Monday, 24 April 2017

சசிகலா எதிர்ப்பு அரசியல்



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , கலைஞர் கருணாநிதியும் திரையுலக நண்பர்கள். இந்த நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதியா அல்லது நாவலர் நெடுஞ்செழியனா என்ற கேள்வி வந்த போது., அப்போது கட்சிக்கு வெளியே உள்ள பலரும் சொன்ன வாசகம் படித்த நாவலர்தான் வர வேண்டும் என்பது. ஆனால் அப்போது, எம்.ஜி.ஆர் தனது திரையுலக நண்பர் கருணாநிதிக்கு ஆதரவு தந்தார். நாவலருக்கென்று கோஷ்டி அரசியல் நடத்த ஆட்கள் இல்லை. கட்சித் தொண்டர்களின் ஆதரவும் கலைஞருக்கே இருந்தது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல்

முதல்நாள் ஒரு தி.மு.க மாநாட்டில் கட்சிக்காக இராணுவத்தையே எதிர்ப்பேன் என்ற எம்.ஜி.ஆர், ஒருநாள் கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர் உட்பட மேலிடம் வரை அனைவரின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்றார். தி.மு.கவை உடைக்க, இந்திரா காங்கிரசின் சதி என்றார்கள். எம்ஜிஆர் தி.மு.கவை விட்டு நீக்கம் செய்யப்பட்ட போது ‘எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்; கருணாநிதி அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்” என்று பிரச்சாரம் செய்தார்கள். மேலும் கட்சியின் தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்குப் பின்னாலேயே சென்றார்கள். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கியதும் ஆட்சியைப் பிடித்ததும் எல்லோரும் அறிந்த வரலாறு. அன்று தொடங்கிய கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவின் காலத்திலும் தொடர்ந்தது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று சொன்னார்கள்; காவிரிப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலும் கருணாநிதிக்கு எதிராகவே வை.கோபால்சாமி, நடராஜன் (சசிகலா), பழ.நெடுமாறன், சுப்ரமணியன் சுவாமி, போன்ற தி.மு.க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வெளியே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் இவர்களுக்குள் ஒரு UNDERSTANDING உண்டு. கருணாநிதி எது செய்தாலும் எதிர்ப்பார்கள்; ஆனால் அதே காரியத்தை ஜெயலலிதா செய்தால் வாயே திறக்க மாட்டார்கள். ஜெயலலிதா காலத்தில் இன்னும் வேகமாக கருணாநிதியை ஒரு தீயசக்தி என்று சொல்லி அரசியல் நடந்தது. கலைஞர் கருணாநிதியின் குடும்பம் சார்ந்த அரசியலும் தி.மு.க ஆட்சியில் ’குறுநில மன்னர்கள்’ பாணியில் மாவட்டத் தலைவர்கள் செய்த பரிபாலனமும் இந்த எதிர்ப்பிற்கு வலு சேர்த்தன.

சசிகலா அரசியல்

சசிகலாவின் அரசியல் என்பது, ஜெயலலிதாவோடு நட்பு தொடங்கிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது எனலாம். ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி நிழல் அரசியல் நடத்தியவர் இந்த சசிகலாவை இயக்கியவர் அவரது கணவர் நடராஜன். இந்த அரசியலுக்கு மேலே சொன்ன கருணாநிதி எதிர்ப்பு அரசியல் பக்க பலமாக விளங்கியது.
இப்போது வரலாறு திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதியின் உடல்நிலையாலும் இப்போது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது மங்கி விட்டது. கலைஞருக்குப் பின்னால் தி.மு.க எப்படி என்று சொல்ல முடியாது. எனவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது எதிர்மறை பலனையே தரும். அதேபோல இறந்து போன ஜெயலலிதாவை குற்றவாளி என்று திரும்பத் திரும்ப சொன்னாலும் எதிர்மறை பலன்தான். ( நமது நாட்டில் எப்போதுமே, இறந்தவர்களை அவர் எவ்வளவு பொல்லாதவராக இருந்தாலும் மன்னித்து, நல்லவராக்கி விடுவார்கள்: இது தெரியாத ஸ்டாலின் ஜெயலலிதாவை தூற்றுவதில் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.. பி.ஜே.பியிலிருந்து ஜெயலலிதா பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை என்பதிலிருந்தே அவர்களின் யுத்தியை அறிந்து கொள்ளலாம் ) இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், இதுநாள் வரை சசிகலா நடராஜன் என்று அழைக்கப்பட்ட இவர் இப்போது வி.கே.சசிகலா என்ற பெயரில், சின்னம்மாவாக உருவெடுத்து இருக்கிறார்.

