டின்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைப்பார்கள். பலகாரம், முறுக்கு சுடுவதற்கு என்றே எண்ணெய்க் கடைகளுக்கு அல்லது செக்காலைகளுக்கு சென்று சுத்தமான நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் (வடிவேலு ஜோக் ஞாபகம் வரணுமே) வாங்கி வைப்பார்கள். கை வலிக்க வலிக்க உரலிலும், ஆட்டுக் கல்லிலும் அரிசி மாவு போன்றவற்றை தயார் செய்து கொள்வார்க்ள். அப்புறம் மாவரைக்கும் மில்கள் அதிகம் வந்ததும், அங்கு போய் அரைத்து வந்தார்கள். எந்த பலகாரமாக இருந்தாலும் வீட்டு அம்மாக்கள்தான் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கைமணம். தனி ருசி இருக்கும்.


அப்புறம் சமையல் மாஸ்டர்கள் காலம் வந்தது. சிலர் கூட்டாக ஒன்று சேர்ந்து ஒரு சமையல் மாஸ்டரிடம் தீபாவளி ஆர்டர் கொடுத்தார்கள். சமயத்தில் சமையல் மாஸ்டர்களே நேரில் வந்து ஆர்டர்கள் பெற்றனர். இப்போது எங்கு பார்த்தாலும் நிறைய இனிப்பு கடைகள். கேட்டரிங் சர்வீசுகள். இப்போது பலபேர் வீட்டில் இவைகளை செய்வதே கிடையாது. செய்யவும் தெரியாது. எத்தனை வீடுகளுக்கு எத்தனை பைகள் அல்லது அட்டைப் பெட்டி என்பதுதான் கணக்கு. பழைய கைமணம் , ருசி எல்லாம் போச்சு.
  
புத்தாடைகள், பட்டாசுகள்:

அப்போது ஆடைகள் விஷயத்திலும் ஒரு மாதத்திற்கு முன்பே வேலைகள் தொடங்கி விடும். ரெடிமேட் ஆடை கடைகள் பக்கம் அவ்வளவாக போக மாட்டார்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  ஒரு டெய்லர் . அவரிடம்தான் புதுத் துணிகளை தைக்க கொடுப்பார்கள். இப்போது ரெடிமேட் துணிகள், ரெடிமேட் கடைகள் ஆதிக்கம் அதிகம் வந்து விட்டது.

அப்போது இருந்த வெடிப் பட்டாசு வகைகள் இப்போது அதிகம் இல்லை. நிறைய வெடி வகைகளை அரசு தடை செய்து விட்டது. இப்போது கலர் மத்தாப்பு , கலர் புஸ்வாணங்கள்தான் அதிகம்.

உன்னைக் கண்டு நானாட:


தீபாவளி என்றாலே, மறக்க முடியாத அந்தநாள் இலங்கை வானொலியும், நம்மூர் வானொலி நிலையங்களும் அன்றைய தினம் அடிக்கடி ஒலிபரப்பும் பாடல் உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி “ என்று தொடங்கும் கல்யாணப்பரிசு படப் பாடல்தான். இன்றும் தொடர்கிறது. தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்புகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல் இது.


உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா


(படம்: கல்யாணப் பரிசு ( 1957 ) பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியவர்: P சுசீலா இசை: A M ராஜா
நடிகர்கள்: சரோஜாதேவி, ஜெமினி கணேசன் )

இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள்


வாழ்த்துக்கள் சொல்லுதல்:

அப்போது நமது முன்னோர் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். தனிக் குடித்தனம் போவது என்பது தனிநாடு கேட்பதற்குச் சமம். மேலும் வஞ்சகம் இல்லாமல் பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர். எனவே எல்லோருக்கும் மாமா, அத்தை, சித்தி எனறு நிறைய உறவுகள். ( இப்போது இருக்கும் சில குழந்தைகளுக்கு இதுமாதிரி உறவுகளே இல்லை. எல்லாம் குடும்ப கட்டுப்பாடுதான்.) எனவே ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, சின்னக் குழந்தைகளிடம் சேர்ந்து விளையாடுவது என்று இருந்ததுண்டு.. இப்போது செல்போன், SMS, FACEBOOK, TWITTER , BLOG வந்து விட்டபடியினால், எல்லாமே ஹாய் தான்.

