Saturday, 23 April 2016

கவிஞர் வைகறைக்கு கண்ணீர் அஞ்சலி!




நேற்று முன்தினம் (21.04.16) மாலை, எப்போதும் போல், கணினித் தமிழ்ச் சங்கத்தின் வாட்ஸ்அப் (Whatsapp) செய்திகளைப் பார்க்கலாம், என்று எனது செல்போனைத் திறந்த போது ஒரு அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது.

// அன்புக் கவிஞர் வைகறை காலமாகி விட்டார்… //

தகவலைத் தந்தவர் கவிஞர் மீரா செல்வகுமார்.. அவரைத் தொடர்ந்து நண்பர்கள் பலரும் வாட்ஸ்அப்பில், கவிஞருக்கான தங்களது இரங்கலை பதிவு செய்து இருந்தனர். நான்,

// அதிர்ச்சியான செய்தி. நம்ப முடியவில்லை. அந்த சிரித்த முகத்தை என்னால் மறக்க இயலாது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும் – கண்ணீருடன் தி.தமிழ் இளங்கோ //

என்று, எனது கண்ணீர் அஞ்சலியைப் பதிவு செய்தேன்.

நல்லடக்கம்:

அவரது சொந்த ஊரான அடைக்கலாபுரத்தில் (தூத்துக்குடி தாண்டி ஆறுமுகநேரி அருகில்) வெள்ளிக்கிழமை (22.04.16) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் நடைபெறும், புதுக்கோட்டை நண்பர்கள் காலை 7 மணிக்கு ஒரு வேனில் புறப்பட இருப்பதாக தகவல் தந்தார்கள். அவர்களோடு செல்ல எனக்கு சாத்தியப் படாததால், நான் மட்டும் திருச்சியிலிருந்து (காலை 7 மணிக்கு புறப்பட்டு) பஸ்சில் மதுரைக்கு சென்றேன்; மதுரையிலிருந்து, தூத்துக்குடி வழியாக மதியம் 2.45க்கு அடைக்கலாபுரம் சென்று சேர்ந்தேன். புதுக்கோட்டை நண்பர்கள் எனக்கு முன்னதாக வந்து சென்று விட்டனர். ஊரினுள் நுழைந்ததும் கவிஞர் வைகறை என்று சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. இறந்தவர் புதுக்கோட்டையில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்று சொன்னதும்தான் அவர்களுக்கு தெரிந்தது. வழி காட்டினார்கள்.

கவிஞரின் வீட்டின் வெளியே காம்பவுண்டிற்குள் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அவரது உடல் சவப்பெட்டியில், பூமாலைகளின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. அதே சிரித்த அமைதியான முகம். அருகில் அவரது மனைவி கதறியபடியே இருந்தார். அவரது ஒரே மகன், உறவினர் ஒருவர் மடியில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டு இருந்தான். எனக்கு மனது தாளவில்லை. கவிஞரின் வீடு இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப் படவில்லை.அங்கு போன பின்புதான், கவிஞர் வைகறை அவர்கள் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர் என்பதும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பதும் எனக்கு தெரிய வந்தது. உறவினர்களும், நண்பர்களும், அவரோடு பணி புரிந்தவர்களும் குழுமி இருந்தனர்.

சரியாக மூன்று மணி அளவில், அந்த ஊர் பங்கு சாமியார் வந்து ஜெபம் செய்த பின்பு கவிஞரின் உடலை, அவர்களின் பங்கு கோயிலான ‘அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் வைத்து, பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட அவ்வூர் கல்லறைத் தோட்டத்திலேயே அவரை  நல்லடக்கம் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, நான் நேற்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.

எப்படி இறந்தார்?

