அது ஒரு பேக்கரி கடை. பெயர்தான் அப்படி. மற்றபடி, அங்கு வடை, பஜ்ஜி,
முறுக்கு, பானி பூரி, மசாலா பூரி, ஜிகிர்தண்டா, பேக்கரி வகையறாக்களான கேக்,
பிஸ்கட், ரொட்டி அனைத்தும் மற்றும் காபி, டீ விற்பனையும் உண்டு. நான் வெளியே கடைத்தெரு
என்று சென்று வரும்போது அந்தக் கடையில் காபி குடிப்பது வழக்கம். சிலசமயம்
மெதுவடையும் சட்னியும் உண்டு. கடையின் உள்ளே மேஜையில் பரிமாறுதலும் வெளியே டோக்கன்
முறையில் விற்பனையும் உண்டு. இந்த கடையில் பணிபுரிபவர்களில் ஒரு சிலரைத் தவிர
அனைவருமே இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள். தமிழ் தெரியாது. ஆனாலும் சமாளித்துக்
கொள்கிறார்கள். இந்த கடையை நடத்துபவர் ஒரு தமிழர்.
இன்னொரு ஸ்வீட் ஸ்டால். அங்கேயும் இதே கதைதான். அங்கு இனிப்பு காரம் தயார்
செய்வதிலிருந்து விற்பனையாளர்கள் வரை வட இந்திய இளைஞர்கள்தான். நாம் போனால் சிலசமயம்
கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டி இருக்கும்.
ஒருமுறை மூன்று கால் இனிப்பு என்பதனை மூன்று விரல்களால் காட்டியபோது, மூன்று கிலோவாக
போடத் தொடங்கி விட்டார் அங்குள்ள இளைஞர்.
ஒருமுறை வெளியூர் சென்றுவிட்டு வீடு வர நேரமாகிவிட்டது. இரவுநேர டிபனுக்காக
பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த இரவுநேர ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று இருந்தேன்.
அங்கு முக்கால்வாசி பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வட இந்திய இளைஞர்கள்.
மேஜையில் தண்ணீர் வைப்பது முதல், பரிமாறுவது, சுத்தம் செய்வது வரை சலிக்காது செய்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் முகத்தில் இனம் தெரியாத சோகம்.
ஒரு நண்பர் வீட்டு நிச்சயதார்த்தம். ஒரு ஹோட்டலில் மினிஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் முடிந்ததும், மதிய உணவு தொடங்கியது. சாப்பாட்டு மண்டபம் சென்றபோது
ஒரு மணிப்பூர் இளம்பெண் கைகூப்பி, மழலைத் தமிழில் ஒவ்வொருவரையும், ”வணக்கம்” சொல்லி வரவேற்றார். அங்கு உண்வு பரிமாறலில் இருந்து
அனைத்து பணிகளையும் செய்தது மணிப்பூர் இளைஞர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு
மேற்பார்வையாளர் அவர்களுக்கு உதவியாக இருந்தார்..
அதேபோல் ஒரு இடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அங்கு
ரெடிமேட் கான்கிரீட் போடும் கலவை எந்திரம் கொண்டு வந்தார்கள். அதில் பணிபுரிந்த
அனைவருமே இந்தி பேசும் இளைஞர்கள். அவர்களை வழி நடத்த இந்தி தெரிந்த நம்மூர்க்காரர்
ஒருவர். நான்கு வழிசசாலை வேலையாட்கள், மெட்ரோ ரயில் பணி செய்பவர்கள் என்று எல்லா
இடத்திலும் அவர்கள்தான். லல்லு பிரசாத் யாதவ் மத்தியில் ரெயில்வே அமைச்சராக
இருந்தபோது நிறைய பீகாரிகள் தமிழ்நாட்டில் ரெயில்வேயில் நுழைக்கப்பட்ட்னர்.
மேலே சொன்ன பணிகளில் மட்டுமன்றி உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா இடத்திலும்,
தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும்
இவர்கள் தரும் சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாக உழைக்கிறார்கள்.
ஒருபக்கம் இவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் இன்னொரு பக்கம் ஒருசிலர்
செய்யும் திருட்டு வேலைகள் மற்றும் கிரிமினல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் அனைவரையுமே சந்தேகத்தோடு பார்க்க வைக்கின்றன.
எனவே இவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இவர்களது முழு விவரங்களையும்
வைத்துக் கொள்ளுதல் நல்லது.
PHOTO (above) THANKS TO : HINDUSTAN TIMES
இப்படி ஏன் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்கிறார்கள்; உள்நாட்டு தமிழர்களை வைத்துக் கொள்வதில்லை? இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல். உள்ளூர் தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும், தொழிலாளர் பிரச்சினை, சில இடங்களில் ஜாதி கட்சிகளால் பிரச்சினை – இவையே முக்கியமான காரணமாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் மேஜை சுத்தம் செய்ய, சாப்பிட்ட இலையை எடுக்க ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் இங்குள்ள முதலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. இதேபோல் வடக்கில் உள்ளவர்கள் இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.