தீபாவளி மலர்:

முன்பெல்லாம் சில வாரப் பத்திரிக்கைக்ள் தீபாவளி மலர் வெளியிடும். இதில் அப்போது முன்னணியில் இருந்தது கல்கி வார இதழ். அப்புறம் ஆனந்த விகடன், அமுதசுரபி, கண்ணன் என்று வார இதழ்கள். ஒவ்வோரு புத்தகமும் தலையணை போல் நன்கு வெயிட்டாக இருக்கும். ஒவ்வொரு புத்தகத்திலும்  முதற்பக்கத்தில் பெரிய சங்கராச்சாரியார் படம் அப்புறம், அழகான கோயில்கள், புராணக் கதைகள் என்றுவண்ணப் படங்களாக இருக்கும். ஓவியர் சில்பியின் ஓவியங்களை நிச்சயம் ரசிக்கலாம். தலை தீபாவளி ஜோக்குகள், கதைகள், கட்டுரைகள் என்று சிறப்பம்சங்கள். பிலோ இருதயநாத்தின் பயணக்கட்டுரை, வாண்டுமாமா கதை என்று சுவையான பகுதிகள். இருந்தாலும் இப்போது வரும் தீபாவளி மலர்கள் பழமையும் புதுமையும் கலந்து வருகின்றன.

இப்போது வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. இப்போதெல்லாம் தீபாவளி என்பது இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக என்று சேனல்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

பிரியாணி கடைகள்:

  
அசைவ உணவுப் பிரியர்களுக்கு தீபாவளி என்றாலே பிரியாணிதான். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள். ரோட்டுக்கு ரோடு, சந்துக்கு சந்து என்று நிறைய பிரியாணி கடைகள். முன்பெல்லாம் பிரியாணி என்பது அபூர்வமாக விருந்துகளில் மட்டுமே. அதுவும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் மட்டுமே பாய் வீட்டு கல்யாணம் போய்விட்டு வந்தாலே என்ன படா கானாவா? “ என்று சொல்லுவார்கள். மட்டன் பிரியாணி மட்டுமே. முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் ஊருக்கு ஊர் இருந்தாலும் எல்லோரும் போவது கிடையாது. இப்போது மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, வான்கோழி பிரியாணி என்று எல்லா கடைகளிலும் ஏகப்பட்ட வகைகள். பிரியாணி மாஸ்டரிடம் ஆர்டர் தருகிறார்கள் அல்லது வீட்டிற்கே வரவழைத்து செய்யச் சொல்லுகிறார்கள். 


பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா?

பூவே பூச்சூடவா என்று ஒரு அருமையான வண்ணப்படம். அதில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்துடன் ஒரு பாடல். கவிஞர் வாலி எழுதியது .கேட்டு, கண்டு ரசியுங்கள்.!

பட்டா சுட்டு சுட்டு போடட்டுமா  
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா.
சித்தாட சுட்டித்தனம் நான். 
பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா ...

(படம்: பூவே பூச்சூட வா (1985 ) பாடல்: வாலி பாடியவர்: சித்ரா
இசை: இளையராஜா நடிகை: நதியா

இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள்

இந்த தீபாவளிக்குக் காரணமான நரகாசுரனை இன்று யாரும் நினைப்பதில்லை. வருடத்தில் ஒருநாள்! தீபாவளித் திருநாள்! என்றே அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் எனது உளங் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

PICTURES  &  VIDEOS  THANKS  TO  GOOGLE




Monday, 28 October 2013

ஸ்டேட் வங்கியின் கியாஸ்க் சேவை




அண்மையில் P ராஜா என்ற தம்பி எழுதிய  காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!  http://www.uzhavan.com/2013/10/state-bank-of-india.html என்ற  பதிவினைப் படிக்க நேர்ந்தது. அதில் வங்கியில் பணம் கட்டுவது சம்பந்தமாக ஸ்டேட் வங்கியைப் பற்றி எழுதி இருந்தார்.கட்டுரையின் இறுதியில்

// ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!! //

என்று எழுதி இருந்தார். இதற்கு பதில் எழுதுவதோ அல்லது வங்கிக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பது  எனது வேலை இல்லை. என்றாலும் நான் ஒரு முன்னாள் ஊழியன் என்ற முறையிலும். ஸ்டேட் வங்கியில் மட்டுமே கட்டண்ம் வசூலிப்பது போன்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் அந்த பதிவு உருவாக்கி விடக் கூடாது என்பதாலும் அவரது பதிவில் நான் எனது கருத்துரையை