அடைக்கலாபுரத்திற்கு, திண்டுக்கல்லிலிருந்து கவிஞர் வைகறை அவர்களது ஃபேஸ்புக் (facebook) நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் சொன்ன தகவல் இது. கவிஞர் வைகறை எப்போதுமே, தனது உடம்பிற்கு ஏதாவது என்றால் , தனக்கு இப்படி இருக்கிறது என்று மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்து எடுத்துக் கொள்வாராம். டாக்டரிடம் செல்வதில்லை. ரொம்ப நாளாகவே அவருக்கு வயிற்றுவலி இருந்திருக்கிறது. எப்போதும் போல, அல்சர்தானே என்று எண்ணி, இவர் மருந்தை மெடிகல் ஷாப்பில் வாங்கி சுயமருத்துவம் பார்த்து இருக்கிறார். வலி அதிகமாகவே கவிஞரை, புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு, பின்னர் மதுரைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விதி விளையாடி விட்டது. 35 வயதிலேயே அவருக்கு மரணம்.

( நான் பணியில் இருந்தபோது, என்னோடு பணிபுரிந்த, யூனியன் தலைவர் ஒருவரும் இப்படித்தான். தனக்கு அல்சர்தான் என்று நினைத்துக் கொண்டு, ஜெல் எனப்படும் திரவ மருந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தார். ஒருநாள் திடீரென்று வயிற்றுவலி அதிகமாக, திருச்சியிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனின்றி இறந்து போனார். PANCREAS என்றார்கள். இது நடந்து 15 வருஷம் இருக்கும்)

எனவே நண்பர்களே , டாக்டர் ஆலோசனையின்றி , சுயமருத்துவம் (Self treatment ) எதுவும் செய்யாதீர்கள்.

கவிஞர் வைகறை பற்றி கூகிள் ப்ளஸ் தரும் தகவல்:

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் தர்மபுரியில் வசித்து வந்தார். ஆசிரியப் பயிற்சி படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து “வளர்பிறை” எனும் கையெழுத்து இதழ் நடத்தினார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ‘நந்தலாலா.காம்’ எனும் கவிதைகளுக்கான இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள்:-
ஒரிஜினல் தாஜ்மகால் (2008)       
நிலாவை உடைத்த கல் (2012)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்  (2014)
இதழாசிரியர்:-    நந்தலாலா.காம்.

ஆன்மா அமைதி பெறட்டும்.

ஒருமுறை ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் வீட்டில் , நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நான் பெரும்பாலும், சங்கோஜப் பட்டுக் கொண்டு, எனது கேமராவில் என்னையே படம் எடுக்கச் சொல்லி எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படித்தான்.  நான் மற்றவர்களைப் படம் எடுத்துக் கொண்டு இருந்தேன். இதனைக் கவனித்த, கவிஞர் வைகறை அவர்கள் “நீங்களும் அவர்களோடு போய் நில்லுங்கள். நான் எடுக்கிறேன். நீங்களும் படத்தில் இருக்க வேண்டும். வரலாறு முக்கியம் நண்பரே! ” என்று சொல்லி எனது கையில் இருந்த கேமராவை வாங்கி என்னையும் படம் எடுத்தார். இன்று அவரே வரலாறாகி விட்டார்.

ஜோசப் பென்சிஹர் என்கிற கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும். ஆதரவற்ற அவருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும்.


Wednesday, 20 April 2016

தமிழ் சுவர் சித்திரங்கள் ( THAMIZH WALLPAPERS) - 1



போட்டோ ஸ்கேப் (PhotoScape) உதவியுடன் தமிழ் இலக்கியம் - பாடல் வரிகள், பொன்மொழிகள் எழுதப்பட்ட படங்கள் அவ்வப்போது இங்கு வெளியிடப்படும். (வலையுலகில் என்னால் முடிந்த தமிழ்ப் பணி.)
















பிற்சேர்க்கை (21.04.2016):

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மேலே உள்ள புறநானூற்றுப் பாடலுக்கான தெளிவுரை இங்கே தந்துள்ளேன்.

தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி
 ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189


( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )

இதன் எளிமையான பொருள்: - 
ஒரு குடைக்கீழ் அமர்ந்து இந்த உலகம் முழுவதும் ஆளும் மன்னனும், இரவு பகல் என்றும் பாராது அலைந்து திரிந்து வேட்டையாடும் கல்லாத வறியவனும், உண்பது நாழி  அளவுதான்( நாழி என்பது ஒரு முகத்தல் அளவு); உடுப்பது மேலாடை, கீழாடை என்ற இரண்டுதான். இவை போன்றே மற்ற எல்லாத் தேவைகளும். எனவே செல்வத்துப் பயன் என்பது (தன் தேவைக்குப் போக மீதி உள்ளதை) இல்லாதவருக்கு வழங்குதல் ஆகும். நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்று வைத்துக் கொண்டாலும், கிடைக்காமல் போவது பல ஆகும் ( அனுபவிப்பது சிலதான்) 

( இந்த பாடலை மையமாக வைத்து துய்ப்பேம் எனினே தப்புன பலவே http://tthamizhelango.blogspot.com/2014/06/blog-post_28.html - என்ற பதிவு ஒன்றையும் எழுதி இருக்கிறேன் )



Sunday, 17 April 2016

பயணம் எங்கே?



இந்த ஆண்டு, ஜனவரியில், பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு
http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதில், 

//முன்பெல்லாம் பணியில் இருக்கும்போது அடிக்கடி மேப்பை வைத்துக் கொண்டு, திருச்சியிலிருந்து எந்தெந்த மார்க்கத்தில், எந்தெந்த ஊர் வரை சென்று இருக்கிறோம், பார்த்து இருக்கிறோம் என்று பார்ப்பது வழக்கம் // 

என்று சொல்லி இருந்தேன். இது சம்பந்தமாக பதிவின் நீளத்தினைக் கருத்தில் கொண்டு சொல்லாமல் விட்ட பகுதி இங்கே.

ரெயில்வே கால அட்டவணை:

எங்கள் வீட்டில் அவ்வப்போது ரெயில்வே கால அட்டவணையை முன்பு, தமிழில் வாங்குவது வழக்கம். அந்த அட்டவணையில் ஒவ்வொரு ரெயில் மார்க்கம் வழியாகவும் ரெயில்கள் கடந்து செல்லும் ஸ்டேஷன்கள் பெயரை வரிசையாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்.. சின்ன வயதில் நான் சென்ற ரெயில் மார்க்க ஊர்களை அடிக்கடி சத்தம் போட்டு படிப்பேன். அதில் ஒரு மகிழ்ச்சி. இப்போது ரெயில்வே கால அட்டவணை வாங்குவதை நிறுத்தி விட்டோம்.


பயணக் கட்டுரைகள்:

பழைய தீபாவளி மலர்களில் பயணக் கட்டுரைகள் என்றால் விரும்பிப் படிப்பேன். இன்னும் நான் படித்தவைகளில் மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புகள், சிந்துபாதின் பயணங்கள், கலிவரின் யாத்திரை, ஏ.கே.செட்டியாரின் பயணக் கட்டுரைகள், பிலோஇருதயநாத்தின் பயண அனுபவங்கள், எஸ்.எஸ்.மணியனின் பயணக் கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம் காட்டி இருக்கிறேன். 

இப்போதும் வலைப்பதிவினில் பயணக் கட்டுரைகளை எழுதிவரும், துளசி டீச்சர் (துளசி கோபால் ‘துளசி தளம்’) , வெங்கட் நாகராஜ் ஆகியோரது பயணக் கட்டுரைகளை (அழகிய வண்ணப் படங்களுடன்)  ரசிப்பவன் நான்.  மேலும் மூத்த வலைப்பதிவர்கள், G.M.B. எனப்படும் ஜீ.எம்.பாலசுப்ரமணியம், V.G.K (வை.கோபாலகிருஷ்ணன் ) மற்றும் V.N.S. எனப்படும் V. நடனசபாபதி ஆகியோரது பழைய பதிவுகளில் வந்த பயணக் கட்டுரைகள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். இவர்களில் துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்களது நகைச்சுவையுடன் கூடிய பயண எழுத்து நடையை ரொம்பவே ரசிப்பதுண்டு. நானும் ஒரு சில, சிறு பயணங்கள் குறித்து வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
.
இதுவரை சென்றுள்ள ஊர்கள்:

கீழே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்காகவோ அல்லது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காகவோ பஸ்ஸிலோ ,ரெயிலிலோ, வாடகைக் காரிலோ அல்லது வேனிலோ சென்று இருக்கிறேன். (இங்கு சொன்னவற்றுள், பல ஊர்கள் விட்டுப் போயிருக்கலாம்) இந்த ஊர்களுக்கு செல்லும் போதெல்லாம், வழித்தடத்தில் உள்ள மற்ற ஊர்களை பயணத்தின் போது  பார்த்ததோடு சரி.