சசிகலா எதிர்ப்பு அரசியல்

அன்றைக்கு திமுகவை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவிற்கும் ஜாதி மத அபிமானங்களைக் கடந்த  கட்சித் தொண்டர்கள் என்ற ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அரசியல் பிரவேசம் செய்துள்ள சசிகலா நடராஜனுக்கு இந்த தொண்டர்கள் ஆதரவு இல்லை. எனினும் ஜெயலலிதா மறைவிற்குப் பின், முதல்வர் பதவியை அடைய ரொம்பவும் சாமர்த்தியமாகவே காய்களை நகர்த்தினார். ஏனெனில் அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவருமே ( ஓ.பி.எஸ் உட்பட) சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் கோர்ட் தீர்ப்போ அவரை சிறைக்குள் தள்ளி விட்டது. இப்போது சிறையில் இருந்தபடியே, தமிழ்நாட்டின்  அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் ஜாதி, மதம் கடந்து சொல்லும் ஒரு வாசகம் “வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இந்த சசிகலா வகையறாக்கள் மட்டும் வர வேண்டாம்” என்பதே. அந்த அளவுக்கு வெளியே வெறுப்பு அனல் பறக்கிறது. இதனாலேயே, ஓ.பி.எஸ் எனப்படும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் பலரும் அவற்றை கண்டு கொள்வதில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பியும் தாங்கிப் பிடிக்கிறது.. ( சசிகலா - நடராஜன் மட்டும் தனக்கு ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை வைத்து, தமிழ், தமிழர் நலன் என்று தமிழ்நாட்டு நலனிலும் உண்மையான அக்கறை காட்டி வெளிப்படையான அரசியல் செய்து இருந்தால், இன்று எங்கோ உயர்ந்து இருப்பார் ; இவருக்கென்று ஒரு ‘மாஸ்’ ( mass ) உருவாகி இருக்கும். ஆனால், நிழல் மனிதர்கள் வெளிச்சத்தில் மறைந்து போய்விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.)

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் “நான் ஒரு பாப்பாத்தி“ என்று தன்னை சொல்லிக் கொண்டாலும், பிராமணர்களுக்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பதே அந்த சமூக மக்களின் கருத்து. இன்றும் ”ஜெயலலிதா கெட்டிக்காரி” என்று வாயால் சொன்னாலும், அவரைப் பற்றி அவர்கள் சொல்லும் ஒருவரி விமர்சனம் ‘பிடிவாதக்காரி’ என்பதே. பிராமணர்களில் பலருக்கு இன்னும் காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திரரை கைது செய்த விவகாரத்தில் யார் பின்புலம் என்பதை மறக்க மாட்டாதவர்களாகவே உள்ளனர்.  
   
அடுத்து என்ன?

எம்.ஜி.ஆர் அபிமானம், ஜெயலலிதாவின் செல்வாக்கு என்ற காரணங்களால் கிடைத்த, தற்போதுள்ள ஆட்சி, அதிகாரம், எம்.எல்.ஏ பதவி என்ற காரணங்களுக்காக – இந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்தார்கள். அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். தினகரன் மூலம் தனது பதவிக்கு ஆபத்து என்றதும், இவரும் ஓ.பி.எஸ் போலவே இப்போது சசிக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிறார். எத்தனை நாட்களுக்கு இப்படியே ஓடும்? ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு அல்லது கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருமேயானால், எல்லாம் தலைகீழ்தான்.

ஆனால் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை, சசிகலாவிற்கான எதிர்ப்பை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காலூன்ற, மேலே மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பி.ஜே.பி முயற்சி செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.கவை தங்கள் கைப்பாவையாக்கி, அவர்களை முன்னிறுத்தி காரியம் நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. இதற்கு தி.மு.க எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களது மறைமுக ஆதரவும் உண்டு. காரணம் அவர்கள், வெளியே பெரியார் கொள்கை, தமிழ் தேசியம், ஈழம் என்று பேசினாலும் அவர்களைப் பொருத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் மேலும் கலைஞரின் நேரடி வழிகாட்டுதல் இல்லாத இல்லாத திமுக இனி எப்படி பயணம் செய்யும் என்று சொல்ல முடியாது. இது திராவிட பூமி, பெரியார் மண், இங்கு பி.ஜே.பியை விட மாட்டோம் என்பதெல்லாம், சிலர் தமக்கு தாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள் ஒழிய வேறு இல்லை. ஏனெனில் இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்போ, ஒற்றுமை உணர்வோ அல்லது சகிப்புத் தன்மையோ கிடையாது .தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் என்று வந்தால், அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி என்று ஒன்று உருவாகி, சட்டசபைக்குள் பி.ஜே.பிக்கு என்று சில சீட்டுகள்  கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. 