// தம்பிக்கு! நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! உங்களுக்கு ஸ்டேட் பாங்கியில் எந்த கிளையில் கணக்கு இருக்கிறதோ அந்த கிளையிலோ அல்லது அதற்குண்டான சேவை மையத்திலோ பணம் கட்ட கட்டணம் கிடையாது. பத்தாயிரம் வரை சேவை மையத்தில் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால் வேறு ஒரு கிளையில் உள்ள கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் வாங்குகிறார்கள்.. அடுத்த கிளையில் உள்ள கணக்கிற்கு கட்டணம் என்பது  எல்லா வங்கியிலும் உள்ள நடைமுறைதான். //

என்று பதிவு செய்தேன்.

எனது அனுபவம்:

எனது பெற்றோர் தனியே ஒரு வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். வீட்டின் சொந்தக்கார அம்மாள் இருப்பது சென்னையில். வாடகைப் பணத்தை சென்னையில் உள்ள சிண்டிகேட் வங்கிக்கு அவர்கள் கணக்கிற்கு அனுப்பச் சொன்னார்கள். அப்போது எங்கள் பகுதியில் அந்த வங்கியின் கிளை இல்லை. கொஞ்சம் தொலைவில் உள்ள பொன்மலை என்ற இடத்திற்குச் செல்லவேண்டும். அங்கு பணம் கட்டச் சென்றேன். வேறு ஊர் கிளை கணக்கு என்பதால் கட்டணம் வசூல் செய்தார்கள். மேலும் எப்போது அங்கு சென்றாலும் ரெயில்வே தொழிலாளர்களின் கூட்டம். ஒரு சிறு தொகையைக் கட்டுவதற்குள் அரைநாள் சென்றுவிடும். இதே தொகையை ஒரு வங்கி கணக்கின் மூலம் இன்னொரு வ்ங்கிக்கு NEFT முறையில் பரிமாற்றம் (TRANSFER)  செய்தால் கட்டணமும் குறைவு. நேரமும் மிச்சம். எனவே திருச்சியில் ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் எனக்கு இருக்கும் கணக்கிலிருந்து, வீட்டு சொந்தக்காரர் சென்னையில் கணக்கு வைத்து இருக்கும் சிண்டிகேட் வங்கிக்கு NEFT முறையில் வாடகையை அனுப்பி வருகிறேன். அதிகத் தொகையை அனுப்பும் முறைக்கு NEFT / RTG  என்று பெயர். இந்த முறை எல்லா வங்கிகளிலும் உண்டு. கட்டணம் என்பது எல்லா  வங்கியிலும் ஒரே மாதிரி சீராக இல்லை என்பது பெரிய குறைபாடுதான். எனது ஆலோசனை என்னவென்றால் முடிந்தவரை பண பரிமாற்றத்தை தவிருங்கள் என்பதுதான்.

ஸ்டேட் வங்கியின்   கியாஸ்க் சேவை (SBI KIOSK BANKING):  


ஸ்டேட் வங்கியில் இப்போது SBI KIOSK BANKING   என்று தனியார் மூலம் (OUT SOURCING) ஒரு சேவையை தொடங்கி உள்ளனர். கியாஸ்க் ( KIOSK ) என்றால்  விற்பனை ஸ்டால்  என்று பொருள்படும். டீ ஸ்டால், நியூஸ் பேப்பர் ஸ்டால் என்று ஒரு சிறிய இடத்தில் வங்கியின் வர்த்தகத்தை செய்தல். இந்த சேவையில் உள்ள சில அம்சங்கள்  வருமாறு:

'No Frill SBI Accounts' எனப்படும் சேமிப்பிக் கணக்கை இங்கு தொடங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) வைக்கத் தேவையில்லை. க்ணக்கைத் துவங்க கைரேகை மட்டுமே போதும். கணக்கில் ரூபாய் ஐம்பதாயிரம் வரை மட்டுமே கணக்கில் அதிக பட்சமாக வைத்துக் கொள்ளலாம். செக் புத்தகம் கிடையாது. பாஸ் புத்தகம் கிடையாது. கணக்கைத் துவங்கியதற்கு ஒரு அடையாள அட்டை மட்டுமே. கணக்கில் பண பரிமாற்றம் (Cash Transactions) மட்டுமே. அதிகபட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. கணக்கு வைத்து இருப்பவர் மட்டுமே இதனைச் செய்ய முடியும். சேமிப்பு கணக்கில் இருக்கும் கையிருப்பிற்கு வட்டி உண்டு. கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக ரூபாய் பத்தாயிரத்திற்கு விபத்து இன்சூரன்ஸ் பாலிசி (Personal Accident Insurance Policy) உண்டு.

மேலும் அனைத்து வகையான வங்கி கணக்குகளையும் (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாஸிட், பிக்ஸட் டெபாஸிட் ) தொடங்கலாம்.

கணக்கில் வரவு வைத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் மற்ற கிளையின் கணக்குகளுக்கு பணம் கட்ட  தனியே சேவைக் கட்டணம் என்று உண்டு. இங்கு உள்ள படத்தில் விவரம் காண்க.)

 
( மேலே உள்ள CASH REMITTANCE CHARGE  உங்களின் HOME BRANCH  கணக்குகளுக்கு பொருந்தாது. மற்ற கிளை கணக்குகளுக்கு மட்டுமே ) 
கணக்கில் பணம் எடுத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
மற்ற கிளைகளுக்கு பண பரிமாற்றம். (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
கடன் வழங்குதல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)

(இப்போது ஒருநாளைக்கு அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது )

எங்கள் பகுதியில் உள்ள SBI KIOSK BANKING காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை உண்டு.
'No Frill SBI Accounts' தேவைப்படாதவர்கள் தமது கணக்குகளை எப்போதும் போல வீட்டுக்கு அருகில் உள்ள SBI கிளையிலேயே தொடங்கிக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி:

ஸ்டேட் வங்கியின்   இந்த கியாஸ்க் சேவை குறித்து தினமலர்
( திருப்பூர் ) தந்த செய்தியின் சுருக்கம் வருமாறு.

// சுலபமாகவும், எளியமுறையிலும், எவ்வித முதலீடும் இன்றி, கணக்கு துவங்கும் "கியாஸ்க்' வங்கி திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க, அடையாள ஆவணங்கள் மற்றும் முதலீட்டு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்வது இல்லை. ஆகவே, வங்கி சேவையை சுலபமாக்கி, அனைத்து தர மக்களும் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதியாக, ஸ்டேட் பாங்க் "கியாஸ்க்' திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.


இதில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. இரவு 7.00 மணி வரை இந்த புதிய வகை வங்கிகள் செயல்படும். மேலும், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை வாடிக்கையாளர்களின் இடத்துக்கே சென்று பண பரிமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஆவணங்கள் இன்றி, கைரேகையை மட்டும் பதிவு செய்து வங்கி கணக்கு துவங்கலாம். இனி, எழுதப்படிக்கத் தெரியாத கிராமப் புறங்களை சேர்ந்தவர்களும் வங்கி சேவையை பயன்படுத்தலாம்.


புதிதாக கணக்கு துவங்குவோருக்கு, ஒரு வாரத் துக்கு பின், அடையாள அட்டை வழங்கப் படும். ஏ.டி.எம்., கார்டு, செக் புக், பாஸ் புக் வழங்கப்படுவதில்லை.கைரேகை வைத்து பதிவு செய்தால் மட்டுமே வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கை திறக்க முடியும். முதலீடு ஏதும் இல்லாமல் இலவசமாக வங்கி கணக்கு துவங்கப்படுகிறது. ஆரம்ப நிதி மற்றும் குறைந்த பட்ச இருப்புத்தொகை தேவை யில்லை. இருப்பு தொகையை வாடிக்கை யாளர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். குறைபட்சமாக 30, 50, 100 ரூபாய் கூட, இத்திட்டம் மூலம் சேமிப்பு கணக்கில் செலுத்தலாம். வழக்கமாக எஸ்.பி.ஐ., வங்கியில் சேமிக்க வழங்கப்படும் வட்டியே இத்திட்டத் திலும் வழங்கப்படும்.இம்முறையான வங்கி கணக்கில் இருந்து, அனைத்து எஸ்.பி.ஐ., கிளைக் கும் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இம்மையத்தில் கணக்கு இல்லாதவர்களும், இங்கு பண முதலீடு செய்து கொள்ளலாம். //



சரியா தவறா?

இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளம், இலவச மானியங்கள், சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள், பண பரிமாற்றம் அனைத்தையும் அரசு வங்கிகள் மூலமாகவே நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எனவே வங்கிகளின் வேலைச் சுமையை குறைக்கவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் பல வங்கிகள் இந்த முறையைக் கையாளுகின்றன. தனியார் வங்கிகளில் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த முறையில் உள்ள சேவைக் குறைபாடு மற்றும் சேவைக் கட்டணம் குறித்து எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் இருக்கும் அரசியல்வாதிகளாகிய மக்கள் பிரதிநிதிகள்தான் குரல் எழுப்ப வேண்டும்.

( குறிப்பு: இந்த பதிவுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் மற்றும் SBI KIOSK BANKING  பொறுப்பை ஏற்று நடத்தும் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த சில தகவல்களை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொண்டேன் அவ்வளவுதான்.) 



கட்டுரை எழுத உதவி செய்த இணைய தளங்கள்: (நன்றியுடன்)

Sunday, 20 October 2013

நினைவில் நின்ற சினிமா பாடல்கள் சில



தெரிந்தோ தெரியாமலோ  திரைப்பட பாடல்கள் விரும்பியும் விரும்பாமலும் நமது வாழ்வில் நுழைந்து விட்டது.  தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பின் தொடக்க காலத்தில் ஒரு படத்தில் உட்கார்ந்தால், நின்றால், படுத்தால்,  தும்மினால் பாட்டு என்று படம் எடுத்தனர். அவற்றில் பல பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப் பெற்றன.  அதிலும் என்னைப் போல பழைய பட பாடல்கள் ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எனவே
மறக்க முடியாத இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு ! http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_06.html என்று ஒரு பதிவே எழுதினேன். சில பழைய பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனக்கு சில நிகழ்வுகள் ஞாபகம் வரும்.

கிராமத்து திருமண வீடு:

அப்போதெல்லாம் கிராமங்களில் திருமணம் அவரவர் வீட்டிலேயே
நடைபெறும். இப்போது இருப்பதைப் போல அப்போது கல்யாண மண்டபம் சமாச்சாரம் அவ்வளவாக கிடையாது. மின்சாரம் எல்லா ஊர்களுக்கும் அப்போது வரவில்லை. எனவே திருமண வீட்டுத் திண்ணையில் ரேடியோ செட்டுக்காரர் கிராம போன், மைக் செட் , பாட்டரி சகிதம் ஒரு பையனை உட்கார வைத்துவிட்டு சைக்கிளில் சென்று விடுவார். அந்த இடம் ஒரு குட்டி வானொலி நிலையமாக மாறிவிடும். அடிக்கடி மைக் டெஸ்ட் செய்து ஒன் டூ த்ரீ சொல்லுவார்கள். இவ்வாறு சொல்லுவது உள்ளூர்ப் பையன்கள். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் கிராமபோன் பக்கம் மட்டும் யாரையும் விடமாட்டார்கள். திருமண வீட்டில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வரும்போது வைக்கும் பாடல்

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே
காணும் திருநாளைக் காண வாராயோ?

( படம்: பாசமலர் பாடல்:கண்ணதாசன் பாடியவர்கள்: எல்.ஆர்.ஈஸ்வரி )

மணமகன் மணமகளுக்கு தாலி கட்டியதும் ஒலிபரப்பப்படும் பாடல்:
  
மணமகளே மருமகளே வா வா –  
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா

(படம்: சாரதா பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் )

கால்பந்து விளையாட்டு போட்டி:

திருச்சியில் வருடா வருடம் அகில இந்திய கால்பந்து விளையாட்டு போட்டி  நடைபெறும். இந்த போட்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகில் இருக்கும் பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் மூங்கில் கழிகளால் கட்டப்பட்ட உயரமான காலரிகள் நடுவே நடைபெறும் போட்டி தொடங்குவதற்கு முன்னும் இடைவேளையின் போதும் அறிவிப்புகள் செய்து கொண்டும் திரைப்படப் பாடல்களை  ஒலி பரப்புவார்கள். கால்பந்து போட்டி முடிந்ததும் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக வைக்கப்படும் பாடல்:

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

( படம்: பாலும் பழமும் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் )

இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே வெளியேறும் பல ரசிகர்கள் மெயின்கார்டுகேட்டில் உள்ள பத்மா காபி ஹோட்டலுக்கு காபி சாப்பிட செல்லுவார்கள். அவர்கள் கால்பந்து ரசிகர்கள் வரும் நேரத்திற்கு சரியாக காபி, டவரா செட்டுகள், டோக்கன்கள் எல்லாம் ரெடியாக வைத்து இருப்பார்கள்

.
A panaromic view of the Federation Cup football in Tiruchi, with the Rockfort as a backdrop when top three Calcutta contested in 1984. File Photo   PHOTO THANKS TO  “THE HINDU”  

முன்பு சொன்ன பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் இடம் கிடைக்காத்போது அருகிலுள்ள செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. (மேலே உள்ள படம்: செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானம்)
         

விவித பாரதி தேன்கிண்ணம்: 

தமிழ்நாட்டிலுள்ள வியாபார நிறுவனங்க்ள் நிறைய விளம்பரங்களை இலங்கை வானொலிக்கே அளித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் விவித்பாரதி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இதில் வாரம்தோறும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் (போஸ்ட் கார்டு தபால் ஓட்டு) முதலிடம் இரண்டாம் இடம் பாடல்களை அறிவிப்பார்கள். பெரும்பாலும் முதல் இடம் பெறும் பாடல்: ( சிவாஜி கணேசன் நடித்தது )

 





       

         

ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்

( படம்: சிவந்த மண் பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் பி சுசீலா )

இரண்டாவது இடத்தைப் பெறும் பாடல்: (எம்ஜிஆர் நடித்தது)

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

( படம்: நம்நாடு பாடல்: வாலி பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி )

திருச்சி பொருட்காட்சி:

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் திருச்சி சிந்தாமணி காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நேஷனல் பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கடைசி நாளன்று பெரும்பாலும் எல் ஆர் ஈஸ்வரி பாட்டுக் கச்சேரி நடைபெறும். அம்மன் பாடல்களோடு பல திரைப்ப்டப் பாடல்களையும் மேடையில் உட்கார்ந்தபடியே ஆடிப் பாடுவார். அப்போது அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடும் பாடல்:

எலந்தபயம்
எலந்தபயம்
எலந்தபயம்
யேன் போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்

(படம்: பணமா பாசமா பாடல்: கண்ணதாசன்  பாடியவர்: எல் ஆர் ஈஸ்வரி )

கல்லூரியில் படிக்கும்போது: 

நான் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் பிஏ படிக்கும்போது முத்தமிழ் விழாவில் கவிஞர் கண்ணதாசன் சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டார். அப்போது மேடையில் தனது பேச்சின் நடுவே பாடிய பாடல்:

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

( படம்: பாலும் பழமும் :பாடல் கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் – 
 பி சுசீலா )

பெரியார் கல்லூரியில் பிஏ இறுதிண்டின் போதும் திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்ஏ முடிக்கும் போதும் படித்த மாணவநண்பர்களிடையே பிரியா விடை பெற்றபோது வகுப்பு அறையில் ஒலிபரப்பப்பட்ட பாடல்: 

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

(படம்: ரத்தத் திலகம் பாடல்: கண்ணதாசன் பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் பி சுசீலா )

வங்கிப் பணி கிடைத்தபோது:

கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. எனவே வங்கித் தேர்வு எழுதி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இருந்த நான், குடும்பச் சூழ்நிலை கருதி கிடைத்த வங்கி வேலையில் சேர்ந்து விட்டேன். நான் முதன் முதல் வேலைக்கு சேர்ந்த ஊர் மணப்பாறை. இந்த பாடலைக் கேட்கும் போதெலலாம் அந்த ஊர் ஞாபகம் வரும்

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு

( படம்: மக்களைப் பெற்ற மகராசி பாடல்: மருதகாசி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்)

இன்னும் எவ்வளவோ பாடல்கள். அனைத்தையும் சொல்ல இங்கு இடம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நினைவுகள் தொடரும்.

(PICTURES THANKS TO " GOOGLE " )