திருச்சி To சென்னை மார்க்கம் > திருவானைக் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், (சமயபுரத்திலிருந்து ஆதி சமயபுரம், புதூர் உத்தமனூர், புரத்தாகுடி, சங்கேந்தி, வெள்ளனூர்)  சிறுவாச்சூர், பெரம்பலூர், உளுந்தூர் பேட்டை, விழுப்புரம், தாம்பரம், சென்னை, மீஞ்சூர் (மேலும் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் மற்றும் விழுப்புரத்திலிருந்து > வேலூர், திருப்பதி ) (மேலும் லால்குடி, புள்ளம்பாடி, (டால்மியாபுரம், மேல அரசூர், கீழ அரசூர்) ,(விரகாலூர், திண்ணாகுளம், செம்பியக்குடி) இலந்தைக் கூடம், கண்டீரா தீர்த்தம்) திருமழபாடி, திருமானூர், அரியலூர், கல்லங்குறிச்சி) (மேலும் லப்பைக்குடிகாடு, திட்டக்குடி, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, பாண்டிச்சேரி)

திருச்சி To நாகப்பட்டினம் மார்க்கம் > திருவெறும்பூர், (கல்லணை, கோயிலடி, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா கோவில், கூத்தூர், புதகிரி, மகாராஜபுரம், வைத்தியனாதன் பேட்டை, திருவையாறு, விளாங்குடி, காருகுடி, திருக்கருகாவூர்,  ) செங்கிப்பட்டி, (பூதலூர், சித்திரக்குடி, கள்ளபெரம்பூர்) வல்லம், தஞ்சாவூர், அம்மாபேட்டை, நீடாமங்கலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால், திருநள்ளார் (கந்தர்வ கோட்டை) (பட்டுக்கோட்டை, மனோரா) (கபிஸ்தலம், சுவாமிமலை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம்,வைத்தீஸ்வரன் கோயில், தென்னிலை, பூம்புகார்,)

திருச்சி To பெங்களூர் மார்க்கம் > முசிறி, (மேலும் மண்ணச்ச நல்லூர், துறையூர், புளியஞ்சோலை) நாமக்கல், (கொல்லிமலை, திருச்செங்கோடு, எடப்பாடி) சேலம், (மேட்டூர் டாம்) தர்மபுரி, பெங்களூர் (மேலும் பெங்களூரிலிருந்து பெல்காம், கோவா) 

திருச்சி To கோவை மார்க்கம் > குளித்தலை, கரூர், (ஈரோடு) கோயம்புத்தூர், மருதமலை.
திருச்சி To திருநெல்வேலி மார்க்கம் > விராலிமலை, துவரங்குறிச்சி, மதுரை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

திருச்சி To தனுஷ்கோடி மார்க்கம் > கீரனூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி( மேலும் புதுக்கோட்டையிலிருந்து > (பொன்னமராவதி) (ஆலங்குடி,அறந்தாங்கி) செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, தொண்டி)

திருச்சி To திண்டுக்கல் மார்க்கம் > மணப்பாறை, வையம்பட்டி, (பொன்னணியாறு டாம்), திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், (பழனி, கொடைக்கானல்) செம்பட்டி, தேனி, வீரபாண்டி, போடிநாயக்கனூர், காமநாயக்கன்பட்டி

பயணம் எங்கே?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். இப்போதும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் , வெளியூர் பயணம் செல்கிறேன். ஆனால் தொலைதூர பயணங்கள் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா? இதைப் போய் ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நண்பர்கள் நினைக்கலாம். ஆனால் அடிக்கடி பயணம் என்பதில் உள்ள சுவாரஸ்யமும் , பொறுப்புகளும், கஷ்டமும் அவரவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதாலும், இப்போதைக்கு எழுத வேறு தலைப்பு இல்லாத படியினாலும், ஏற்கனவே எழுதி வைத்த   இந்த பதிவு.
                                                        
                    (PICTURES COURTESY: GOOGLE IMAGES)