(பேசாமல் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ‘பிரஜா ராஜ்யம்’ என்ற, தான் தொடங்கிய கட்சியை காங்கிரசில் கரைத்தது போல அ.தி.மு.கவை பா.ஜ.கவில் இணைத்து விடலாம் )
   
( ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. கால மாறுதலுக்கு ஏற்ப, கொஞ்சம் திருத்தி வெளியிட்டுள்ளேன் )                        
                           xxxxxxxxxxxxxxxxxxx .

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஜெயலலிதா - கண்ணீர் அஞ்சலி! http://tthamizhelango.blogspot.com/2016/12/blog-post_7.html
மீண்டும் ஆட்சியில்அம்மாதான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html

Monday, 3 April 2017

முதுமை ஒரு சாபம்



அன்று மாலை, எனது அப்பாவை ( வயது 91.) ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர் அப்பாவைப் பற்றிய நலன் விசாரித்தார்.அப்போது அந்த நண்பர் ‘ வயதானால் பெரியவர்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறார்கள்” என்றார். நான் அவருக்கு மறுமொழியாக ‘உண்மைதான். ஆனால் மனித வாழ்வில் முதுமை ஒரு சாபம்” என்றேன்.. அவரும் ”ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?” என்று வினவ, நானும் ‘மற்ற உயிரினங்கள் நோயுற்றாலோ அல்லது முதுமை அடைந்தாலோ அவற்றை உணவாக உண்ணும் உயிரினங்கள் அவற்றின் உயிரைப் போக்கி இவ்வுலக கஷ்டத்திலிருந்து  விடுவித்து விடுகின்றன. ஆனால் மனிதன் முதுமை அடையும்போது படும் துன்பங்கள் சொல்லி முடியாது.” என்றேன் 

முதுமை என்பது

ஒருவர் 60 வயதை கடந்து விட்டாலேயே அவரை முதியவர்  என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். இன்னும் கூடுதலாக மூத்த குடிமக்கள் ( Senior Citizens ) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் மற்றும் மருந்துகள் காரணமாக 60 வயதைக் கடந்தாலும் 90 வயதுக்கு மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.

முதுமையில் படும் கஷ்டங்கள்

ஆனாலும் முதுமை என்ற நோய் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக, வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக இருக்கிறது. சிலருக்கு அறுபதில் வரலாம். அல்லது அறுபதிற்கு மேலும் வரலாம். பட்டிமன்றத்தில் வேண்டுமானால் முதுமை ஒரு வரம் என்று வாதாடலாம். ஆனால் நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

எனது அப்பா

எனது அம்மா, அப்பா ( ரெயில்வே ஓய்வு ) இருவரும். வாடகைக்குப் பிடித்த, ஒரு தனிவீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அம்மா ( 78 ) இறந்த பின்பும் தனியாகவே எனது தந்தை 90 வயது வரை நன்றாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொண்டும் தனியாகவும் அதே வீட்டில்  இருந்தார். என்னோடு அல்லது எனது தங்கை வீட்டிற்கு வந்து இருந்து கொள்ளுங்கள் என்று அழைத்த போதும் வரவில்லை. இப்போது முதுமை ஆட்கொண்டு, கடுமையான பல கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் அடைந்ததால், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். அவருக்கு இன்னும் தனியாக இருக்கவே விருப்பம். ( அவருக்கு 91 வயது முடிந்து 92 ஆவது வயதும் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது ).இனிமேல் மருந்து மாயம் எதுவும் அவரிடம் செல்லாது. இருக்கும் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் நானே அருகில் இருக்கும்படியான சூழ்நிலை

எனது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் திரும்புவார். வேலை வாய்ப்பு கோச்சிங் கிளாஸ் சென்று வரும் எங்களது மகனும் அப்படியே. இவர்கள் இருவரும் திரும்ப வரும் வரையிலும் நான் எங்குமே செல்ல முடியாது. எனது அப்பாவிற்கு நான் அருகிலேயே இருக்க வேண்டும். கால் மணிக்கு ஒருமுறை அவரை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ( நண்பர்களும் உறவினர்களும், எனது தந்தைக்கு disposable diapers போட்டுவிடச் சொல்லுகிறார்கள்.) மீதி நேரமெல்லாம் ஒன்று சேரிலேயே உட்கார்ந்து இருப்பார் அல்லது தரையில் பாயிலேயே படுத்து இருப்பார். தூங்குகிறாரா அல்லது விழித்து இருக்கிறாரா என்றே தெரியாது. திடீரென்று 40 வருடத்திற்கு முந்தைய சங்கதியை நேற்று நடந்தது போல் சொல்லுவார். இந்தநிலையில்,நானும் ஒரு சீனியர் சிட்டிசன்.  இப்போது அவர் அடைந்து கொண்டு இருக்கும் துன்பங்கள், அவரையும் அறியாமல் அவர் செய்யும் தவறுகள் மற்றும் அவரால் எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை சமாளித்த விதம் யாவற்றையும் இப்போது இங்கே சொல்வது சரியாக இருக்காது  ( எனது நண்பர்கள் பலர் அவரை நல்ல ஹோம் ஒன்றில் சேர்க்கும்படி சொல்லுகிறார்கள். திடீர் இடமாற்றம் எனது தந்தைக்கு எப்படி ஒத்துப் போகும் என்று யோசனையாகவும் உள்ளது..)

