எங்கள் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினர் ஒருவர் (அடிக்கடி எங்கள் வீட்டிற்கு
வருபவர்தான்) சென்றமுறை வந்து சென்றபின் செல்போனில் சொன்ன கருத்து இது. “ நீங்கள் உங்கள்
வீட்டு நிலைப்படியில், மகாபாரதத்தில் போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு
உபதேசம் செய்யும் காட்சியை வைத்து இருக்கிறீர்கள். இதுமாதிரி படங்களை வீட்டில்
வைக்க மாட்டார்கள். அதனால்தான் உங்களுக்கு சில கஷ்டங்கள் வருகின்றன. எனவே அதனை
எடுத்துவிட்டு வேறு படத்தை வையுங்கள் ” என்பதுதான்.
அதற்குக் காரணம் அப்போது எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள்தான். அந்த உறவினர்
ஒவ்வொன்றுக்கும் நாள், நட்சத்திரம், சகுனம் என்று எதற்கெடுத்தாலும் ஜோதிடர்களிடம் அடிக்கடி செல்பவர். எனக்கு
இதுமாதிரி விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கிடையாது. எனவே அவர் சொன்னபடி நான் எதுவும்
செய்யவில்லை. மேலும் நாங்கள் வீடு கட்டத் தொடங்கி வைத்த முதல் நிலை அது.
எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் வந்த கதை:
நான் படித்த திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கு அப்போது தலைமை
ஆசிரியராக இருந்த பூவராக அய்யங்கார் அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்தபோது, ஒரு மாணவனிடம்
மகாபாரதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அவனுக்கு மட்டுமல்ல அங்குள்ள யாருக்குமே
பதில் சொல்லத் தெரியவில்லை. உடனே அவர் பள்ளிக்கூடம் விட்டதும் மாணவர்களுக்கு மாலையில்
மகாபாரதம் சொல்ல வேண்டும் என்று பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர் ஒருவரை
ஏற்பாடு செய்தார். அந்த தமிழாசிரியர் சமஸ்கிருத புலமை உடையவர். வடகலை அய்யங்கார். அவரும்
தினமும் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்
மகாபாரதக் கதையை இடையிடையே சமஸ்கிருத சுலோகங்களோடு சுவாரஸ்யமாய் சொன்னார். விடுமுறை
நாட்கள் தவிர இரண்டு வாரம் தொடர்ந்து சொல்லப்பட்டது. நான் கதை கேட்கும் ஆர்வத்தில்
தவறாமல் எல்லா நாட்களும் சென்று வந்தேன். அன்றிலிருந்து எனக்கு மகாபாரதக் கதையில்
ஈடுபாடு ஏற்பட்டது.
போர்க்களத்தில் எதிரிகளாக எதிரில் நிற்கும் உறவினர்களை நினைத்து அர்ச்சுனன்
போர்புரிய விரும்பாது,
வில்லையும் அம்பையும் அம்பறாத்துணியையும் கீழே வைத்துவிடுகிறான். அப்போது கிருஷ்ணன் ” தர்மம், யுத்தம் என்று வந்து விட்டால், எதிரில் நிற்பவன்
உறவினன்,ஆசிரியன் என்று பார்க்கக் கூடாது. கடமையைச் செய். “ என்று அர்ச்சுனனுக்கு உபதேசம்
சொன்ன காட்சி எனது மனதில் பதிந்து விட்டது. அதன் பிறகு கல்லுரி நாட்களில் ராஜாஜி எழுதிய மகாபாரதம்,
அ.லெ. நடராஜன் மொழிபெயர்த்த மகாபாரதம் ( நான்கு பாகங்கள்) படித்தேன். என்னைப்
பொருத்தவரை மகாபாரதம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு இதிகாசம். குறிப்பிட்ட
ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதாக நினைக்கக் கூடாது. அதில் வரும்
பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை உணர்த்துவன. மகாபாரதத்தில் பல கிளைக் கதைகளும் நீதிக்
கருத்துக்களும் உள்ளன. பக்தி உணர்வோடு படிப்பவர்கள் அல்லது ஒரு இதிகாசம் (MYTHOLOGY) என்ற முறையில்
படிப்பவர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விமர்சனம்
எதில்தான் இல்லை?
வங்கிப் பணியில் சேர்ந்து சில ஆண்டுகள் கழிந்து, வீடு கட்டத் தொடங்கியவுடன் நிலை வைக்கும் நேரம் அது. நிலைக்கு மேல் வைக்கும் கார்விங் ( CARVING) எதை வைப்பது என்பதனை தேர்வு செய்வதற்காக நானும்
கட்டட ஆசாரியும் ஒரு தொழிற்கூடம் சென்றோம். அஙுகு தாமரை , கஜலட்சுமி, ராஜலட்சுமி, சூரியன் என்று பல கார்விங் பணிகளைக் காட்டினார்கள். அப்போது அதில் ஒன்று மாணவப் பருவத்தில் எனது மனதில் பதிந்த “
கீதா உபதேசம்”.
அங்கிருப்பவர்களிடம் இதை வீட்டில் வைக்கலாமா? என்று கேட்டேன் . தாராளமாக வைக்கலாம். அதனால்தான் கார்விங் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம் என்றார்கள். எங்கள்
கட்டட ஆசாரி அவர்களும் ” வைக்கலாம்
” என்றார். மேலும் பல பிரபல ஓட்டல்களில், காசாளர் ( CASHIER) இருக்கும் இடத்தில் இந்த படத்தை
பார்த்துள்ளேன். எனவே அந்த “
கீதா உபதேசம்”
கார்விங் பலகைக்கு
ஆர்டர் கொடுத்தேன். இவ்வாறாக எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் காட்சி வந்தது.
இந்த வீட்டிற்கு வந்த பிறகு எனக்கும் எனது மனைவிக்கும் (மத்திய அரசு ஊழியர்)
பதவி உயர்வு வந்தது. எனது மகள் எம்.எஸ்சி முடித்து வங்கிப் பணிக்கு சென்றார்; அவருக்கு.
திருமணமும் நடைபெற்றது. அடுத்தவர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பும் இருந்தது.
மகனும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.
யார் மனதில்தான் கவலை இல்லை?
வாஸ்து என்ற பெயரில் சிலர் ஏதேதோ சொல்லுகிறார்கள். காவி உடை அணிந்த முருகன், சனீஸ்வரன்,
ருத்ரதாண்டவ நடராசர் போன்ற படங்களையும் வைக்கக் கூடாது என்கிறார்கள். எனது கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருதய
ஆண்டவர் படம் , இயேசு சிலுவையில் உள்ள படம் போன்றவற்றை வைப்பதில்லை. எனக்கு
இவைகளில் நம்பிக்கை இல்லை.
ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. சிலருடைய
கவலை வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய கவலை வெளியில் தெரிவதில்லை. எல்லோரும்
சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். நமக்கும் மேலே ஏதோ ஒரு
சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எல்லாம் இயங்கி வருகின்றன. நமது எல்லா
கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் எந்த படத்தை வைத்தாலும்
வைக்காவிட்டாலும் வருவது வந்துதான் தீரும். அதனை ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். படம் வைப்பது
என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது.
கீதாசாரம்:
இப்போது “கீதாசாரம்” என்ற தலைப்பில் கீதோபதேசம் காட்சி வண்ணப் படமாக
பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. நிறையபேர் வீட்டில் இந்த
தத்துவத்தைக் காணலாம். சிலர் சட்டைப் பையிலும், கைப் பைகளிலும் இதனை வைத்துக்
கொள்கிறார்கள்.