கிராமப்புறமும் நகர்ப்புறமும்

எனக்குத் தெரிந்து கிராமத்தில் இருக்கும் தள்ளாத முதியவர்கள் ஒவ்வொரு நாளையும் எளிதாகவே கழித்து விடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அங்கு அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு திண்ணையிலோ, அல்லது ஒரு கொட்டகையிலோ அல்லது ஒரு தோப்பிலோ  சுதந்திரமாக இருந்து கொண்டு காலத்தைக் கழித்து விடுகிறார்கள். எனது பெரியப்பா ஒருவர், தனது கிராமத்து வீட்டு கொல்லைப் புறத்தில் கோமணம் ஒன்றைக் கட்டிக் கொண்டு பகல் முழுக்க அங்கேயே இருப்பார். யாரேனும் வந்தால் அல்லது ஏதேனும் எடுப்பதற்கு என்றால் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வருவார். என்னுடைய தாத்தா தனது கடைசி காலத்தை திண்ணையிலேயே முடித்தார். இப்படியே கிராமத்து உறவுகள் பலர்.

பெரும்பாலும் கிராமத்தில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒரு ஆள் தேவைப் படுவதில்லை. வீட்டில் இருப்பவர்களும், அவ்வப்போது சுற்றி இருப்பவர்களும் தேவைப்படும் சமயத்தில் முதியவருக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். நடக்க முடிந்தவர்கள் ஒரு ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நடமாடுவார்கள். தங்கள் வயது நண்பர்களைச் சந்திக்கும் போது தங்கள் முதுமையை மறந்து விடுகிறார்கள்.. ( இதையேல்லாம் யோசித்து, அப்பா ரிடையர்டு ஆனதுமே, எனது அம்மாவையும் அப்பாவையும், எங்கள் சொந்த ஊருக்கோ அல்லது அம்மா வழி சொந்தங்கள் இருக்கும் ஊருக்கோ சென்று விடுங்கள்; அங்கே நல்ல வசதியுடன் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை )
 ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லம்

ஒரு காலத்தில் முதியோர் இல்லத்தில், பெற்ற பிள்ளைகளே தங்கள் தாய் தந்தையரை சேர்த்தல் என்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பாவச் செயலாகக் கருதப் பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாத ஒன்றாக கருதப் படுகிறது. கிராமத்தில் அவர்களைத் தனியே விட்டுவிட்டு  சொந்த வேலைகளைப் பார்க்க நாம் சென்று விடலாம். ஆனால் நகர்ப்புறத்தில் அவ்வாறு விட்டு விட்டு செல்ல முடியாது. அவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒருவர் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரமான கதை உண்டு. நகர்ப் புறத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க சென்று விடுகிறார்கள். இப்போது பெற்றோரை விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் முதியவர்களைக் கவனிக்க ஆள் தேவைப் படுகிறது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் முதியோர் இல்லம் என்பது பாதுகாப்பானதாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. (இந்த முதியோர் இல்லம் குறித்து தனியே ஒரு பதிவை எழுத வேண்டும்).

இந்த முதியோர் இல்லம் குறித்து இணையதளத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள். பல முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களாக நன்கொடை எதிர்பார்த்து நடத்தப் படுகின்றன. சாதாரண கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு ஹாஸ்டல் போன்று நடக்கும் இல்லங்களும் உண்டு; கார்ப்பரேட் கணக்காக அபார்ட்மெண்ட் ஸ்டைலில் அதிகக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடக்கும் இல்லங்களும் உண்டு. 

முதியோர் இல்லம் என்றவுடன், வலைப்பதிவர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் ’கனவில் வந்த காந்தி’ என்ற தொடர்பதிவு ஒன்றினை எழுதச் சொன்னபோது, நான் எழுதிய தொடர் பதிவும், அதிலுள்ள கேள்வியும் பதிலும் நினைவுக்கு வந்தது.
( http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.  )

// 4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம். //

                                                          xxxxxxxxxxxxxxxx

தொடர்புடைய எனது பிற பதிவுகள்:
                                                                                                                                                         

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்

http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_30.html

                                                                                                                                   

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்

http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html